பட்டி

பட்டாசாய் வெடித்த பருப்பு!

பட்டாசாய் வெடித்த பருப்பு!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 3 நிமிடம் வாசிப்பு சமூகம்

அகிலா கார்த்திகேயன்

இத்தனை பருப்பு மூட்டைகளை பதுக்கி வைத்திருக்கிறோமே யாராவது அரசு அதிகாரி ரெய்ட் வந்தால் அவர்களிடம் தன் பருப்பு வேகாதே என்ற கவலையோடு தணிகாசலம் ஜலத்தில் விழுந்த தீபாவளி பட்டாசாய் நொந்துபோய் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

”மாமா இதுக்குபோயா பேஜார்படறீங்க. எல்லா பருப்பு மூட்டைங்களை சுத்தியும் பட்டாசு வைச்சுடலாம்” என்று தணிகாசலத்தின் மச்சினனான வரதன் குண்டை தூக்கிப் போட்டான்.

”என்னடா சொல்றே” என்று பீதியுடன் கேட்டார்.

”மாமா நீங்க பருப்பை பதுக்கினாதானே தப்பு, பட்டாசு பதுக்கினா தப்பில்லையே… முதல்லே சிவகாசிக்கு ஐம்பதாயிரமோ அறுபதாயிரமோ பட்டாசு அனுப்பச் சொல்லி ஆர்டர் கொடுங்க அப்புறம் ஐயோவோட ஐடியாவை பாருங்க” என்றான் வரதன்.

தணிகாசலத்திற்கு சந்தேகம் வந்துவிட்டது. அந்த காலத்தில் தன் தலை தீபாவளியின்போது பாலகனாய் இருந்த வரதன் தன்னிடம் பெரிய பட்ஜெட்டில் வாங்கித் தரச் சொன்ன பட்டாசுகளை தான் வாங்கித் தராமல் அதில் பத்தில் ஒரு பங்கை பத்தும் பத்தாமலும் வாங்கிக் கொடுத்தது நினைவிற்கு வந்தது. மலிவாக வாங்கிய அந்த பட்டாசுகள் பற்ற வைத்தும் பற்றிக் கொள்ளாமல் பாலகன் வரதனை வருத்தெடுக்க அவன் கருவிக்கொண்டு ஒரு குருவி வெடியை தணிகாசலத்தின் மேல் கொளுத்திப் போட்டதும் ஞாபகம் வந்தது. அது தணிகாசலத்தின் தலையில் முன் வழுக்கையில் மோதி பாதி திரி எரியாமல் விழ தலைதீபாவளிக்கு போன தணிகாசலத்தின் தலை தப்பியது தரமில்லாத பட்டாசு செய்த புண்ணியமானது.

அந்த கடந்தகால கடுப்பில் இப்போதைய வாலிப மச்சினன் தன்னை பழிவாங்க திட்டமிடுகிறானோ என்று தணிகாசலம் குழம்பிக்கொண்டிருந்தார்.

”மாமா என்ன யோசிக்கிறீங்க? ஐம்பது, அறுபதாயிரம் கொடுத்து பட்டாசு வாங்க தயங்கனீங்கன்னா… ‘டன்’ ‘டன்’னா பதுக்கி இருக்கிற பருப்பு அத்தனையையும் காப்பாத்த முடியாம போயிடும். லட்சக் கணக்கா, கோடிக் கணக்கா லாஸ் ஆயிடும்… எல்லாத்தையும் சீஸ் பண்றதோட விடாம உங்களையும் உள்ளே தள்ளிடுவாங்க” வரதன் சொல்ல சொல்ல தணிகாசலம் வெடவெடத்து போனார்.

”ஏண்டா ரொமப் பயமுறுத்தரே… பட்டாசு வாங்கறதுத்துக்கும் பதுக்கிய பருப்பை காப்பாத்தறதுக்கும் என்ன சம்பந்தம்னு புரியலையே” என்றார்.

”மாமா! பெட்டி பெட்டியா பட்டாசு வந்து இறங்கினதும் அந்த பெட்டிங்களையெல்லாம் குடோன்லே இருக்கிற பருப்பு மூட்டைங்க வெளியே தெரியாத மாதிரி அடுக்கிடுவோம்… ரெய்டுக்கு வரும் அதிகாரிங்க எல்லாம் பட்டாசுதான் போலகீதுன்னு ஏமாந்து பேஜாராயி பூடுவானுங்க. எப்படி ஐயாவோட ஐடியா?” என்று வரதன் பெருமையுடன் சொன்னான்.

”ஏண்டா அத்தனை ஆயிரம் கொட்டி வாங்கற பட்டாசை எத்தினி நாலு விக்காம அடுக்கி வைச்சிகிணு இருக்கறது. வேஸ்ட்டா பூடாது?”

”ஏன் மாமா வேஸ்ட்டாக போவுது… எப்படியும் அடுத்த தீபாவளிக்கு பட்டாசு விலை ஏறத்தான் போவுது. அதுக்கும் சேர்த்து பட்டாசையும் பதுக்கினா மாதிரி ஒரு திருப்தியிருக்கும் பாருங்க” வரதன் ஒருவழியாக தன் திட்டத்திற்கு தணிகாசலத்தை தலையாட்ட வைத்தான்.

ஆர்டர் செய்யப்பட்ட பட்டாசுகள் பெட்டி பெட்டியாக லாரியில் வந்து இறங்கின. ஒரு வழியாக எல்லா பருப்பு மூட்டைகளையும் சுற்றி நம்பகமான ஆட்களை வைத்து தணிகாசலம் அடுக்கிவிட்டு பெருமூச்சுவிட்டார்.

