பட்டி

வாசகர் தர்மம்!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் சமூகம்
Story Image
அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார்...

Share this story:

அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார் இன்று, என்னை வரச் சொல்லி கடிதம் போட்டிருந்தனர். அவர்கள் பதிப்பகத்தில் புத்தகமாக, என் சிறுகதைகள் வெளிவந்தால், அதை விட பெருமையில்லை. இவர்களின் அங்கீகாரம் அபூர்வமென்பதால், எக்காரணத்தைக் கொண்டும் இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாதென்ற தீர்மானத்தில் இருந்தேன். வாசகர் தர்மம்!சேலத்திலுள்ள வளர்மதி அலுவலகத்தில், 10:30 மணிக்கு இருக்க வேண்டுமென்றால், நான் இருக்கும் மேச்சேரியிலிருந்து, 8:00 மணிக்கு கிளம்பினால் தான் சரிப்படும். போகும் போது, பிள்ளையாருக்கு சதுர் தேங்காய் உடைத்து, வேண்டி கொண்டு போக வேண்டுமென நினைத்துக் கொண்டேன். குளிக்க தயாராகும் முன், காபிக்காக காத்திருந்த போது தான், மொபைல் போன் ஒலித்தது. இது போன்று, 6:00 மணிக்கு, காலை வேளைகளில் போன் ஒலித்தாலே, ஏதாவது அசம்பாவித செய்தியாகத்தான் இருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தபடி எடுத்தேன்; அப்படித்தான் அந்த செய்தி இருந்தது. “”அடடா… எப்பவாம்?” என்று நான் பேசிவிட்டு மொபைல் போனை வைத்த போது, “”யார் இந்த காலை வேளையிலே,” என்றபடி என் மனைவி காபியுடன் வந்து நின்றாள். “”சங்கரன் சார் போயிட்டாராம். ஹார்ட் அட்டாக்காம். என் எழுத்துலக நண்பர், ராகவன் போன் பண்ணினார்,” என்றேன். “”அடப்பாவமே… ரொம்ப நல்ல மனுஷர்; அவர் வீடு ராசிபுரமாச்சே. காபி சாப்பிட்டுவிட்டு, சட்ன்னு கிளம்பி போயிட்டு வாங்க… எப்ப எடுப்பாங்களோ என்னவோ… போகும் போது வெறும் வயிறா போகாம, ஓட்டல்லே, ரெண்டு இட்லியாவது சாப்பிட்டுட்டு போங்க.” என் மனைவி, சங்கரன் சார் விஷயத்தில் எனக்கு இயல்பாக வரவேண்டிய பரபரப்பை எதிர்பார்த்து சொல்லிக் கொண்டே போனாள். “”ஊம்…” என்று தயக்கமாக இழுத்தேன். “”ஏன் தயங்கறீங்க,” என்றாள் என்னை புரியாதவளாக. “”நல்ல மனுஷன்… வெல்விஷர்… போய்த் தான் ஆகணும். ஆனா, இன்னிக்குன்னு பார்த்து ரொம்ப நாளா காத்திருந்த வளர்மதி பதிப்பகத்தார் வரச் சொல்லி இருக்காங்களே… ஒண்ணு செய்யறேன்… இன்னிக்கு பதிப்பகம் போறதை தள்ளி போட முடியாது. இன்னும், 10 நாள் இருக்கே… நடுவிலே ஒரு நாள், நீயும் வேணும்னா வா… போய் விசாரிச்சுட்டு வந்துடலாம்,” என்று, மென்று முழுங்கியபடி சொன்னேன். நான் செய்வது, அவளுக்கு ஒப்புதலாக இல்லை என்பதை, அவள் முகம் காட்டியது. உண்மையில், என் மனைவி சொல்வது போல, பதறிட்டு ஓட வேண்டியவன் தான். சங்கரன் சார் அப்படி வேண்டப்பட்டவர். “கடவுளே… இந்த நிகழ்வு