பட்டி

நோக்கம்

நோக்கம்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 5 நிமிடம் வாசிப்பு அனுபவம்

“கெட்டி மேளம், கெட்டி மேளம்” “மாங்கல்யம் தந்துநானேனா,” “மருமக வந்தாளா” “லெமன் ஜுஸ்”, “சேந்தமங்கலம் வைத்தி ரூபாய் நூறு”, “கங்கிராஜுலேஷன்,” “இருங்க சாப்பிட்டு போலாம்…” அப்பாடா முகூர்த்தம் முடிந்து விட்டது. இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பிவிடலாமென்று நினைத்துக் கொண்டேன். அம்மாவைத் தேடினேன். பெண்கள் கூட்டத்தில் பொக்கை வாயை காட்டிக் கொண்டு ஏதோ வம்பளந்து கொண்டிருந்தாள். இதற்காகவே மெனக்கெட்டு கல்யாணத்திற்கு வந்திருக்கிறாள் அம்மா. நேற்று ராத்திரி சத்திரத்திற்கு வந்ததிலிருந்து பேச்சு…பேச்சு பேச்சு.

“சுந்தரராமன் பையன்தானே நீ. என்னை தெரியறதா?”

“கொஞ்சம் விடு விடுன்னு மாட்டுப் பொண்ணு பேசுவாளேயொழிய வாய்க்கு ருசியா பண்ணி போடறா போயேன்.”

“நம்ப சேஷன் இருந்தானே அவன்தான் கிச்சாவுக்கு வேலை பண்ணி வைச்சான்.” கூடிக்கூடி அப்படி என்னதான் பேசுவாளோ… அம்மாவுக்கு நேரமே போதவில்லை. ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட என்று கல்யாணத்திற்கு வந்திருந்த அத்தனை உறவினரிடமும் ஆளுக்கு இத்தனை நேரம் என்று அலாட் பண்ணி அளவளாவியபோதும் அம்மாவிற்கு பேச்சு முடிந்தபாடில்லை. இந்த கால பரபரப்பிற்கு சற்றும் ஒத்துப் போகாத ஜென்மம். இதற்காகவே கல்யாணத்திற்குத் தானும் வருவதாக அம்மா சொன்னபோது எனக்கு வெறுப்பாக இருந்தது.

“இதோ பாரும்மா… ஏதோ கடமையேன்னு பஸ்லே போய் ராத்திரி இறங்கி, முகூர்த்தம் முடிஞ்ச கையோட ஆச்சுன்னு கிடைக்கிற பஸ்ஸை பிடிச்சு நான் வந்துண்டிருப்பேன். உன்னையெல்லாம் அழைச்சிண்டு போனா ஆகாது. நீ பாட்டுக்கு மசமச’ன்னு சட்டுனு கிளம்பாம உட்கார்ந்துடுவே. எனக்கு லீவே இல்லே. அன்னிக்கே திரும்பியாகணும். திருச்சியிலே ஒரு பன்னிரெண்டு மணிக்குக் கிளம்பினாத்தான் ராத்திரி வந்து சேர முடியும்” என்று தடுத்துத்தான் பார்த்தேன். என் மாமா பேரன் கல்யாணம். நான் மட்டும் போய் தலைகாட்டி விட்டு ஓதியிட்டு விட்டு வருவதற்கு மட்டுமே பட்ஜெட்டில் இடமிருந்தது. கூட அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு போவதற்கில்லை. வயதானவளை ரயிலில் அழைத்துக் கொண்டு போனால்தான் சௌகர்யம். ரயில் சார்ஜ் அதிகம். மேலும் அம்மாவை அலைக்கழித்தால் ஊருக்குத் திரும்பியதும் படுத்து விடுவாள். மருந்து மாயம் என்று செலவுகள் தொடரும். ஆகவே சுத்தமாக தவிர்க்கத்தான் பார்த்தேன்.

