காலிங் பெல் எனும் கதவோசை!
அகிலா கார்த்திகேயன்
அந்த காலங்களில் ‘கதவைத் தட்டுதல்’ என்பதே அர்த்தராத்திரியில் போலீஸ்காரரோ, பேயோ செய்யக்கூடிய செயலாய்தான் திரைப்படங்களில் காட்டப்படும். எல்லார் வீட்டு கதவுகளும் ‘பா’ என்று பகல் நேரங்களில் திறந்தேதான் இருக்கும். கதவை தட்டவோ, காலிங் பெல் அழுத்தவோ தேவையில்லாமல் இருந்தது. தெருவிலிருந்தே ‘அம்மா பால்’ ‘ஸார் தபால்’ என்று பால்காரரும், தபால்காரரும் கூவுவார்கள். திறந்த வீடுகளில் நாய்கள் கூட நுழைய முடியாது. கதவு தாண்டி தாழ்வாரத்தில் எல்லார் வீட்டிலும் கட்டிலில் தடியுடன் ஒரு தாத்தா படுத்திருப்பார். “யார்டா அது உள்ளே நுழையறது?” என்று தன் சொந்த பேரனைக்கூட விசாரணை செய்துதான் அனுமதிப்பார். நாயாக காவல் காப்பார்.
கடந்தக்கால கதவுகள் கதை ஒருபுறம் இருக்கட்டும். இக்கால அடுக்கு மாடி வீடுகளின் கதவுகள் யாவும் கிரஹபிரவேசத்திற்குபின் யாரையும் பிரவேசம் செய்ய அனுமதிக்காத மூடிய கதவுகளாகவே திகழ்கின்றன. உள்ளே வசிப்பவன் சாத்வீக தேசியவாதியா, சர்வதேச தீவிரவாதியா என்று யாரும் தெரிந்துக் கொண்டுவிடாமல் கதவுகள் ‘லாக் அவுட்’ கம்பெனிகளாக மூடியே இருக்கின்றன.
”அட பக்கத்து ஃபிளாட்லே என்னோட ஒண்ணுவிட்ட சித்தப்பாதான் இருந்திருக்கார். இத்தனை வருஷம் தெரியலே… இன்னிக்கு வீடு மாத்தி போகும்போதுதான் பார்த்தேன்” என்று சொல்லும் அவலத்தில்தான் அனேக ‘நைபர்’களின் வீட்டுக் கதவுகள் வாய் திறவா கணவன்மார்களைப்போல எப்போதும் அடைத்தே இருக்கின்றன.
இப்படி திறவா கதவுகளுக்கு வில்லனாக அவைகளை ‘திறந்திடு சீசே’ என்று அடிக்கடி தொந்திரவு கொடுக்கும் அலிபாபா திருடர்களைப்போல் ஒரு நாளைக்கு நாற்பது ஐம்பது முறையாவது திறந்து மூடும்படி செய்யும் இம்சையினை ‘காலிங் பெல்’ எனும் கருவி செய்துக் கொண்டிருக்கிறது.
திறந்து வைத்தால் கொசு உள்ளே வந்துவிடும், கண்டவனும் எட்டிப்பார்த்துவிட்டு போவான் என்று பயந்து மூடியிருக்கும் கதவினை காலையிலிருந்து இரவு வரை கண்டவர்களும் காலிங் பெல்லை அடிப்பதன் மூலம் எப்போதும் திறந்து மூடும்படிதான் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆவின் பால், செய்தித்தாள் என தன் அதிகாலையே இந்த “மணி ஓசை கேட்டு எழுந்து, படி வாசல் ஓடி திறந்து” என்று தொடங்கும் பயணங்கள் முடியவே முடியாமல் நாள் முழுதும் தொடர்கின்றன.
அதன்பின் “ரெண்டு நாளா வரலே… இன்னிக்கு வராளா பார்ப்போம் வந்து பெல் அடிச்சுட்டு திறக்கலேன்னு போய்டபோறா. பாத்ரூமிலே போய் உட்காராம அவ வந்து பெல் அடிச்சா திறந்து விடுங்கோ” என்று மனைவியரின் கட்டளைக்கு கீழ்படிந்து ‘அவள் வருவாளா’ என்று வேலைக்காரிகளை ஆவலோடு எதிர்பார்த்து கணவன்மார்களை உட்கார வைப்பதும் காலிங் பெல்களே!
