பட்டி

ஈ‘ஷி’யா போட்ட வடாம்!

ஈ‘ஷி’யா போட்ட வடாம்!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 4 நிமிடம் வாசிப்பு சமூகம்

தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகளோடு கூட்டணிக்காக ஈஷிக்கொள்வதுபோல வனஜா மாமி கிளறி இறக்கியிருந்த வடாம் மாவு, பாத்திரத்தையும் கரண்டியையும் பற்றிக்கொண்டு விடுவேனா என்று அடம் மாவாய் மறுத்தது. இப்படிப் பாத்திரத்தோடு பாத்திரமாக தேர்ந்த நடிகனாய் ஒன்றிப் போன வடாம் மாவை எப்படி எடுத்து அச்சில் அடைத்து பிழியப் போகிறோமோ என்று வனஜாவின் விழி பிதுங்கியது.

மொட்டை மாடியில் வேட்டியை விரித்து, பலம்கொண்ட மட்டும் அச்சை அமுக்கியும் அடங்காத மாவு அங்கிருந்து பிதுங்கி வருவேனா என்றது.

இப்படி ஈஷிக்கொள்ளும் மாவின் தன்மைக்குக் காரணம் புரியாமல் வனஜா ஒருபுறம் தவித்தாலும், இதற்கு மூலகாரணமான அகிலாண்டத்தை சபிக்காமலில்லை. வாயாடுவதோடு, வடாம் போடுவதிலும் அகிலாண்டம் மாமி எக்ஸ்பெர்ட். அந்தக் காலத்து மனுஷியாகையால், ஈஷிக்கொள்ளாமல் அதே சமயம் ஈஸியாக வாய்க்குள் கரையும் வடாம் வகையறாக்கள் போடும் கலை மாமிக்கு அத்துபடி. வருடா வருடம் மாமியிடமிருந்து வடாம் டெக்னாலஜியை பாடம் பண்ணிக்கொண்டு, அந்த அபார்ட்மெண்டின் அம்மணிகள் தாங்களும் பிழிய ஓரளவு தெரிந்துகொண்டிருந்தாலும், மாமிக்கு அத்து படியாக இருந்த சூட்சமம் அடுத்தபடியாக யாருக்கும் தெரியாமலிருந்தது.

அகிலாண்டம் என்னவோ தன் சக மாமிகளோடு அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் கூட்டு வடாமிடலைதான் இத்தனை வருடங்களாக செய்துகொண்டிருந்தாள். மார்கழிக் கோலம் போல கோடையில் வடாம் மொட்டை மாடி முழுவதும் அடைத்துக் கொள்ளும். கூட்டணியாக வடாம் போடும் மாமிகள் சமமாக தொகுதி பங்கீடு செய்துகொண்டு அவரவர் வீட்டிற்குண்டான வருட வடாம் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வார்கள். அகிலாண்டம் மாமி ஒரு தேர்ந்த கன்ஸல்டன்டாய் செயல்முறை விளக்கம் மட்டும் கொடுத்துவிட்டு தன் சார்பாக அரிசி, ஜவ்வரிசி என்று எதையும் கொண்டு வராமலேயே, தன் டெக்னிகல் எக்ஸ்பர்டைஸுக்கான ஃபீஸாக கணிசமான வடாங்களை எல்லோரிடமும் கவர்ந்து விடுவாள்.

மிளகாய் விழுது விழுந்தாற்போல யார் கண் பட்டதோ தெரியவில்லை, எங்கள் அம்சா கார்டனில் இந்த கூட்டு வடாம் உற்பத்திக்கு குந்தகம் ஏற்பட்டு விட்டது.

எங்கள் அம்சா அபார்ட்மெண்ட் மிகவும் பெரிது. ஏ,பி,சி,டி என்று ஆங்கிலத்தின் கோடி எழுத்துக்கு கொஞ்சம் குறைவாக, நிறைவான பிளாக்குகள். ஒவ்வொரு பிளாக்கிலும் கீழ்தளம் நீங்கலாக மூன்று தளங்கள். மிகவும் விசாலமான மொட்டை மாடி. இதுநாள் வரைக்கும் மொட்டை மாடி என்பது காலையில் கிழங்கள் வாக்கிங் போக, இளங்கள் எக்ஸர்சைஸ் பண்ண, துணி, மிளகாய் இத்யாதிகளை காயப் போட, சாயங்காலம் பாலகர்கள் பந்து விளையாட என்று அபார்ட்மெண்ட்காரர்கள் எல்லோருக்குமே பாத்யதையான இடமாகத்தான் இருந்தது.

