பட்டி

பதறிண்டு வருவான்

பதறிண்டு வருவான்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 5 நிமிடம் வாசிப்பு அனுபவம்

தந்தி இந்நேரத்தில் வந்திருக்கிறதே என்று எண்ணத் தூண்டியது என் உடல் அலுப்பு. மூன்று நாட்களாய் கேம்ப் பில் அலைந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். அப்படியே படுக்கையில் விழுந்தால் தேவலாமென்று இருந்தது. “ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுத் தான் படுங்களேன்” என்ற என் மனைவியிடம், இரண்டு டம்ளர் ரசம் சாதத்தைக் கரைத்துக் கொடுக்கும்படி சொல்லியபடி சற்று உட்காரலாமென்று போனேன். வாசலில் சைக்கிள் மணியை அடித்து “மூர்த்தி யாருங்க”, என்ற குரல் தொடர எதிர்பார்த்திருந்த தந்தியே தான் என்று ஊர்ஜிதமாயிற்று. அத்தை இறந்து விட்டாள்!

அத்தை! எண்பத்தெட்டு வருடங்களாக ஏழைமையை ருசித்தவள், ஆதரவில்லாத தன் ஒரே மகளான அறுபத்தைந்தைத் தாண்டிய மீனாட்சி அம்மாளோடு திருக்கடையூரில், அக்கம்பக்கத்து வீடுகளில் நாள் கிழமைகளில் சமையல் வேலைக்கு ஒத்தாசை செய்வதோடு, சொற்ப முதியோர் பென்ஷனோடு நாங்கள் எப்போதாவது அனுப்புகிற பணத்தை வைத்துக் கஷ்ட ஜீவனத்தையே கண்டவள்.

அத்தைக்குப் பாசம் அதிகம். எப்போதாவது பார்த்துவிட்டுப் போக வரும் சொந்தங்களைக் கண்டால் சந்தோஷம் தாங்காது. குடியிருந்த ஓட்டை உடைசலான வீட்டிலும், நசுங்கிய அலுமினியப் பாத்திரத்திலும் மட்டுமே அவள் ஏழைமை தெரியுமேயன்றி, நாம் வந்திருக்கிறோமே என்று அக்கம் பக்கத்தில் கடன் வாங்கிச் சமைக்கும் சமையல், அன்பையும் பாசத்தையும் பிழிந்த விருந்தாய் இருக்கும்.

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் படுத்த படுக்கையாய் இருப்பதாகத் தகவல் வர, அத்தையைப் பார்க்கப் போயிருந்தேன். மணிமாமா தான் அவர்களுக்கு ஒத்தாசையாக ஒருவார காலமாய்த் தங்கியிருந்தார். அறுபதைக் கடந்தவர். பொன்மலை ரயில்வே வொர்க்ஷாப்பில் ஃபோர் மேனாயிருந்து ரிடையரானவர். குடும்பக் கஷ்டத்தில் மகன் ரகுவைச் சரியாகப் படிக்க வைக்க முடியவில்லை. திருச்சியிலேயே அற்ப சம்பளத்தில் ஒரு மில்லில் சேர்த்திருந்தார். கல்யாண வயதிலிருந்த மகள், ‘உன்னைப் பிடி என்னைப் பிடி’ என்று பையன் சம்பளத்தில் அரைவயிறு கழுவ முடியாத நிலையில், நிரந்தர விருந்தாளியான ஆஸ்த்மாவை அவர் கவனிக்காது போனதால், அது அடிக்கடி கோபித்துக் கொண்டு தொல்லைப்படுத்தும்.

