பட்டி

அ"லைக்" பாயுதே!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் நகைச்சுவை
Story Image
`செல்`லில் பேசிக் கொண்டே இருப்பதும் சிரமமில்லை, `நெட்`டைப் பார்த்துக் கொண்டே இருப்பதும் சிரமமில்லை...

Share this story:

செல்லில் பேசிக் கொண்டே இருப்பதும் சிரமமில்லை, நெட்டைப் பார்த்துக் கொண்டே இருப்பதும் சிரமமில்லை. ஆனால் இந்த கால இளசுகளுக்கு விமர்சனம் செய்வதுதான் மிகவும் சிரமமான விஷயமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை எடுப்பவனும், பெரிய நாவலை எழுதுபவனும், இசைஞானியும், நாட்டிய தாரகையும் என எல்லா கலைஞனுக்கும் சந்தோஷத்தைத் தரக்கூடிய சமாசாரமான இந்த விமர்சனமும், பாராட்டும் இப்போதெல்லாம் பஞ்சத்தில் அடிப்பட்டதுபோல மிகவும் சுருங்கி போய்விட்டது.

அது சுப்புடு விமர்சனமாக இருந்தாலும் அந்த சுப்புடு என்ற ரசிகர் தன் பாட்டையோ, நடனத்தையோ கூர்ந்து கேட்டு, பார்த்து ரசித்துள்ளார் என்பதே அந்த கலைஞனுக்கு ஒரு திருப்தி அளிக்கும். அந்த கால திரைப்படங்களை முக்கால்வாசிப்பேர் வார இதழ், நாளிதழ்களில் அப்படத்தைப் பற்றி வரும் விமர்சனத்தை படித்துவிட்டுத்தான் பார்க்கப் போவார்கள்.

அதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்! ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்னு சிவாஜி வேட்டியை சுருக்கி மடக்கிகிட்டு கேமரா முன்னால வருவார் பாரு… அது ஆக்ஷன்” என்று நானும் பெரிய விமர்சனகர்த்தாவாக என் பத்தாம் கிளாஸ்களில் வார இதழில் படித்த விமர்சனத்தை என தாக்கிக் கொண்டு நண்பர்களிடம் பீற்றிக் கொண்டதுண்டு.

ஆரம்ப காலத்தின் என் கதைகளை என் உடன் பிறந்தவர்கள் படித்துவிட்டு, அதே உடன்பிறந்த பாவத்திற்காக ஆஹா ஓஹோ என்று பாராட்டி விமர்சிக்கும்போது அதை காக்கையின் பொன் குஞ்சு என்பதாக தெரிந்தும் ஆனந்தமாக அனுபவித்துள்ளேன். மெய்யாலுமே தூத்துக்குடி செந்தில்ராஜனோ, தஞ்சாவூர் சாம்பசிவமோ எழுதிய ஓரிரு வரிகளில் அடுத்தவாரம் வரும் பாராட்டு விமர்சனங்களும் என்னை குதூகலிக்கச் செய்வதுண்டு.

தினமலர் வாரமலர்காரர்கள் இந்த படைப்பாளியின் எதிர்பார்ப்பை புரிந்துக் கொண்டு அவரவர் கதைகளுக்கு வரும் பாராட்டு மற்றும் திட்டு கடிதங்களின் நகலை படைப்பாளிக்கு அனுப்பும் பெரிய சேவையைச் செய்து கொண்டு வருகின்றனர்.

ஆனால் இப்படி ஒரு கால் கடுதாசியை மெனக்கெட்டு எழுதும் விமர்சனக்காரர்கள் அனேகமாக அறுபதை கடந்துவிட்டவர்களாகத்தான் ஆகிவிட்டார்கள்.

ஏனென்றால் இப்போதைய இளசுகளின் மிக நீண்ட விமர்சனமே நாலெழுத்தோடு சிக்கனப்பட்டுவிட்டது. ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் என்று நாள் முழுவதிலும் விரல்களை தேய்ப்பவர்களுக்கு விமர்சனத்தையும் அந்த தேயும் விரலை விட்டு மீதி விரல்களின் எண்ணிக்கையிலேயே முடித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

”டேய்! அப்பாவோட கதை வந்திருக்கு படிச்சயா” என்று என் மனைவி என் சார்பாக பையனிடம் விமர்சன கோரிக்கையை வைத்து சாயிப்பாள்.

ஏதோ அவன் படித்துவிட்டு இதை இப்படி எழுதியிருக்கலாம் இந்த இடத்திலே நல்லா இருக்கு நல்லா முடிச்சிருக்கார் என்றெல்லாம் அவன் விமர்சனம் செய்வானென்று அவள் எதிர்பார்ப்பதுண்டு.

”ஓ! அப்பவே படிச்சுட்டேனே! வாட்ஸ்அப்பிலே லைக் கொடுத்திருக்கேன் பாரு” என்பான். ஆக, அவனது விமர்சனம் Like என்ற நாலெழுத்தோடு சுருங்கிவிட்டுள்ளது.

இத்தனை Like வந்தால் இத்தனை ஒசத்தி என்பதொரு அளவுகோலும் வைத்துள்ளனர். நீங்கள் இமயமலை ஏறி புலிக்கொடி ஏற்றினாலும் Likeதான், இரும்பு கடையில் புளியை கரைத்து வெத்தக் குழம்பு வைப்பதை போட்டோ பிடித்து போட்டாலும் Likeதான். இந்த கால யூத்களின் சோம்பேறித்தனம் விமர்சனம் செய்யும் சிரமத்தை இப்படி நாலெழுத்தில் குறைத்துக் கொண்டுவிட்டது.

அந்தக் காலங்களைப் போல மனைவியின் சமையலை விமர்சனம் செய்து மாட்டிக் கொள்ளும் ஆபத்தெல்லாம் வரும் வாரிசுகளுக்கு இல்லவே இல்லை.

”என்ன உங்களுக்கு பிடிச்ச வெங்காய சாம்பார் எப்படி இருக்கு சொல்லுங்க” என்று மனைவி கேட்டால், “ஒரே ஒரு லைக்” என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.

”இந்த டிரஸ்லே நான் எப்படி இருக்கேன்” என்று ஆசையோடும், அலங்காரத்தோடும் வந்து கேட்கும் மனைவியிடம் கன்றாவி சகிக்கலை என்றெல்லாம் சொல்லி கடுப்படிக்க வேண்டாம்.

”ஃபேஸ்புக்கிலே ஸெல்ஃபி கிளிக் பண்ணி போட்டுடேன்! பாத்துட்டு லைக் கொடுக்கறேன்“ என்று நழுவிவிடலாம்.

ஏதோ விமர்சனம் என்ற சமாசாரம் இந்த நாலு வார்த்தைகளுக்குள்ளாவது வாழ்ந்துக் கொண்டிருக்கிறதே என்று திருப்திப்பட்டுக் கொள்வதில் நிறைய பேர் லைக்குடன் இருந்தால் சரி!

கூடை

மொத்தம்

₹0