பட்டி

தீபாவளி பஜ்ஜி

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் சமூகம்
Story Image
உங்க வீட்டிலே தீபாவளி பஜ்ஜி பண்றதுண்டா?...

Share this story:

”உங்க வீட்டிலே தீபாவளி பஜ்ஜி பண்றதுண்டா?” தன் சம்பந்தியான மாதவனிடம் கேட்டார், சிதம்பரேசன்.

”உண்டு உண்டு தீபாவளிக்கு முதல் நாள் ராத்திரி வெங்காய சாம்பாரும், வெங்காய பஜ்ஜியும் எங்க வீட்டிலேயும் முக்கியமான மெனுவாக இருக்கும்,” என, ஆமோதித்தார், மாதவன்.

அப்போது, சிதம்பரேசன் உற்சாகமாக குறுக்கிட்டு, தன் அந்த கால தீபாவளி சுவாரஸ்யங்களின் அங்கமான அதை விவரிக்க ஆரம்பித்தார்.

”தீபாவளிக்கென்று செய்யும் பட்சணங்களுக்காக, இரண்டொரு நாள் அல்லோலகல்லோலபட்டு ஓய்ந்திருக்கும் அடுப்படி. மிச்சமிருக்கும் சுட்ட எண்ணெயிலும், கடலைமாவிலும் கடைசி தின்பண்டமாக, தீபாவளி பஜ்ஜி செய்யப்படும்.

”அன்று இரவு, அதற்கு ஜோடியாக வெங்காய சாம்பாரும் கொதிக்கும். தீபாவளி முந்தைய ராத்திரி கொஞ்சமாகக் கொடுக்கப்படும் பட்டாசுகளை கொளுத்தி விட்டு, அந்த சாம்பார் சாதத்தோடு தீபாவளி பஜ்ஜியை தொட்டுக் கொண்டு சாப்பிட்ட சுவாரஸ்யங்களை மறக்க முடியாது,” என, வாயில் எச்சில் ஊற, சிதம்பரேசன் சொன்ன போது, மாதவனுக்கு அவரது ஏக்கம் புரிந்தது.

உடனே, அறையை விட்டு வெளியே வந்தார், மாதவன். ஹாலில் உட்கார்ந்திருந்த தன் பெண் கவிதாவிடம், ”கவிதா, ராத்திரி டின்னருக்கு வெங்காய சாம்பார் வைச்சி, ஏதாவது ஒரு பஜ்ஜி பண்ணிடு,” என்றார்.

தீபாவளியை பெண் வீட்டில் கொண்டாடுவதற்காக, மனைவி கவுரியுடன், மாதவன் வந்து ஒரு வாரமாகிறது. இத்தனை நாளும், பெற்றோருக்கு பிடித்த ஐட்டங்களை சமைத்து போட்டாள், கவிதா.

‘இதோ பார் கவிதா! நீ பண்ணி போடறதை எல்லாம் அப்பா சாப்டுட்டு, அப்புறம் டாக்டர் அது, இதுன்னு தீபாவளி சமயத்திலே அவரோட அலையற மாதிரி ஆயிட போகுது…’ என, எச்சரிப்பாள், கவுரி.

‘பேசாம இரும்மா. ஏதோ என்கிட்ட இருக்கும் போது அப்பா, ஆசையா கேட்டு சாப்பிடறார். ஒண்ணும் ஆகாது பயப்படாதே…’ என, வகைவகையாக பண்ணியவள் தான், கவிதா.

ஆனால், இன்று, ”அப்பா இன்னைக்கு மத்தியானம் வைச்ச ரசம் அப்படியே இருக்கு… அப்பளம் பொரிச்சுடலாம்ன்னு இருக்கேன். இப்போ வெங்காய சாம்பார், பஜ்ஜின்னு செஞ்சுட்டு இருக்க முடியாது,” என, மறுத்தாள்.

”உங்களுக்கென்ன அப்படி நாக்கு. வெங்காய பஜ்ஜியும், சாம்பாரும் கேட்குது,” என, கவுரி குறுக்கிட்டு மாதவனை அடக்க வந்தாள்.