“என்னடா பழைய மனுஷாளையெல்லாம் பார்க்கலாம்னுதாண்டா வரேன்னு சொல்றேன். ஜெயம் வருவா…சேதுவை பார்த்து இருபது வருஷமாறது ‘அத்தை இப்படி எந்தக் கல்யாணத்துக்கும் வராம பண்றீங்களே’ன்னு சாவித்ரி கேட்கறா… ஆசையா கூப்பிடற மனுஷா. போனா சந்தோஷப்படுவா. ரெண்டு நாளா பிரஷர் கூட அவ்வளவா இல்லே. உன் கூடவே பஸ்ஸிலேயே வர்றேன். டிரெயின் வேண்டாம். முகூர்த்தம் முடிஞ்சதும் ரெண்டு வாய் சாப்பிட்டு ‘லேட்’ பண்ணாம கிளம்பிடறேன். கல்யாணத்துக்கு சுந்தரேசன் வந்தான்னா ‘அத்தை வைச்சுக்கோ’ன்னு ஏதாவது பணம் தருவான்.…பஸ் சார்ஜுக்கு ஆகும்”. என்னை தாஜா பண்ண ஏதேதோ சொன்னாள். எனக்கு வேறு வழி தெரியவில்லை.

“சரி… சரி… கிளம்பு.. அதுக்குன்னு அங்க வந்து சுந்தரேசனை தேடிண்டு போய் அசிங்கம் பண்ணி வைக்காதே” என்று எச்சரித்து அழைத்து வந்தேன்.

நேற்று சத்திரத்திற்கு வந்தவுடன் அம்மாவை விட்டு விட்டு பஸ் நிலையத்திற்குப் போனேன். ரிசர்வ் செய்ய நேரம் முடிந்து விட்டதென்றார்கள். பன்னிரெண்டு மணிக்கு மேல் வரிசையாக திருவள்ளுவருக்குக் குறைவில்லை என்றார்கள். பத்தரை பன்னிரெண்டு முகூர்த்தம்… ஒரு மணிக்கு சாப்பிட்டு எழுந்தால் கூட அப்படி இப்படியென்று இரண்டு மணியாகிவிடும். எட்டு மணி நேரம் ஆகும் மெட்ராஸ் போக பத்து மணிக்குக் கொண்டு விட்டாலும் பரவாயில்லை பல்லவன் இருப்பான். கல்யாணமென்று வருகிறோமே தவிர மனமெல்லாம் எப்போது முடியும் எப்போது பிய்த்துக் கொள்ளலாமென்றே பரபரக்கின்றது. சம்பந்தப்பட்டவர்களும் ‘ஆச்சா கிளம்புங்க’ என்று விரட்டாத குறைதான். ‘தாம்பூலம் வாங்கிண்டீங்களா?’ என்றால், ‘இடத்தை காலி பண்ணுங்க’ என்பது போலத்தான் தொனிக்கிறது இயந்திர உலகம். இதில் அம்மாவைப் போல பழங்கால ஜென்மங்கள்!

“சரிம்மா…யார்யார்கிட்டே சொல்லிக்கணுமோ சொல்லிண்டு புறப்படு. உன் செருப்பை மேளக்காரன் உட்கார்ந்துண்டு இருக்கானே அந்த பெஞ்சுக்கடியிலே போட்டிருக்கேன்” என்று அவசரப்படுத்தியபடி நான் ஃப்ரீப்கேஸை அடுக்க ஆரம்பித்தேன்.

“மூர்த்தி கைப்பை ஏதாவது கொண்டு வந்திருக்கியா?” என்று அம்மா கேட்டாள்.

“எல்லாம் இருக்கு.…மாவடுதானே…தெப்பக்குளத்து வழியாகத்தானே போறோம் வாங்கிண்டு போலாம்…. ஆச்சுன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிண்டு வா.”

“அதுக்கில்லேடா…கல்யாண பட்சணம் தருவா. போட்டுண்டு போலாம்னுதான்” என்றான். எனக்கு எரிச்சலாகி விட்டது.

