அன்னியத் திமிங்கலங்கள்
கதையை கேளுங்கள்
“உள்ளே நேரா வந்தா செந்தில் நாடார் கடை வரும், அதை ஒட்டி ஒரு தெரு இருக்கும். அதிலே திரும்பி மூணாவது லெப்டிலேயே நாலாவது வீடு” கூரியர்காரருக்கு தாமரைநகர் வாசி இப்படித்தான் வழி சொல்வார்.
இப்படித் தாமரை நகருக்கே ஓர் அடையாளமாகக் குறிப்பிடும் அந்தஸ்தில் செந்தில் நாடார் பலசரக்குக் கடை திகழ்ந்த காலமுண்டு. பொட்டல்காடான இடத்தில் முப்பது வருடங்களுக்கு முன் அங்கு மனை வாங்கியவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடு கட்டிவிட்டு ‘குடிவரலாமா, வேண்டாமா?” என்று தயங்கிக் கொண்டிருந்த நாட்களில், செந்தில் நாடார் தான் அவர்களுக்குத் துணையாகக் கடையை ஆரம்பித்து தைரியமூட்டினார். பிரம்மச்சாரியாக இங்கு வந்து கல்யாணமாகிக் குழந்தைகளைப் பெற்று அவர்கள் பெரியவர்களாகி என,…தாமரை நகர் வாசம் நாடாரின் வாழ்வின் சில அத்தியாயங்களை ஓடவிட்டிருந்தது. நாடாரின் அம்மா இறந்துவிட, திடீரென சொந்த ஊருக்குப் புறப்பட்டுப் போனார் செந்தில் நாடார். அந்த நேரத்தில் தள்ளுவண்டியில் தினமும் குணாளன் காய்கறிகளை கொண்டுவந்து விற்க ஆரம்பித்திருந்தான். நாடார் பார்த்துப் பார்த்து வாங்கி வரும் தரத்தில் அவைகள் இல்லாதபோதிலும், ஏதோ வீட்டு வாசலுக்கே வருகிறதே என்பதால் குணாளனுக்கும் வியாபாரம் நடந்தது. நாடார் ஊரிலிருந்து திரும்பி வந்து கடையைத் திறந்த மதியவேளையில், ‘என்ன நாடார், அம்மாவோட காரியமெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?” என்று சம்பிரதாய விசாரிப்புகளுக்கும் குறைவில்லை. “நல்லவேளை வந்தீங்க, நீங்க இல்லாம தினமும் நல்ல காய், பழம் கிடைக்காமே தவிச்சுப் போயிட்டோம்” என்று அமுதா டீச்சர் பட்ட ஆதங்கம்தான் மற்ற தாமரைநகர் வாசிகளின் எண்ணமாகவும் இருந்தது. டீச்சரைப்போல மற்றவர்களும் நாடார் கடையை அடுத்த நாள் காலையிலேயே வயர் கூடையும் கையுமாக காய்கறிகளுக்காக முற்றுகையிட்டுக் காத்திருந்தனர். ஆனால், கடை திறப்பதற்கான தடயங்கள் எதுவும் தெரியவில்லை.
“பாவம்! பதினைந்து நாள் காரியமெல்லாம் செஞ்சுட்டு வந்த அசதியிலே நாடார் தூங்கிட்டாரோ என்னவோ” என்று அதில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே நாடார் தன் பின்பக்கத்து வீட்டிலிருந்து ஈரமான முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்து நின்றார். எல்லோர் முகத்திலும் கேள்வி!
‘இனிமே காய்கறி வியாபாரத்தைச் செய்யறதா இல்லே’ என்று ஆரம்பித்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார். ‘அந்த பய குணாளனே இனிமே கொண்டுவந்து விக்கட்டும். இந்த காய்கறி வியாபாரத்திலேதான் அவன் வயத்தைக் கழுவிட்டு இருக்கான். ஆனா எனக்கு சோறுபோட பலசரக்கு கடை வியாபாரம் இருக்கு. நல்ல காயா கொண்டு வந்து விக்கணும்னு சொல்லியிருக்கேன். இன்னிக்கு நான் சொன்ன இடத்திலிருந்து கொண்டு வருவான் பாருங்க’ என்று நிறுத்தினார். நாடார் இப்படி ஒரு விளக்கம் தந்து எல்லோர் மனதிலும் உயர்ந்து நின்றார்.