”அம்மா, நீ பேசாம இரு. அப்பா ஒண்ணும் தனக்காக இதை கேட்கலே. மாமனார், இத்தனை நேரம் பேசிட்டு இருந்தாரில்லே. அந்த மனுஷன் நாக்கை சப்பு கொட்டிட்டு எதையாவது சொல்லியிருப்பார். அவருக்கு தான் கேட்கறார்ன்னு உனக்கு புரியலையா?” என்றாள், கவிதா.

தன் மாமனாரை மனுஷன் என்று அவமதிப்பது போல் குறிப்பிட்டது, மாதவனுக்கு வருத்தத்தை தந்தது.

ஒரு வாரமாக, கவிதா, தன் மாமனாரை உதாசீனப்படுத்துவதை பார்க்க நேர்ந்தது. அறையில் தனிமையில், ஒரு ஜீவன் இருப்பதை துளியும் மதிக்காமல், கவிதாவின் போக்கு இருந்தது. அவரிடம் பேரன், பேத்திகளையும் கூட நெருங்க அனுமதிக்காமல் தவிர்த்ததையும் பார்த்தார்.

‘பெங்களூர் தாத்தா, கவுரி பாட்டி…’ என, தன்னிடமும், தன் மனைவியிடமும் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும் பேரன், பேத்திகள், அந்த தாத்தாவிடம் அத்தனை ஆசையாக இல்லாததையும் உணர்ந்தார், மாதவன்.

‘இது வேண்டுமா, அது வேண்டுமா?’ என, தனக்கு செய்து தரும் தின்பண்டங்களை, ‘அவருக்கு ஒத்துக்காது… நல்லா நாக்கை நீட்டிட்டு சாப்பிட்டுட்டு, அப்புறம் இதை பண்ணுது, அதை பண்ணுதுன்னு மருந்து மாத்திரை வாங்கிட்டுவான்னு, என் கணவர் பரத்தை தொந்தரவு பண்ணுவார்…’ என, மாமனார் கண்ணில் காட்டாமல் தின்பண்டத்தை, கவிதா மறைத்ததும் தெரியும்.

தீபாவளிக்காக தனக்கும், கவுரிக்கும் டிரஸ் வாங்கித் தர கடைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, ‘ஏம்மா, அதிக விலையில் எனக்கு ஷர்ட் வேண்டாம்மா…’ என, மாதவன் தடுத்தும், விலையுயர்ந்த சட்டையை வாங்கிக் கொடுத்தாள், கவிதா.

அதே சமயம், ‘உன் மாமனாருக்கு வாங்கலையா?’ என்றபோது, ‘அவருக்கு ரெண்டு மாசம் முன்னாலேயே வாங்கி வைச்சிருக்கு, அதுபோதும்…’ என, அலட்சியமாக சொன்னாள், கவிதா. அது, ஆடி தள்ளுபடியில் வாங்கிய நாலாம் தர சட்டை என்பது, மாதவனுக்கு பிறகே தெரிந்தது.

கோவிலுக்கோ, ஆன்மிக பிரசங்கங்களுக்கோ, கவிதா கூப்பிடும்போது, ‘பாவம் உன் மாமனார் போர் அடிச்சுட்டு உட்கார்ந்திருக்கார். கார்ல தானே போறோம் அவரும் வரட்டுமே…’ என்பார், மாதவன்.

‘அட போப்பா கூட்டிட்டு போய் எங்கேயாவது விழுந்து தொலைச்சா பிரச்னையாயிடும்…’ என்று தவிர்ப்பாள், கவிதா.

இப்படி, 80 வயதை நெருங்கும், தன் வயதை ஒத்த, சிதம்பரேசனை, கவிதா எல்லா விஷயத்திலும் வேண்டா வெறுப்பாக நடத்துவதை மனவருத்தத்தோடு பார்த்தார், மாதவன். இந்த ஒரு வாரமாக, தன்னையும் மதித்து ஒருவர் பேசுகிறாரே என்ற உணர்வோடு சிதம்பரேசன் பேசுவதையும், அப்படி பேசும் சில சமயங்களில் அவரது ஏக்கங்களை வெளிப்படுத்துவதையும், மாதவனால் உணர முடிந்தது.

