பட்டி

'லாம்' 'லாம்' ஜோதிடர்கள்

'லாம்' 'லாம்' ஜோதிடர்கள்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 3 நிமிடம் வாசிப்பு சமூகம்

அகிலா கார்த்திகேயன்

சில பேர்களுக்கு பிறந்து, வளர்ந்து போய் சேரும் வரை சாஸ்வதமாக ஒரே வீட்டிலேயே ஆயுள் காலம் வரை கிடக்கும் பாக்யம் கிட்டியிருக்கும். பல பேருக்கு அப்படி அமைவதில்லை. சொந்த வீடாய் அந்த வீடு இல்லாததாலோ, வீட்டு வாடகை அதிகம் கேட்டு கொடுக்க முடியாத காரணத்தினாலோ அக்கம் பக்கத்து ஆட்கள் வம்பிழுப்பதாலோ அல்லது அப்படிப்பட்ட வம்புதும்பு ஆசாமியாக இவரே இருப்பதாலோ உத்யோக மாற்றத்தினாலோ இவருக்கு அடிக்கடி தன் வீட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

இப்படி எந்த காரணங்களும் இல்லாமலேயே கிரகங்கள் அடிக்கடி கிரஹங்களை மாற்றிக் கொண்டிருப்பது இயற்கையின் விளையாட்டு. ஆனால் நம் ஜோஸியர்கள் ஏனோ அதை விளையாட்டாக எடுத்துக் கொள்வதில்லை. மனித வர்கங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு வீட்டிற்கு இடம் பெயரும்போது அந்த ஏரியா அக்கம்பக்கத்து ஆசாமிகளுக்கு இடம் பெயர்ந்துள்ள இந்த ஆசாமியால் பேஜாரும் பிரச்னைகளும், அனுகூலங்களும் வருவதுபோலவே, இந்த கிரகங்களின் பெயர்ச்சியாலும் ஜனங்களுக்கு இன்னின்ன சாதக பாதங்கள் நிகழலாம் என்று மெனக்கெட்டு சிந்தித்து ஆராய்ச்சி செய்து என்னைப் போன்ற ஆசாமிகளை பீதி அடைய செய்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட சமூக சேவையைப் பெற அந்த ஜோஸியர்களிடம் ‘அபாய்ண்மென்ட்’ வாங்கிக் கொண்டு போய்தான் கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த வாலண்டரி சர்வீஸை அனைத்து தின, வார, மாத இதழ்கள் மூலம் அவர்கள் பெரிய கைங்கர்யமாகவே செய்கின்றனர். அத்திப்பட்டு அருணாசலம், பம்மல் பத்மநாபம், சேலையூர் செல்வராஜ், திருவானைக்கா காசிலிங்கம் என்று அவர்கள் சொந்த வீடு சொந்த ஊரை விட்டு நகராமல் செளகர்யமாக உட்கார்ந்துக் கொண்டு கிரகங்கள் அப்படி நகர்வதால் உண்டாகும் பிரச்னைகளை ஜனங்களுக்கு சொல்லி பீதி கிளப்பிவிடுகிறார்கள். இப்படி எல்லா ஜோஸியர்களையும் பீதி கிளப்புபவர்கள் என்று கிளாஸிஃபை செய்துவிட முடியாத நிலையில் மீதி சாத்விகமான ஜோஸியர்கள் மிக இதமாக ‘உங்களுக்கு கடுமையான வியாதி வரும் என்றாலும் இந்த கிரகம் எட்டாம் இடத்தைப் பார்ப்பதால் எளிமையான ஃபீஸ் வாங்கும் டாக்டராக தேடிப் போவீர்கள்’ என்பதாக பலங்களை எழுதுவதுண்டு.

‘உங்கள் உத்யோகத்தில் மாற்றம் ஏற்படலாம். உங்கள் மனைவி உங்களிடம் அடங்கி நடக்கலாம்… பெண்ணுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு ஏற்படலாம்’ என்பதாக தன் அனைத்து ‘பிரிடிக்ஷன்’களுக்கும் ‘லாம்’ ‘லாம்’ போட்டு வரும் ஆனா வராது என்ற ரீதியில் தப்பித்துக் கொள்ள எத்தனிக்கும் ஜோஸியர்களும் உண்டு. என்னைக் கேட்டால் கிரகங்களின் பெயர்ச்சி இதை செய்யும் அதை செய்யும் என்று ஆணித்தரமாக கூறி நமக்கு கிலி ஏற்படுத்தும் பேர்வழிகளைவிட இப்படிப்பட்ட ‘லாம்’ ‘லாம்’ ஜோஸியர்கள் எத்தனையோ தேவலாம் என்பேன்.

