அமேசான் காட்டில் குணாவும் ட்ரம்பும்!
நம்ம குமுளிப்பூண்டி குணா, அதிபர் ட்ரம்ப்பிற்கு கடிதம் எழுதும் சூழல் ஏன் ஏற்பட்டது என்று சிந்தித்ததின் உண்டான சுவாரசியமான கற்பனை இது! (சம்பந்தப்பட்டவர்கள் ரசிகர்கள் என்ற நம்பிக்கையுடன்)
குணா, அமேசானில் டார்ச்லைட் ஒன்று ஆர்டர் செய்யும் போது, வழக்கமான குழப்பமாகி டார்ச்லைட் என்பது ட்ரம்ப் ஆகிவிட, குணா வீட்டு வாசலில் ட்ரம்ப்பை கொண்டு வந்து டெலிவரி செய்துவிட்டுப் போகிறார்கள்.
குணா கோபமாக ட்ரம்ப்பை தூக்கிக் கொண்டு போய், அமேசான்காரர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு வரக் கிளம்பி, மீண்டும் குழம்பி அமேசான் நிறுவனத்திற்குக் பதில் அமேசான் காட்டுக்குள் சென்று மாட்டிக்கொள்கிறான்.
அடர்ந்த காட்டில் பொழுதுபோகாமல் வேறு யாருமில்லாமல் இருவரும் மட்டும் திரியும் போது குணாவிற்கு இப்படி ஒரு யோசனை தோன்றுகிறது. ட்ரம்ப்பை வைத்தே ட்ரம்ப்பிற்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன என்று சிந்தித்தவர், 'ஸ்டார்ட் மியூசிக்' என்று ஆரம்பித்து விடுகிறார்.
குணா: மிஸ்டர் ட்ரம்ப்! வெளியே அங்கங்கே போர் நடக்குது. நமக்கோ இங்கேயே போர் அடிக்குது... ஒண்ணு செய்யலாம், நான் உங்களுக்கு ஒரு லெட்டர் எழுதுறேன். நான் வரி வரியா அதைச் சொல்றேன்... உங்களுக்குத்தான் வரின்னா பிடிக்குமே... அந்த வரிகளை கவிதையாக மாத்துங்க பார்ப்போம்.
ட்ரம்ப்: (வசமாக இவர் கிட்டே மாட்டிக்கிட்டோமே என்று நொந்து கொண்டு) சார்! எனக்கு வரியை ஏத்தத்தான் தெரியும்... கவிதையாக மாத்தத் தெரியாதே... சரி சொல்லுங்க, ட்ரை பண்றேன்.
குணா: அதிபர் ட்ரம்ப்பிற்கு குணா எழுதும் கடிதமான்னு ஆரம்பிங்க...
ட்ரம்ப்: (கொஞ்சம் யோசித்துவிட்டு)ட்ரம்ப் எனும் அதிபருக்கு
டார்ச்லைட் தமிழன் எழுதும் கடிதமே!
குணா: பலே! பலே! அடுத்தது, ரெண்டு வரி ட்ரம்ப்னு ஆரம்பிக்கிற மாதிரி 'ஜம்ப்', 'சிம்ப்'ன்னு எதையாவது போட்டு ஆரம்பிச்சி, 'நான் சௌக்கியமா? நீ நல்லா இருக்கியா?'ன்னு கேட்டு எழுதுங்க.
ட்ரம்ப்: (குறும்பாக)கொம்பன் நீ உன் நாட்டில் சௌக்கியமா?
நான் இங்கு சௌக்கியமே!
குணா: ரொம்ப ஷார்ப்! அடுத்த ரெண்டு வரி, 'நீ வரியை ஏத்தும் போது கோபம் வருது! எதையாவது எடுத்து எழுதலாம்னு தோணுது'
ட்ரம்ப்:உன்னை எண்ணிப் பார்க்கையில் கோபம் மூட்டுது
டார்ச்சை எடுத்து வீசவே கையும் துடிக்குது
குணா: அடடா! சூப்பரான கவிதை வரிகள்... ஆனா, வரியைப் பத்தி சொல்லாம விட்டிட்டீங்களே!