சென்ற இரண்டு வருடங்களாக விவகாரம் ஆரம்பமானது. பத்து வருட அபார்ட்மெண்ட் மாடி பல் இளிக்க ஆரம்பித்து விட்டது. அத்தனை டிஷ் ஆன்டெனாக்கள், துணி உலர்த்த கொடி தாங்கும் கம்பிகள், தொம் தொம் மென்று குழந்தைகளின் கிரிக்கெட் பிட்ச் சாய் தொம்சம் என இன்னபிற காரணங்களால் மொட்டை மாடி எங்கும் சொட்டை விழ ஆரம்பித்து விட்டது. இடைப்பட்ட சிமெண்ட் காறைகள் பெயர்ந்துவிட்டதால், பதிக்கப்பட்ட ஓடுகள், வோட்டை வாங்கிக்கொண்டு தொகுதியில் ஒட்டாத எம்.பிக்களாய் ஒதுங்கின.

இதன் காரணமாக சென்ற வருடம் பெய்த அடைமழையால் அபார்ட்மெண்டின் அடி தள வீடுகளில் அரை அடி தண்ணீர் நின்ற அதே சமயம், மொட்டை மாடி வழியே மேல் தள வீடுகளிலும் சீலிங்கை

பிய்த்துக்கொண்டு அக்மார்க் மழை சேகரமாக கால் அடிதண்ணீர் தேங்கியது. வெள்ள நிவாரணமான ரெண்டாயிரம் முதலில் மூன்றாம் மாடிகளுக்கு கொடுப்பது சட்ட விரோதம் என்று நிராகரித்தார் தொகுதி கவுன்சிலர். மந்திரி கணக்காய் அவரை அழைத்து வந்து வெள்ள சேதத்தைக் காட்டியபோது, இரண்டாயிரமென்ன நாலாயிரமே தரலாமென்று சிபாரிசு செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆனால் இந்தப் பாதிப்பை அபார்ட்மெண்ட் அசோஸியேஷன் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. முதலில் சீனிவாசன், அடுத்தது வெங்கடராமன் என்று அடுத்தடுத்து அத்தனை மேல்மாடிகாரரிகளும் மொட்டை மாடி ஒழுகலைப் பற்றி மூக்கால் அழுது பெடிஷன் கொடுத்தாயிற்று. செக்ரட்ரி, அதற்கான முதல் நடவடிக்கையாய் இப்படிப்பட்ட மராமத்து செய்யும் கம்பெனிக்காரர்கள் மூவரிடம் கொடேஷன் வாங்கியது என்னவோ பாராட்டுக்குரியதுதான். ஆனால் குறைந்த பட்ச கொடேஷனான சதுர அடிக்கு நாற்பது ரூபாய் என்று கணக்குப் போட்டு பார்த்தபோதே, விசாலமான மொட்டை மாடியை ரிப்பேர் செய்யும் செலவு வழுக்கை மொட்டையில் முடி முளைக்கச் செய்யும் செலவாக ஆகும்போலிருந்தது.

அசோஸியேஷன் பணத்தில் இதை செய்ய இயலாது என்று கமிட்டி முடிவெடுத்ததில் செக்ரட்ரியும் கையை விரித்துவிட்டார். அவரவர் வீட்டுத் தலையிலிருக்கும் மொட்டைக்கு அவரவர்களே ரிப்பேர் செய்து கொள்ளவேண்டும். இதற்கெல்லாம் ‘கார்பஸ்’ பணத்தைக் கையாள முடியாதென்றனர். இதனால் வெகுண்டெழுந்த மேல்மாடிக்காரர்கள், இனிமேல் எக்காரணம் கொண்டும் அடியில் குடிகொண்ட தளத்துக்காரர்களை மொட்டை மாடிக்கு அனுமதிக்கக்கூடாதென்று, அசோசியேஷனிலிருந்து பிரிந்து மேல்மாடி சங்கம் என்று தனியாக இயங்கத் தொடங்கினர்.

கீழ் வீடுகளிலிருந்து வரும் ஈ, காக்கைகளைக்கூட மொட்டை மாடிக்கு அனுமதிக்க மறுத்ததால், காக்கை ரூபமாக அவர்கள் வீட்டு பித்ருகள் ஆற அமர வந்து மொட்டை மாடியில் சாப்பிட முடியாமல், ஜன்னலில் போடப்பட்ட சாதத்தை சபித்துக்கொண்டே சாப்பிட்டதில், பிற பித்ரு களின் சாபத்திற்கும் மேல்மாடிக்காரர்கள் ஆட்பட வேண்டியதாயிற்று.

அடுத்த மழைக்குள் எப்படியாவது மாடி ஒழுகலை மராமத்து செய்துவிட வேண்டுமென்று இவர்கள் யத்தனித்தாலும், அவரவர் வீட்டு எல்லைக்குள் ரிப்பேர் செய்யவே எக்கச்சக்கமாக செலவாகும் போலிருந்தது. பரிசோதனையாக ராபர்ட் ஸார் வீட்டின் ஒரு பகுதியை ரிப்பேர் செய்து ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றிப் பார்த்ததில், ரிப்பேருக்கு உபயோகிக்கப்பட்ட வஸ்து அத்தனை நல்ல ரிப்போர்ட் கொடுக்காமல், பூசப்பட்ட இடங்களை பொத்துக்கொண்டு தண்ணீர் ஒழுகியது.