அடுத்தபடி, அடுப்படி வேலைகளில் ஈடுபாடு காட்டாத இல்லத்தரசிகளால் ஆரிய பவன்களிலிருந்து ஆறிய சிற்றுண்டிகளை கொண்டு வரும் ஸ்சுகி, சுமோட்டாக்காரர்கள் அடிக்கும் சூடும் சுவையுமில்லாத காலிங்பெல்கள் “அடுப்படியிலே வேலையாக இருக்கேன். டிபன் ஆர்டர் பண்ணியிருக்கேன். கொண்டு வந்தான்னா சட்டுனு திறந்து வாங்கி வையுங்க இல்லேன்னா சூடு ஆறிடும்” என்று அக்கிரமத்துக்கு ஆட்டிப்படைக்கும் வகையானவை.
”சரி! நான் குளிக்கப்போறேன்” என்றவுடன் “என்ன அவசரம்? இப்போ குளிக்கலேன்னா என்ன… பிக்பாஸ்கட்காரன் பத்து நிமிஷத்திலே பறந்து வந்துடறான். பல சரக்கு காய்கறி எல்லாம் சரியா இருக்கான்னு பாத்து வாங்கி வைச்சுட்டு குளிக்கப் போங்க” என்று நிர்தாட்சண்யமாக நீராடப் போவதை நிராகரிக்க வைக்கும் இந்த பத்து நிமிட பறந்து வரும் பத்து வகை ஆன்லைன் ஆர்டர்கள் பத்து நிமிட இடைவெளியில் க்யூ லைனில் ‘காலிங் பெல்லை’லை அழுத்திக் கொண்டிருக்கும்.
ஒரு வழியாக காலை வகை ‘காலிங் பெல்’களுக்கான கடமையாற்றிவிட்ட நிம்மதியோடு நீராடப் போகும்போதுதான் அந்த ஒ.டி.பி. கேட்டு அடம் பிடிக்கும் டெலிவரிகாரன காலிங் பெல்லை அடிப்பான். டெலிவரி செய்யாமல் ஓடிவிடப் போகிறானே என்று அரை குளியலோடு அரைகுறை ஆடைகளோடு வெளியே ஓடி வந்து ஒ.டி.பி. தேட வேண்டும்.
மதியம் சாப்பிடும் லஞ்ச் பிரேக்கின்போதுதான் காக்கைக்கு மூக்கு வேர்ப்பதுபோல் முப்பத்து முக்கோடி காலிங்பெல்காரனும் பிரேக்கில்லாமல் பெல்லை அழுத்துவார்கள். பொரியலை எடுத்த எச்சில் கையோடு எழுந்திருக்க வைக்கும் காலிங் பெல்களில் குரியர்காரன், பிளம்பர், எலக்ட்ரிஷியன், ‘உங்க பாத்ரூம் சுத்தமா இருக்கா’ என்று கேட்டு வரும் மார்கெட் இல்லா நடிகர்கள் என பட்டியல் நீண்டு நம்மை சாப்பிட விடாமல் பட்டினி போட்டு விடும்.
இது போதாதென்று காலிங்பெல் ஒலித்து திறந்து பார்க்கும்போது, “காலிங் பெல் நல்லா வொர்க் பண்ணுதான்னு செக் பண்ண வந்தேன்…” என்று ஒரு ஆசாமி எரிச்சலூட்டுவான். காலிங்பெல் மெய்ண்டெனன்ஸ் ஆள் என்பான்.
இதற்கெல்லாம் சிகரமாக இந்த அமேசான்காரர்கள் அரை மணிக்கொருதரம் அட்டை பெட்டிகளாக கொண்டு வந்து வாசலில் அடக்கிவிட்டு செல்ல அடிக்கொரு தரம் அடித்துவிட்டு செல்லும் ‘காலிங்பெல்’களின் அக்கிரமம் கணக்கிலடங்காதவை. இதில் ஏற்றுக்கொள்ளாமல் ரிடர்ன் செய்பவைகளை திரும்ப எடுத்துக்கொண்டு செல்ல வருபவர்களின் காலிங் பெல் அடிப்புக்களும் எண்ணில் அடங்கா.
இப்படி இடைவிடாது ஓயாது அடித்துக் கொண்டிருக்கும் காலிங் பெல்களால் வீட்டில் யாராவது ஓய்வு பெற்ற மூத்த குடிமகன் கதவு பக்கம் ஒரு கட்டிலிலோ ஈஸிசேரிலோ கண்ணும் கருத்துமாக விழித்து காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.