ட்ரம்ப்: வரியை விடுவேனா சார்! அப்பால இன்னொரு பாட்டு வரியிலே சேர்த்துட்டா போச்சு... நீங்க அப்பால சொல்லுங்க.
குணா: ம்ம்... அப்பால... எங்க நாட்டுல ஈடுல எங்க வேணுமானாலும் கச்சா எண்ணெய்யை வாங்குவோம், நீ யார் அதைக் கேட்கறதுக்கு.
ட்ரம்ப்:ஈடுபோல் கச்சா எண்ணெய்
ரஷ்யாவில் வாங்கிக் கொள்வோம்
காலக்கெடுவில் உனக்கென்ன கோபமாண்டா!
குணா: அற்புதம்! அற்புதம்!... நீ என்னமோ உலகத்துக்கே நாட்டாமை ஆட்டம் எல்லோருக்குமே ஆர்டர் போடறே, எல்லா நாட்டிலேயும் குண்ட போடறே! என்ன நினைச்சுக் கிட்டு இருக்கேன்னு மிரட்டணும்னு தோணுது... இதைக் கொஞ்சம் 'ஸ்டார்ஸ் வாஸ்', 'பேஜாரா'யிட்டேன், 'டென்ஷன்' ஆயிட்டேன்னு அங்கங்கே போட்டு பாட்டை எழுதுங்க.
ட்ரம்ப்: ஓகே!நாடுதோறும் யுத்தம் என்று
நாசவேலை செய்யும் போது பேஜாரானது
நாட்டின் மீது வரியைப் போட்டு
நாட்டாமை செய்யும் போது டென்ஷன் ஆனது!
"Mind your Business” என்று
'Kind' ஆக கடிதம் எழுத மனமும் துடிக்குது
குணா: அடடா! அசத்திட்டீங்க ட்ரம்ப் சார்! சரணத்தை இப்படி முடிங்க... 'ஜனங்க புரியுற மாதிரி இது ஒண்ணும் ஆர்டினரி கடிதம் இல்லே... அதையும் விட ஸ்பெஷலானது!'...
ட்ரம்ப்:அதிபர் புரிந்து கொள்ள... இது
அசத்தல் கடிதமல்ல … அதையும் தாண்டி அபத்தமானது....
குணா: ட்ரம்ப் சார்! பிச்சி உதறிட்டீங்களே... நோபல் பரிசு கிடைக்குமேன்னா என்ன? உங்களுக்கு அமேசான் அவார்ட் கிடைக்க ரெகமண்ட் பண்ணுறேன்... இன்னும் அடுத்த சரண வரிகளையும் சொல்றேன், எழுதிக் கொடுத்துட்டுப் போங்க.
ட்ரம்ப்: (தலை தெரிக்க ஓடுகிறார்) ஐயா ஆளை விடுங்க... இப்படி போர் அடிக்குறீங்களே... அதுக்கு நான் போய் நாலு போரை நிறுத்த ட்ரை பண்ணி அவார்ட் வாங்கிப் போறேன்...
தொடர்புடைய கதைகள்
உங்க உப்புலே டூத்பேஸ்ட் இருக்கா?
உங்களிடம் முப்பத்திரண்டு பல்லும் கொட்டாமல் இருக்கிறதா உங்களுக்கு அதை தினமும் துலக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படி ஒரு பழக்கம் இருந்தால்...
பொய்யும் மெய்யும்
- (தினமலர் வாரமலர் ஜுலை 2014)
கலிகால காது
கிருத, த்ரேதா, த்வாபர யுகங்களில் இந்த காது எனும் செவி எந்த ரிஷியின் ரகசிய உபதேச மந்திரங்களை ஒட்டுகேட்டுத் தொலைத்து சாபம் வாங்கிக் கட்டிக் கொண்டதோ...
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...