இப்போது, ‘தீபாவளி பஜ்ஜி’ விவகாரத்திலும், மாதவன் தனக்காக கேட்காமல், மாமனாருக்காக கேட்பதை தெரிந்தவளாய், மறுத்துவிட்டாள், கவிதா.

”கவிதா… பஜ்ஜியையும், சாம்பாரையும் பண்றது அத்தனை சிரமமா சொல்லு. எனக்கும் அந்த கால ஞாபகம் வந்தது; சாப்பிடலாம்ன்னு தோணியது. அதான் கேட்டேன். அப்புறம் உன் இஷ்டம்,” என, லேசான கோபத்தோடு கூறினார், மாதவன்.

”சரிப்பா,” என்று அலுத்தபடி, எழுந்து சென்றாள்.

சிறிது நேரத்தில், ‘டிவி’ பார்த்துக் கொண்டிருந்த, மாதவனிடம், சாம்பார் சாதத்தையும், பஜ்ஜியையும் ஒரு தட்டில் வைத்து கொடுத்தாள், கவிதா.

”மாமனாருக்கு கொடுத்தாயா?” என்றபடி, வாங்கிக் கொண்டார்.

”கொடுக்கலைன்னா விட்டுடவா போறார். அடுத்த ஈடு பஜ்ஜி வெந்துட்டு இருக்கு. ஆனதும் உடனே கொடுக்கறேன். நீங்க, சாப்பிடுங்க,” என்று, வெடுக்கென்று சொல்லிவிட்டு நகர்ந்தாள், கவிதா.

தட்டிலிருந்த பஜ்ஜி ஒன்றை எடுத்து கடித்தார், மாதவன். பஜ்ஜி உப்பில்லாமல் இருந்தது.

”கவிதா… பஜ்ஜியிலே உப்பு போடலை போலிருக்கே,” என்று சத்தமாக குரல் கொடுத்தார்.

”அடடா… அம்மா உப்பு போட்டிருப்பாங்கன்னு நினைச்சி, நான் போடாம விட்டுட்டேன் போலிருக்கு. அதை சாப்பிடாதீங்க கொடுங்க. உப்பு கலந்து அடுத்து ஈடு போட்டு கொண்டு வர்றேன்,” என, அவரிடமிருந்து பஜ்ஜி தட்டை வாங்கி சென்றாள், கவிதா.

சமையலறைக்குள் போன வேகத்தில், வெளியே வந்த கவிதாவின் கையிலிருந்த தட்டில் சாம்பார் சாதத்துடன் வைக்கப்பட்டிருப்பது, அந்த உப்பில்லாத பஜ்ஜி என்பது மாதவனுக்கு தெரியாமல் இல்லை.

அதை சிதம்பரேசனுக்கு கொடுத்துவிட்டு, அப்பா எதையாவது கேட்டுவிடப் போகிறார் என, கவிதா விடுவிடுவென ஓடியதையும் பார்த்து, மனம் நொந்தார், மாதவன். சில நிமிடங்களுக்குப் பின், தனக்கு கவிதா எடுத்து வந்து கொடுத்ததை தொடக் கூட மனமில்லாமல் உட்கார்ந்திருந்தார்.

அறையை விட்டு வெளியே வந்த சிதம்பரேசன், ”என்ன மாதவன் சார்! சாப்பிடாம எதைப் பத்தி யோசிச்சிட்டு உட்கார்ந்திருக்கீங்க. பஜ்ஜியும், சாம்பார் சாதமும் பிரமாதமாக இருக்கு,” என்றபடி, தான் சாப்பிட்ட தட்டை கழுவ சென்றார். தட்டில் எதையும் மிச்சம் வைக்காமல் அவர் சாப்பிட்டிருந்தது தெரிந்தது.

