வேட்டி செய்யும் லூட்டி
அகிலா கார்த்திகேயன்
வேட்டிக் கட்டிக்கொண்டு வரக்கூடாதென்று ஏதோ ஒரு ‘கிளப்’ கிளப்பிவிட்டதில் அதைப் பற்றி பலவிதமான அபிப்பிராயங்கள் கிளம்பியிருப்பதைப் பற்றி நான் ஏதும் அபிப்பிராயம் சொல்ல வரவில்லை. ஏனென்றால் வேட்டிதான் எனக்கு பிடித்த ஆடை என்று அடம்பிடிக்கும் ரகம் நான் அல்ல.
அந்த காலத்தில் ‘நிஜார்’ போடும் பருவத்திலிருந்து வயசுக்கு வந்துவிட்ட காலங்களிலிருந்தே வேட்டி என்ற அந்த நாலுமுழ சமாசாரம் என் இடுப்பையும் என் மனதையும் பற்றிக்கொள்ளாமலே நழுவிப் போய்க் கொண்டிருக்கும்.
”என்னடா ஒரு வேஷ்டி கட்டக்கூட துப்பில்லாமே அதை மடிச்சிக் கட்டிண்டு தொடை தெரியற மாதிரி திரியறே…” என்று என் தகப்பனார் நான் வேட்டி கட்டுவதை கண்டிப்பதுண்டு.
”பாவம் குழந்தை என்ன பண்ணுவான்… ஓடியாடி விளையாடறபோது அது நழுவி விழுந்துடறது.. கூட விளையாடற குட்டிகளெல்லாம் பார்த்து பரிகாசம் பண்ணி சிரிக்கறதுகள்” என்று என் தாய் பரிந்து பேசி என் இடுப்பைச் சுற்றி என் சகோதரிகளின் இரண்டு ரிப்பன்களை ஒன்றால் இணைத்து என் இடுப்பில் வேட்டி எப்போதும் இணைந்திருக்க வழி செய்வதுண்டு.
மெல்ல வேட்டி கட்டும் பாங்கு எனக்கு கைவந்துவிட்டதாக கருதி கர்வப்பட்டுக் கொண்டிருந்த பருவத்தில் என்னை கைப்பிடித்தவளின் சுடுசொல்லுக்கு ஆளாக இதே வேட்டிதான் வழிவகுத்துவிட்டிருந்தது.
”ஐய! என்ன இப்படி கேவலமா வேட்டியைக் கட்டிண்டு வெளியே என்கூட கிளம்பிட்டீங்க… ஒரே ஏத்தலும் இறக்கலுமா இப்படியா பக்கிரிமாதிரி கட்டிண்டு வரப்போறீங்க… வேணும்னா கொஞ்சம் முன்னாலே நான் போறேன்… பின்னாடி யாரோ போல வந்து ஒழியுங்க… தியேட்டர்லே டிக்கட் கொடுக்கற இடத்திலே ரெண்டு பேரும் சந்திச்சா போதும்” என்று அண்டர்வேர் அனைத்தும் தெரிய வேட்டி கட்டி நடிக்கும் ராஜ்கிரண் படத்துக்கு என்னை அழைத்து போகும்போது எச்சரிப்பதுண்டு.
ஆகவே வேட்டி கட்டும் கலை கைவராத காரணத்தாலும், ”நல்ல வாட்ட சாட்டமான ஆன்பில்லையா இருந்தா வேட்டி கட்டினா எடுப்பா இருக்கும். உங்களை மாதிரி கட்டை குட்டையா இருக்கிறவாளுக்கு பேன்ட்தான் லாயக்கு” என்று என் மனைவி என் தகுதியை இழிவு படுத்துவதாலும் என் பெரும்பாலான வெளி பயணங்களில் என் மானத்தை காப்பது பேன்ட் என்றும் ஆகிவிட்டது.
ஆபீஸ் போகும் சமயங்களில் பேன்ட் போட்டே ஆக வேண்டுமென்பதால் எந்த சங்கடமும் ஏற்பட்டதில்லை என்றாலும் மிக அத்யாவசியமாக வேட்டியைத்தான் கட்டியே ஆகவேண்டுமென்ற நிர்பந்தம் ஏற்படும் சமயங்களில் அமு என்னை பழிவாங்கிவிடுகின்றது.
என் ஷஷ்டியப்த பூர்த்தியின்போது சாஸ்திரிகள் வேட்டியைத்தான் கட்டியாக வேண்டுமென்று அடம்பிடித்தார். ஏதோ வேஷ்டியை ஒரு தட்டு சுற்றாக கட்டிக் கொண்டு மனையில் உட்கார போனவனை ”என்ன இது இப்படியா கட்டுவா? போய் பஞ்சகச்சம் கட்டிண்டு வாங்கோ” என்று ஆறாம் வகுப்பு வாத்தியார் போல அறுபது வயதுக்காரனை அதட்டி எழுப்பிவிட்டு போகச் சொன்னார்.
