ஒதுக்கல்
மாலை நேரம்… மயிலாப்பூர் குளத்துப் படியில் உட்கார்ந்திருந்த சுப்பய்யருக்கு பசி உயிரை எடுத்தது. காலையில் நீராகாரமாகச் சாப்பிட்டதோடு சரி. அவர் பகல் வேளையில் சாப்பிடுவதற்கு மனைவி விசாலம் வைத்துட்டுப் போன நேற்றைய பழையதை தொடக்கூட அவருக்குத் தோன்றவில்லை. அவ்வளவு குமட்டல் நாற்றம்!
அவருக்கு இன்று எங்கேயும் போகும் பிரமேயமும் இல்லை. இதுபோன்ற நாட்களில் விசாலத்திற்கு கோபமும் எரிச்சலுமாக வரும். இன்றும் அப்படித்தான். சுப்பய்யரையும் அவர் அம்மா கிழவி ஆதிலட்சுமியையும் எக்கேடும் கெட்டுப் போங்களென்று விட்டு விட்டு, ‘ரேவதி ஹோம் நீட்ஸ்’ கம்பெனிக்கு அப்பளம் இட்டுத்தர சென்றவள்தான். அவளும் என்ன செய்வாள் பாவம்! நாலு பேர் வீட்டில் அடுப்படி வேலைகள் செய்து, அப்பளம், வடாம் இட்டுத் தந்து, முறுக்கு பட்சணங்கள் என செய்துதானே வயிற்றைக் கழுவ முடிகிறது! சுப்பய்யர் பார்த்து வந்த ‘ஜோலி’க்குத்தான் அதற்கான திராணியில்லையே!
தான் பொடி போடவென வைத்திருந்த சில்லறையில் தொண்ணூறுவயது தொண்டுக் கிழவியான அம்மாவிற்கு ஒரு பன் வாங்கித் தந்து சாப்பிடச் சொன்னவர், அவளை கோவிலுக்குள் உட்கார வைத்துவிட்டு குளத்தங்கரையில் உட்கார்ந்திருந்தார். அவருடைய நாளைய வேலை வாய்ப்பிற்காக!
என்ன வேலை தெரியுமா? பிரேதமாக ஆவாஹனம் செய்ய ஓர் ஆள் வேண்டி வருபவர்கள் சுப்பய்யரைத்தான் தேடுவார்கள்.
ஆமாம், சடலமாகப் பாவிக்கப்படும் இவர், தானே வடித்து, தானே விழுங்கி, யார் கண்ணிலும் படாமல், திரும்பிப் பார்க்காமல் ஓட வேண்டும். காலம் சென்றவரின் பூத உடலுக்குக் கொடுக்கப்படும் மரியாதைகூட உயிருள்ள இவருக்குக் கிடையாது!
“ஓய் சுப்பு” நாற்பதில் இருந்த நடராஜ சாஸ்திரிகள் இவரை அதட்டலாகக் கூப்பிட்டதைப் பொருட்படுத்தாமல் எழுந்து அவரிடம் போய் நின்றார்.
“நாளைக்கு ராமபுரம் வந்து சேரும். நாலாம் கிராஸ் தெரு. ஏழாம் நம்பர் வீடு. ‘டாண்’ணு ஒன்பது மணிக்கெல்லாம் முடிக்கணும். முழிச்சிண்டு நிக்காம சீக்கிரமா வந்து சேரும். இவர் பதிலை எதிர்பார்க்காமல், தன் சில்வர் பிளஸில் ஏறி, சாஸ்திரிகள் பறந்தார்.
நாளைய பாடு ஒருவழியாக ஒப்பேறியதில் சற்று பசியை மறந்தவராய் சுப்பய்யர் கோவிலுக்குள் நுழைந்தார். ‘இருட்டி விட்டதே.…அம்மா கிழவியை அழைத்துக் கொண்டு வீடு போய்ச் சேர வேண்டுமே’ என எண்ணியபடி நடந்தவர், எதிரே வந்த கனபாடிகளைக் கவனிக்கவில்லை.
“ஹும்” என்று எரிச்சலாக ஒதுங்கினார் சிவராம கனபாடிகள். “தள்ளிப்போய்” தொலையுமய்யா…! மேலே பட்டு ஒழியப் போறீர். ஆத்துக்குப் போய் ஸ்நானம் பண்ண வைச்சுடாதீர்.” இப்படி சவுண்டி பிராமணன் என்ற பிழைப்பால் எப்போதுமே தீட்டு பட்டவராக இவர் ஒதுக்கப்பட்டார்.
அதனால், சுடு சொற்களால் பாதிக்கப்படவில்லை அவர் மனது. மரத்துப்போன மனது. ஏற்கனவே, இதுபோல பல சம்பவங்களைக் கண்டிருந்தது.
விரக்தியாக சிந்தித்தபடி கோவிலுக்குள் நுழைந்தார்.