”என்ன பண்றது ரெண்டு பேரும் எப்பவும் கால்லே இருக்கா அவாளாலே அடிக்கடி காலிங்பெல் அடிக்கும்போது காலலேர்ந்து எழுந்து வரமுடியறதில்லே… அதுக்குன்னே ஒரு ஆள் வீட்டிலே இருந்தாக வேண்டியிருக்கு. ‘சரி போயிட்டு வாங்கோ ஒரு நாள் ஆபிஸ் லீவ் போட்டுட்டு நான் ‘காலிங்பெல்’ லை கவனிக்சுகிறேன். நீங்க முகூர்த்தம் முடிஞ்சதும் கிளம்பி வந்துடணும்’ ன்னு சொல்லிதான் ரகு அனுப்பியிருக்கான்” என்று கல்யாண கார்த்திகைகளுக்கு வரும் சீனியர் சிடிசன்களை அங்கிருந்து சீக்கிரமாக கிளம்ப வைக்கும் அளவிற்கு காலிங்பெல்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் போய்விட்டது.
இப்போதெல்லாம் காலிங்பெல்லோடு ஒரு காமிராவும் இணைக்கப்பட்டு உள்ளே சின்னத் திரையில் வெளியே காலிங் பெல்லை அழுத்த வந்திருப்பது யார் என்பது காட்டப்படுகிறது. அப்படி அழுத்துபவன் அமலாக்கத்துறையா, அத்தை மகன் துரையா என்று ஆராய்ந்தபின் பதுங்கவோ, பரவசத்துடன் திறக்கவோ வசதி ஏற்பட்டுள்ளது. மேலும் யாருமில்லா வீட்டில் யார் யார் வந்து காலிங்பெல்லை அழுத்துகிறான் என்று பார்த்து தொடர்பு கொள்ளும் நவீனங்கள் இந்த கதவு கருவி நங்கைக்கு கௌரவம் சேர்க்கின்றன.
காலிங் பெல்களின் அந்தஸ்து உயர்ந்திருக்க வரும் காலங்களில் “நல்ல காலிங்பெல் அட்டெண்டர் இருந்தா சொல்லுங்களேன். எத்தனை சம்பளம் கொடுத்தாலும் இத்தனை காலிங்பெல் தான் அட்டெண்ட் பண்ணுவேன் ன்னு வருகிறவன் எல்லாம் போயிடறான்” என்று தங்கள் அந்தஸ்து உயர்வை பலர் அவர்கள் வீட்டு காஸ்ட்லி காலிங்பெல்களின் தகுதியை வைத்து பறைசாற்றிக் கொள்ளத்தான் போகிறார்கள்.
”எங்கள் மாசிலாமணி கன்ஸ்ட்ரக்ஷனில் கதவு மணி தொல்லையின்றி எப்போதுமே கதவை திறந்து வைத்துக் கொள்ளும் வசதியுடன் தனி வில்லாக்கள் கட்டப்படுகின்றன” என்று விளம்பரம் செய்து நாம் வசித்த முற்கால முற்றும் திறந்த கதவு வசதிகளுடன் வீடுகளை விற்கும் காலம் வரலாம்.
”தேவன் கோவில் மணி ஓசை” பாடலை எழுதிய கவியரசு இப்போது இருந்திருந்தால் ‘காலிங் பெல்’ எனும் கதவோசை அது ஓயாமல் கேட்பது ஒரு இம்சை” என்று எழுத பல வரிகள் கவிஞரின் கற்பனைக் கதவைத் தட்டியிருக்கும்.
தொடர்புடைய கதைகள்
தொட்டுக் "கொல்"லவா?
இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?' என்று ஒப்புக்காக கணவன்மார்களிடம் கேட்டுவிட்டு, ஏற்கனவே உத்தேசித்துள்ளதைத்தான் மனைவிமார்கள் செய்வார்களென்பது...
அ"லைக்" பாயுதே!
`செல்`லில் பேசிக் கொண்டே இருப்பதும் சிரமமில்லை, `நெட்`டைப் பார்த்துக் கொண்டே இருப்பதும் சிரமமில்லை...
அமெரிக்காவும் அறுபதாம் வாய்ப்பாடும்!
உங்களிடம் முப்பத்திரண்டு பல்லும் கொட்டாமல் இருக்கிறதா உங்களுக்கு அதை தினமும் துலக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படி ஒரு பழக்கம் இருந்தால்...
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...