பட்டி

தொட்டுக் "கொல்"லவா?

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் நகைச்சுவை
Story Image
இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?' என்று ஒப்புக்காக கணவன்மார்களிடம் கேட்டுவிட்டு, ஏற்கனவே உத்தேசித்துள்ளதைத்தான் மனைவிமார்கள் செய்வார்களென்பது...

Share this story:

”இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?” என்று ஒப்புக்காக கணவன்மார்களிடம் கேட்டுவிட்டு, ஏற்கனவே உத்தேசித்துள்ளதைத்தான் மனைவிமார்கள் செய்வார்களென்பது எல்லோரும் அறிந்ததே. அவர்களின் அன்றைய சாய்ஸாக இட்லியோ, தோசையோ, பொங்கலோ, உப்புமாவோ, அது எந்த தீனியாய் இருந்தாலும் அதை கணவர்மார்கள் திணித்துக் கொள்ளத்தான் போகிறோம். அப்படி சிரமப்பட்டு முழுங்கும் நிலையில் தயாரிக்கப்படும் சிற்றுண்டிகளுக்கு ஒத்தாசையாக உபஉண்டி எனப்படும் தொட்டுக்கொள்ளும் ஐட்டங்களையாவது உருப்படியாக செய்து கணவர்மார்களின் கஷ்டத்தைத் தீர்க்கிறார்களா என்றால் அதுவுமில்லை.

ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்க முடியவில்லை என்று ஆண்களை குறை கூறுவது போல, சிற்றுண்டியை ஏனோதானோவென்று ஆக்கத் தெரிந்த மங்கையர்களில் பலருக்கு ஏனோ அதற்கான சைட் டிஷ்ஷை ஆக்கும் பொறுப்பில்லாமல் போய்விடுகிறது.

தொட்டுக் கொள்ள என தயாரிக்கப்படுபவைகள்தான் அவர்கள் ஏனோ தானோ என்று செய்து வைக்கும் சிற்றுண்டிகளின் குறைபாடுகளை ஓரளவு நாக்கிற்கு காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றப் பாடுபடுபவை என்ற உண்மை பல மனைவிமார்களுக்கு தெரிவதில்லை.

கல்லானாலும் இட்லி, விராட்டியானாலும் சப்பாத்தி, பசையானாலும் உப்புமா என்றுதான் கட்டிக்கொண்ட சிற்றுண்டிக்கு பக்கா பத்தினியாக ஒரு சட்னியோ, குருமாவோ, கொத்சோ துணையாக நிற்கின்றன.

தொட்டுக் கொள்பவை என்ற உதிரி கட்சிகளின் கூட்டணியில்லாமல் பிரதான கட்சியான சிற்றுண்டிகள் நாக்கு நாளங்களின் வோட்டைப் பெற்று ஜெயிக்க முடியாதென்பதை அவர்கள் உணர்வதில்லை.

மெயின் டிஷ் எனப்படுபவைகளுக்கு முதல் நாளே ஊற வைத்து அரைப்பது, மெனக்கெட்டு மாவை பிசைந்து (மூன்று மணி நேரம் முன்பே) வைப்பது என அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை ஒரு சிறிதளவுகூட தம்மாத்துண்டு சைட் டிஷ் தயாரிப்பதில் காட்டுவதில்லை.

இட்லி என்றால் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகும்வரை காத்திருந்து, வெந்தபின் ஒவ்வொன்றாய் உதிர்ப்பது, தோசை என்றால் நின்றுக்கொண்டே ஒவ்வொன்றாய் வார்ப்பது, சப்பாத்தி என்றால் உருட்டி, இட்லி, சுட்டு எடுப்பது என்று சீரியல்களின் விளம்பர இடைவேளை நீண்ட நேரங்களில் செய்ய இவர்கள் படும்பாட்டில் பத்தில் ஒரு பங்குகூட அடையே வரும் சீரியல் நேரத்தில் தயாரித்து முடித்துவிடக்கூடிய தொட்டுக் கொள்ளும் பண்டங்களுக்கு படுவதில்லை.

ஆனால் இந்த வகையில் ஹோட்டல்காரர்கள் எத்தனையோ மேல். இரண்டே இரண்டு இட்லி ஆர்டர் செய்தாலும் அதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சாட்னி, சாம்பார், வெங்காய சட்னி, கொத்தமல்லி சட்னி, மிளகாய்ப்பொடி என்று படைசூழ கொண்டு வைக்கிறார்கள். இட்லி மல்லிகைப்பூப் போல இருக்கிறதா, மலைப்பிஞ்சுபோல கல்லாக இருக்கிறதா என்பதையெல்லாம் நம் நாக்கு கண்டுபிடிக்க முடியாத வகையில் அந்த இட்லியின் பக்குவத்திற்கு ஜலதரங்கமாக சூழ்ந்திருக்கும் தொட்டுக் கொள்வதில் எது சுருதி சேர்கிறதோ அதை தேர்ந்தெடுக்கும் வசதியினை ஹோட்டல்காரர்கள் சாமர்த்தியமாக செய்கின்றனர். சில ஹோட்டல்களில் தொட்டுக் கொள்பவைகள் கொத்துக் கிண்ணங்களில் மேஜையில் வைக்கப்பட்டோ, குவளையில் கொண்டு கொட்டும் சாம்பார் வகையாகவோ, தாராளமயமாக்கப்படுகின்றன.

