மாவடு மாகாத்மியம்
என் சம்மர் சமய பயணங்களில், என் மனைவியின் சார்பில் நான் மேற்கொள்ளும் அதிமுக்கியமான கோடை வாஸஸ்தலமாக மேற்கு மாம்பலமும், மைலாப்பூரும் முதலிடம் பெறுகின்றன.
”சித்திரை பொறந்தாச்சு இன்னும் வெயிலை சாக்கு சொல்லிண்டு வீட்டிலேயே உட்கார்ந்தீங்கன்னா எல்லாரும் அள்ளிண்டு போயிடுவா! அப்புறம் மாம்பழமாகத்தான் வாங்கவேண்டியிருக்கும்” என்று மனைவி விரட்டியதும் நான் மடமடவென்று புறப்பட்டு கோடை அனலில் வடுமாங்காய் வாங்க ஓடவேண்டியதாயிருக்கும்! அந்த வடமலையானை வேண்டிக்கொண்டு நல்ல வடுமாங்காய் கிடைக்கவேண்டுமே என்று முடி இறக்க பிரார்த்தனை செய்துகொள்ளாததுதான் குறை! “பாத்து வாங்கக் கூடாதா? அத்தனையும் வெம்பிபோன வடு! உங்க தலையிலே கட்டியிருக்கான்… எத்தனை கொட்டி வாங்கினீங்க” என்று முக்காலே மூணு வருஷங்களில் என் மனைவி வடுமாங்காய் பர்சேஸில் தன் வாதத்தை எழுப்பி சதாய்ப்பதுண்டு.
‘கிலோ இருநூத்து ஐம்பது’ என்று அசால்டாக சொன்ன மைலாப்பூர் மாவடுகாரனிடம ஒரே ஒரு வடுவைக்கூட கொசுறாக வாங்கும் பேரம் படியாத நிலையில் நான் அத்தனை பணத்தைக் கொட்டி வாங்கி வந்ததை உரைத்தால் அவள் இன்னும் கொஞ்சம் திட்டுக்களைக் கொட்டித்தீர்ப்பாளென்ற பயத்தில், “கிலோ ஐம்பது ரூபாதான்” என்று ஐந்தில் ஒரு பங்கு உண்மை விலையை சொல்வேன்.
”அத்தனை கொடுத்து இத்தனை மோசமாவா வாங்குவா” என்று அந்த விலைக்கே என்னை வாங்குவாங்கென்று வாங்கி ஓய்வாள்.
”வர செப்டம்பர்லே ராதிகா வந்தா கொடுத்தணுப்பணும்… பிரீது மாப்பிள்ளைக்கு ரொம்ப பிடிக்கும்” என்ற பிரகடனத்துடன் கோடை தொடங்கியதும் என் மனைவி மாவடு சாம்ராஜ்யத்தை பிடிக்க போராட ஆரம்பித்துவிடுவாள்.
தன் ரத்தக் கொதிப்பு உடம்பிற்கு சற்றும் ஒத்துக் கொள்ளாதென நான் எச்சரித்து தடுத்துவிடுவேன் என்பதால் தன் மாட்டுப் பெண், மாப்பிள்ளைகளை காரணம் காட்டி ஐந்தாறு கிலோ மாவடுகளை காரசாரமாக ஊறவைப்பாள்.
ஊற ஊற மாவடுக்கள் சுருங்குவது ஒருபக்கமிருக்க “ஒரே ஒரு வடு போட்டுக்கறேன்.. எப்படி ஊறியிருக்குன்னு பாக்கணும்” என்று இவள் ஆசைக்காக ஒவ்வொரு வடுவாக குறைய ஆரம்பிக்கும்.
”இன்னிக்கு சாம்பார் சாதத்துக்கு தொட்டுக்க ஒண்ணும் பண்ணலே.. உங்களுக்கு ஒரு வடுவா… ரெண்டு வடுவா” என்று கேட்டுவிட்டு தன் தட்டில் மூன்று நான்கு வடுக்களை போட்டு பந்தி வஞ்சனை செய்வாள். “வெயிலுக்கு தயிர் சாதமும் வடுவும் எத்தனை ஜோரான காம்பினேஷன்” என்று வடுவிற்கு மகுடம் சூட்டி தன் காரியத்தை சாதித்துக் கொள்வாள்.
ஆக, யூ.எஸ். மாட்டுப் பெண்ணும், கோயமுத்தூர் மாப்பிள்ளையும் வருவதற்குள் வடுமாங்காய் ஜாடி படுவேகமாய் காலியாகிவிடும். வடுக்கள் குறைய குறைய அவளது பி.பியும், இப்படி அநியாயத்துக்கு அபத்தியம் செய்து சாப்பிடுகிறாளே என்ற பீதியடைவதில் என் மற்றும் எங்கள் குடும்ப மருத்துவரின் பி.பியும் கொஞ்சம் கூட குறையாமல் ஏறுமுகமாகவே கிராஃப் போடும்.
நடுவே வீட்டுக்கு வரும் எந்தப் பக்க விருந்தாளிகளுமானாலும் என் மனைவி பாரபட்சம் பார்க்காமல் தான் வடுமாங்காய் போட்டுள்ள ரகசியத்தை வெளிப்படுத்தாமல் காப்பாற்ற கடுமையாக போராடுவாள். “இதோ பாருங்க உங்க தங்கை வந்தா எல்லாத்தையும் சொல்லி வைக்காதீங்க” என்று எச்சரிப்பாள். “ஓகோ! நாம ரெண்டு பேரும் யூ.எஸ். போகப்போறமே அதை சொல்றயா… சூப்பர் சமையல் கிங்கிலே உனக்கு ஓரகடம் ஃபிளாட் பரிசா கிடைத்ததை சொல்றயா?” என்றேன் அப்பாவியாக.
”உங்க மரமண்டைக்கு எதுவும் ஏறாதா? அதையெல்லாம் பெருசா சொல்றீங்களே… அதை எதை வேணும்னாலும் சொல்லிட்டு போங்க. ஆனா ‘மன்னி வடுமாங்கா போட்டிருக்கா’ன்னு அருமை தங்கைக்கிட்டே சொல்லி தொலைக்காதீங்க… ‘ஒரு பாட்டில் கொடுங்க மன்னி’ன்னு கேட்டுத் தொலைப்பா” என்று தன் எச்சரிப்புக்கான காரணமாக மாவடு மறைப்பை முதன்மைப் படுத்துவாள்.
அதற்காகவே எங்கள் சொந்த பந்தங்கள் கோடை விடுமுறையில் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து போனால் தேவலாம் என்று நினைப்பேன். அப்படி விருந்தாளி உலாவரும் நாட்களிளாவது என் மனைவியின் நாக்கில் வடுமாங்காய் ஊறுவது தடைப்பட வாய்ப்பு உண்டே என்ற நப்பாசைதான்! இந்த தேர்தலில் எந்த லெட்டர் பேட் கட்சிக்காவது தேர்தல் கமிஷன் ‘வடுமாங்காய்’ சின்னத்தை ஒதுக்க அந்த கட்சி வேட்பாளருக்கு எங்கள் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்குமேயானால் அந்த வேட்பாளரை டெபாஸிட் பெறும் வகையில் என் மனைவியின் வோட்டு நிச்சயம் கைக்கொடுக்குமென்பது உறுதி!