நாளைக்கு நேர்ந்திருக்கக் கூடாதா…’ என்றெல்லாம் பேத்தலாக, மனம் தர்ம சங்கடத்தில் புலம்பியது. குளித்து, டிபன் சாப்பிட்டு, வீட்டை விட்டு கிளம்பி, சேலத்திற்கு பஸ் ஏறி உட்காரும் இச்சமயம் வரை, சங்கரன் சார் விஷயத்தில் தவறு செய்கிறோமோ என்று உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. வார – மாத இதழ்களில், வாசகர் கடிதம் என்ற பகுதியை தவிர்க்காமல் படிப்பவர்களுக்கு, “அயனாவரம் சங்கரன்’ என்ற பெயர் பரிச்சியமாகி இருக்கும். என் போன்ற எழுத்தாளர்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. கதை, கவிதை, கட்டுரை, கார்ட்டூன் என்ற எதையும் கவனமாய் படித்து, கடிதம் எழுதுபவர் என்பது, விமர்சனம் செய்து எழுதும் அவருடைய நாலைந்து வரிகளில் தெளிவாகத் தெரியும். “பத்திரிகை தர்மம், படைப்பாளிகளின் தர்மம்ன்னு இருக்கிறது போல, வாசகர்களும் கடைபிடிக்க வேண்டிய தர்மம்ன்னு ஒண்ணு உண்டு. ஏதோ வெறுமனே படிச்சோம்… உள்ளுக்குள்ளே ரசிச்சோம்ன்னு இருக்கக் கூடாது. அதைப்பத்தி, நாலு வரி எழுதிப் போட்டு, அது வெளியாகி, அதை அந்த கதாசிரியரோ, கவிஞரோ படிக்கும் போது, அந்த வரிகள் எத்தனை சந்தோஷத்தைத் தரும்ன்னு அவங்களுக்குத்தான் தெரியும். அது, அவங்களுக்கு ஒரு உற்சாக டானிக் மாதிரி. மேலும் மேலும் எழுதணும்ன்னு தூண்டும். அந்த வகையிலே இப்படிப்பட்ட வாசகர் கடிதம் எழுதறது கூட, ஒரு இலக்கிய சேவைன்னு சொல்லலாமில்லையா!’ ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு போயிருந்த போது, நண்பர் ராகவன், எனக்கு சங்கரன் சாரை அறிமுகப்படுத்திய தருணத்தில், “வாசகர் தர்மம்’ என்ற இந்த புது விளக்கத்தை, சங்கரன் சாரிடமிருந்து கேட்க நேர்ந்தது. இது, எத்தனை உண்மை என்பது எழுத்தாளர்கள் அனுபவத்தில் உணர்ந்திருப்பர். ஒரு படைப்பு வெளியாவதில், அவர்களுக்கு ஏற்படும் சந்தோஷத்திற்கு நிகரான மகிழ்ச்சியை, அடுத்த இதழ்களில் வாசக அன்பர்களின் கடிதங்களும் உண்டாக்குவது உண்மை தான். எடுத்த எடுப்பிலேயே, சங்கரன் சாரை எனக்கு பிடித்து போனதற்கு, இன்னொரு காரணமும் இருந்தது. என்னை ராகவன் அறிமுகப்படுத்திய உடனேயே, சங்கரன் சார், என்னைப் பற்றி அறிந்தவராக பேச ஆரம்பித்ததை நான் எதிர்பார்க்கவில்லை தான். “ஓகோ… சந்திரமோகன்கறது நீங்கதானா? உங்க கதையெல்லாம் படிச்சிருக்கேன். நாலைஞ்சு கதைக்கு வாசகர் கடிதமும் எழுதி, வெளியாகி இருக்கே’ என்று கூறி, வியப்பில் ஆழ்த்தியவர். “பிப்ரவரி மாத, “தாழம் பூ’ இதழ்லே உங்களோட, “தர்ம தரிசனம்’ கதையிலே, கல்யாண ரிசப்ஷன் பத்தி, ரொம்ப ஜோரா விவரித்து எழுதியிருந்தீங்க…’ என்று, ஒரேயடியாக அசர வைத்தார். இதுவரை, என்னை இப்படி யாரும் சட்டென்று அடையாளம் கண்டு கொண்டதாக காட்டியதை நான் அறியாததாலும், இப்படி, ஆயிரத்தில் ஒரு