(நில)வேம்பு மாமி
அகிலா கார்த்திகேயன்
பாட்டி வைத்தியம், கொள்ளுப் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படுபவைகளில் நாம் காணாத ஒரு கஷாய வகை இப்போது பிரபலமாகியுள்ளது. இருந்தாலும் என் மனைவி அதன் பூர்ண உரிமையாளராக தன்னைக் கற்பித்துக் கொண்டு ”எங்க வீட்டிலே பல வருஷமா இந்த கஷாயம் போடற பழக்கம் உண்டாக்கும்” என்று பெருமை பேசிட வைத்திருப்பது ‘நிலவேம்புக் குடிநீர்’ என்ற அந்த அதி கசப்பு ஒளடதம்தான்.
பன்றி காய்ச்சல், டிங்கு காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என்று அலோபதி மருந்துக்கெல்லாம் அடங்கா பிடாரியான நோய்களுக்கெல்லாம் பரம ஒளடதமாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு அரியணை ஏறி அமர்ந்துள்ள இந்த நிலவேம்பு குடிநீரை கூவம் ஆறு குடிநீராய் இருந்த காலத்திலிருந்தே இவள் பரம்பரையில் பலர் உட்கொண்டு அந்தக் கால பிளேக் நோயிலிருந்தே விடுபட்டிருப்பதை தன் குலப் பெருமையாக என் மனைவி சொல்வதுண்டு.
என் மனைவியின் கொள்ளுத் தாத்தா வேம்பு என்கிற வேம்பு ஐயர் அவர்களும், அவரது மனைவியான கொள்ளுப் பாட்டி நீலா என்கறி நீலாயதாட்சி அம்மாளும் ஒருசேர அந்த காலத்தில் எலி கடி நோயால் பாதிக்கப்பட்டபோது யாரோ ஒரு தூரத்து சொந்தமான மருத்துவர் இந்த இலையை காய்ச்சி குடிக்கச் சொன்னதன் பேரில் அந்த இலையின் பேரைக் கூட கேட்காமல் அவரிடமிருந்து அதை வாங்கி கஷாயம் போட்டு குடித்த மாத்திரத்தில் எலி நேய் கிலியுடன் விலக அப்போதிருந்தே அந்த குடும்பத்தில் இந்த இலை வாழையடி வாழையாக என்பதுபோல் இழையோடி பிணைந்து பிணிகளைப் போக்கிக் கொண்டிருப்பதாக தகுந்த ஆதாரம் ஏதுமின்றி என் மனைவி மற்றவர்களிடம் பெருமை பேசிக்கொள்வது வழக்கம்.
நாளடைவில் இந்த இலையின் பெயர் இன்னதென்று சொல்லால் அந்த மருத்துவர் சொர்க்கம் சென்றுவிட கொள்ளுப் தாத்தா, கொள்ளுப் பாட்டியின் பெயர்களை ஒருங்கிணைந்து குடும்பத்தார் அந்த இலைக்கு ‘வேம்பு நீலா’ என்று முதலில் பெயர் வைத்திருக்கக்கூடும் என்றும் அதுவே மருவி ‘நிலவேம்பு’ என்று மருத்துவர் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பதும்கூட என் தர்மபத்தினி தானே இட்டுக்கட்டி சொல்லும் கதையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் இப்போது எல்லோராலும் கொண்டாடப்படும் இந்த பிரபலமாகியுள்ள நிலவேம்பு குடிநீரை நான் ஒவ்வொரு மருந்துக் கடையாக தேடிய காலம் ஒன்று உண்டு. சுமார் இருபது வருடத்திற்கு முன் திருவான்மியூரில் குடியிருந்தபோது இப்போது பெய்த தொடர் மழைபோல அப்போது என் மனைவிக்கு தொடர்ந்து இருபது நாள் இனம் காண இயலாத காய்ச்சல் கண்டது. டாக்டர் கொடுத்த இஞ்சக்ஷன், மாத்திரைகளுக்கு மசியவில்லை. அப்போது எதிரே இருந்த ஒரு பிள்ளையாரிடம் முறையிட்டபோது அது அந்த கோயில் குருக்களும் காதில் விழ அவர் இந்த நிலவேம்பை சிபாரிசு செய்தார்.
மனைவியிடம் அதை சொன்னால் ”கண்டதையும் மருந்துன்னு வாங்கிண்டு வந்து என் உடம்பை கெடுக்காதீங்க” என்று சொல்லிவிடுவாளோ என்று பயந்து அவளிடம் சொல்லாமல் இந்த நிலவேம்பை தேடி அலைந்தேன், அடையார், மைலாப்பூர், மாம்பலம் என்று நான் நிலவேம்பு என்ற ஏதோ ஒன்றை தேடி அலைய அது கடைசியில் எங்கள் வீட்டு அருகிலேயே இருந்த ‘இன்காம்ப்ஸ்’ நிறுவனத்தில் கிட்டிவிட்டது.