மணிமாமா பரோபகாரி. எங்களுக்குத் தூரத்து உறவினரென்றாலும் அவர்தான் அத்தைக்கு ஆறுதலாய் அடிக்கடி வந்து பார்த்துப் போகிறவர். அப்போதும் அப்படி தான் ‘ஒரு வார காலமாய் இருந்திருக்கிறார். நான் போனவுடன் சொன்னார்’ “அத்தை உடம்பு ரொம்ப மோசமாகத்தான் இருக்குடா மூர்த்தி. எப்போன்னு சொல்ல முடியாது போலிருக்கு. அத்தையைக் கரையேத்திட்டுப் போயிடலாம்னு தான் காத்துண்டு இருக்கேன். நீ வந்ததுதான் வந்தாய், இரண்டு நாள் இருந்து பாத்துட்டே போவயாம். ராத்திரி நேரம் ஒண்ணு கடக்க ஒண்ணு ஆனா எனக்குக் கண்ணும் தெரியலே. கடையும் தெரியலே. ஆஸ்த்மா சனியன் வேறு படுத்தறது. நீ இருந்தா ஒத்தாசையா இருக்கும். இரண்டு நாள் பார்ப்போம். நிலைமை இப்படியே இருந்தா எதிர்வீட்டு சபேசன் கிட்டே தந்தி ஃபாரம் வாங்கி எழுதிக் குடுத்திட்டுப் போவோம்… தந்தி கிடைச்சதும் ‘சட்டுனு கிளம்பி வந்துடலாம்’” என்றார்.

மூன்று நாட்களும் அத்தையின் உடல்நிலை அப்படியே இருக்கவே அக்கம்பக்கத்தில் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அரைமனதோடு மணிமாமா கிளம்ப நானும் திரும்பினேன்.

அப்போதிலிருந்தே தந்தியை எதிர்ப்பார்த்திருந்தவன் தான். இப்போது இரவில் வந்திருந்த தந்தியைக் கையில் வைத்துக்கொண்டு யோசித்தேன். புறப்பட வேண்டுமே என்று இருந்தது. இரண்டு நாளாய் ஆபீஸ் டூர் என்று அலைந்ததில் உடம்பு அக்கக்காக வலித்தது. மிகவும் சோர்வாய் படுத்துக் கொள்ள மாட்டோமா எனக் கெஞ்சியது. ‘சட்’டெனக் கிளம்ப தூண்டிய எண்ணங்களை உடல் உபாதைகளும் சற்று சோம்பலும் சேர்ந்து எழவிடாமல் அழுத்தின.

கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஒன்பது நாற்பது. மாடியிலிருந்து தெருவைப் பார்த்தேன். சில்லென்று ஊதக்காற்று உடலை நடுக்கியது. தூரத்தில் தெருநாயின் ஈனஸ்வர்மான குரைப்பு. இப்போது கிளம்ப முடியுமா என்ன? எப்படியும் மணிமாமா வந்திருப்பார். ஒருநாள் முன்பே கூட வந்திருக்கலாம்!

“இப்படி அனாதரவா இருக்கிறவளுக்குச் செய்யற ஈமக்கிரியை ஒரு பெரிய யாகத்துக்குச் சமமானதுடா மூர்த்தி.” எப்போதோ மணிமாமா சொன்னது ஞாபகம் வந்து வேதனை தந்தது. யோசிக்காமல் சிரமத்தோடு சிரமமாய்க் கிளம்பி விடலாமோ. எப்படியும் சேலம் வரை போய்விடலாம். அங்கிருந்து விருத்தாசலத்துக்கு பஸ் இருக்க வேண்டும். ஆத்தூரிலிருந்து விருத்தாசலத்திற்குச் செல்லும் குண்டும் குழியுமான சாலையில் பஸ் தூக்கிப் போடுவதை நினைத்துக் கொண்டு மனம் சற்றுப் பின்வாங்கியது.

சரி, இங்கிருந்து பாண்டி மார்க்கமாக மாயவரம் செல்ல பஸ் இருக்குமா எனப் பார்க்க, திருவள்ளுவர் அட்டவணையைத் தேட ஆபீஸ் ‘டூர்’ பையைத் திறந்தேன். அட அப்போதுதான் அந்த ‘பேங்க் டிராஃப்ட்’ கண்ணுக்கு பட்டது. ஆம், இதை எப்படி மறந்து போனோம்! நாளை பட்டுவாடா செய்ய தலைமை ஆபீசிலிருந்து கொண்டு வந்திருந்த ஆபீஸ் ஊழியர்களுக்கான காசோலை. நாளையே பேங்கில் மாற்றிப் பட்டுவாடா செய்யாவிடில் பிரச்சனைகள் வரலாம்.

அப்படி அவசர ஆபத்திற்குக் கையெழுத்தைப் போட்டுப் பக்கத்துத் தெருவிலுள்ள கிளார்க் நாகராஜனிடம் கொடுத்துவிட்டுக் கூட கிளம்பலாமென்று மனத்தின் ஒரு பாதி சொல்ல, ‘பண விவகாரம் ஏதாவது எக்குத் தப்பாய் ஆகிவிட்டால் சிக்கலில் மாட்டிவிடும் என்று மறு பாதி சாமர்த்தியமாக ஒதுங்கி அடக்கியது.’

