பட்டி

வெறுமனே வாங்கலாம் ஒரு மனை!

வெறுமனே வாங்கலாம் ஒரு மனை!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 3 நிமிடம் வாசிப்பு சமூகம்

அகிலா கார்த்திகேயன்

அந்த காலங்களில் தூக்குத் தூக்கி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஓடிக் கொண்டிருக்கும்போது ஒரு மாட்டுவண்டியில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி முதலான கதாநாயகர்களின் பேனர்களோடு பேண்டு வாத்யம் சகிதம் அப்படத்தின் நோட்டீஸுக்களை விநியோகம் செய்து கொண்டு போகும்போது அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று வெறியோடு பால்ய வயதில் நானும் ஓடியதுண்டு.

என் தந்தைக்கு பயந்து அதை நிக்கர், சட்டை பைகளில் திணித்துக் கொண்டு அடிக்கடி படிக்கும்போது அந்த படங்களை தியேட்டர்களிலேயே போய் பார்ப்பதான ஒரு த்ரில் ஏற்படுவதுண்டு. இப்படி துண்டு பிரசுரங்களை வாங்க அலைந்த காலங்களை நினைத்துப் பார்க்கும்போது இப்போது இப்படி சில நோட்டீஸ் கத்தைகளை வைத்துக் கொண்டு பஸ் நிலையம், ஷாப்பிங் சென்டர் முன்புறம், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் நின்று அவைகளை வலுக்கட்டாயமாக போவோர் வருவோரிடமெல்லாம் தினிக்க சிரமப்படுபவர்களையும் பரிதாபமாக நினைக்க வைக்கிறது.

நாம் அவசர அவசரமாகவோ நாம் எதிர்பார்க்கும் பஸ், ரயில் வராததால் ஆத்திர அவசரமாகவோ நிற்கும்போதோ, ஓடும்​போ​தோ இவர்கள் நம்மை வழிமறித்து இப்படி நோட்டீஸ்களை வாங்கியே தீரவேண்டுமென்று அடம்பிடிக்கிறார்கள். நான் ஏறிய பஸ், ரயில்களில் இடம்பிடித்து உட்கார்ந்தபின்தான் அவைகளில் அப்படி என்ன விளம்பரமாகியுள்ளளது என்ற ஆவலே நமக்கு எழும்.

அந்த ஆவலெல்லாம் கூட இப்போதெல்லாம் எழுவதில்லை. அப்படி கொடுக்கப்படும் அனைத்து துண்டு சீட்டுகளும் திண்டிவனத்திலோ, மதுராந்தகத்திலோ, சென்னைக்கு மிக அருகே கன்னியாகுமரியிலோ யாரோ ஒரு மகானுபாவர் துண்டு போட்டு விற்கும் வீட்டுமனைகளின் விவரங்களை விவரிப்பதாகத்தான் இருக்கும்.

நெடுஞ்சாலையின் மிக அருகே, பிரபல கோயிலின் மிக அருகே, பெரிய ரயில் நிலையத்தின் மிக அருகே என்று அவர்கள் இலக்கணத்தில் அந்த ‘மிக அருகே’க்கள் நம்மிடம் அதி வேகமாக தடங்கலேதுமின்றி, செல்லும் உயர்தர கார்கள் இருந்தால் அவைகள் அந்த ‘மிக அருகே’ எனும் கிலோ மீட்டர்களைக் கடக்க எடுத்துக் கொள்ளும் மணிநேர அளவில்தான் கொடுக்கப்பட்டிருக்கும்.

அவர்கள் அகராதியில் செங்கல்பட்டு மிக அருகேயுள்ள சேலம் நாலு மணி நேர தூரம் என்பதாகும். அதற்கு ஒரு வரைபடமும் போட்டுக் காண்பித்திருப்பார்கள். அதில் அவர்கள் விற்கப்போகும் இடத்திலிருந்து எல்லா வசதிகளும் அரை சென்டிமீட்டர், முழு சென்டிமீட்டர் என்ற ஸ்கேலில் மிகமிக அருகாமையில் காண்பிக்கப்பட்டிருக்கும்.

