பட்டி

இன்றைய டிபன்!நாளைய வரலாறு!

இன்றைய டிபன்!நாளைய வரலாறு!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 2 நிமிடம் வாசிப்பு சமூகம்

அகிலா கார்த்திகேயன்

”இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?” என்று என் தர்மபத்தினி பதிவிரதாசிரோமணிகளின் பட்டியலில் பத்துக்குள் இடம்பெறும் பவ்யத்துடன் தினமும் கேட்பதுண்டு.

”நீ என்ன பண்ணலாம்னு இருக்கே?” என்று அப்பாவியாக நானும் கேட்டு அவளை நோட்டமிடுவதுண்டு.

”என்ன பண்ணட்டும்னு நீங்க சொல்லுங்க.. நானா எதையாவது பண்ணி வைச்சா அது பிடிக்கலைன்னா மூஞ்சியை தூக்குவீங்க” தன் பதிவிரதா தர்மத்தை விடாமல் அடம்பிடிப்பாள்.

”அடை பண்ணி நாளாச்சே பண்ணேன்.”

”அடை, வடையெல்லாம் நினைச்சுண்டா பண்ணமுடியுமா? காலையிலே ஊற போட்டாதானே அரைச்சு பண்ண முடியும்.”

”பஜ்ஜி, பகோடா.”

”இன்னும் உங்களுக்கு புத்தி வரலையே… எக்கசக்க பி.பி. இருக்கு. போன மாசம்கூட டாக்டர் வார்ன் பண்ணியிருக்காரு. எண்ணெய்யை குடிக்கிற பஜ்ஜி, பகோடான்னு கேட்கறீங்களே.”

”சரி ரவை, முந்திரி எல்லாம் போட்டு ரவா கேசரி கிளறேன்.”

”என் வாயை கிளறாதீங்க… இன்னிக்கு ஷுகர் டெஸ்ட் பண்ணினீங்களே… எத்தனை இருந்தது? 300க்கு பக்கமா இருக்கு! இதுலே நெய்யும் சர்க்கரையுமா சொஜ்ஜி கேட்குதா உங்க நாக்கு?”

”சரி… பூரி பண்ணேன்.”

”ஸாரி! அதுவும் எண்ணெய்யைக் குடிக்கும். நீங்களும் ஆறேழுன்னு முழுங்கிட்டு உடம்புக்கு ஒத்துக்கலைன்னு என் பிராணனை வாங்குவீங்க.”

”சப்பாத்தி பண்ணலாமில்லே.”

”பண்ணலாம்.. அதுக்கு தொட்டுக்க இதை பண்ணு அதைப் பண்ணுன்னு உயிரை எடுப்பீங்க… மத்யான சாம்பாரை தொட்டு சாப்பிட உங்க நாக்கு கேட்காது.”

”சேமியாவிலே உப்புமா பண்ணிடேன்.”

”போன மாசம் லிஸ்ட்டிலே சேமியா போடலை. உங்களையும் வாங்கிட்டு வர சொல்லிட்டே இருக்கேன் வாங்கிவிட்டு வரலே.”

”பேசாம பொங்கல் பண்ணி சட்னி அரைச்சுடேன்.”

”பொங்கல்னே பேச்சை எடுக்காதீங்க. நான் எத்தனை சிரத்தையா பண்ணி கொடுத்தாலும் ‘சரியா வேகலை’, ‘இன்னும் கொஞ்சம் குழைவா இருக்கணும்’, ‘முந்திரியும் நெய்யும் போறலை’ன்னு ஆயிரம் குத்தம் சொல்வீங்க… வேண்டாம்பா.”

”சரி இட்லியோ தோசையோ எப்பவும்போல பண்ணிடேன்.”

”போன வாரம் அரைச்சு வைச்ச மாவு நேத்து தீந்துபோனதினாலே தானே என்ன டிபன் பண்ணறுதுன்னு தெரியாம உங்களைக் கேட்கறேன்… இட்லியை கொண்டா தோசையைக் கொண்டான்னு கேட்டா.”

”சரி… இப்ப கல்யாண ஜானவாஸத்திலே போடறாங்களே இடியாப்பம் மாதிரி சேவையோ என்னவோ… அதை பண்ணிடு. அது உடம்புக்கு ஒண்ணும் பண்ணாதுன்னு சொல்றாங்க.”

”அது உங்க உடம்புக்கு ஒண்ணும் பண்ணாதுதான். என் உடம்பு என்ன ஆறதாம்… மாவை கிளறி சேவை நாழியிலே பிழிஞ்சு பாருங்க தெரியும்… எனக்கும் வயசாறதுன்னு கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கா? இன்னும் மிஷினாட்டம் உங்களுக்கு சேவை செய்யணுமாக்கும்.”

”சரி விடு! நான் போய் கணேஷ் பவன்லே ஏதாவது வாங்கிட்டு வந்துடறேன்.”

”ஐயே! அப்படியாவது டிபன் சாப்பிட்டே ஆகணும்னு ஏன்தான் உங்க நாக்கு அலையறதோ தெரியலே… ரெண்டாம் டிகக்ஷன்லே காபி போட்டுத் தர்றேன் பேசாம குடிச்சிட்டு கிடங்க… மத்யான குழம்பும், ரசமும் அத்தனை மீதி கிடக்கு.. குக்கர்லே சாதம் வடிச்சுடறேன்… தொட்டுக்க ஒரு அப்பளம் சுட்டுடறேன்… ஓ.கே.வா? எல்லாம் உங்களைக் கேட்டுட்டுத்தான் பண்றேன்… அப்புறம் ராத்திரி சாப்பிடறபோது மூஞ்சிய காட்டக்கூடாது ஆமாம்.”

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

தொடர்புடைய கதைகள்

'கஷ்'டமர் கேர்
சமூகம் கதை

'கஷ்'டமர் கேர்

ஆடி சேல்ஸ், ஆஃப் சீசன் சேல்ஸ், நியூ இயர் சேல்ஸ் என்று எல்லா காலகட்டங்களிலும் நம் தலையில் கண்டதையும் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம், அப்படி தலையில்...

3 நிமிடம்
'லாம்' 'லாம்' ஜோதிடர்கள்
சமூகம் கதை

'லாம்' 'லாம்' ஜோதிடர்கள்

சில பேர்களுக்கு பிறந்து, வளர்ந்து போய் சேரும் வரை சாஸ்வதமாக ஒரே வீட்டிலேயே ஆயுள் காலம் வரை கிடக்கும் பாக்யம் கிட்டியிருக்கும். பல பேருக்கு அப்படி அமைவதில்லை. ச...

3 நிமிடம்
வெறுமனே வாங்கலாம் ஒரு மனை!
சமூகம் கதை

வெறுமனே வாங்கலாம் ஒரு மனை!

அந்த காலங்களில் தூக்குத் தூக்கி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஓடிக் கொண்டிருக்கும்போது ஒரு மாட்டுவண்டியில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி முதலான கதாநாயகர்களின...

3 நிமிடம்

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0