மீனாட்சி அம்மாள் ஒத்தாசைக்கு ஆளில்லாமல் அவஸ்தைப் படுவார்களே என்ற கவலை வாட்டினாலும், உடனே கிளம்ப ஆயத்தமில்லாத உடம்பின் சிரமம் சின்ன சந்தர்ப்பங்களைப் பூதாகாரமாக்கிக் குழப்பியது.

‘இப்படி ராத்திரி பத்து மணிக்குத் தந்தி வந்திருக்க வேண்டாம்’ என்று எரிச்சல் பட்டேன்.

“ஏண்டி, நான் இப்படிக் குழம்பிண்டிருக்கேன்… பேசாம இருக்கியே… நான் எப்ப கிளம்பலாம்னு சொல்லேன்” என்று இனம்புரியாத கோபத்தோடு மனைவியிடமிருந்து பதிலை எதிர்பார்த்தேன். ஏதாவது சாதகமான பதில் வருமா என்று காத்திருந்தேன். பேச்சைக் காணோம்.

“கேக்கறது காதுல விழலயா?” என்று கத்தியபின் பாத்ரூம் பக்கத்திலிருந்து வந்தவள், “ஏன் கத்தறீங்க… சித்தே தள்ளிப் போங்க” என்றபடி ஹாலின் மூலையில் சென்று உட்கார்ந்தான்.” சரி நீங்க கிளம்பறதுன்னா கிளம்புங்கோ… நாளை ஒருநாள் பங்கஜம் மாமியை வரச் சொல்லி, குழந்தைகளுக்கும் எனக்குமா ஏதாவது செஞ்சுக்கறேன்,” என்றாள்.

‘போதாதற்கு இது வேறா’ என்று எண்ணினேன்; நாளை பங்கஜம் மாமி வரும் வரை குழந்தைகள் காப்பி டிபன் என்று எங்கு போவார்களென்ற கவலை பிடித்துக் கொண்டது. எட்டரைக்கு ஸ்கூல் பஸ் வேறு வந்து நிற்பானே? குழந்தைகள் என்ன செய்யும், பாவம்? இவள் எப்படியோ சமாளித்துக் கொள்வாளென்று தோன்றினாலும், கிளம்ப இயலாமைக்குச் சாதகமான காரணம் கிடைத்தாற் போல ஓர் அல்பமான ஆறுதலோடு நாளைக் காலை கிளம்பலாமென்று தீர்மானித்தேன்.

“ஏன் கிளம்பலையான்னா?” என்றவளிடம், “இத்தனையும் வைச்சுண்டு எப்படிக் கிளம்பறது? விடிஞ்சுதான் கிளம்பணும்” என்று மேலாக அலுத்துக்கொண்டு, அயர்ந்து தூங்கிப் போனேன்.

விடிகாலை, குற்ற உணர்வு விஸ்வரூபமெடுத்து ஆட்ட, நாலு மணிக்கே எழுந்து, நாகராஜன் வீட்டுக் கதவைத் தட்டி அவரிடம் டிராஃப்ட்டை ஒப்படைத்துவிட்டு, பங்கஜம் மாமியையும் கையோடு அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு பஸ் நிலையம் நோக்கிப் பறந்தேன்.

முக்கியமான நேரத்தைத் தவற விட்டதில் மனச்சாட்சி இடித்துக் கொண்டே இருக்க, தொடர்ச்சியாக பஸ் கிடைத்த போதும் திருக்கடையூர் சேரும்போது மதயம் மூணாகிவிட்டது. எல்லாம் முடிந்திருக்குமோ என்னவோ என்று பரபரப்புடன் சன்னதித் தெருவை அடைந்தேன்.

தூரத்திலிருந்தே வீட்டைப் பார்த்தபடி ஓட்டமும் நடையுமாய் நெருங்கினேன். ஆட்கள் நடமாட்டமோ, கிரியைகள் நடப்பதற்கான அறிகுறிகளோ வீட்டின் முகப்பில் தென்படவில்லை. எல்லாமே முடிந்திருக்குமோ என எண்ணியபடி சென்றவன், கையில் ஈர வேஷ்டியை உதறியபடி மணி மாமா வெளியே வருவதைப் பார்த்தேன். அப்போதுதான் குளித்ததற்கு அடையாளமாக வழுக்கைத்தலையில் நீர் முத்துக்கள். வேஷ்டியைக் கொசுவி உதறியபடி திரும்பியவர் நான் வருவதைக் கவனித்துவிட்டார்.