எழுத்தாளரான என் படைப்புகளையும் நுணுக்கமாக விமர்சிக்கும் அதிசயத்தாலும், சங்கரன் சார் என் இனிமையான நண்பராகி போனார். பார்க்கச் செக்கச் செவேலென்று, பூர்ணம் விஸ்வநாதன் சாயலில் இருப்பார். உள்துறை செயலகத்தில் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், சென்னை அயனாவரத்திலிருந்து, ராசிபுரம் குடிவந்து, ஐந்து வருடங்களாகின்றன. இருந்தாலும், “அயனாவரம் சங்கரன்’ என்ற பெயரில், வாசக கடிதங்கள் தொடர்ந்தன. மூத்த பையனுக்கு சென்னையில் வேலை. பெண்ணை, சேலம் ஆடிட்டர் ரவிக்கு கொடுத்துள்ளார். மாப்பிள்ளை ரவியின் ஆன்மிக ஈடுபாட்டுக்கு ஒத்தாசையாக இருக்க, தன் இரண்டாவது மகன், ரமணனோடு சென்னையிலிருந்து தன் சொந்த ஊரான ராசிபுரம் வந்து விட்டார். ரெண்டு, மூன்று முறை அவருடைய ராசிபுரம் வீட்டிற்கு போயிருக்கிறேன். அவர் மனைவி செய்யும் நெய் தோசைக்கு நான் ரசிகன் என்ற அளவில், சங்கரன் குடும்பத்தோடு எனக்கு பரிச்சியம் இருந்தது. தன் தள்ளாத வயதில், ஒரே ஒருமுறை என் வீட்டிற்கு வந்த சம்பவம் தான் இதில் குறிப்பிடத்தக்கது. என் கதை, “வாரமலர் சிறுகதை’ போட்டியில், இரண்டாம் பரிசு பெற்று வெளியான சமயம். என் புகைப்படத்தையும் போட்டு, ஒரு குறிப்பும் கண்டிருந்தது. பலராலும் படிக்கப்படும் வார இதழாக இருந்தும், சுற்று வட்டாரத்தில், என் கதையையும், என் போட்டோவையும் பார்த்து, ஒரு ஆசாமி கூட பாராட்டவோ, விசாரிக்கவோ இல்லை. எனக்கு அதில் ஏமாற்றமும், ஏக்கமும் இருந்தது. அந்த சமயத்தில், ஐப்பசி மாத அடை மழையில், சங்கரன், ஒரு நாள் மாலை, ஆட்டோவில் தன் மகன் ரமணனுடன் வந்திறங்கினார். மேச்சேரி வரை இந்த கொட்டும் மழையில், எப்படி வந்தாரோ என்றிருந்தது. கையில் கொண்டு வந்த ஸ்வீட் பாக்கெட்டை கொடுத்து, ஒரு மாலையும் போட்டார்; எனக்கு திக்குமுக்காடி போனது. “கதை ரொம்ப ஜோர்… வாழ்த்துக்கள்…’ என்று, வாய் நிறைய பாராட்டினார். “நேரிலே போய்தான் வாழ்த்து சொல்லணும்ன்னு ஒரு வாரமா அப்பா துடிச்சிட்டே இருந்தார். இன்னிக்கு மேட்டூர்ல ஒரு பங்ஷன். அதனாலே வீட்டுக்கு வர முடிஞ்சது…’ என்று ரமணன் சொன்ன போது, என்னுடன் சேர்ந்து என் மனைவியும், பெரியவரின் பண்பால் நெகிழ்ந்து போனாள். ஒரு படைப்பாளியின் எதிர்பார்ப்பை பூரணமாய் உணர்ந்த, ஒரு உயர்ந்த வாசகராய், அந்த பெரியவரை பார்த்தேன். சங்கரன் சாரைப் பற்றி அசை போட்டதில், இப்பேற்பட்ட பண்பாளரின் இறுதிச் சடங்கிற்கு போய், மரியாதை கூட செய்ய துடிக்காமல், வேறு எதற்கோ போய் கொண்டிருக்கிறோமே என்ற உறுத்தல் தீவிரமாகிப் போனது. குழப்பமான மனநிலையோடு தான், வளர்மதி நிலையம் சென்று, சீப் எடிட்டருக்காக காத்திருந்தேன். அரை மணி நேரம் சென்றதும், ரிசப்ஷனிஸ்ட் கூப்பிட்டாள்… “”சார்… நீங்கதானே