சந்திராஷ்டமத்துடன் ஒரு சந்திப்பு
வாட்ஸ்ஆப் குரூப்புகளில் புதிதாக சேர்க்கப்படும் அல்லது வலு கட்டாயமாக அடம்பிடித்து நுழையும் சில ஜூனியர்கள் வந்த புதிதில் ஏதோ காணாததைக் கண்டுவிட்டவர்கள்போல சதா கண்டதையும் பக்கம் பக்கமாக மெசேஜ் செய்துக் கொண்டிருப்பார்கள்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் மேட்டரை, யாரோ யாருக்கோ வேறொரு மாற்றான் குருப்பில் அனுப்பியதை உருவி இவர்கள் புதிதாக இடம்பிடித்துள்ள வாட்ஸ்ஆப் குரூப்காரர்களின் மொபைல் ஸ்க்ரீனில் இடம்பத்தாத அளவுக்கு அனுப்பி அலம்பல் பண்ணுவார்கள்.
அதற்கு அந்த குரூப்பில் உள்ள ஏதாவது வேலையத்த ஆசாமி அதை படித்தோ இல்லை படிக்காமலேயோ ஒரு பல்லை இளிக்கும் தலையை தர்மத்துக்கு போட்டுவிட்டால் அந்த ஜூனியருக்கு தலைகால் புரியாமல் ஆர்வக் கோளாறு ஏற்பட்டு தொலைத்துவிடும்.
இப்படி ஒரு ஆர்வக் கோளாறினால் ஏற்படும் கோளாறுகளில் ஒன்றாக ‘சந்திராஷ்டமம்’ என்ற மெசேஜ் என் சம்சாரத்தின் பார்வையில் பட்டதில் அப்படிப்பட்டதோர் ‘கஷ்டகாலம்’ இருப்பதே எனக்கும் அளுக்கும் தெரிந்தது என் கஷ்ட காலமே!
பிறந்த வீட்டு குரூப், புகுந்த வீட்டு குரூப் என்று வகை, வகையாக வாட்ஸ்ஆப் கூட்டம் வைத்திருக்கும் என் மனைவிக்கு தன் பிறந்த வீட்டு விஸ்வாசம் இந்த சோஷியல் மீடியாவிலும் மடியாமல் விரிந்திருந்தது.
அந்த வகையில் இதே சந்திராஷ்டமம் மெசேஜை சென்ற மாதம் என் அக்கா பையன் அனுப்பியிருந்ததை “உங்க முகுந்தனுக்கு வேற வேலையே இல்லே வளவளன்னு எதையோ அனுப்பியிருக்கான்” என்று குப்பையில் போட்டவள், அதையே உருவி அவளுடைய அண்ணனின் மகள் அனுப்பியதில் “மாலா… ஏதோ யூஸ்ஃபுல்லா பெரிய மேசேஜ் அனுப்பியிருக்கா… டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. படிச்சுண்டிருக்கேன்” என்று அதே குப்பையை கோபுரமாக்கிவிட்டாள்.
நானும் எனக்கு வந்ததைப் பார்த்தேன். மெய்யாலுமே வள வளவென்று இருந்ததால் அப்போது படிக்காமல் விட்டதை, என் பத்தினியின் சிபாரிசு இப்போது படிக்க வைத்திருந்தது.
ஆறு ஸ்க்ரீன் அளவிற்கு ‘சந்திராஷ்டமம்’ பற்றிய விஷய ஞானம் நீண்டது.
”அடடா! இது வரைக்கும் இதைப் பத்தி தெரியாம போச்சே. போன ஞாயித்துக்கிழமை அந்த காய்கறிகாரன் வெண்டைக்காயை உடைச்சதுக்கு எப்படி சண்டைக்கு வந்தான். இப்பத்தான் தெரியறது காலண்டரிலே உன் உத்தர நட்சத்திரத்துக்கு அன்னிக்கு சந்திராஷ்டமமாம்” என்று அப்போதிலிருந்தே ‘சந்திராஷ்டமம்’ என்பதை எங்களின நித்யபடி நிகழ்ச்சிகளில் சம்பந்தபடுத்த ஆரம்பித்துவிட்டாள்.
இவளுக்கென்றே நாள்காட்டி, மாதம் காட்டி என எல்லா கலென்டர்காரர்களும் அன்றைய நாளில் திதி, நட்சத்திரம் என்பவைகளைவிட அன்றைய தினம் ‘சந்திராஷ்டமம்’ பாதிக்கும் நட்சத்திரங்களை கொஞ்சம் கூடுதலான அழுத்தத்தில் அச்சிட்டிருப்பதை அதன்பின்தான் பார்க்கும் பழக்கம் உண்டானது. அதன்படி ராகுகாலம், எமகண்டம் என்பதுபோக நம் நட்சத்திரத்துக்கு அன்று சந்திராஷ்டமமா என்று வேறு பார்த்துக் கொள்ளும் பீதி குடிகொண்டுவிட்டது.
