பட்டி

யாகாவாராயினும் யோகா காக்க!

யாகாவாராயினும் யோகா காக்க!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 4 நிமிடம் வாசிப்பு சமூகம்

அகிலா கார்த்திகேயன்

யோகா பழகிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் எனக்கிருந்தது.

”எனக்குதான் காபியிலே இத்தனை சர்க்கரை போட்டா பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமில்லே… ஏன் இப்படி அள்ளி கொட்டியிருக்கே?” என்று நயமாக கடிந்துக் கொண்டாலும் என் மனைவி அதற்கான தீர்வாய் எனக்கு அறிவுரை தருவது ”ரொம்ப டென்ஷனாறீங்க… யோகாக்கு போங்கன்னா கேட்கமாட்டீங்கறீங்க” என்பதாகத்தான் இருக்கிறது.

சதாசர்வகாலமும் சீரியல்களாகவே பார்த்துக் கொண்டிருக்கும் என் மகளிடம் நீயூஸ் சேனல் மாற்றி பார்க்க ரிமோட்டை கேட்கும் போதும் ”டென்ஷனாகதீங்க! இதோ விளம்பர இடைவேளைலே தந்துடறேன்… ஏன் அப்பா நீங்க யோகா ட்ரை பண்ணலாமில்லே” என்று என்னை ஒரு டென்ஷன்மிகு ஜன்மமாக்கி யோகாவை தன் பிரிஸ்கிரிப்ஷனாக சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

இப்படி வீட்டின் அனைத்து அங்கத்தினரும் ஒட்டு மொத்தமாக என் யோகா பயிற்சி கட்டாயத்திற்கு ஓட்டளித்துள்ளதாலும், அதன்படியே பிரதமர் மோடி அவர்களும் வேண்டுகோள்விடுத்துள்ளதாலும் யோகா பழகியே ஆகவேண்டுமென்ற நிலைக்கு ஆளானேன்.

நான் ஒண்ணாம் வகுப்பிலிருந்தே தனியாக எந்த கிளாஸுக்கும் போய் பழக்கமில்லாதவனாதலால் யோகா கிளாஸுக்கும் யாராவது துணைவருவார்களா என்று தேடினேன். என் சமீபத்தில் ஃபிளாட் ஒன்றில் சமீபத்திய மாதங்களில் குடிவந்த ஒரு மூத்த குடிமகர் என்னுடன் சமீபகாலமாக வாக்கிங் வந்துகொண்டு அவருடைய சர்க்கரை நிலைமையும் என்னுடைய சரக்கரை நிலையையும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு ஒரு ‘ஷுகர்மேட்’டாகியுள்ளார்.

சரி அவரை கேட்டு பார்க்கலாமென்று தோன்றியது. அடுத்த நாள் காலை வாக்கிங் போது பேச்சுவாக்கில் ஆரம்பித்தேன்.

”சர்வதேச லெவல்லே யோகா பிரமாதபடுது பார்த்தீங்களா” என்று பீடிகையோடு நான் ஆரம்பித்ததும் அந்த சாது மனிதருக்குள் இத்தனை ஆவேசம் புதைந்திருக்குமா என்று ஆச்சர்யபடும்படியாக அலறினார்.

”யோகா பத்தி பேசறதுன்னா நம்ம ஃபிரண்ட்ஷிப்பை மறந்துடுங்க” என்று சினிமா வசனம்போல் ஓங்கி பேச ஆரம்பித்தவர் பின் ஏதோ விசனப்படுபவர்போல் முகத்தை வைத்துக் கொண்டார்.

மோடி சொல்கிறார் என்பதற்காகவே யோகாவை பலவித காரணம் காட்டி செய்யாமல் மோடி செய்யும் ரகத்தை சார்வந்தவர் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

”ஏன் இப்படி டென்ஷனாயிட்டீங்க?” என்று ஒரு தெரு தூரம் நடந்தபின் அவர் நாடியை தொட்டேன்.