நான் திருதிருவென முழித்தேன். முப்பத்தைந்து வருடத்திற்குமுன் என் ஒரிஜனல் கல்யாணத்தின்போது அந்த மஞ்சளில் நனைந்த ஒன்பது முழ வேட்டியை யாரோ ஒரு சாஸ்திரிகள் எனக்கு எப்படி கட்ட வேண்டுமென டெமான்ஸ்ட்ரேஷன் செய்தபடி என்னை உள்ளாடையோடு நிறுத்தி அப்படியும் இப்படியுமாக என்னையும் அந்த வேட்டியையும் சுற்றி திணித்து விட்டது நினைவில் நிற்கிறது. எப்போதடா தாலி கட்டச் சொல்வார்களென்று, எப்போதடா இவனை தடுக்கி விழ செய்வோம் என்று கார்த்திருந்த பஞ்சகச்சத்தை கழற்றிவிட காத்திருந்தது ஞாபகம் வந்தது.
ஆனால் அதற்குபின்பும் பிள்ளை உபநயனம், பெண்ணின் கல்யாணம், அப்பா அம்மா சிரார்த்தம் இவைகளின் போதும் இந்த பஞ்சகச்சம் தேவைப்பட்டபோது அதை என் அத்திம்போர், மாமா, அல்லது விசேஷத்தை நடத்திக் கொடுக்க வரும் சாஸ்திரிகள் என்று யாரையாவது ஒத்தாசை செய்து கட்டிவிட சொல்வதுண்டு.
‘முப்பது நாளில் பஞ்சகச்சம் கட்டுவது எப்படி?’ என்று யாரும் பாடம் சொல்ல புத்தகம் போடாததால் என் முப்பது வருட தாம்பத்தியத்தில் இந்த பஞ்சகச்சம் கட்டும் வித்தை என் மனைவிபோல் எனக்கு அடங்காமல் நழுவிக் கொண்டிருக்கிறது.
ஷஷ்டியப்த பூர்த்தி, பஞ்சகச்ச வேஷ்டியால்தான் பூர்த்தியடையும் என்று சாஸ்திரிகள் உரைத்துவிட்ட காரணத்தால், அதே சாஸ்திரிகளை திரைக்கு பின்னால் அழைத்து அவரையே கட்டிவிட சொன்னது பிசகாகிவிட்டது.
எல்லாம் முடிந்து அவர் பேசியிருந்த தொகையை வெற்றிலை பாக்குடன் நீட்டினேன். எடுத்து எண்ணிப் பார்த்தவர்,
”இன்னும் ஆயிரத்து ஐநூறு கொடுக்கணும்” என்றார். என் முகத்தில் கேள்விக் குறியைப் பார்த்துவிட்டு,
”என்ன அப்படி பாக்கறேள்… இப்பெல்லாம் பஞ்சகச்சம் கட்டிவிடறதுக்கு எல்லாரும் இரண்டாயிரம் ‘சார்ஜ்’ பண்றா… நான் பழகினவராச்சேன்னு ஐநூறு குறைவா சொல்றேன்” என்றார்.
கூடிய சீக்கிரம் பஞ்சகச்சம் கட்ட பழகிக் கொள்ள வேண்டுமென்று அப்போதைக்கு தீர்மானித்துவிட்டு அதை விட்டுவிட்டாலும், இப்போதெல்லாம் வேட்டியுமில்லை, பேன்ட்டுமில்லை என்று என் அமெரிக்கா பையன் அஸன் போட்டுக்கொண்டு விட்டுவிட்டு போயிருக்கும் முக்காலே அரைக்கால் ஆடையில்தான் அலைகிறேன்.
அரை நிஜாருமல்ல, முழு பேன்டுமல்லாத அந்த ரெண்டுக்கெட்டான் உடுப்புதான் எனக்கும் என் மனைவிக்கும் பிடித்த உடுப்பாகிவிட்டிருக்கிறது.
இதை மேற்படி கிளப்பில் அனுமதிப்பார்களா என்று சர்ச்சையை நான் ஏன் கிளப்ப வேண்டும்?
தொடர்புடைய கதைகள்
அமலாக்கப்படும் அதிர்ஷ்டம்!
"பெரிய 'ஹமாம்' ஆபீஸர்னு சொல்லுவியே, அவருடைய விவகாரம் அமலாக்கம் வரைக்கும் போயிடுச்சி பார்த்தியா?" என்று வரதராஜன்தான் நியூஸ் பேப்பரில் அதைக் காட்டினார்....
பட்டாசாய் வெடித்த பருப்பு!
இத்தனை பருப்பு மூட்டைகளை பதுக்கி வைத்திருக்கிறோமே யாராவது அரசு அதிகாரி ரெய்ட் வந்தால் அவர்களிடம் தன் பருப்பு வேகாதே என்ற கவலையோடு தணிகாசலம் ஜலத்தில் விழுந்த த...
பலே தீபாவளி
சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை..
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...