பட்டி

நரகாசுரன் கேட்காத தீபாவளி வரம்கள்!

நரகாசுரன் கேட்காத தீபாவளி வரம்கள்!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 2 நிமிடம் வாசிப்பு சமூகம்

அகிலா கார்த்திகேயன்

”எல்லோரும் இந்த தினத்திலே அதிகாலையில் எண்ணெய் வைத்து கங்கா ஸ்நானம் பண்ணி புத்தாடை உடுத்தி இனிப்பு உண்டு பண்டிகையாக கொண்டாட வேண்டும்” என்று நரகாசுரன் துவாபரயுகத்தில் கிருஷ்ண பரமாத்மாவிடம் வரம் கேட்டபோது வரப்போகும் யுகங்களில் இந்த வரம் யாவும் இப்படியெல்லாம் வரம்புமீறும் என்று வரம் கொடுத்த கண்ணுக்கேகூட தெரிந்திருக்காது.

அந்த துவாபரயுகத்தில் கங்கை இருந்திருக்கலாம்; எல்லோருக்கும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமும் இருந்திருக்கலாம்… ஆனால் பதினைந்தாயிரம் இருபதாயிரம் கொட்டி பட்டுப்புடவை வாங்கும் வாய்ப்போ வசதியோ அப்படி விலை கொடுத்து வாங்கும் துணிச்சலோ நரகாசுரனை ஈன்ற பூமாதேவி அம்மையாருக்கும், அசுரனின் துணைவியாருக்குமே இருந்திருக்காது. ஏதோ பச்சை இலைகளை பரித்து ஈர்குச்சியால் பின்னி புத்தாடையாக உடுத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த அசுரன் கேட்ட வரத்தை மிஸ் யூஸ் செய்த முதற் பெருமையாவும் நல்லியையும், போத்தீஸையும், ஆர்.எம்.கே.விக்களையும் தலைகீழாக புரட்டி புடவைகளை தேடும் நம் மனைவியமார்களுக்கே உரித்தாகியுள்ளது. தீபாவளிக்கு புடவை தேடுவதை ஒரு சங்கல்பமாகவே கொண்டு கணவன்மார்களை துணிக்கடைகளில் தவமிருக்கச் செய்வார்களென்று நரகாசுரன் வரம் கேட்டபோது நினைத்திருக்கவே சான்ஸ் இல்லை. அப்படியே அவன் சொத்தில் பாதியை தன் மனைவி கேட்ட புடவைக்கு செலவழிக்கும் பழக்கமுள்ளவனாக இருந்திருந்தால் தீபாவளியன்று எல்லோரும் கட்டாயமாக ஏதாவதொரு பழைய கந்தலைத்தான் கட்டிக் கொண்டாக வேண்டுமென வரத்தை மாற்றி கேட்டிருப்பான். எண்ணெய் தேய்த்து குளித்த உடம்பு பிசுபிசுவிற்கு மேட்சாக கசமான புடவையே சாலசிறந்ததென்பதால் இப்படி கேட்டதாகவும் சாக்குச் சொல்லியிருப்பான்.

அதுபோல துவாபரயுகத்தில் காசி இருந்திருக்கும். சிவகாசி இருந்ததாக புராணம் எதிலும் தென்படவில்லை. அதனால் தீபாவளி கொண்டாடத்திற்கு கிருஷ்ணபரமாத்மாவிடம் அவர் தர்ம பத்தினி பெயரை ஏந்திய லட்சுமி வெடி, இதியாதிகளை வெடித்து கொண்டாட வேண்டுமென்று அசுரன் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்ற வரம் முதலில் கம்பி மத்தாப்பில் ஆரம்பித்து நாளடைவில் சரம் சரமாக வெடிக்கும் வரம் ஆக மாறிவிட்டிருக்கலாம். இல்லை அந்த அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்ய எழுந்திருக்காமல் தூங்கும் கும்பகர்ணர்களை எழுப்ப ஏதாவது ஒரு உபாயம் செய்தாக வேண்டுமென்று பிற்காலத்தில் இந்த பட்டாசுகளை கண்டுபிடித்திருக்கலாமோ என்னவோ.

