தர்மமிகு தலை கவசம்!
அகிலா கார்த்திகேயன்
பசுபதி வீட்டிற்கு வந்தார்.
”இதிலே உட்காருங்க” என்று ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டேன்.
”இன்னொரு சேர் கிடைக்குமா?” என்று உட்காராமல் தயங்கியபடி கேட்டார்.
”ஏன் இன்னும் யாராவது உங்ககூட வராங்களா?” என்று வாசலை நோக்கி பார்வையை செலுத்தினேன்.
”ஹி! ஹி! வேற யாரும் வரலை. என் ‘ஹெல்மெட்’டை வைக்கத்தான் இன்னொரு சேர் கேட்டேன் என்றார். அப்போதுதான் அவர் கையில் கனத்துக் கொண்டிருந்த அந்த மண்டை கவசத்தை கவனித்தேன். கூடுதலான சேர் போட்டதும் அதில் இறக்கி வைத்து அக்கடா என்று மூச்சுவிட்டார்.
பசுபதியோடு சரிசமமாக ஹெல்மெட்டும் ஒரு சேரில் உட்கார்ந்திருக்க, அவருக்கு மட்டும் காபி கொடுத்தேன். நல்ல வேலையாக ஹெல்மெட் காபி கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தாலும் ‘சர்க்கரை போடலாமா… கூடாதா?’ என்று அதையும் கேட்கும் அளவிற்கு அதன் அந்தஸ்து இந்நாளில் கூடியுள்ளது.
பசுபதி ஹெல்மெட் அணிவதன் சாதக பாதகங்களை கொஞ்சம் புலம்பிவிட்டு மற்ற விஷயங்களை பேசிவிட்டு போனார். போனவர் ஹெல்மெட்டை மறந்துவிட்டு போகாமலிருக்க ஒரு யுக்தியை கையாண்டிருந்தார். அவர் போட்டுக்கொண்டு வந்த ஷூவை வாசலில் கழற்றியபோது, கூடவே சாக்ஸையும் கழற்றி இந்த ஹெல்மெட்டுக்குள் வைத்திருந்தார்.
ஆக, ஷூ போடும்போது சாக்ஸ் அவசியமாகிறது. சாக்ஸ்ஸை வைத்திருப்பது தலை கவசமென்பதால் அதை மறவாமல் எடுத்துச் செல்வதில் சிரமமில்லை.
”பலே! நல்ல ஐடியாதான்! நான்கூட என்ன புது ஹெல்மெட் இத்தனை நாற்றம் வீசுகிறதே என்று யோசித்தேன்” என்று அவருடைய சாக்ஸை துவைத்தாக வேண்டுமென்ற யோசனையை மறைமுகமாக உணர்த்தினேன்.
”என்ன பண்றது மாமா… ஹெல்மெட்டுக்கு இத்தனை மரியாதை கொடுக்கலேன்னா… போலீஸ்கிட்ட மாட்டினா நம்ம மரியாதை அவ்வளோதான்… புதுசா இன்னொரு ஹெல்மெட் வாங்கிட்டு வந்து பில்லை காட்டி பல்லை காட்டிட்டு அவாகிட்டே மாட்டிட்டுயிருக்கிற டூ வீலரை மீட்டுட்டு வரவேண்டியதா போறது” என்று நொந்தபடி ஹெல்மெட்டை சுமந்து சென்றார்.
தலை கவசங்களுக்கு இன்றல்ல புராண இதிகாசங்களிலிருந்தே ஒரு தனி மரியாதை கொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்து வருகிறது.
எல்லா தெய்வங்களும் கிரீடம் அணிந்து தரிசனம் நல்குவது நமக்கு ஹெல்மெட்டின் நலத்தை எடுத்துரைக்கவே என்றுதான் தோன்றுகிறது. நாலு தலை பிரம்மாவானாலும் கிரீடம் அணிவது தேவலோகத்தில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. சிவபிரானுக்கு மட்டுமே சர்தார்ஜிக்களுக்கு வழங்கப்படும் சலுகையாய் அது தவிர்க்கப்பட்டிருந்தாலும், அவரது ஜடாமுடியே சிரஸை காக்கும் வல்லமையோடு இருப்பதுபோக ஒரு புறம் கங்கையும் மறுபுறம் மூன்றாம் பிறையுமென பிறைசூடிக்கு நிறைய கவசங்கள் உண்டு.
