அமெரிக்காவும் அறுபதாம் வாய்ப்பாடும்!
அமெரிக்காவில் பையன் அழைத்துச் சென்ற கடைகளுக்கு சென்ற போது ஆறாம் வாய்ப்பாடும் அறுபதாம் வாய்ப்பாடும் எனக்கு தேவையாயிருந்தது. இண்டியன் ஸ்டோர்ஸ், நாமஸ்தே ஸ்டோர்ஸ் என்று நம் வடக்கத்தி இந்தியர்கள் நமக்காகவே அரிசி, பருப்பு, மஞ்சள் தூள், கற்பூரம் என அனைத்திந்திய சமாசாரங்களையும் அத்தனை மைல்களுக்கப்பால் கொண்டு வந்து விற்பதால், அங்கேயும் பண்டிகை நாட்களில் புளியோதரை முதல் பட்டாணி சுண்டல் வரை வீட்டில் செய்ய முடிகின்றது.
இது போதாதென்று நம்ம ஊர் பிள்யைர், சிவன் விஷ்ணு, காமாட்சி என்று அனைத்து தெய்வங்களும் பாஸ்போர்ட் விசா எதுவுமின்றி கோயில் குடிகொண்டு வரலட்சுமி விரதம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, பிரதோஷம் முதற்கொண்டு பக்தர்கள் அலுமினியம் ஃபாயில்களில் கொண்டு வரும் சர்க்கரை பொங்கல், கொழக்கட்டையுடன் கொண்டாடும் உரிமையையும் நிலை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை இந்திய அம்சங்களும் கிடைக்கும்போது அவைகளை எத்தனை விலைக் கொடுத்து வாங்குகிறார்கள் என்பதே இக்கட்டுரைக்கான மில்லியன் டாலர் கேள்வி.
முதன்முதலாக இப்படி ஒரு இந்தியன் கடைக்குள் நுழைந்து அடுத்தநாள் வந்த வரலக்ஷ்மி நோம்பிற்காக வெற்றிலையை என் மகனுடன் தேடியபோதுதான் என் மூளை அறுபதாம் வாய்ப்பாட்டைத் தேடியது! ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருக்கிறோமா என்று தன் ஸ்மார்ட் ஃபோனில் உறுதி செய்து கொண்டபின் எங்கள் அலாட்மெண்ட்டான அந்த ஐந்து வெற்றிலையை ஷாப்பிங்காரன் கொண்டு வந்தான்.
மற்ற சாமான்களையெல்லாம் வாங்கியபின் என் மகன் பில் போட்டு கார்டை தேய்த்ததும் ஒரு ஆவலோடு அந்த அமெரிக்க வெற்றிலையின் விலையை பில்லில் தேடிப் பார்த்தேன்.
ஐந்து வெற்றிலை இரண்டு டாலர் என்றிருந்தது. அதை ஏதோ இரண்டு ரூபாய் என்ற அளவில் மதித்து பையன் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தாலும் நான் அதை அறுபதால் பெருக்கி இந்திய அப்பாவாக வாயடைத்து நிற்க வேண்டியதாயிற்று.
”ஏண்டா ஐஞ்சு வெத்தலை ரெண்டு டாலர்னா… அறுபதாலே பெருக்கினா நூத்தியிருபது ரூபான்னா ஆறது… அப்போ ஒரு வெத்திலை இருபத்துநாலு ரூபாவா? என்னடா அக்கிரமம்” என்றேன்.
”அப்பா அப்படியெல்லாம் கன்வர்ட் பண்ணிப் பார்த்தா எதையும் வாங்க முடியாது” என்று அடக்கினான். இருந்தாலும் அவன் அழைத்துச் சென்ற அமெரிக்க சரவண பவனில் என் நாக்கு அடங்காமல், மசாலா தோசையையும், மெதுவடையையும் கேட்டபோது அதன் விலைகளை இந்திய ரூபாவிற்கு மாற்றிப் பார்க்க வேண்டுமென்று முதலில் நினைக்கவில்லை.
எல்லாருமாக சாப்பிட்டுவிட்டு ‘பில்’ வந்தபோது என் அறுபதாம் வாய்ப்பாடு பிரயோகம் சாப்பிட்டதையெல்லாம் ஜீரணிக்கவிடாமல் செய்துவிட்டது மசாலா தோசை = 9 டாலர் அதாவது 9x60 = 540 ரூபாய் சென்னா பூரி = 10 டாலர் = 600 ரூபாய் பொங்கல் வடை = 12.00 டாலர் = 720 ரூபாய் காபி = 3.00 டாலர் = 180 ரூபாய் அன்றைய மொத்த பில் நாலு நபர்களுக்கு = 65 டாலர் அதாவது = 3900 ரூபாய்
இது ஜீரணமாக ஒரு வாரமாயிற்று
அந்த அடுத்த வாரம் பையன் “அம்மா இந்த வாரம் சங்கீதா போய் சாப்பிடலாமில்லே… அப்பாவுக்கு ஏதாவது ஏகாதசி, தர்ப்பணம்னு இருக்கா” என்று என் மனைவியிடம் கேட்டான்.
அன்றைய தினம் அப்படி நான் அனுசரிக்கும் விரதம் ஒன்றுமில்லை. அதனால் அறுபதாம் வாய்ப்பாட்டை மறந்துவிட்டு ஹோட்டலுக்கு போகலாமென்றுதான் இருந்தேன்.
ஆனால் என் மனைவி “ஆமாண்டா உங்க அப்பாவுக்கு மாசம் அறுபது நாளும் ஏதாவது ஒரு விரதம் இருக்கும்… அதையெல்லாம் பார்த்துட்டு இருந்தா எங்கயுமே போய் சாப்பிட முடியாது” என்று சொல்லியபோது அது அந்த அறுபதை எனக்கு ஞாபகப்படுத்தவே வந்த ஆண்டவன் கட்டளையாக எடுத்துக் கொண்டேன்.
”மறந்தே போச்சு இனிமே சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கலாம்னு டிசைட் பண்ணியிருக்கேன்… இன்னிக்கு சங்கடஹட சதுர்த்தி, நாளைக்கு கிருத்திகை, அப்புறம் சஷ்டி… நீங்களெல்லாம் ஹோட்டல்லே எதையாவது வாங்கி சாப்பிடுங்க… எனக்கு ஒரு டம்ளர் தண்ணி போதும்” என்றேன்.
எல்லோரும் என்னை சுட்டெரிப்பதுபோல் நோக்கினர். அறுபதாம் வாய்ப்பாடு என் அமெரிக்க வாழ்க்கையில் புத்தம்புது விரதங்களை மேற்கொள்ள செய்து என் வாய்க்கு பூட்டுப்போட்டுள்ளதே இதற்கான நோக்கம் என்று அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.