சாப்பிடும் பண்டத்தில் உப்பில்லாத குறையை கூட, மருமகளிடம் கூற முடியாத அவல நிலையிலும், அதை துளியும் காட்டிக் கொடுக்காமல் எப்படித்தான் இவரால் இயல்பாக இருக்க முடிகிறதென்று வியந்தார், மாதவன்.

தன் பெண்ணின் துர்குணத்தை குற்ற உணர்வோடு எண்ணியபடி, சிறிது நேரம் ஹாலில் அமர்ந்திருந்தவர், பின் சிதம்பரேசனின் அறைக்குள் சென்றார்.

”வாங்க மாதவன் இன்னும் துாங்க போகலையா… நாளைக்கு கங்காஸ்நானம் பண்ண சீக்கிரமா எழுந்துக்கணுமே,” என, கூப்பிட்டு உட்காரச்

சொன்னார், சிதம்பரேசன்.

”மாப்பிள்ளை பரத், ஆபீஸ்லேர்ந்து வரவரைக்கும் உங்ககிட்டே பேசிட்டு இருக்கலாம்ன்னு வந்தேன்,” என்ற மாதவன் தடலாடியாக, ”சிதம்பரேசன் சார்! நான் உங்ககிட்டே என் பொண்ணுக்காக மன்னிப்பு கேட்டுக்கறேன். அவ உங்ககிட்ட நடந்துக்கிற விதம் ரொம்பவும் மோசமா இருக்கு.

”எனக்கு அது நல்லாவே தெரியுது. ஆனாலும், அதை நீங்க பெருந்தன்மையா கொஞ்சம் கூட காட்டிக் கொடுக்காம இருக்கிறதை பார்க்கிறப்போ வியப்பாவும் இருக்கு,” என்று குரல் தழுதழுக்க கூறினார்.

இப்படி திடீரென்று மாதவன் கூறியதை சற்றும் எதிர்பார்க்காதவராய், ”அடடா! என்ன சார் பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க. அப்படி நீங்க நினைக்கிற மாதிரி உங்க பொண்ணு என்னை, ‘ட்ரீட்’ பண்றதா எப்பவும், ‘பீல்’ பண்ணதேயில்லே. கவிதா மேலே எனக்கு துளி வருத்தமும் இல்லே,” என, மாதவனை சமாதானப்படுத்தினார், சிதம்பரேசன்.

”அதான் உங்களாலே இதை எப்படி பொறுத்துக்க முடியுதுன்னுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு,” என, மாதவன் உளமார உணர்ந்தவராய் சொன்னார்.

”நம்ப மனசை பக்குவப்படுத்தி வைச்சிக்கிட்டோம்ன்னா, எதுவும் நம்மை பாதிக்காது. தீபாவளி புடவை செலக்ஷனை பத்தி வேடிக்கையா சொல்றது போல, நாம நம்மோட தாய் தந்தையையோ, நம் பிள்ளைகளையோ, ‘செலக்ட்’ பண்ண, ஆயிரம், ‘ஆப்ஷனை’ ஆண்டவன் கொடுக்கலே.

”திருமண பந்தங்களும் சொர்க்கத்திலே நிச்சயிக்கப்பட்ட உறவு. அதற்கு வேறு, ‘ஆப்ஷனே’ இல்லேன்னு வைச்சிருக்காங்க. அதிலே குறை, நிறை எது இருந்தாலும் அதை அப்படியே ஏத்துக்க மனசை பக்குவப்படுத்திக்கணும்.

”இப்படி நம் உறவுகள் மட்டுமல்ல. நம் நண்பர், நமக்கு அமையும் சூழல், நம்மை பாதிக்கும் எதுவானாலும் அது நிச்சயிக்கப்பட்ட விதின்னு, என் பிசினஸ்லே பட்ட அடியாலே நான் புரிஞ்சிக்கிட்டேன்.

”என்னை ஏமாத்தின அந்த பிசினஸ் பார்ட்னரை பழிவாங்கணும்னு கோர்ட், கேஸ்ன்னு ரெண்டு மூணு வருஷம் மன உளைச்சலோடு அலைஞ்சு, நிம்மதியில்லாம திரிஞ்ச போது தான், அந்த மகானை தரிசிக்கிற நல்ல நேரம் அமைஞ்சுது.