”நான் சின்ன வயசாக இருக்கும்போது எங்க வீட்டிலே ஒரு அத்தை பாட்டி சதா என் மேலே வள்வள்ளுனு விழுந்துட்டே இருப்பாங்க… ஒருநாள் என் பம்பரத்தை எங்கேயோ ஒளிச்சி வைச்சிடுச்சி அந்த கிழவி… ரொம்ப நேரமா தேடினதிலே எனக்கு ரொம்ப கோபமாக வந்தது… சாயங்கலாம் பம்பரம்விட்டு விளையாட முடியலே. ராத்திரி கிழிவ சாப்பிடபோன போது சந்தேகப்பட்டு அவங்க படுக்கையை தூக்கிட்டு பார்த்தா அங்கே ஒளிச்சி வைச்சிருக்கு… எனக்கு வந்த கோவத்திலே அந்த பம்பரத்தையே கிழவி மேலே தூக்கி வீசி எறிஞ்சேன்… ஆணி கிழவி மண்டையிலே பட்டு மயங்கி விழுந்துடும்படி ஆச்சி… அந்த ராத்திரியிலே அப்பாவும் அம்மாவும் என்னை நல்லா சாத்தி கிழவியை ஆஸ்பத்திரியிலே சேர்த்தாங்க… அப்புறமா அந்த கிழவியை எங்க பெரியப்பா வீட்டிலே கொண்டுவிட்டுட்டாங்க” கொஞ்சம் நிறுத்தி விட்டு பின்பு தொடர்ந்தார்.

”அப்புறம் நான் பத்தாங்கிளாஸ் படிக்கும்போது ஒரு இந்தி டீச்சர் என் உயிரை வாங்குவாங்க! தலையிலே ஓங்கி குட்டி குட்டி ‘உனக்கு இந்தி சுட்டுப் போட்டாலும் வராது’ன்னு திட்டுவாங்க… எனக்கு அந்த டீச்சரை கண்டாலே பிடிக்காது… ஒருநாள் எங்க ஊர் தியேட்டர்லே ஆராதனா பார்க்க அப்பா அழைச்சுட்டு போனாரு… அப்போ யாரோ ஒரு வாலிபனோட அந்த டீச்சர் படம் பார்க்க வந்தாங்க… கல்யாணமாகாத டீச்சர் இப்படி யாரோடயோ வர்றதை பார்த்துட்டு அதை அந்த டீச்சரோட அம்மாகிட்டே சொல்லிட்டேன். அது ரொம்ப கசமுசா ஆயிடுச்சி. அந்த டீச்சரை டிஸ்மிஸ் பண்டிட்டாங்க… ஆனா அதுக்கு காரணமானவன்னு தெரிஞ்சதும் மத்த டீச்சர் எல்லாம் எல்லா சப்ஜெக்டிலேயும் ஃபெய்ல் பண்ணி அடுத்த கிளாஸ் போகவிடாம பண்ணிட்டாங்க.”

சிகப்பு ரோஜாக்கள் கமலஹாசனைப் போல் இவர் தன் வாழ்கையில் சந்தித்த கிழவி, டீச்சர் என்று சம்பந்தமேயில்லாத ஃபிளாஷ்பேக்குகளை சொல்வதை கேட்டப்படி அவைகளுக்கும் யோகாவை தவிர்க்கும் காரணத்துக்கும் எப்படி முடிச்சு போடப்போகிறார் என்ற சஸ்பென்ஸோடும் நடந்தேன்.

”அப்புறம் எனக்கு கல்யாணம் பண்ண அப்பா முயற்சி செஞ்சார்” என்று ஒரேயடியாக பத்தாம்கிளாஸ் பருவத்திலிருந்து கல்யாண பருவத்திற்கு ஏனோ தாவிவிட்டார்.