“என்னம்மா இது பட்சணம் அது இதுன்னு நேரமாக்கிட்டே போறே” நான் பல்லைக் கடித்துக் கொண்டு முணுமுணுத்தபோது அம்மா அந்த ரூமிற்குள் நுழைந்தே விட்டாள். பையன் வீட்டார் தங்கியிருந்த அந்த அறை ஒரே களேபரமாக இருந்தது. பெட்டிகளும், பைகளுமாக பாதி அறையை அடைத்துக் கொண்டிருந்தன. சீர் பாத்திரங்கள் பரவிக் கிடக்க, சில பெண்டிர் பட்டுப் புடவையை மாற்றி வேறு புடைவை கட்டிக் கொண்டிருக்க கதவு அடிக்கடி திறந்து சாத்தப்பட்டிக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த அம்மாவைக் காணவில்லை.

“எங்க அம்மா உள்ளே இருந்தா கொஞ்சம் அவசரமா கிளம்பணும்னு வரச் சொல்லுங்களேன்’ என்று சொல்லியனுப்பினேன். அந்தம்மா திரும்பி வந்தாள்.

“இப்பத்தான் சீர் முறுக்கு, சீர் லட்டு எல்லாம் கொண்டு வைச்சாங்களாம்; பிரிச்சுண்டிருக்காங்களாம். வாங்கிண்டு உடனே வந்துடறேன்னு உங்ககிட்டே சொல்லச் சொன்னா” என்று அம்மா சொன்னதைச் சொல்லி அந்த மாமி என்னை எரிச்சலூட்டிவிட்டுச் சென்றாள். எனக்குக் கோபமாக வந்தது. மணி ஒன்றரை. கிழவி கடைசியில் தன் வேலையைக் காட்டிவிட்டாள். ஆத்திரத்துடன் அறைக்குள் எட்டிப்பார்த்தேன். நாலைந்து பெண்மணிகள் உட்கார்ந்து அட்டை பெட்டியிலிருந்து லட்டு முறுக்கு, அதிரசம் என்று எடுத்து விண்டு பாக்கெட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அம்மா அங்கு நின்று கொண்டு சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள். கிளம்ப வேண்டுமென்ற பிரக்ஞையே இல்லையா? நான் இங்கிருந்து சைகை காட்டியும் பார்ப்பதாகத் தெரியவில்லை. உள்ளே போகலாமென்று பார்த்தாலும் பெண்மணிகள், பெண் மணிகள்! ஒரே சங்கடம்!

“ஏண்டி பட்டு, அந்த மனோகரம் பருப்புத் தேங்காயை உடையேன்” அம்மாவின் குரல்தான். சுவாதீனமாக கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள். இதென்ன லஸ்ஜையில்லாமல் கேட்டு வாங்கிக் கொள்ளும் பழக்கம்! ஐயோ நேரம் ஓடிக் கொண்டிருக்கிறதே… தவித்துக் கொண்டிருந்தேன். அரை மணி நேரம் கழித்து அம்மா வெளியே வந்தாள். “ஏம்ப்பா. அதுக்குன்னு கல்யாணம்னு வந்துட்டு பட்சணம் கூட வாங்காம கிளம்பினா நல்லாவாயிருக்கும் சொல்லு. இன்னும் தெரட்டிப் பால் கொண்டு வைக்கலே.…நீ அவசரப்படறேயேன்னு வந்துட்டேன்” என்று ஒரு பொட்டலத்தை கைப் பையில் போட்டபடி என்னை முந்திக் கொண்டு சமாதானப்படுத்தினாள். நாலு பேர் நடுவில் என் கோபத்தைக் காட்ட முடியவில்லை.