மேலும், மசால் தோசை, இட்லி - வடகறி, சாம்பார் வடை, பூரிக்கிழங்கு, அடை அவியல் என்று தொட்டுக் கொள்பவைகளுக்கு தக்க மரியாதை கொடுக்கும் வகையில் மெயின் டிஷ்களுடன் தொட்டுக் கொள்பவைகளையும் சேர்த்து அடைமொழி கொடுத்துக் குறிப்பிட்டு பெருமைப்படுத்துகிறார்கள்.

சமீபகாலங்களில் ஹோட்டல்களில் புசிக்கும்முன் வாசிக்கக் கொடுக்கப்படும் மெனு கார்டுகளில் தொட்டுக் கொள்பவைகள்தான் முக்கால்வாசி பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் தனித்து நின்றே அவார்டு வாங்கக்கூடிய அந்தஸ்த்தில் திகழ்கின்றன.

ஒரு நாண் - 20 ரூபாய், ரெண்டு ரொட்டி - 26 ரூபாய் என மெயின் ஐட்டங்களுக்கு சொற்பமான விலை குறிப்பிடப்பட்டிருக்கும் மெனு கார்டில் பட்டர் பனீர், வெஜிடபிள் மலாய் கோப்தா, ஆலு கோபி மசால், பாலக் பனீர், சென்னா மசாலா என ஊர்​ப்​பேர் தெரியாத உப உண்டிகளுக்கு மட்டும் 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை காஸ்ட்லியாக விலைகள் குறிப்பிடப்பட்டு கெளரவிக்கப்படுகின்றன.

மெயின் டிஷ்ஷை மட்டும் ஆர்டர் கொடுத்துவிட்டு உட்கார முடியாது. அதோடு அடாவடி விலையில் விற்கப்படும் சைட் டிஷ்ஷை வாங்கியே தீர வேண்டும். ஏற்கனவே தயாரித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பரோடா ரொட்டி இத்யாதி மெயின் டிஷ்களுக்கு கொடுக்கும் மரியாதையைவிட சற்று கூடுதலான மதிப்பை அவ்வப்போது அதிக நேரம் கொடுக்கும் மரியாதையைவிட சற்று கூடுதலான மதிப்பை அவ்வப்போது அதிக நேரம் எடுத்து தயாரிக்கப்படும் சைட் டிஷ்ஷுக்கு கொடுக்கிறார்கள். பீங்கான் கிண்ணத்திலோ, சிறிய கடாயிலோ, மண் சட்டியிலோ ஒரு எலுமிச்சம் பழத்துண்டை மேல் துண்டாக தரித்துக் கொண்டு மேஜை நடுவே வைக்கப்படும், நவரத்ன குர்மா, கடாய் பனீர் போன்ற தொட்டுக் கொள்பவைகளுக்கு அதை வாங்கும் விலைக்காக நாமும் தொட்டுக் கும்பிட்டு மரியாதை செய்தாக வேண்டும்.

இப்படி ஒரு அந்தஸ்தை இந்த உப உண்டிகள் அடைந்துவிட்டதை பஸ் ஸ்டாப்களில் கூழ் விற்கும் தள்ளுவண்டிக்காரர்களும் அறிந்து வைத்துக் கொண்டுள்ளனர். அந்த ஒரு சொம்பு கூழுக்கு கூட்டணியாக பிளாஸ்டிக் டிரேக்களில் வரிசையாக வடாம், மாங்காய், நெல்லி, காராபூந்தி, காராசேவு, மோர் மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள், கொத்தவரை வத்தல் என்று வகை வகையாக வைத்து நமக்கும் ஒரு சொம்பு கூழ் வாங்கிக் குடிக்க வேண்டுமென்ற ஏக்கத்தி​னைத் தூண்டிவிடுகிறார்கள்.

பூரிக்கு தொட்டுக்கொள்ள காலையில் மீந்த புடலங்காய் கூட்டு போதுமா, இட்லிக்கு தொட்டுக் கொள்ள நேத்து வைத்த வத்தக்குழம்பு போதுமா என பொருத்தமில்லாத கூட்டணியை தன் சோம்பேறித்தனத்துக்கு செட் சேர்க்கும் என் மனைவியை அழைத்துக் கொண்டு போய் இந்த கூழ் விற்கும் தள்ளுவண்டிக்காரி​யைக் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. அவளைப் பார்த்தாலாவது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ரசவண்டி போதுமா எனக் கேட்டு ‘கொல்லும்’ என் மனைவியின் மனதின் ஒரு சைடில், சைட் டிஷ் பற்றின விழிப்புணர்வு ஏற்படாதா என்ற நப்பாசைதான்.

கூடை

மொத்தம்

₹0