அவர்கள் கூறும் வசதிகளில் இப்போதெல்லாம் இன்றியமையாததாக ‘இன்ஜினியரிங் காலேஜ்’ ஒன்றை போட்டுவிடுவது ஏனென்று எனக்கு புரியாத புதிராக உள்ளது. கடன்பட்டு அந்த இடத்தை வாங்கும் அனைவருக்கும் வாலிப வயதில் பிள்ளையோ, பெண்ணோ இருந்து அவர்கள் இஞ்ஜினியரிங் படிக்க வேண்டுமென்ற தலைவிதி இருந்தாலும் இவர்கள் குறிப்பிடும் அந்த காலேஜில் மட்டும்தான் படித்தாக வேண்டும் என்பதாக இவர்கள் வற்புறுத்துவதுபோல் ஆகிவிட்டது.

இலவச பட்டா, இலவச ரெஜிஸ்ட்ரேஷன், இலவச கார், இலவச மூக்குத்தி என்று அறிவிப்பது எல்லோரும் கானி நிலமாவது வாங்கியே ஆகவேண்டுமென்று இவர்கள் கொண்டு செய்வதை நமக்கு அறிவிக்கிறது.

அடுத்த வகை நோட்டீஸ்கள் செல்ஃபோன் விற்பனையாளர்களிடமிருந்து வருபவையாக இரண்டாம் இடத்தைப் பிடிக்கின்றன. ஒரு செல்ஃபோன் வாங்கினால் நாலு செல்ஃபோன் இலவசம் என்று கூறு கட்டி விற்பனை செய்யும் நிலையில் இந்த வியாபாரம் மலிந்துவிட்டது. செல்ஃபோன் கடைகள்தோறும், நகைக்கடையில் பார்க்கும் கூட்டமும் அலைமோதுவதைப் பார்க்கும்போது ‘மிக அருகாமை’ நிலங்களை வாங்குவதை விட உலகத்திலேயே மிக அருகாமையில் கொண்டுவந்துவிடும் செல்ஃபோன்களை வாங்குவதில்தான் நாட்டம் மிகுந்துள்ளதாக தெரிகிறது.

இப்படி கூட்ட நெரிசல்களில் வெய்யில், மழை பார்க்காமல் எல்லோரிடமும் நோட்டீஸ்களை நீட்டி, ‘தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்’ என்பதுபோல் நிற்பவர்களின் நிலையும் பரிதாபம்தான். ஒரு வயதான பெரியவர் இப்படி ஒரு நோட்டீஸை கொடுத்தபோது நான் அவர் வாயை கிளறினேன். இத்தனை நோட்டீஸ்களை விநியோகம் செய்தால் இத்தனை ரூபாய் என்று ஒரு அல்ப தொகையை சொல்லும்போது மனது கஷ்டப்பட்டது.

மனம் கஷ்டப்படும் இன்னொரு சமாசாரம் இப்படி வாங்கப்படும் நோட்டீஸ்களை பலர் படிக்காமலேயே அந்த நொடியே கீழே போட்டுவிட்டு போவதுதான். அந்த கிழவர் விநியோகிக்கும் பாதி நோட்டீஸ்கள் சாலையில் விழுந்து பாதங்கள் மிதிபடும்படி பரிதாபநிலை அடைகின்றன.

அதனால் நான் வாங்கும் நோட்டீஸ்களை மனமார பத்திரமாக சட்டைப் பையில் போட்டுக் கொண்டுவிடுவேன். “என்ன இது கண்டதையும் சட்டைப் பையில திணிச்சுண்டு வர்றீங்க” என்று என் மனைவிதான் அதை வீட்டுக் குப்பையில் அதன்பின் எறிவாள்.

அப்படியெல்லாம் செய்யாமல் இதுபோன்ற நோட்டீஸ்களை நாலு பங்காக கிழித்து கோயில் டப்பாக்களின் சிலர் விபூதி குங்குமம் மடிக்க போட்டு புண்ணியமும் தேடிக் கொள்கிறார்கள்.

எது எப்படியோ இதுமாதிரி நோட்டீஸ்களை வீணாக்காமல் பத்திரப்படுத்தி சேர்த்துக் கொண்டுவந்து பழைய பேப்பர்காரர்களிடம் விற்று சென்னைக்கு மிக அருகே ஒரு மனையையே வெறுமனே வாங்கிவிடலாமென்ற அளவில் மனை வியாபாரமும், அதை விற்கும் நோட்டீஸ் விநியோகமும் பெருத்துவிட்டதென்பது உண்மையே!

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0