'கஷ்'டமர் கேர்
அகிலா கார்த்திகேயன்
ஆடி சேல்ஸ், ஆஃப் சீசன் சேல்ஸ், நியூ இயர் சேல்ஸ் என்று எல்லா காலகட்டங்களிலும் நம் தலையில் கண்டதையும் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம், அப்படி தலையில் கட்டப்பட்ட சாமான்கள் பழுதுபடும்போது நாம் படும்பாட்டை கொஞ்சம்கூட சந்திப்பதில்லை.
ராஜபோக உபசாரங்களோடு அந்த உபகரணங்களை நம்மிடம் விற்கும்போது கியாரண்டி, வாரண்டி என்றெல்லாம் ஆயிரத்தெட்டு உறுதிமொழி கொடுப்பவர்கள் அதை விற்றபின் என்னத்தான் ராஜஉபசாரம் செய்தாலும் ஆஃப்டர் சர்வீஸ் என்பதற்கு ஒரு எட்டு வந்து பார்க்க அத்தனை போக்கு காட்டுகிறார்கள்.
‘ஒரு மிஸ்டு கால் போதும்’ என்று வீட்டிற்கே வந்து விற்கத் துடிப்பவர்கள் அவைகள் ரிப்பேர் ஆகும்போது கால் காலென்று நம்மை கத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
எல்லா பொருளுக்கும் எல்லா நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு உதவுதாக காட்டிக்கொள்ள ‘கஸ்டமர் கேர்’ என்ற ஒரு அமைப்பை ஏதோ ஒரு நிர்பந்தத்திற்கோ தர்மத்திற்கோ நடத்திக் கொண்டிருப்பதுபோல அவை செயல்படும் அழகு நிரூபிக்கிறது.
கியாரண்டி, வாரண்டி காலகட்டத்தில் பொருளை வாங்கின அடுத்த நாளே ஏதாவது தகராறு ஏற்பட்டால்கூட அதை எடுத்துக் கொண்டு வாங்கிய கடைக்குப் போய் நிற்க முடியாது.
”ஆஃப்டர் சர்வீஸுக்கு நாங்க கியாரண்டி இல்லே. அதை அந்த டோல் நம்பருக்கு போய்தான் புலம்ப வேண்டும்” என்று கை கழுவிவிட்டுவிடுவார்கள்.
எனக்கு இந்த ‘டோல் ஃப்ரி நம்பர்’ என்பதை சொல்லும்போதே அதனால் நான் பட்ட லோல்கள்தான் நினைவிற்கு வந்து வெறுப்பேற்கிறது. பொதுவாகவே இந்த டோல் ஃப்ரி நம்பர்கள் முழநீளம் பெரிசாக இருக்கும். ஆனால் அவை குறிப்பிட்ட கியாரண்டி வாரண்டி அட்டைகளில் யாருக்கும் ஃப்ரியாக படிக்க முடியாத கடுகு சைஸில் சிறிசாக அச்சிடப்பட்டிருக்கும்.
அத்தனை நம்பர்களையும் ஒருமுறை நமக்கு தெரியும்படி பேரனுக்காக சுவற்றில் மாட்டியிருக்கும் கரும்பலகையிலோ, வெண்பலகையிலே மார்க்கர் பென் கொண்டு (அதுவும் பேரனுடையது) போல்ட்டாக எழுதிக் கொள்ள வேண்டும்.
அதற்குப்பின்தான் ஒரு மெகா எபிஸோடு கணக்காக இந்த கஸ்டமர் கேர் தேடல் ஆரம்பிக்கும். முதல் மூன்று முயற்சியில் அம்மாம் நெம்பர்களையும் விட்டுவிடாமல் நம் போனில் அழுத்தி அது வெற்றிகரமாக எதிர்முனையை அடைவதே நம் பாதி வெற்றியை நிர்ணயம் செய்துவிடும்.
அங்கிருந்து ஒரு ரெகார்டட் குரலில் பெண் குரல் நமக்கு கட்டளையிட ஆரம்பிக்கும்.
”வெல்கம் டு அவர் கஸ்டமர் சர்வீஸ். உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால் ஒன்றை அழுத்தவும். தமிழில் என்றால் இரண்டை அழுத்தவும் என்று ஆரம்பித்து நம் தேசத்து அத்தனை மொழிகளுக்கும் ஒவ்வொரு நம்பராக சொல்வற்காக காத்திருந்தாக வேண்டும். நாம் புழங்கும் பாஷை கூடிய சீக்கிரம் சொல்லப்பட்டால் தப்பித்தோம். அதுவே மராட்டி, சிங்களமென்றெல்லாம் இருந்தால் நம் வாய்ப்பிற்கு அவர்கள் அழுத்தச் சொல்லும் நம்பர் வரும்வரை காத்திருக்க வேண்டியதாகிவிடும்.