”இதோ பாருங்க இன்னிக்கு நல்ல நாளுன்னு தீபாவளிக்கு புடவை வாங்கப் போறோம்… எப்பவும்போல தகராறு பண்ணாம வாயை மூடிண்டு வரணும்… இன்னிக்கு உங்க மூலம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம்னு போட்டிருக்கான் ஜாக்கிரதை” என்று என் சந்திராஷ்டமத்தை அவளுக்கு சாதமாக்கிக் கொண்டாள். நானும் சந்திராஷ்டமத்துக்கு ‘சான்ஸ்’ கொடுக்கக்கூடாது என்று பயந்தபடி வாய் பேசாம நடந்தேன். ஆயிரம் கடைகளை ஏறி இறங்கி, ஆயிரம் ஆயிரமாக என் கார்டை தேய்க்கும்போதே சந்திராஷ்டமம் என்பதன் வீரியம் மறைமுகமாக தாக்கியது புலப்பட்டது.
அலைந்து திரிந்து வாய் பேசா மௌனியாக இவளோடு இரவு ஒன்பது மணிக்கு வீடு திரும்பியபோது சந்திராஷ்டமத்தின் எஃபெக்ட கொஞ்சம் குறைந்திருக்குமென்று தைரியத்துடன் என் திருவாய் மலர்ந்தது. “ராத்திரிக்கு என்ன டிபன்” என்றேன் மிக பவ்யமாக.
”நல்லா இருக்கு… இத்தனை அலைஞ்சு திரிஞ்சி வந்திருக்கேன். நானும் மனுஷிதானே… ரொம்ப லேட்டாயிடுத்தே நீங்களா ஏதாவது ஒரு ஹோட்டல்லே டிபன் சாப்டுட்டு போலாம்னு சொல்வீங்கன்னு பார்த்தா… மூஞ்சை ‘உம்’முனு வைச்சிண்டு பேசாம வர்றீங்க. ‘செலக்ட பண்ணின புடவையெல்லாம் நல்லா இருக்கு’ன்னு ஒரு வார்த்தை பேசலே… டிபன் சாப்ட்டு போலாம்னு சொன்னா வள்ளுனு விழுவீங்கன்னு நானும் பேசாம வந்தா… வீட்டுக்கு வந்ததும் இதை கொண்டா அதைக் கொண்டான்னு கேட்கறீங்களே… என்ன நியாயம்” என்று அநியாயத்துக்கு அவள் பேச, நானும் வார்த்தைகளை வீச அந்த சந்திராஷ்டமம் நைட் ஷிஃப்டில் என்னை விடாமல் விரட்டியது.
”நான்தான் உங்களுக்கு சந்திராஷ்டமம்னு சொல்லி ‘வார்ன்’ பண்ணினேனே… கேட்காம என்னை வம்புக்கு இழுத்து கொண்டு வந்து மோர் சாதத்தை வேணாம்னு சொல்லிட்டு தூங்க போயிட்டீங்க… இன்னிக்கு ஏகாதசி.. இந்த பழையதை நீங்கத்தான் சாப்பிடணும்” என்று சந்திராஷ்டமத்தின் மிச்சம் மீதியாக அடுத்த நாளிலும் தாக்கினாள்.
ஆக சந்திராஷ்டத்தின் பாதிப்பு இப்படி பலவகை சம்பவங்களில் உறுதி செய்யப்பட்டதில் என் மனைவி அவரவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து அனுப்புவதுபோல், அவரவர் நட்சத்திரங்களை தெரிந்து வைத்துக்கொண்டு “டுடே ஈஸ் சந்திராஷ்டமம் ஃபார் சந்திரசேகரன்” என்ற வகையில் எச்சரிப்பு மெஸேஜ் அனுப்பத் தொடங்கி இருக்கிறாள்.
இதில் விபரீதம் என்னவென்றால் இந்த சந்திராஷ்டமம் பற்றிய விஷய ஞானமில்லாதவர்கள் சிலர் “ஹேப்பி ரிடேன்ஸ் ஆஃப் தி டே சந்திரசேகர்” என்று அடித்து மாட்டிக் கொள்கிறார்கள். அந்த சிலருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமமோ என்னவோ!