இப்போது இதையெல்லாம் தவிர அந்தத்த ராசிகாரர்களுக்கான பெயர்ச்சி பலனாக, பரிட்சைக்கு மார்க் போடுவதுபோல போட ஆரம்பித்துவிட்டனர். பரிட்சை பேப்பரை விரித்து எதை எதை சரியாக எழுதியிருக்கிறான், எதை தவறாக எழுதியிருக்கிறான் என்ற டிடைல்களுக்கு போவதற்கு முன் ஒட்டுமொத்தமாக அவன் மார்க்கை பேப்பரின் மடித்த பக்கத்தின் மேலே போட்டு காண்பிப்பதுபோல, இந்த கிரக பெயர்ச்சி எதை சரியாக செய்யும், எதை தவறாக செய்யும் என்று விளாவரியாக படித்து பீதியடையாமல் தவிர்க்க இந்த மார்க் போடும் முறைக்கு நான் நூற்றுக்கு நூறு மார்க் கொடுத்தாக வேண்டியுள்ளது.

சமீபத்தில் ரெண்டு, மூணு கிரகங்கள் அதனதன் வீட்டை காலி செய்து அடுத்த வீட்டிற்கு குடி ஏறியதில் இப்படி மார்க் போடும் முறையை எனக்கு நம் செளகர்யத்திற்கு ஏற்றால்போல் பலாபலன்களை எடுத்துக் கொள்ளும் செளகர்யம் இருந்தது.

இதை என் மனைவியிடம் பெருமையாக சொன்னேன். ”என் ராசிக்கு குரு பெயர்ச்சி படி நூத்துக்கு ஐம்பது மார்க் தான்னு கவலைப்பட்டேன். நல்ல வேளையாக ராகுவும் கேதுவும் உடனே பெயர்ந்ததாலே அவாளாலே எனக்கு நூத்துக்கு என்பது மார்க் கிடைச்சிருக்கு. ஆவரேஜா பாத்தா நூத்துக்கு அறுபத்தைஞ்சு வருது. என் அறுபத்தஞ்சு வயசுக்கு இந்த அபவ் ஆவரேஜ் மார்க் எந்த தொந்தரவும் செய்யாதுன்னு நினைக்கிறேன்” என்றேன்.

மெய்யாலுமே எனக்கு இப்படி இரண்டையும் கூட்டி சராசரி பார்த்ததில் நமக்கு பாதிப்பு சராசரிக்கு குறைவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதில் கொஞ்சம் ஆறுதல்தான்.

ஆனால் விதி யாரை விட்டது!

”சரிதான்! இந்த ரெண்டுக்கு ஆவரேஜ் பாத்தா போதுமாக்கும்” என்று விடுவிடுவென்று அறைக்குள் போனவள் பழைய தினசரி, வாராந்தரி இத்யாதிகளை கொண்டு வந்து என் முன்னால் கொட்டினாள். பின் அதே வேகத்தில் ஒவ்வொரு இதழாக எடுத்து விரித்து ”இப்போ சொல்றதை ஒரு நோட்டிலே எழுதிக்கங்க… உங்க இங்கிலிஷ் வருட பலன் பிரகாரம் நூத்துக்கு முப்பது, தமிழ் வருடத்தோட பலன் நூத்துக்கு இருபத்தைந்து, போன சனி பெயர்ச்சிபடி பார்த்தா நூத்துக்கு நாப்பது, மாச பலன்லே இங்கிலிஷ் பலனா பத்தும் தமிழ் பலனா பதினைஞ்சும் போட்டிருக்கு, இதை தவிர எண் கணிதப்படியும் மார்க்குகளைப் பார்த்தாகணும். இப்படி எல்லா மார்க்கையும் கூட்டி ஆவரேஜ் பார்த்தா உங்க ராசிக்கு நூத்துக்கு முப்பதுக்குள்ளேதான் மார்க் வருதுன்னு நான் எப்பவோ போட்டு வைச்சுட்டேன். அதனாலே ரொம்ப தெனாவட்டா திரியாமே நான் சொல்றபடி கேட்டு ஜாக்கிரதையா இருங்க ஆமாம்” என்றாள்.

”அம்மா தாயே! இதிலே கட் ஆஃப் மார்க்குன்னு சொல்றாளே அது மாதிரி ஏதாவது இருக்கா” என்று மனைவியை சோகமாக கேட்டேன்! என்னை விட்டு இந்த சோகம் பெயர்ச்சி அடைய அனுகூலமாக இப்போதைக்கு ஏதாவது ஒரு கிரஹம் பெயர்ச்சி அடைந்து எனக்கு அதிக மார்க் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0