இந்த கதையெல்லாம் நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது தாமரை நகர் எங்கோ ஒதுக்கப்பட்ட நகரல்ல. இதழ் மலர்ந்தார்போல பல குடியிருப்புகளால் விரிந்தாயிற்று. ரியல் எஸ்டேட்காரர்களும், பில்டர்களுமாக சேர்ந்து கட்டிடங்களாக நிரப்பிவிட்டிருந்தனர். பிளாட்டுகள் கிடைப்பது அரிதானது. பேருந்துகள் உள்ளே வந்து போய்க்கொண்டிருந்தன. அவைகள் நிற்கும் ஒரு நிறுத்தமாக இன்னும் செந்தில் நாடார் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஒரு ஸ்டாப்பிங் இருக்க, அந்த இடத்தில் இப்போது ஒரு நாலு மாடி குடியிருப்பு என்றாகி, தாமரைநகர் பல முன்னேற்றங்களைக் கண்டிருந்தது.
இந்த முன்னேற்றங்களின் ஒரு அம்சமாக தோன்றிய சூப்பர் மார்க்கெட் என்ற நவீன பெயரைக் கொண்ட பலசரக்குக் கடைகள், நாடாரின் முன்னேற்றம் அனைத்தையும் பலி கொண்டுவிட்டிருந்தன. உண்மையிலேயே செந்தில் நாடார் கடையில் காண இயலாத பல சிறப்பு அம்சங்களை அந்த கோடீஸ்வர மளிகைக் கடைக்காரர்களால் கொடுத்து கவர்ந்திழுக்க முடிந்ததால் நாடார் கடையின் வாடிக்கையாளர்களாக கடன் சொல்லி வாங்கும் கடை நிலையாளர்கள் மட்டுமே மிஞ்சினர். அப்படி ஒருநாள் இரவு பத்து மணிக்கு மேல் வீட்டில் பால் பாக்கெட் தேவைப்பட எங்கும் கிடைக்காமல் நாடார் கடையில் கேட்கப் போனேன். பாலை எடுத்துக் கொடுத்தவர் என்னிடம் பரிதாபமாக முறையிட்டது பசுமையாக ஞாபகம் இருக்கிறது.
“என்ன ஸார் கடைப்பக்கமே காணோம். எல்லாரையும் போல நீங்களும் கடையை மாத்திட்டு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸுக்கு போயிட்டீங்க போல. பெரிய திமிங்கலமாட்டம் வந்து சின்ன மீனாட்டம் இருக்கற என் வியாபாரத்தையெல்லாம் அந்த பெரிய கடைங்க விழுங்கிடிச்சு பாருங்க” என்று வருத்தத்துடன் யாசகம் செய்யும் தொனியில் நாடாரின் குரல் தழுதழுத்தது. எப்போதும் சிரித்த முகமாகக் காணப்படுபவர் அந்த ராத்திரியில் சோகமும் வேதனையுமாக தெரிந்தார். திமிங்கலத்திற்கு முற்றிலும் இரையான மீனாய் நாடார் கடை வியாபாரம் நலிந்தே போனது. பையனை பெரிய முதல்போட்டு இன்ஜீனியரிங் படிப்பில் சேர்த்திருந்தார். பெண் கல்யாணத்திற்கு நிற்கிறாள். அன்றாட ஜீவனத்திற்கு படி அளக்காத கடையை அவர் மேற்கொண்டு நடத்த முடியாமல் கடன் தொல்லை பெருகியதில் கடையையும் இருந்த இடத்தையும் விற்றுவிட்டு தாமரை நகரிலிருந்து தள்ளி எங்கோ சென்றுவிட்டார் செந்தில் நாடார். அவர் நினைப்பை எல்லோரும் மறந்தாயிற்று. அவரது கடை இருந்த இடத்தில் எழுந்துள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தை கடக்கும்போது எப்போதாவது நாடாரின் சிரித்த முகம் ஞாபகம் வரும். ஒருநாள் பழைய அங்கத்தினரான செந்தில் நாடார் காலமாகிவிட்டாரென்ற சேதியால் அதிர்ச்சியடைந்து நாடாரின் இருப்பிடம் நோக்கி சங்க நிர்வாகிகள் அனைவரும் மாலையுடன் சென்றோம். அந்த குறுகிய சந்தில் அவர் வசித்த வீடு என்று சொல்லப்பட்டதே நாடாரின் அந்திமகால வறுமையின் வீரியத்தைப் புலப்படுத்தியது. அவரது பூத உடலை அத்தனை மோசமான நிலையில் பார்ப்போம் என்று எதிர்பார்க்காததால் சற்றே அதிர்ந்தோம். சக்கையாகப் பிழியப்பட்ட மெலிந்த நாராய் சுருங்கிய உடல் பொட்டலமாகக் கிடந்ததைப் பார்த்ததும் அனைவருக்கும் துக்கம் பீறிட்டது. அப்போது அங்கு ஓடியாடி காரியங்களை செய்து கொண்டிருந்தவனைக் கவனித்தோம். அட, குணாளன். அந்த காய்கறி தள்ளுவண்டிக்காரன். இவன் எப்படி இங்கே? என்ற கேள்வியோடு அவனைப் பார்த்தோம்.