“அம்மா, நான் தான் சுப்புணி.…நேரமாச்சு.…ஆத்துக்குப் போகலாம்”. கிழவியின் அருகே சென்று பலமாகக் குரல் கொடுத்தவர், ஜீவனற்ற குச்சியான அவள் கைகளைப் பற்றி எழுப்பினார்.
“யாரு சுப்புணியா…போலாம்கறியா? கீழேயிருந்த கைத்தடியைத் தடவித் தேடி எடுத்து ஒரு கையில் அதைத் தாங்கி எழுந்து நின்றாள் கிழவி, ஆதிலட்சுமி அம்மாள். ஆனால், ஆதியிலும் சரி; அந்தத்திலும் சரி, அவள் லட்சுமியைப் பார்த்ததில்லை. கிழவியின் மாமனார் ஊர் கோடியிலிருந்த கோவிலில் அர்ச்சகராய் இருந்தார். புருஷன் சுப்பய்யரின் அப்பா ஓட்டல் சர்வர். பிள்ளையும் இப்படி! ஆதியிலிருந்து கஷ்ட ஜீவனம் தான்.
“ஏம்மா, ஏதாவது சாப்டியா?”
“யாரோ அர்ச்சனை பண்ணினவா ரெண்டு பழம் கொடுத்தா.…இதிலே எத்தனை காசு சேர்ந்திருக்கு பாரு” தன் மொட்டைத் தலையை விட்டு வழுக்கிக் கொண்டு போன நார்மடி கந்தலை சற்று மெனக்கெட்டு இழுத்து தலையை மறைத்துக் கொண்டு, கையிலிருந்த சில்லறையை சுப்பய்யரிடம் தந்தாள். சுப்பய்யர் கையை முகத்தருகே கொண்டு போய் பத்தும் இருபதுமாய் சேர்ந்திருந்த காசுகளை எண்ணினார். மிக சொற்பம். பிச்சைக்காசு!
“ஆமாம்… நீ சாப்டியோ?”
“இனிமே தான்.”
“போறச்சே ரவை வாங்கிண்டு போலாம். விசாலத்துக்கிட்டே உப்புமா கிளறச் சொல்லு!”
ஆறேழு ஒண்டு குடித்தனமிருந்த அந்த புராதன ஓட்டு வீட்டின் கோடியில் கழிவுறைக்குப் பக்கத்தில் சுப்பய்யரின் ஜாகை. ஜாக்கிரதையாகத் தன் தாயாரைப் பிடித்து சுப்பய்யர் அழைத்துச் சென்றார்.
விசாலம் உள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள். தானாகவே எப்போதும் புலம்புவது வழக்கம். இப்போது சீனு வந்திருந்தான்.
சுப்பய்யரும், மாமியாரும் வருவது தெரிந்தவுடன் சற்று அவள் குரல் ஆத்திரமாக ஓங்கி ஒலித்தது.
“போறது போ.…நம்ப தரித்திரம் நம்ம விட்டு ஏன் போறது சொல்லு? நான்தான் குத்துக் கல்லாட்டம் எல்லோருக்கும் உழiச்சுக்கொட்ட இருக்கேனே.…இந்த பிராமணனைக் கட்டிண்டு என்னத்தைக் கண்டேன். மத்யானம் சாப்பிட சாதத்தை வச்சிட்டு போயிருக்கேன்; பழையதைத் தொட்டுப் பாக்க மாட்டேன்னு அப்படி என்ன ஒரு நாக்குன்னு கேட்கறேன்? இந்த வேலை கிடைக்கலைன்னா என்ன… உன் அப்பனையும் பாட்டியையும் போல நீயும் நாலு பேர்கிட்டே பிச்சை எடுத்தா ஆறது போ”.
விசாலம் கோபமாய் இருப்பது தெரிந்தது ஆதிலட்சுமி அம்மாள் தாழ்வாரத்திலேயே உட்கார்ந்து விட்டாள்.
சுப்பய்யர் மட்டும் தயங்கியபடி உள்ளே சென்றார். ரவைப் பொட்டலத்தை விசாலத்தின் முன்வைத்தார். விசாலம் சமாதானம் அடைவாளென நினைத்து, “நாளைக்கு ராமபுரத்துக்கு வரச் சொல்லியிருக்கா” என்றார்.
“ஹுக்கும்… பெரிய கலெக்டர் வேலை” இடக்காகப் பேசியவளிடம் தொடர்ந்தார்.
“ரவை வாங்கிண்டு வந்திருக்கேன்.…அம்மாவுக்கு உப்புமா சாப்பிடணும்னு தோன்றது போலருக்கு.” சுப்பய்யர் குரல் கம்மியது.
“எல்லாம் தோணும்.…உப்புமா கிளற எண்ணெயும், புண்ணாக்கும் கொட்டிக்கிடக்கு பாருங்கோ.…ஏதோ பண்ணி வைக்கிறதைத் தின்னாப் போறும்.…டேய் சீனு இந்தக் காப்பித் தண்ணியை ஊத்திண்டு போ.” ஊதுவத்தி விற்பனைக்குப் புறப்படயிருந்த சீனுவிடம் சுப்பய்யர் போய் நின்றார். சீனுவிற்கும் இவரைக் கண்டால் உதாசீனம். வேலையைப் பற்றிக் கேட்டால் சுள்ளென்று எரிந்த விழுவானென்று அவருக்குத் தெரியும். இருந்தாலும், வாசல்வரை அவன் பின்னால் போனார்.
