பட்டி

அடையாளம்

அடையாளம்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 3 நிமிடம் வாசிப்பு அனுபவம்

உண்மையில் நான் ரிடையராகி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது காஞ்சிபுரத்திலிருந்து அன்றிரவு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்த போது எனக்கு முன் பின் தெரியாத பக்கத்து சீட் ஆசாமி “ஸார் எங்கே ஒர்க் பண்றீங்க?” என்ற கேள்விக்கு நியாயமாக ‘நான் ரிடையராகி ஒரு மாதமாச்சு’ என்பது தான் என் பதிலாக இருந்திருக்க வேண்டும்.

மாறாக ‘எஜுகேஷன் டிபார்ட்மெண்டில் டெபுடி டைரக்டராக இருக்கேன்’ என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளாத குறையாக அந்த யாரோ ஒரு ஆசாமியிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளவே என் மனம் இசைந்தது. நான் உயர் பதிவியில் இருந்ததோ அல்லது இப்பொழுது ஓய்வு பெற்றதோ, எந்த ஒரு தகவலும் அந்த அறிமுகமில்லாத நபரின் மனத்தில் என்னைப் பற்றிய அபிப்ராயத்துக்கு எந்த ஒரு குந்தகமும் விளைவிக்கப்போவதில்லை. இருந்தாலும் ஒரு மாதம் முன்பு வரை இருந்த பெருமைக்குரிய அடையாளத்தை போலியாகத் தக்கவைத்துக் கொள்ளும் ஆசை என்னை விடவில்லை.

முப்பத்து மூன்றாண்டுகளாக வெவ்வேறு பதவிகளிலிருந்து அரசாங்கத்தின் ஒரு மேல்நிலை பதவியில் பொறுப்பான உத்யோகத்தை வகித்த போதெல்லாம் கூட இப்படி யாராவது எங்கே வேலை செய்கிறீர்களென்று கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சொன்ன உண்மையான பதிலிலும் கூட அதை ஒரு பெருமையாக என் மனம் கொண்டாடியதில்லை. ஏனோ இயல்பாக ஓய்வு பெற்றதை இவ்வுலகத்துக்குச் சொல்வதில் எனக்கொரு தயக்கம் இருந்தது.

வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டு அழைத்துப்போக அரசாங்க ஜீப், ஒரு தொலைபேசி, டூர் என்று சென்றுவிட்டால் அங்கங்கே கிடைக்கும் மரியாதை என அனுபவித்த போது கூட அதையெல்லாம் ஒரு அலட்சிய மனோபாவத்தோடு தான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

திடுதிப்பென்று ஒரு நாள் மாலையும், சால்வையுமாக என் ஜீப் என்னை வீட்டுக்குக் கொண்டு விட்டுச் சென்று விட்டது. போகும் ஜீப்பை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு நின்றேன். பதவி, பெருமை, மட்டு மரியாதை எல்லாமே அந்த ஜீப்பில் எனக்கு டாடா காண்பித்துக் கொண்டு செல்வதாக உணர்ந்தேன்.

அடுத்த ஒரு வாரம் பென்ஷன், கிராஜுவிடி போன்றவற்றுக்காக எல்லா அரசாங்க ஊழியனுக்கும் கிடைக்கும் அலைக்கழிப்பு அனுபவம் எனக்கும் இருந்ததால் அந்த ஏழு நாட்கள் என் மனத்தில் ஓய்வு பெற்ற பாதிப்பு இல்லை. பத்து நாட்களுக்குப் பின் ஒரு பகல் நேரத்தில் வெளியே செல்லும் ஒரு வேலை இருந்தது. அபார்ட்மெண்டின் மெயின் கேட் அருகே சென்றபோது வாட்ச்மேன்தான் அந்தத் தாக்கத்தை உணரச் செய்யும் கேள்வியை ஆரம்பித்து வைத்தான்.

“ஏன் ஸார் நடந்து போறீங்க? ஜீப் வரலையா?” என்றவனிடம், சட்டென்று நான் ரிடையராகிவிட்டதைத் தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “ஊஹும்” என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு வேகமாக நகர்ந்து விட்டேன். என் மனம் இன்னும் ரிடையர் ஆனதை ஜீரணிக்கவில்லை என புரியத் தொடங்கியது.

இன்னொரு நாள் மதியம் மூன்று மணி இருக்கும். தாம்பரத்திலிருந்து பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தேன்.