சந்திர மோகன். சாரி… இன்னிக்கு எடிட்டர் வர முடியாதாம். ஏதோ டெத்தாம்; ராசிபுரம் போயிருக்காராம். உங்களை வேற ஒரு நாள் வந்து பார்க்க சொல்லி, போன் பண்ணியிருக்கார்.” எனக்கு சுரீர் என்றது. டெத், ராசிபுரம் என்ற விவரங்கள், அது, சங்கரன் சார் மறைவைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டுமென்று நிச்சயமாகத் தெரிந்தது. இனி உறுத்தலுக்கு இடம் தராத வகையில், சங்கரன் சாரின் ஆத்மா வழிகாட்டி விட்டதாக எனக்கு தோன்றியது. இப்போது பதறி அடித்துக் கொண்டு தான், ராசிபுரத்திற்கு பஸ்சை பிடிக்கப் பறந்தேன்; ஆனால், காலம் கடந்திருந்தது. நான் சங்கரன் சார் வீட்டை அடைந்த போது, எல்லாமே முடிந்து, வீட்டை கழுவிக் கொண்டிருந்தனர். “பக்கத்து கோவில்லே உற்சவம்ன்னு சீக்கிரம் எடுக்க சொல்லிட்டாங்களாம்…’ யாரோ என்னைப் போல் தாமதமாக வந்தவர் சொல்லிக் கொண்டு போனது காதில் விழுந்தது. ஈரத் தலையை துவட்டியபடி வந்த ரமணனை, எதிர்கொள்ளவே வெட்கமாயிருந்தது. “”அப்பா காரியம் முடிஞ்சுப் போச்சு சார்… உங்களுக்கு, “லேட்’டா தகவல் வந்ததோ? எல்லாரும் உங்களை எதிர்பார்த்தோம்; ஆனா, உடனே எடுக்க வேண்டியதா போச்சி. சாரி…” என்றான். நான் மெல்ல தலை குனிந்தேன். “உங்களை எல்லாரும் எதிர்பார்த்தோம்…’ என்று ரமணன் சொன்னது வித்தியாசமாகப்பட்டது. ஒரு நெருங்கிய உறவுக்காரர் விஷயத்தில் கூறப்படுவது போல், என்னிடம் ஏன் சொல்ல வேண்டும்… புரியாமல் யோசனை செய்தபடி நின்றேன். ரமணன் உள்ளே போய், ஒரு போஸ்ட் கார்டுடன் வந்தான். அதை என்னிடம் நீட்டினான். எனக்கொன்றும் புரியாமல் வாங்கிப் படித்தேன். ஆசிரியர் அவர்களுக்கு, சென்ற மாத, “தாரகை’ இதழில், “வவ்வால் மனம்’ என்ற சிறுகதையில், குமரேசனின் மன உறுத்தலை அப்படியே படம் பிடித்தாற்போல், சந்திர மோகன் எழுதிய நடை என்னை உருக்கி விட்டது. குமரேசன் என்ற கதாபாத்திரத்திடமே ஆறுதல் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. — அயனாவரம் சங்கரன். படித்ததும் நீர் முட்டியது. “”நேத்து சாயங்காலம் அப்பா இந்த வாசகர் கடிதத்தை எழுதி முடிச்சதும் தான் நெஞ்சுவலின்னு துடிச்சார். உடனே, காரை வரச் சொல்லி மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனோம். அந்த வலியோடவே, “இந்த லெட்டரை போஸ்ட் பண்ணாம இருந்துடாதே…’ன்னு போகும் போது, சொல்லிட்டே வந்தார். அப்புறம் பேச்சே இல்லே… 3:00 மணிக்கு மேல் உயிர் பிரிஞ்சு போச்சு,” ரமணன் விவரித்த போது, அடக்க முடியாமல் என்னையும் மீறி அழுகை பீறிட்டு வந்தது. “”சாரோட ஞாபகார்த்தமா இந்த லெட்டரை போஸ்ட் பண்ணாம நானே வச்சுக்கிறேன்,” என்று, ஈரத்தால் கலைந்திருந்த சங்கரன் சார் எழுத்தை பத்திரப்படுத்திக் கொண்டேன்.

கூடை

மொத்தம்

₹0