“சரிதாம்மா… பேசாதே. சட்னு கிளம்பு. என்ன பஸ் கிடைக்கப் போறதோ…மாவடு கீவடுன்னு இன்னும் டிலே பண்ண முடியாது நேரே பஸ் ஸ்டாண்ட்தான்.” என் கோபத்தை மாவடுவை ‘கட்’ பண்ணியதன் மூலம் காட்டிக் கொண்டு பஸ் நிலையம் அடைந்தபோது மணி இரண்டரை. ரெடியாக திருவள்ளுவர் ஒன்று கிளம்பி இருந்தது. ஒழுங்காகவே போகும் பட்சத்திலும் குறைந்தது. பத்தரை மணிக்குத்தான் சைதாப்பேட்டையில் போய் இறங்க முடியும். பாலவாக்கம் டவுன் பஸ் பத்து இருபதோடு சரி! ஆட்டோதான் வேறு வழியில்லை. பகீரென்றது. அம்மாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. பஸ்ஸில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. திண்டிவனத்தில் பஸ்ஸை நிறுத்திவிட்டு எல்லோரும் டிபன் சாப்பிடப் போன போதும் உம்மென்றுதான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். வயசானவளுக்கு ஒரு கப் காப்பி வாங்கித் தரக் கூட தோன்றாமல் என் கோபம் தடுத்தது.

“மூர்த்தி… பையிலே பட்சணம் இருக்கு எடுத்து சாப்பிடேன்” என்றாள்.

“இந்த பட்சணத்தை யார் இல்லேன்னு அழுதா.…இப்பப் பாரு இதுக்காக நீ ‘டிலே’ பண்ணினதாலே சைதாப்பேட்டையிலேர்ந்து ஆட்டோல போய் தொலைக்கணும்.…ஐம்பது கேட்கறானோ…அறுபது கேட்கறானோ தெரியலே. வேண்டாம்னா வரேன் வரேன்னு கழுத்தறுக்கறே” என்று என் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தேன். அம்மா எதுவும் பேசவில்லை.

“இந்தா நீயே தின்னு” என்று பையை அவளிடம் பொத்தென்று போட்டேன்.

“எனக்கு இதையெல்லாம் தின்ற வயாசாடா சொல்லு. உடம்புக்கு ஆகாது… பாட்டில்ல தண்ணியிருந்தா கொடு. போறும்” என்று விட்டாள். பின்னே ஏன் பிக்காரித்தனமாக இந்த அரை லட்டிற்கும், முக்கால் முறுக்கிற்கும் நேரத்தை வீணடித்திருக்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. நான் நினைத்தது போலத்தான் ஆனது. பத்தே முக்காலுக்கு சைதாப்பேட்டையில் இறங்கியபோது ஆட்டோக்கள் மொய்த்துக் கொண்டன. பேரம் பேச முடியவில்லை. ‘அறுபதுக்குக் குறைஞ்சி போவதடா கிஷ்டா’ என்று ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் கறாராக பேசினார்கள். ஆட்டோவிலும் என் கோபம் தொடர்ந்தது. அறுபது ரூபாயை மூக்கால் அழுது விட்டு அம்மாவுடன் பாலவாக்கத்தில் வீட்டிற்கு முன் இறங்கிய போது வீட்டில் விளக்கு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தது.

“வந்தாச்சா…இப்பத்தான் ஜுனூன் முடிஞ்சது.…‘பாட்டி எப்ப வருவா எப்ப வருவான்’னு உங்க பேரன் முழிச்சிட்டேயிருக்கான்” என்றபடி என் மனைவி கதவைத் திறந்தாள்.

“பாத்தி… பாத்தி” என்று குழந்தை ராம்ஜி ஓடி வந்து என் அம்மாவைக் கட்டிக் கொண்டான். “பச்சணம் எடுத்துண்டு வருவேன்னு சொன்னியே” என்று அவளிடமிருந்து கைப் பையை பிடுங்கிக் கொண்டான். இவ்வளவு நேரம் அலைந்து வந்த பிரயாணக் களைப்பையும் மீறி அந்த வயதான முகத்தில் மகிழ்ச்சி விரிந்தது.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

தொடர்புடைய கதைகள்

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0