பட்டி

கபாலிக்கும் காலம் வரும்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் அனுபவம்
Story Image
அது ஏனோ தெரியவில்லை, சில பெயர்கள் பேர் போனதான வகையில் சேர்வதில்லை. ரொம்பவும் பேர் போன நாடு, பேர் போன ஊர்...

Share this story:

அது ஏனோ தெரியவில்லை, சில பெயர்கள் பேர் போனதான வகையில் சேர்வதில்லை. ரொம்பவும் பேர் போன நாடு, பேர் போன ஊர், பேர் போன நபர் என்ற வகையில் சில பெயர்களேகூட பேர் போன பெயர்களாக சிலாகித்து குறிப்பிடப்படுவதாக அமைந்துள்ளது.

வெங்கடராமன், சிவசங்கரன், கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், அருணாசலம், மாரிமுத்து, அங்கப்பபிள்ளை என்ற பெயர்களுக்கு கொடுக்கும் மரியாதையை போல நாம் ‘கபாலி’ என்ற பெயருக்கு கொடுக்காமல் ஒதுக்கத்தான் விட்டுள்ளோம்.

பிரசத்தி பெற்ற பேர் போன மயிலாப்பூர் ஸ்தலத்தின் உறைந்தருளும் கபாலீஸ்வரரின் செல்லப் பெயரான கபாலிக்கு அத்தனை பக்தி சிரத்தையான மரியாதையை நாம் இதுநாள் வரை வழங்காமலிருந்துள்ளோம். ஏன் ‘க…பா..லி’ என்று ஆரம்பித்து ஒரு மகானுபாவர் கீர்த்தனையே இயற்றி இருந்தும நாம் அந்த பெயருக்கு உரித்தான மான்பை அளிக்கவில்லை..

”டேய்! கபாலியை கூட்டாந்து அந்த பிளேடு பக்கிரியை ஒரு சீவு சீவச் சொல்லுடா” என்று பழைய தமிழ் படங்களில் பிரதான வில்லனுக்கு அடி ஆளாய் வரும் ஆளின் பெயராகத்தான் ‘கபாலி’ இருக்கும்.

”ஏய்! கபாலி கைல உன் வேலையை காமிக்கிறயா… மவனே நீ தீந்தேடா” என்று படங்களில் லுங்கியும், பிரட்டை தலையும், கையில் தாயத்து கட்டிய பிச்சுவா கத்தி ஆசாமி கபாலியாக சித்தரிக்கப்படுவார். பேர் போன எழுத்தாளர்களுக்கும் இந்த கபாலி என்ற பெயர் ஒரு துஷ்டத்தனமான கேரக்டருக்கு வைக்க தோதாயிருக்கும்.

”அந்த முரட்டுத்தனமான முகத்தைப் பார்த்ததும வந்தனாவிற்கு பயம் கண்டது. கரடுமுரடான முகத்தின் மீசை பீதியை கிளப்பியது. திருட்டு முழி நடுக்கத்தைக் கொடுத்தது. ‘ஆண்டவா இந்த படுபாவியிடமிருந்து என்னைக் காப்பாற்று’ என்று தெய்வத்தை மனமார வேண்டிக் கொண்டு அவள் அந்த ராத்திரி வேளையில் சைதாப்பேட்டை கபாலியின் சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறினாள்” என்பதாக திகில் கொடுக்கும் பாத்திரங்களுக்கு ‘கபாலி’யைதான் எழுத்தாளர்கள் கையாளுவார்கள்.

”டேய் அவன் போக்கிரி பையனா இருப்பானோ என்னவோ… கபாலின்னு பேர் வைச்சிருக்கான்… அவன்கூட சேராதே” என்ற ரீதியில் ‘கபாலி’ ஒதுக்கப்பட்டுள்ளான்.

ஏன் பொதுவாக கபாலி என்ற பெயரை ஒரு அந்தஸ்தோடு இணைத்து பார்த்ததில்லை… கேட்டதில்லை! “எங்க பிரன்ஸிபால் பேரு ‘கபாலி’ ” என்றும் யாரும் சொல்லக் கேட்டதில்லை.

”மூட்டு வலியா… டாக்டர் கபாலிகிட்டே போங்களேன். நல்ல ஸ்பெஷலிஸ்ட்” என்று யாரும் கூற நேரவில்லை. “எங்க ஹவுஸ் ஓனர் கபாலி ரொம்ப நல்ல மனுஷன்” என்று சிலாகித்ததில்லை.

”இது என் மூத்த மாப்பிள்ளை கபாலி… டி.சி.எஸ்.லே வேலை பண்றாரு” என்ற வகையில் ஒரு ஐ.டி. ஆசாமியாக எந்த கபாலியும் அமைந்ததாக தெரியவில்லை.

இப்படி ஆண்டாண்டு காலமாக ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருந்த ‘கபாலி’க்கும் இப்போது ஒரு நல்ல காலம் பிறந்துள்ளதில் நமக்கெல்லாம் சந்தோஷமே.

இதிலிருந்து கபாலிக்கு காலம் வரும் என்பது புரிகிறதல்லவா!

இனிமேல் அந்த பெயருக்கு எப்படியெல்லாம் அதிருஷ்டம் அடிக்கப் போகிறதோ தெரியவில்லை! “எப்படி டீ இந்த ஆளை பிரபோஸ் பண்ணினே?"

"எது எப்படியோ! அந்த ஆளு பேரைக் கேட்டேன். கபாலின்னு சொன்னதும் கபால்ணு ‘ஐ லவ் யூ’ சொல்லணும்போல இருந்தது.” இந்த வகையில் ‘கபாலி’ பக்கம் காற்று வீசலாம்!

”கொழந்தை லக்ஷணமா பொறந்திருக்கான்! கபாலின்னு பேர் வைங்கோ க்ஷேமமா இருப்பான்” என்று பிற்கால ரஜினி ரசிக கிழங்கள் தன் பேரன்களுக்கு பிரபோஸ் செய்யும் பேராக ‘கபாலி’ என்ற பெயருக்கு அந்தஸ்து உயரத்தான் போகிறது.

கூடை

மொத்தம்

₹0