“என்ன ஸார் இன்னிக்கு லீவா?” என்று கேட்டபடி எங்கள் அபார்ட்மெண்ட் அஸோஸியேஷன் செகரட்ரி அருகே வந்து நிற்க, அவருக்கு என்ன பதில் சொல்வதென்று சற்றே மனம் தடுமாறியது. ‘இல்லே இனிமே எப்பவும் லீவுதான்’ சொல்லிவிட ஒரு பெரிய தயக்கம் இருந்தது. பஸ் இரைச்சலில் அவருடைய கேள்வியை காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல் அவரிடம் வெவ்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டே வந்தேன். பஸ்ஸை விட்டு இறங்கி இருவரும் பிரியும்வரை சமாளித்தும், அவர் விடாபிடியாக “என்ன இன்னிக்கு ஸார் ஆபீஸ் போகல போலிருக்கு” என்றபடி என் முகத்தைப் பார்த்தார். அப்போதும் அது காதில் விழாதவன் போல் “சரி, அப்புறம் பார்க்கலாம்” என்று அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டு ஓடுவது போல நழுவினேன்.

நான் இப்படி நடந்து கொள்வதைப் பற்றி என்னை நானே அலசிக் கொள்ளாமலில்லை. நரைத்த தலையோடு வீட்டில் பகல் நேர சீரியலும் கிளாஸிக் மேட்னியும் பார்த்து காலத்தைத் தள்ளும் கிழ லிஸ்ட்டில் சேர மனம் விழையவில்லையோ; சமூக அந்தஸ்து போய்விடுமோ என்ற பயத்தினால் யதார்த்தத்தை ஏற்க மனம் தயங்குகிறதோ தெரியவில்லை: “ஸார், நான் ரிடையர் ஆயிட்டேன்” என்று துணிவோடு சொல்லும் மனப் பக்குவம் இப்போது வராது போலிருந்தது.

‘ஓ’ பிளாக் வசுமதி, ‘சி’ பிளாக் சுந்தரராஜன் என்று நாலைந்து பேர் நடுப்பகல் நேரத்தில் என்னைப் பார்த்து விட்டு லீவா, ஆபீஸ் போகலையா, என வெவ்வேறு தருணங்களில் தர்ம சங்கடத்துக்குள் ஆழ்த்தியிருந்தாலும் யாரிடமும் இழந்திருந்த அடையாளத்தைக் காட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டிருந்தேன்.

மகளுடைய ஜாதகத்தை கூரியரில் அனுப்ப இன்று பகலில் தெருமுனைக்குப் போகவேண்டியதாயிற்று. யார் கண்ணிலும் படாமல் விறுவிறுவென்று அபார்ட்மெண்ட் வாயில் வரை வந்தாயிற்று. மெயின் கேட் அருகே அஸோஸியேஷன் ஆபீஸைக் கடந்தபோது யாரோ என் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுவது காதில் விழுந்தது.

“ஆமாம். எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கு ஸார். இரண்டு மூன்று தரம் அவரைப் பார்த்தேன்.. லீவான்னு கேட்டா சரியா பதில் சொல்லலை. கொஞ்ச நாளா ஜீப்பும் வரலேன்னு வாட்ச்மேன் சொல்றான். அன்னிக்கு அட்டெஸ்டேஷன் வாங்க நம்ம சீனிவாசனோட பையன் போயிருக்கான்.…எப்பவும் போட்டுக் குடுத்துடுவாராம், ஆனா இப்போ ‘சீல்’ ஆபீஸிலே இருக்கு போட முடியாதுன்னு என்னமோ மழுப்பியிருக்காரு. பாவம் என்ன ஆச்சோ. நீங்க நினைக்கிறமாதிரி தான் எனக்கும் ஒரு வேளை சஸ்பெண்ட் ஆயிருப்பாரோன்னு தோணுது.”

பேசிக் கொண்டிருப்பது யாரென்று தெரியவில்லை. ஆனால் அது சாட்சாத் என்னைப் பற்றிதான் என்று தெளிவாகப் புரிந்தது. ‘அடப்பாவிகளா! நான் சஸ்பெண்ட் ஆகிவிட்டேனென்றா அபத்தமா நினைப்பீர்கள்?’

அட, இது என்ன கேவலம்?

இதைவிட ‘நான் ரிடையர் ஆயிட்டேன்’ என்று என் உண்மையான அடையாளத்தை இப்பொழுது எல்லோரிடமும் பறை சாற்றுவதில் என் மனம் பெருமைப்படும் போலிருந்ததை முதல் முறையாக உணர்ந்தேன்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0