ஒருவாறு இந்த மொழி பிரச்னை தீர்ந்ததும் அடுத்த குரல் கேட்க ஆரம்பிக்கும். ”நன்றி! தாங்கள் எதற்கு அழைத்தீர்கள் என்பதை புதிதாக வாங்கப்போகிறீர்களா என்றால் ஒன்றை அழுத்தவும், வாங்கின பொருளுக்கு பணம் கட்டவேண்டுமென்றால் எண் இரண்டை அழுத்தவும் என்று ஆரம்பிக்க நமக்கு மன அழுத்தம் மேலிட்டுவிடும். நாம் போன் காரணமான ஆஃப்டர் சர்வீஸ் என்ற ஆப்ஷனுக்கான நம்பரை மட்டும் கடைசி ஒன்பதாம் நம்பராக ஒதுக்கிவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.
அப்படியே ஆஃப்டர் சர்வீஸ் நம்பரை அழுத்தி உள்ளே போனதும் இன்னும் சில விவரங்களுக்காக இன்னும் சில நம்பர் விளையாட்டுக்களை செய்து காதில் ரத்தம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
கடைசியில் ஏழு கடல், ஏழு மலை தாண்டியதும் அங்கே ஒரு இளைஞனோ, யுவதியோ எடுத்து சர்வ அலட்சியமாய் ”உங்க கம்ப்ளெய்ண்ட் ரெஜிஸ்டர் பண்ணிக்கிறோம். ரெண்டு மூணு நாள்லே சர்வீஸ் இஞ்சினியர் வருவாரு சர்வீஸ் சார்ஜ் அறுநூத்து ஐம்பது பிளஸ் சர்விஸ் டாக்ஸ் ஓகே வா” என்று பட்டென்று வைத்துவிடுவார்கள்.
எப்போ வருவாரோ என்று எல்லா ப்ரோக்ராம்களையும் விட்டுவிட்டு நாம் வீட்டிலேயே காத்திருப்போம். நமக்கு மிக அதிருஷ்டமாயிருந்தால் அவரை ஒரு வாரத்திற்குள் தரிசிக்கலாம். ஆனால் பொதுவாகவே இவர்கள் ஆடி அசைந்து வருவதற்குள் அந்த கியாரண்டி வாரண்டி காலகட்டங்கள் கடந்திருக்கும்.
அப்படியே நம் ஜாதகத்தில் கிரகங்கள் சாதகமாக அமைந்து அவர்கள் ஒருவாரத்திற்குள் வந்துவிட்டாலும், ”மேஜர் ரிப்பேர் எடுத்துட்டுதான் போகணும்… நீங்க திரும்பவும் கஸ்டமர் கேர்லே சொன்னாதான் வண்டி அனுப்பு வாங்க” என்று சொல்லும் அவலம்தான் நேரும். திரும்பவும் நாம் போனில் ஒன்று ரெண்டு விளையாட ஆரம்பித்து பொருளை அவர்கள் எடுத்துச் செல்லும் வண்டிக்காக காத்திருக்கும் கஷ்டத்தையும், அது எப்போது, எப்படி திரும்பிவரும் என்ற கவலையையும் படவேண்டியிருக்கும்.
இதற்கெல்லாம் மேலாக அவர்கள் அதற்கான சார்ஜ்ஜை நம்மிடம் சொல்லும்போது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் இன்னொன்றை வாங்குவதே சாலச்சிறந்ததென்ற ஞானோதயம் உண்டாகிவிடும்.
இந்த ஞானோதயம் எல்லா கஸ்டர்மர்களுக்கும் ஏற்படவேண்டுமே என்பதால்தான் கஸ்டமர் கேர் என்ற அமைப்பே உருவாக்கப்பட்டிருக்கலாம்! யார் கண்டது?
இருந்தாலும் நாம் பதினைந்தாயிரம், இருபதாயிரம் கொட்டி வாங்கின சாமானை ‘ஆஃப்டர் சர்வீஸ்’ என்ற அலைகழிப்பிற்கு பயந்து ஆயிரத்து சொச்சத்திற்கு எக்ஸ்சேஞ்ச்சில் கொடுக்க ஒரு மிஸ்டு காலே போதும் என்பதுதான் ஒரு பெரிய ஆறுதலான சமாசாரம்!
தொடர்புடைய கதைகள்
பலே தீபாவளி
சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை..
மொய் சிலிர்ப்பு!
ஏழுமலை என் மேஜையை நோக்கி வரும்போதே எனக்கு பகீரென்றது. ஏழுமலை ஊழியர் சங்கத் தலைவன். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் வாடிக்கையாக சங்கத் தலைவர்கள் கோரிக்கைகளைக் ...
பாலும் தெளிதேனும்
போராட்டத்திற்காக பாலை வீணாக்குவதை எதிர்த்து, ஒரு மகன் தன் தந்தைக்கு உணர்த்தும் பாடம்.
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...