செருமியபடி பூஞ்சையான குரலில் பேசினார். “மூர்த்தி அத்தை போய்ச் சேர்ந்தாச்சப்பா. எனக்கு ராத்திரி பத்து மணிக்குத்தான் தந்தி கிடைச்சது. நேத்திக்குன்னு பார்த்து ரகுவிற்கு நைட் ‘ஷிஃப்ட். அவன் வீட்டிலே இல்லே. எனக்கா மூச்சு தினறிண்டு ஆஸ்த்மா அவஸ்தை. மாத்திரையை விழுங்கித் தூக்கம் வராம புரண்டுண்டு இருந்தேன். அப்பதான் என் பொண்ணு எழுப்பித் தந்தி வந்திருக்குன்னா. உடனே கிளம்பலாம்னா, கையிலே பைசா காசு இல்லாம இருந்தது. சரி தயங்கிண்டே இருந்தா நேரத்துக்குப் போக முடியாதுன்னு பக்கத்து வீட்டுச் செட்டியாரைப் போய் எழுப்பினேன். ‘என்னய்யா தூக்கத்திலே எழுப்பித் தொந்தரவு பண்றே’ன்னு முதல்ல வள்னு விழுந்தாலும், விஷயத்தைச் சொன்னவுடன் பணத்தைத் தூக்கிக் கொடுத்து எப்படி ஆஸ்த்மா தொல்லையோட இந்த இருட்டிலே போவீர்’னு தன் பையனை விட்டு ஸ்டேஷன் வரை சைக்கிளில் கொண்டு விட்டு விட்டு வரும்படி சொன்னார். மாலாவைப் பத்திரமாக இருக்கச் சொல்லிட்டுக் கிளம்பினேன்.

தெய்வாதீனமா பன்னிரண்டு மணி ரயில் கிடைச்சு, மாயவரம் வந்து, அங்கேயிருந்து பஸ்ஸைப் பிடிச்சு, விடியறதுக்கு முன்னாடி இங்கு வந்து சேர்ந்துட்டேன். மீனாட்சி பாவம் ஒண்டியா கஷ்டப்படாம ஊர் மனுஷால்லாம் ஒத்தாசை பண்ணியிருக்கா. இருந்தாலும் நம்ப மனுஷான்னு இருந்தாதானே ஒரு தெம்பு. ஏதோ ஆண்டவன் தாம்பா என்னை அவஸ்தைப்படுத்தாமல் கொண்டு சேர்த்தான்…

“பாவம் நீ ஒரு கோடியில் இருக்கிறவன். உனக்குத் தந்தி எப்ப கிடைச்சுதோ என்னவோ… ஓடிவந்திருக்கே… மீனாட்சிக்கு ஆறுதலாய்த் துக்கம் விசாரிச்சுட்டுக் குளிக்கப்போ… களைப்பா இருக்கும்” என்றார்.

உறுத்தலோடு உள்ளே நுழைந்தேன். தாவாரத்தைக் கழுவி விட்டபடி இருந்த மீனாட்சி அம்மாள் நிமிர்ந்து “வந்துட்டயாடா மூர்த்தி”… அத்தை காலம் முடிஞ்சு போச்சுடா… மூச்சுக்கு மூச்சு ‘நான் போயிட்டாலும் எல்லோரும் வந்து சேர்ற மட்டும் எடுத்துடாதீங்கோ… மூர்த்தி எல்லாம் தூரத்திலிருந்து வர்றவன்… பதறிண்டு வருவான் முகமுழி பார்க்காம போச்சேன்னு வருத்தப்படப்போறான்’னு புலம்பிண்டே இருந்தா. சன்னதி தெருவானதாலே வைச்சுண்டு இருக்க முடியலேடா மூர்த்தி’ என்றாள் குரல் தழுதழுக்க. பீறிட்டுக் கொண்டு வந்த அழுகையை என்னால் அடக்கமுடியவில்லை.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0