”நான், என் பிரச்னை, மனக்குறைகளை கொட்டி தீர்த்துடணும்னு தான், அவர் முன்னே போய் நின்னேன். அப்போ அங்கே ஒரு பக்தர், தன் மகனோட வந்து, பையனுக்கு மனநிலை சரியில்லை… எல்லா வைத்தியமும் பார்த்து கைவிட்ட நிலையில் வேறு கதியில்லாமல், மகானிடம் வந்திருப்பதாக கூறி, கண்ணீர் வடித்தார்.

”மகான் சில நிமிடங்கள் மவுனமாக அந்த சிறுவனைப் பார்த்தார். பின், ‘ஏன் இவன் இப்படியே இருந்துவிட்டு போகட்டுமே…’ என்றதும், அந்த தந்தை அதிர்ந்து போனார். மகான் நிதானமாக தெளிய வைத்தார்.

”அதாவது, ‘இவன் மனநிலை சரியில்லாததாலே கோபம், பொறாமைன்னு நாமெல்லாரும் மனசால படற அவஸ்தை, இவனுக்கு இல்லை. மனம் ஆசைப்பட்டு அதனாலே நாம் பண்ற பாவங்களை இவன் பண்ணப் போறதில்லை. அடுத்த ஜென்மாவிலே இந்த பாவ புண்ணிய பலன்களாக இவன் கஷ்டங்களை அனுபவிக்க போறதில்லே. இவன் இப்படியே நிம்மதியா இருந்துட்டு போகட்டும். இவன் மனசாந்திக்கு கடவுளை வேண்டிக்கிறேன்’ன்னு இதமாக ஆசிர்வதித்து அனுப்பினார்.

”இந்த சம்பவத்தை பார்த்த எனக்கு, என் குறையை மகானிடம் சொல்ல தோன்றவில்லை. முற்பிறவி, வினைப்பயன் இதெல்லாம் உண்மைன்னு மகான் ஆணித்தரமாக உணர்த்தியதை புரிந்து கொண்டேன்.

”அதுக்கப்புறம், அதை மூடநம்பிக்கையா உதறி தள்ளாம, முழு நம்பிக்கையோடு அனுசரிக்க பழகிட்டேன். எனக்கு உடல் மற்றும் மனசால் வரும் பாதிப்புக்கெல்லாம் வேறு யாரோ காரணம் இல்லை. என் முன் ஜென்ம வினைகளே காரணம்ன்னு நம்ப ஆரம்பிச்சேன். நான் செஞ்ச தவறுக்கான தண்டனைன்னு, ஏத்துக்கிற பக்குவம் ஏற்பட்டு போச்சு.

”மூட நம்பிக்கையா சில பேருக்கு தோன்றினாலும், இந்த கர்மா தியரி எனக்கு நல்ல மனபக்கு வத்தையும், மனசாந்தியையும் கொடுத்திருக்கு,” என, சிதம்பரேசன் உருக்கமாக சொல்லி முடித்தபோது, தன்னை அறியாதவராய் அவர் காலில் விழுந்து வணங்கினார், மாதவன்.

அடுத்த நாள் தீபாவளியாய் விடிந்தது. கங்கா ஸ்நானம் செய்துவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்த சிதம்பரேசனிடம், ”மாமா! என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கோ,” என, கண்ணீர் பெருக காலில் விழுந்து வணங்கினாள், கவிதா. சற்றும் எதிர்பாராத மருமகளின் மாற்றம் சிதம்ப ரேசனை ஸ்தம்பிக்க வைத்தது.

முந்தைய இரவு, அப்பாவிடம் மாமனார் பேசியதை எல்லாம் அறை கதவருகே நின்று கேட்டு கொண்டிருந்த கவிதாவின் மனதிலிருந்த மாசு அகன்று, தீப ஒளியாக பிரகாசிப்பதை அறியாதவராய் நெகிழ்வோடு வாழ்த்தினார், சிதம்பரேசன்.

கூடை

மொத்தம்

₹0