விஸ்தாரமாக விவரிக்கப்பட்ட மேல்படி விவகாரத்தினால் விசாலமான மொட்டை மாடியில் இந்தக் கோடையில் வடாம் போடும் விழா நடக்காமல் போனது. அது போனால் போகட்டுமென்றால் எப்போதும் கீழ்தள அகிலாண்டம் மாமியிடம் கிடைக்கும் அட்வைஸும் கிட்டாத காரணத்தால் வனஜாவின் கையில் விட்டேனா பார் என்று வடாம் மாவு ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தது.

அச்சுக்கு அஞ்சாத அந்த மாவிடம் மல்லுகட்ட முடியாமல் வனஜா அதை அள்ளி அள்ளி குத்துமதிப்பாக குட்டியும் பெரிசுமாக கும்பங்களாக உதறிவிட்டு ஒருவழியாக தன் வடாம் மேனுஃபாக் சரினை முடிக்க வேண்டியதாயிற்று. அப்படியும் பாதி மாவு படியாமல் போனதில் பாத்திரத்தோடு விடவேண்டிய நிலை.

வடாம் போட்ட பின் அது காய நான்கு நாள் எடுத்துக்கொண்டாலும், மாவு ஒட்டிக்கொண்ட மாமியின் புடவை ரவிக்கை இத்யாதிகளிலிருந்து அவைகளைத் தட்டி எடுக்க இன்னும் நாளானது.

வடாமெல்லாம் காய்ந்த பின்னாலேயே நல்லவேளையாக கோடை மழை வந்ததில் ஒருபுறம் வனஜா ஆனந்தப்பட்டாலும், அவளோடு சேர்ந்து அத்தனை மேல் வீட்டுக்காரர்களும் மழை ஒழுகலுக்கு கவலை படவேண்டியதாயிற்று.

”வனஜா! வீட்டிலே உட்கார முடியலே… எல்லா இடமும் பிச்சிண்டு ஒழுகுறது… நான் எங்க வீட்டுக்காரர்கிட்டே சொல்லிட்டேன். எப்படியாவது மாடியை ரிப்பேர் பண்ணறதுக்கு வழியை பாருங்கன்னு. நீயும் உங்க வீட்டுக்காரர்கிட்டே சொல்லு. வர்ற மழை காலத்துக்குள்ளே இதுக்கு ஒண்ணும் பண்ணலைன்னா வீட்டை வித்துட்டுப் போக வேண்டியதுதான்” என்று படபடப்புடன் சொல்லிக் கொண்டே வனஜாவின் வீட்டிற்குள் நுழைந்தாள் ரோஸ்மேரி.

அப்போதுதான் வனஜாவுக்கு தன் வீட்டில் அந்த வித்தியாசம் தெரிந்தது.

”என்ன வனஜா! நீ உங்க வீட்டு மாடியை எப்போ ரிப்பேர் பண்ணினே? சுத்தமா உங்க வீட்டிலே ஒழுகவே இல்லையே” என்று ரோஸ் மேரியும் வியந்த போதுதான் வனஜாவுக்கும் இந்த அதிசயம் எப்படி என்று நினைக்கத் தோன்றியது.

ஆனால் ஓய்வுபெற்ற அதிகாரியாய் அன்று வடாங்களை காக்கைகளிடமிருந்து காப்பாற்ற கம்பும் கழியுமாய் ஏவி விடப்பட்ட வனஜாவின் கணவரான வரதராஜனுக்கு மட்டுமே இதன் ரகசியம் தெரிந்திருந்தது.

காக்கையை விரட்டும்போது கால் தடுக்கியதில் வடாம் மாவு மீதியிருந்த பாத்திரம் கவிழ்ந்தது. கவிழ்ந்த மாவில் காலை வைத்து அவஸ்தைப்பட்ட வரதராஜன் அந்த ஏரியா நெடுகிலும் தன் பாதத்தில் ஒட்டிய பசையை இண்டு இடுக்கு, சந்துபொந்திலெல்லாம் தேய்த்ததில் இடம் பூராவும் வடாம் மாவினால் மெழுகிவிட்டது போலாகியிருந்தது. சூப்பரான வாட்டர் புரூஃப் வஸ்துவாய் வடாம் மாவு இப்போதும் எப்போதும் மழை நீரை மேலேயே தக்கவைத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகமிருக்குமானால் வனஜா மாமியிடம் வடாம் மாவு ஃபார்முலாவை வாங்கி உங்கள் வீட்டு மாடியில் சோதனை முயற்சி செய்யலாமே!

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0