ஆண் தெய்வங்கள் மட்டுமின்றி பெண் தெய்வங்களின் கூந்தல் அழகை காணவிடாமல் டிசைன் டிசைனாக கிரீடங்கள் அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
நம் ஹெல்மெட்டையும் வைரம், தங்கம் என்று நாகாசு வேலைகள் செய்து பலபலவென ஒரு கிரீடம் கணக்காக ஏதாவது ஜுவல்லரிகாரர்கள் ஐ.ஏ.எஸ். முத்திரையோடு தயாரித்து விற்றால் அம்மணிகளுக்கு தலை கவசமும் ஒரு அலங்கார பொருளாக உயர்ந்த நிலை பெற்று அணியும் ஆவலை தூண்டக்கூடும்.
போர்களத்தில் எதிரி விரட்ட தலைதெறிக்க பின்வாங்கி ஓடி வரும் வேகத்தில் கால் தடுக்கி விழுந்தால் தலையில் பலத்த அடி படக்கூடாதென்றே அந்த காலத்து ராஜா, ராணிகளும் தலை கவசமாக கனமாக கிரீடங்களை தாங்க வேண்டியிருந்தது.
மகாபாரதத்தில்கூட கவசங்களுக்கு ஏகப்பட்ட மரியாதை கொடுத்து எழுதப்பட்டுள்ளது. கர்ணன் கவச குண்டலங்களோடு தோன்றியதாக சொல்லப்படுகிறது. அந்த கவசத்தை தந்திரமாக தானமாக அவனிடமிருந்து கவர்ந்தால் மட்டுமே அவனை கவிழ்க்க முடியும் என்ற வகையில் கவசத்திற்கு ஒரு உயர்வை அந்த இதிகாசம் பகர்கிறது.
ஏன் அர்சுனனையே காப்பாற்றியது தலை கவசம்தானே… பிரம்மாஸ்திரம் தாக்க வரும்போது கண்ணன் லேசாக காலின் கட்டை விரலை அழுத்த குறிபார்த்து ஏவப்பட்ட அஸ்திரம் கிரீடத்தை மட்டும் தாக்கி தலை தப்பியிருக்கிறது.
ஆக, தலை தப்ப வேண்டுமானால் சிரமங்களை பார்க்காமல் தலை கவசம் அணியவேண்டுமென்ற நீதி மகாபாரத்திலேயே சொல்லப்பட்டுள்ளதால் அதை மீறாமல் கடைபிடிப்பதே நன்று.
கீதா உபதேசமாக ஹெல்மெட் பற்றி இத்தனை சொல்லும் என்னைப் பார்த்து யாரும் இதுவரை ஹெல்மெட் வாங்கி விட்டீர்களா என்று கேட்டதில்லை. சைக்கிள் முதற்கொண்டு எந்த டூ வீலரையும் ஓட்டும் பயிற்சி பெறாத எனக்கு அப்படி ஒரு அவசியம் ஏற்படாவிட்டாலும், இப்படி நான் எழுதும் தத்துபித்து சமாசாரங்களை படித்துவிட்டு பயங்கர கோபத்தோடு என் தர்ம பத்தினி வீசி எறியும் உபகரணங்களிலிருந்து என் தலையை காக்க எப்படியும் ஒரு ஹெல்மெட்டை நானும் வாங்க உத்தேசித்துள்ளேன்.
தொடர்புடைய கதைகள்
பெருமைமிகு பெருசுங்க!’
இது ஒரு ‘சிரி’ கட்டுரை மட்டுமே\! சீரியஸா எடுத்துக்காம சும்மா சிரிச்சுட்டுப் போலாமே... ப்ளீஸ்\!...
நரகாசுரன் கேட்காத தீபாவளி வரம்கள்!
''எல்லோரும் இந்த தினத்திலே அதிகாலையில் எண்ணெய் வைத்து கங்கா ஸ்நானம் பண்ணி புத்தாடை உடுத்தி இனிப்பு உண்டு பண்டிகையாக கொண்டாட வேண்டும்'' என்று நரகாசுரன் துவ...
'கஷ்'டமர் கேர்
ஆடி சேல்ஸ், ஆஃப் சீசன் சேல்ஸ், நியூ இயர் சேல்ஸ் என்று எல்லா காலகட்டங்களிலும் நம் தலையில் கண்டதையும் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம், அப்படி தலையில்...
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...