வாங்க மாமா!வாங்காம வாங்க மாமா!
அகிலா கார்த்திகேயன்
அது என்னவோ தெரியவில்லை இப்போதெல்லாம் ஒருவர் வீட்டிற்கு மெனக்கெட்டு யாரும் போவதே அரிதாகிவிட்டது. அப்படியே போனாலும் அந்த வீட்டிற்கு என்ன வாங்கிப் போவது என்பதும் பெரிய கேள்விக் குறியாகிவிட்டது.
முன்பெல்லாம் மாமாவோ, அத்தையோ ஊரிலிருந்து வந்தால் ஒரு பித்தளை சம்படத்தில் தேங்காய் பர்பியோ, அதிரசமோ அடைத்துக் கொண்டு வருவது வழக்காயிருந்தது. அப்படி மாமாக்களும் அத்தைகளும் எப்போது வருவார்களென்று எதிர்பார்ப்புடன் ஒரு கூட்டமே இந்த பர்பியையும் அதிரசத்தை வைத்தே அந்த அத்தை மாமாவை வரவேற்க காத்திருக்கும்.
ஒன்றுமே வாங்கி வராத கருமிகளை ”அம்மா! கைவீசிண்டு வெறுங்கையோட வர்ற மாமான்னு சொல்லுவியே அவர் வந்துண்டிருக்கார்” என்று அந்த வீட்டு நண்டுசிண்டுகள் மானத்தை வாங்கும்.
அந்த கால படங்களிலெலாம்கூட வயதான பாட்டி ஊரிலிருந்து வாழைப்பழத் தார், முறுக்கு இத்யாதிகளை பிரதானமாக சுமந்துக்கொண்டு தன் அக்குலில் துணிமணிகள் அடங்கிய தமாதுண்டு மூட்டையை இடுக்கிக் கொண்டுவருவதாக காட்டுவார்கள்.
ஆனால் இப்போது அப்படி வாழைப்பழத் தாரையும், பொரி உருண்டையையும் யார் வீட்டிற்கும் யாரும் வாங்கிப் போவதாக தெரியவில்லை. அந்த காலமெல்லாம் மலையேறி போனதென்றாலும் இக்காலகட்டத்தில் ஒருவர் வீட்டிற்கு செல்லும்போது எதை வாங்கிப் போவது என்று தீர்மானிப்பதே கஷ்டமாகி போய்விட்டது.
முதலில் ஸ்வீட், காரம் தலா அரை கிலோ வாங்கிப் போகலாமென்று நினைப்போம். அந்த வீடடில் இருக்கும் மாமியாருக்கோ, மாமனாருக்கோ நிச்சயம் சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ, கொழுப்போ இருந்தே தீரும். நீங்கள் கொண்டு போகும் ஸ்வீட்களை இதுதான் சாக்கு என்று சந்தடி சாக்கில் விழுங்கி வைக்கும் கிழங்களில் ரத்தத்திலிருந்து சர்க்கரையை இறக்க அதன்பின் அவரது மகனோ, மருமகனோ ஒரு மாத காலம் அவர்களை உண்டு இல்லைனு பண்ணவேண்டியிருக்கும்.
அப்படி பிணி, மூப்பு பெரியவர்கள் இல்லாதபட்சத்தில் தமாதுண்டு சாக்லெட் தின்றாலும் லொக்கு லொக்கு என்று பாதிக்கப்படும் பாலகர்கள் நிச்சயம் இருப்பார்கள்.
”அடடே! இந்த சாக்லெட்டா வாங்கிண்டு வந்தீங்க… போன மாசம் இப்படி என் பெரியப்பா பையன் வாங்கிண்டு வந்ததை இந்த சனியன் நின்னு தொலைச்சதிலே டாக்டருக்கு ஒரு மாசம் அழுது இப்பத்தான் கொஞ்சம் தேவலாம்” என்று நீ உங்களையும் நீங்கள் வாங்கிப் போகும் ஐம்பது, நூறு டாஃபிக்களையும் சேர்த்து சனியன் லிஸ்ட்டில் சேர்த்து அந்த பொறுப்பான தாயார் புலம்புவாள்.
”ஏன் இத்தனை பிஸ்கட்டை வாங்கிட்டு வர்றீங்க? நேத்துதான் ஃபிரிட்ஜிலிருந்து அத்தனை பிஸ்கட்டையும் எடுத்து வேலைக்காரிகிட்டே கொடுத்தேன்” என்று நாம் வாங்கிப்போகும் பிஸ்கட்டுகளுக்கும் மரியாதை மலை ஏறிபோயாகிவிட்டது. துட்டு கொடுத்து வாங்கிப் போகும் ஆப்பிள், மாதுளை, மலைப்பழம் இத்யாதி பழங்களும் அந்த வீட்டு கிழங்களுக்கு திட்டுவாங்கிக் கொடுக்கும் ஆபத்தை உண்டாக்குபவை.
மேலும் ‘ஷாப்பிங்’ என்று சம்பிரதாயமாக வார கடைசியில் போகும்போது வீட்டு வாண்டுகளையும் கூட்டிக்கொண்டு போகும் வழக்கமுள்ளதால் அந்த சூப்பர் மார்கெட்டில் இதை வாங்க போகிறோம் என்ற எந்த தீர்மானத்தோடும் போகாமல் கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கும் பழக்கத்தில் அக்குழந்தைகள் கையில் பட்டதை எடுத்து நிரப்பிக் கொள்வதால் ‘அந்த மாமா என்ன வாங்கிட்டு வருவாரு’ என்ற எதிர்பார்ப்பும் இப்போதெல்லாம் இல்லை.
”மொளகாய் பஜ்ஜி பண்ணினேன் உனக்கு பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்” என்று சொல்லிக்கொண்டு வரும் உறவுகளும் அக்கம்பக்கத்தில் இல்லாமல் ஓ.எம்.ஆரிலும், ஒரகடத்திலுமாக எங்கெங்கோ பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.
”இந்த ஆளு வரலேன்னு யாரு அழுதாங்க… வரும்போதெல்லாம் கண்டதையும் வாங்கிண்டு வர்றது அதை வீட்டிலே யாராவது தின்னுட்டு உடம்பு கெட்டுப்போய் டாக்டருக்கு அழவேண்டியது” என்பதாக அலுத்துக்கொள்வதில் கைவீசி வெறுங்கையுடன் விருந்தாளியாகவோ, விசிட்டராகவோ போவதே உத்தமம் என்றாகிவிட்டது.
தொடர்புடைய கதைகள்
கார்த்தியும் மூர்த்தியும் ஒண்ணா படிச்சவங்க!
'ஒண்ணா படிச்சவங்க' என்ற தலைப்பில் ஒரு சினிமா படம் வந்துள்ளது. இந்த ஒண்ணா படிச்சவங்க லிஸ்ட்டில் நாம் ஒண்ணாவது முதல் ஐந்தாவது வரை படிக்கும் ஆரம்பப் பள்ளி நண்பர்...
நானும் நகை அணியமாட்டேன்!
"நானும் இனிமேல் அணியவே மாட்டேன்" என்று என் மனைவி சொன்னாள். அவளைப் பார்த்தேன். காது, மூக்கு, கழுத்து எல்லாம். முளியாக இருந்தன. அத்தனை நகைகளும் மேஜையின் மேல் குவி...
பலே தீபாவளி
சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை..
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...