”இனிமே எவன் வந்தாலும் கண்டே பிடிக்க முடியாது” என்று நிம்மதியோடு உட்கார்நதிருந்த அவரிடம் வரதன் அந்த தகவலைச் சொன்னான்.

”மாமா பருப்பு வியாபாரிங்க குடோனையெல்லாம் ரெய்ட் பண்ண வர்றாங்களாம். நான் கொடுத்த ஐடியாதான் உங்களை காப்பாத்த போகுது, பிளாக்கிலே அப்புறம் நீங்க விக்கப்போற எல்லா பருப்பு மூட்டைக்கும் ஐயாவுக்கு கமிஷன் தரணும் சொல்லிட்டேன்.”

தணிகாசலமும் தெனாவெட்டாய் ரெய்டை எதிர்பார்த்து காத்திருந்து அதிகாரிகளிடம் சர்வ அலட்சியமாக குடோனை திறந்து காண்பித்தார்.

”ஸார்! நான் பருப்பு வியாபாரம் கட்டுபடியாவலைன்னு எப்பவோ வுட்டுட்டேன். இப்போ பட்டாசு பிஸினஸ்தான் பாருங்க” என்றார்.

ஏமாந்துபோய் முழித்து நின்ற உயர் அதிகாரியின் காதில் ஒரு உயர் அதிகாரி எதையோ கடித்தார்.

”ஓகே! எல்லாம் பட்டாசுதான்… ஆனா நம்ம ஊர் பட்டாசு இல்லே போலிருக்கே… எல்லா பெட்டி மேலேயும் சீனா சீனான்னு எழுதியிருக்கே… சீனா பட்டாசை பதுக்கியிருக்கீங்க… இது சட்டப்படி குற்றம்… எல்லாத்தையும் சீஸ் பண்ணப் போறோம்” என்று அதிரடியாக அதிகாரி போட்ட போட்டில் தணிகாசலம் ஆடிப்போனார்.

சீர்காழி தணிகாசலம் எப்போதுமே தன் பெயரை செல்லமாக ‘சீனா தாணா’ என்று குறிப்பிட்டால்தான் தன் வியாபாரத்தில் செல்லம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் தன் முகவரியை ‘சீனா தாணா’ என்றுதான் குறிப்பிடுவார்.

சிவகாசிகாரர்களிடம் பட்டாசு வாங்கும்போதும் இவர் இதே பெயரில் ஆர்டர் கொடுத்ததில் அவர்களும் அனுப்பிய பட்டாசு பெட்டிகளின் மேல் ‘சீனா தாணா’ என்று மையில் கிறுக்கி அனுப்பியிருந்தனர். லாரியிலிருந்து பெட்டிகளை இறக்கும்போது லேசாக தூரியதால் சீனா தாணாவில் ‘தாணா’ என்பது மட்டும் சில பெட்டிகளில் அழிந்திருந்ததில் விபரீதமாயிருந்தது.

”ஸார்! சிவகாசிகாரங்ககிட்டே வாங்கின பில்லை வேணும்னா காட்டறேன்” என்று தணிகாசலம் சொல்லிப்பார்த்தும் அதிகாரி விடவில்லை.

”பில் கிடக்கட்டும்… எங்களுக்கு சந்தேகம் வந்தா நிவர்த்தி செய்ணுமில்லே… எல்லா பெட்டியையும் இறக்கி உடைச்சுப்பாருங்கய்யா… உள்ளே சீனா பட்டாசு இருந்தா சீஸ் பண்ணுங்க” என்று அதிகாரி அங்கேயே சேர் போட்டு உட்கார்ந்து உத்தரவிட்டுவிட்டார்.

எல்லா பெட்டிகளையும் இறக்கும்போது அவைகளில் சீனா பட்டாசு வெடி எதுவும் இருக்கப்போவதில்லை. மூட்டை மூட்டையாக பருப்புதான் வெடிக்கப் போகிறது.

‘பருப்பு பதுங்கி கொல்லும்’ என்று தணிகாசலத்திற்கு புரிந்திருக்கும்!

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

தொடர்புடைய கதைகள்

அமலாக்கப்படும் அதிர்ஷ்டம்!
சமூகம் கதை

அமலாக்கப்படும் அதிர்ஷ்டம்!

"பெரிய 'ஹமாம்' ஆபீஸர்னு சொல்லுவியே, அவருடைய விவகாரம் அமலாக்கம் வரைக்கும் போயிடுச்சி பார்த்தியா?" என்று வரதராஜன்தான் நியூஸ் பேப்பரில் அதைக் காட்டினார்....

4 நிமிடம்
அன்னியத் திமிங்கலங்கள்
சமூகம் கதை

அன்னியத் திமிங்கலங்கள்

சிறிய மளிகைக் கடைகளை விழுங்கும் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளும், அதனால் சிதையும் எளிய மனிதர்களின் வாழ்வாதாரமும்.

4 நிமிடம்
ருக்குமணி வண்டி வருது!
சமூகம் கதை

ருக்குமணி வண்டி வருது!

அன்று பந்த். எதிர்க்கட்சிகளின் பந்த். அதனால் ஆபீஸ் இருந்தது. பஸ் ஓடவில்லை. பிரதான சாலை வெறிச்சோடியிருந்தது. ஆபீஸை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தேன...

3 நிமிடம்

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0