”நிறைய பொண்​ணைப் பார்த்தேன். அப்புறம் ஒரு பொண்​ணை பிடிச்சிருந்தது கல்யாணமும் ஆச்சி! ஆனா என் மாமனாரை எனக்கு முதலிலேயே பிடிக்காம போச்சி! அவரைக் கண்டாலே அலர்ஜி! அதுபோலவே அவர் எப்ப வந்தாலும் ஏதாவது பிரச்னை பண்ணுவார்… மாப்பிள்ளைன்னு மரியாதை கொடுக்க மாட்டார்… இதை செய்ங்க, அதை செய்ங்கன்னு நாடடாமை பண்ணுவார். எனக்கு துளிகூட பிடிக்காது… ஒரே வெறுப்பாக இருக்கும்… என் விதியை பாருங்க… அவர் படுத்த படுக்கையா கிடந்தபோது அவரோட பசங்க வைச்சு காப்பாத்த முடியாதுன்னு எங்கிட்டே கொண்டுவிட்டுடாங்க… கடைசி வரைக்கும் எனக்கு தொல்லை தந்துட்டுதான் போய் சேர்ந்தார்.”

இதென்னடா இது சம்பந்த சம்பந்தமில்லாமல் எதைஎதையோ சொல்லிக் கொண்டு போகிறாரே என்று அவரை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே நடந்தேன். பின்பும் ஒரு சம்பந்தமில்லாத சம்பவம் ஒன்றை ஆரம்பித்தார்.

”அது போகட்டும் ஸார்… இந்த அபார்ட்மென்ட்டிலே வீடு வாங்கறதுக்கு முன்னாடி ஒரு அயோக்கிய பில்டர்கிட்டே மாட்டிக்கிட்டேன்” என்று அவர் ஆரம்பிக்க ஏனோ இப்படி சிலரிடம் மாட்டிக் கொண்டாமே என்று நானும் நொந்துபோனேன்.

”இதோ கட்டி தர்றேன். அதோ கட்டித் தர்றேன்னு இழுத்தடிச்சான்… அவன்கிட்டேயிருந்து கட்டின பணத்தை கேஸ் போட்டு திருப்பி வாங்கறதுக்குள்ளே பெரும்பாடாய் போச்சு… நாலைந்து லட்சம் செலவோட அந்த பில்டர்கிட்டேயிருந்து தப்பிச்சதே பெரிய கதை” என்று சற்றே தன் கதையை நிறுத்தினார்.

”ஸார்! நீங்க சொன்ன இத்தனை கதைக்கும், யோகாசனம்னு சொன்னா உங்களுக்கு கோபம் வர்றதுக்கும் என்ன சம்பந்தம்னே புரியலையே” என்று கேட்டுவிட்டேன்.

”அட யோகாசனம்னு இப்படி முழுசா கேட்டா எனக்கு ஏன் கோபம் வர்றபோகுது… நானும் யோகாசனம் கத்துட்டு தினமும் பண்றவன்தான்… அது பண்ணினா நல்ல ரிசல்ட்… மைன்ட் காமா இருக்கும்… கோபம் டென்ஷன் எல்லாம் குறையுது… ஆனா ‘யோகா’ன்னு மட்டும் காதிலே கேட்டா எனக்கு ரொம்ப டென்ஷனாயிடுது…”

”புரியலையே” என்றேன்.

”அந்த அத்தை பாடடியோட பேரு யோகாம்பாள்! யோகா பாட்டி யோகா பாட்டின்னுதான் கூப்பிடுவாங்க… அப்புறம் அந்த யோக நாயகிங்கற இந்தி டீச்சரையும் யோகா டீச்சர்னுதான் சொல்வாங்க… எங்க மாமனார் பேரும் யோகமூர்த்தி! அவரை அவங்க வீட்டிலே யோகா மாமா யோகா மாமான்னுதான் கூப்பிடுவாங்க. என்னை பாடாய்படுத்தி பில்டர் கம்பெனி பேரும் ‘யோகா பில்டர்ஸ்’.

இப்போ சொல்லுங்க எனக்கு யோகான்னா கோபம் வருமா வராதா?”

எனக்குத்தான் அவரை ஓங்கி அரையவேண்டுமென்று கோபம் வந்தது!

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0