“ஐயா எல்லோரும் நல்லா இருக்கீங்களா?” என்று ஆரம்பித்தவன் எங்கள் முகத்தின் கேள்வியைப் படித்தவனாய் தொடர்ந்தான்.
“கடை வியாபாரம் நொடிஞ்சி போனதுல அண்ணாச்சிக்கு பெரிய அடி. கடனை அடைக்கக் கடையை வித்தாரு. மிச்சமிருந்த காசை அவர் மவன் குமார் ஏதோ தொழில் செய்யப்போறதா வாங்கி நஷ்டப்பட்டுட்டான். அப்புறம் ரியல் எஸ்டேட் அது இதுன்னு உருப்படாம செஞ்சி எதுவும் விளங்காம வீட்டை விட்டே ஓடிட்டான். அதுவே அண்ணாச்சிக்கு பெரிய இடியாப் போச்சு. வயசுப் பொண்ணை வச்சுருக்கோமேன்னு கவலைப்பட்டு கை, கால் விழுந்து படுத்த படுக்கையாயிட்டாரு. அப்பப்ப அவரை வந்து பாத்து ஒத்தாசை செஞ்சுட்டு இருந்தேன். அந்தக் காலத்திலே பெருந்தன்மையா என்னை மாதிரி சிறு வியாபாரி பொழப்பு நடத்தணும்னு காய்கறி வியாபாரத்தை வுட்டவரு அண்ணாச்சி. அதுக்கு நன்றிக்கடனா அவர் பொண்ணை கட்டிக்கிட்டேன். மாப்பிள்ளையாயிருந்து குடும்பத்தை காப்பாத்தற சந்தோசம்தான் மிச்சமாச்சி. மூணுவேளை சோத்துக்குதான் உழைக்க முடிஞ்சுது. நாடாரை நல்ல டாக்டர்கிட்டே காட்டி செலவு பண்ணலாம்னா வசதி பத்தலே. பாவம் ரெண்டு வருஷமா கிடந்து புண்ணியவான் போய் சேந்துட்டாரு.” குணாளன் உண்மையான துக்கத்துடன் சொன்னான். கொண்டுவந்த பணத்தை அவனிடம் கொடுத்த சங்கப் பொருளாளர், “ச்சோ…இத்தனை நடந்திருக்கு எங்களுக்கு ஒண்ணுமே தெரியாம போச்சே.. அது சரி, நீ ஏன் எங்க ஏரியாவிலே காய்கறி கொண்டு வர்றதை நிப்பாட்டிட்டே” என்ற அர்த்தமற்ற கேள்வியை கேட்டுவிட்டார். குணாளன் ஒரு விரக்தி சிரிப்போடு, “எங்க ஸார் வர்றது? எல்லாரும் சூப்பர் மார்க்கெட்லேயும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்லேயும் வாங்கிடறாங்க. இது பத்தாதுன்னு அமெரிக்கா காரன் வேற வரப் போறானாமே. அப்போ எங்க கதியெல்லாம் என்ன ஆகப்போவுதோ.” யாரையும் சுட்டிக் காட்டி குற்றம் கூறாமல் குணாளன் சொன்னவை என்னைச் சிந்திக்க வைத்தது.
“இந்நாட்டு திமிங்கலங்கள் போதாதென்று நாடாரைப் போன்று இந்த தொழிலை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டவர்களைச் சிதைக்க அன்னிய திமிங்கலங்களை வரவேற்கப் போகிறோமோ?” என்ற கவலையுடன் நாடாரை இடுகாடு வரை வழியனுப்பிவிட்டுத் திரும்பினோம்.
தொடர்புடைய கதைகள்
ஒதுக்கல்
சவுண்டி பிராமணனாகப் பிழைப்பு நடத்தும் சுப்பய்யர், குடும்ப வறுமையின் பிடியில் தவிக்கும் போது சந்திக்கும் சமூகப் புறக்கணிப்பும், தாயின் பாசமும்.
பந்த் பத்தும் செய்யும்
கட்சித் தலைவர் அறிவித்த பந்த் போராட்டத்தை எதிர்த்து, உத்தமபுத்திரன் எம்.எல்.ஏ செய்த மாற்று யோசனையும், அதன் ஆக்கப்பூர்வமான முடிவும்.
வாசகர் தர்மம்!
அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார்...
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...