இதுபோல ஐயாயிரம் வாலா, பத்தாயிரம் வாலா போன்றவைகளை தலைவர் வெற்றி வெற்றவுடன் வெடிக்கும் வழக்கம் அப்போதெல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்திருந்தால் ‘நரகாசுரனை வென்ற நாயகனே’ என்று கிருஷ்ணபரமாத்மா வெற்றி பெற்றவுடன் ஆயிரம் ஆயிரம் வெடிகளை வைத்து அதன் பலனாக உயிர்விடும் நிலையில் நரகாசுரன் கேட்ட எந்த வரமும் கிருஷ்ணனின் காதில் விழாமல் செய்திருக்கலாம். வரம் வாங்காமேலே நரகாசுரன் உயிர் துறந்திருக்கலாம். நல்லவேளையாக அப்படி நடக்காமல் தீபாவளி தப்பியது.

நரகாசுரன் கேட்காமல் ஜனங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட தீபாவளி வரத்தில் தீபாவளி ரிலீஸும் ஒன்று. இப்படி தீபாவளி திருநாள்தான் திரைப்பட ரிலீஸுக்கு மிகவும் முக்கிய நாள் என்பதும் தீபாவளியன்றே அந்த படத்தை ஜனங்கள் பார்த்தேயாக வேண்டுமென்றெல்லாம் நரகாசுரன் வேண்டியிருக்க முடியாது. அப்படி கேட்டிருந்தாலும் தீபவாளி ரிலீஸ் படத்திற்கு அன்றே டிக்கட் கிடைக்கும் வரத்தை நரகாசுரனுக்கே கொடுக்க கண்ணனால் முடிந்திருக்காது.

அதேபோல நரகாசுரன் காலத்தில் டி.வி. இருந்து, அதைப் பார்ப்பதிலிருந்து அவன் மனைவி விலகாமலிருந்திருந்தால் அந்த அசுரன், ஒரு முக்கிய வரத்தைக் கேட்டிருப்பான்.

”தீபாவளியன்று கட்டாயம் எந்த டி.வி. சானலும் இயங்கவே கூடாது. ஜனங்கள் வேறு வழியில்லாமல் கோயிலுக்கு வந்து தெய்வ தரிசனம் செய்து இந்த நாளில் உங்களையும் என்னையும கொஞ்சமாவது நினைவு வைத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை கட்டாயம் வைத்திருப்பான். இந்த கலிகாலத்தில் அவனுக்கு போட்டியாக இந்த டி.வி. அசுரன் இப்படி ஜனங்களைப் பிடித்து ஆட்டுவானென்று அவன் எதிர்பார்த்து இப்படி செய்திருக்கலாமே என்று புலம்ப வேண்டியதாகிவிட்டது.

அப்படி ஒரு வரத்தை நரகாசுரன் சார்பாக நாமாவது கிருஷ்ணனிடம் கேட்டு வைப்போம்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

தொடர்புடைய கதைகள்

தகப்பனைத் தேடி
சமூகம் கதை

தகப்பனைத் தேடி

விவாகரத்து பெற்ற ஒரு தாய், தன் குழந்தைக்கு ஒரு நல்ல தந்தையைத் தேடும் பயணமும், ஒரு எதிர்பாராத சந்திப்பும்.

7 நிமிடம்
(நில)வேம்பு மாமி
சமூகம் கதை

(நில)வேம்பு மாமி

பாட்டி வைத்தியம், கொள்ளுப் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படுபவைகளில் நாம் காணாத ஒரு கஷாய வகை இப்போது பிரபலமாகியுள்ளது. இருந்தாலும் என் மனைவி அதன் பூர்ண உரிமை...

3 நிமிடம்
'லாம்' 'லாம்' ஜோதிடர்கள்
சமூகம் கதை

'லாம்' 'லாம்' ஜோதிடர்கள்

சில பேர்களுக்கு பிறந்து, வளர்ந்து போய் சேரும் வரை சாஸ்வதமாக ஒரே வீட்டிலேயே ஆயுள் காலம் வரை கிடக்கும் பாக்யம் கிட்டியிருக்கும். பல பேருக்கு அப்படி அமைவதில்லை. ச...

3 நிமிடம்

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0