விசாலத்தின் கோபம் தணியட்டுமென ஒரு மணி நேரம் வாசலில் உட்கார்ந்திருந்த சுப்பய்யர், எட்டு மணியளவில் உள்ளே வந்தார். தாயாரும் தாழ்வாரத்தில் முழித்தபடி படுத்திருந்தாள். போர்ஷனுக்குள் சென்றவர், விசாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். பக்கத்தில் ரவைப் பொட்டலம் பிரிக்கப்படாமலிருந்தது. உயிர்போகும் பசி. இருந்தாலும் விசாலத்தின் மேல் அவருக்குக் கோபம் வரவில்லை. பாவம் ஓடாய் உழைக்கிறாள். அசந்துபோய் விடுகிறாளென நினைத்து சமாதானமடைந்தார்.
அதே சமயம் தன் தாயாரின் பசியைப் பற்றி நினைக்கையில் மனது பிசைந்தது. மேடையில் மூடி வைத்திருந்த பாத்திரத்தை ஆவலாயத் திறந்து பார்த்தார். யார் வீட்டிலிருந்தோ அடுப்படி வேலை செய்துவிட்டு விசாலம் வாங்கி வந்திருந்த கூட்டு. ஊசிப் போன நாற்றம் வந்தது.
பானையிலிருந்து இரண்டு தம்ளர் தண்ணீர் மடக்கென்று குடித்தார். தாயாரின் பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.
“விசாலம் பாவம். அசந்து தூங்கறா.”
உப்புமா தயாராகவில்லை என்பதைத் தான் தன் பிள்ளை சொல்ல வருகிறானென்று கிழவி புரிந்து கொண்டாள்.
“நல்லவேளை… நானே உப்புமா கிளற வேணாம்னு சொல்லலாம்னு நினைச்சேன். எனக்கு வயிறே சரியில்லே.”
தன் தாயார் அப்பட்டமாகத் தன்னை சமாதானப்படுத்த பொய் சொல்கிறாளென்று சுப்பய்யருக்கும் புரியாமலில்லை.
“அப்போ என்னம்மா சாப்பிடறே?” ஒப்புக்காகக் கேட்டு வைத்தார்.
“கோவில்லே யாரோ ரெண்டு பழம் கொடுத்தான்னு சொன்னேனே. ஒண்ணு நான் திங்கறேன்.…இந்தா, நீ ஒண்ணு சாப்பிடு!”
மடியில் பத்திரப்படுத்தியிருந்த பழத்தை கிழவியிடமிருந்து வாங்கும்போது சுப்பய்யர் கண்களிலும் அந்த வாழைப்பழத்தைப்போல கசகசவென்று நீர் முட்டிக் கொண்டு சுரந்தது.
“சீனுக்கு என்ன ஆச்சாம்?” பேரனின் வேலையைப் பற்றி கிழவி ஆவலோடு விசாரித்தாள்.
“ஹும். கிடைக்கலையாம்.” சுப்பய்யருக்குத் தொண்டையை அடைத்தது.
“ஏன்… இவன்தான் டைப், அது இதுன்னு பாஸ் பண்ணிட்டு கெட்டிக்காரனா தானே இருக்கான்?”
“நாமெல்லாம் ஒசந்தவளாம்.…அதனால கிடையாதுன்னு ஒதுக்கிட்டாளாம்.”
“ஒசந்தவளாமா? எனக்கு ஒரு எழவும் புரியலே. அப்ப நீ நாளைக்கு கோபிராமபுரம் போறச்சே என்னைக் கோவில்லே கொண்டு உட்காத்தி வைச்சுட்டுப் போ.…வெள்ளிக்கிழமை கூட்டம் வரும்.”
கிழவி முடங்கிக் கொண்டாள்.
சுப்பய்யர் வெற்று உடம்பைத் தரையில் சாய்த்தார். உறுத்திக் கொண்டிருந்த நைந்து, நலிந்துபோன பூணூலை கழுத்துப் பட்டைக்கு மேல் உயர்த்தி ஒதுக்கிவிட்டு, புரண்டு படுத்தார்.
தொடர்புடைய கதைகள்
செஞ்சோற்றுக் கடன்
விவசாய நிலங்களை விற்று கம்ப்யூட்டர் படிக்கத் துடிக்கும் இன்றைய தலைமுறைக்கு, ஒரு கவளம் தயிர் சாதம் உணர்த்தும் வாழ்வின் நிதர்சனம்.
பலே தீபாவளி
சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை..
தகப்பனைத் தேடி
விவாகரத்து பெற்ற ஒரு தாய், தன் குழந்தைக்கு ஒரு நல்ல தந்தையைத் தேடும் பயணமும், ஒரு எதிர்பாராத சந்திப்பும்.
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...