அடுத்த நாள் காலை அதில் கஷாயம் போட்டு படுக்கையாயிருந்த மனைவியிடம் நீட்டினேன். அதற்குமுன் ஒரு சொட்டு என் நாவில் விட்டுக் கொண்டேன். கசப்போ கசப்பு. எட்டிக்காய் கசப்பு (எட்டிக்காய் எப்படி கசுக்கும் என்று யாருக்காவது தெரியுமோ?) அந்த ஒரு சொட்டு கசப்பை என் நாக்கு மறக்க நாலு ஸ்பூன் சர்க்கரை வேண்டியதாயிருந்தது.
நான் நீட்டிய இந்த ஒரு டம்ளர் கசப்பை குடித்துவிட்டு என் மனைவி என்ன ஆர்ப்பாட்டம் செய்யப்போகிறாளோ என்று பயந்தபடி அவள் பக்கத்தில் நின்றேன்.
”ஆஹா! நில வேபு தானே… எப்படி உங்களுக்கு இந்த எங்க பரம்பரை மருந்தை தெரிஞ்சுது? எனக்குக்கூட இருபது நாளா நினைவுக்கு வரலையே… அப்பவே ஞாபகத்துக்கு வந்திருந்தா ரெண்டு நாளிலேயே எழுந்து உட்கார்ந்திருப்பேனே…” என்ற ஏதோ உற்சாக பானம் அருந்தியவளாக எழுந்து உட்கார்ந்துவிட்டாள்.
அவள் சொன்னதுபோல இரண்டு நாட்களில் நிலவேம்பு மாயம் செய்துவிட்டது. பூர்ண குணமாகி என் மனைவி அடுத்த நாளில் காலையில் தானே காபி கலந்து கொண்டு வந்து நீட்டினாள்.
நான் காபியை குடித்தபடி ”எனக்கெதுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுக்கறே” என்றேன்.
”ஜோக் இருக்கட்டும்… இனிமே வாரம் மூணு நாளைக்கு வீட்டிலே எல்லோருக்கும் வெறும் வயத்திலே நிலவேம்பு கஷாயம்தான். எங்க கொள்ளுத் தாத்தா பாட்டி காலத்திலிருந்தே பழகின பழக்கத்தை விட்டதனால்தான் இப்படி இருபது நாளா இந்த ஜுரம் படுத்தி எடுத்துட்டது” என்று பிரகடனம் செய்தவள் இந்த நிலவேம்பு எப்படி இவள் பuரம்பரையில் இடம்பிடித்ததென்ற மேற்படி விவரங்களையும் அளக்க ஆரம்பித்தாள்.
அன்றைய தினத்திலிருந்து என் உற்றார் உறவினர் சுற்றார் என்று யாருக்கு என்ன வியாதி என்றாலும் சப்ஜாடாக எல்லோருக்குமே என்மனைவி நிலவேம்பைத்தான் சகலரோக நிவாரணியாக சிபாரிசு செய்வாள். அதோடு இலவச இணைப்பாக ஏதோ இதை சிபாரிசு செய்யும் பூர்ண உரிமை தனக்கு மட்டுமே என்ற ஊர்ஜிதப்படுத்துவதுபோல கொள்ளுத் தாத்தா பாட்டி புராணத்தையும் பாடி அனுப்புவாள்.
என் மனைவி, என் மனைவி என்று சொல்கிறேனே அவள் பெயர்தான் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. அக்கம் பக்கம் உற்றார் உறவு என்று எல்லோராலும் ‘வேம்பு மாமி’ என்று அழைக்கப்படும் நிலையில் அந்த மாமியின் கணவனான என் பெயர் ‘வேம்பு’ என்பதாக பலர் தவறாக நினைப்பதுண்டு.
இருந்தாலும் இப்போது நிலவேம்பிற்கு கிட்டியுள்ள பிரபல்யம் என் மனைவிக்கும் ஈயப்பட்டுள்ளதில் சர்க்கரை என்கிற சக்ரபாணியான எனக்கும் பெருமையே!
தொடர்புடைய கதைகள்
தர்மமிகு தலை கவசம்!
''இதிலே உட்காருங்க'' என்று ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டேன்....
தீபாவளி பஜ்ஜி
உங்க வீட்டிலே தீபாவளி பஜ்ஜி பண்றதுண்டா?...
மொய் சிலிர்ப்பு!
ஏழுமலை என் மேஜையை நோக்கி வரும்போதே எனக்கு பகீரென்றது. ஏழுமலை ஊழியர் சங்கத் தலைவன். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் வாடிக்கையாக சங்கத் தலைவர்கள் கோரிக்கைகளைக் ...
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...