பட்டி

உஞ்சவிர்த்தி எனும் உன்னதம்!

உஞ்சவிர்த்தி எனும் உன்னதம்!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 6 நிமிடம் வாசிப்பு ஆன்மீகம்

கதையை கேளுங்கள்

அடுத்த நாள் நடக்க இருக்கும், திருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆராதனைக்கு, அதிகாலையில் எழுந்து செல்ல வேண்டும். இந்த கவலையில், அதற்கான ஆயத்தங்களை செய்த பின்தான் படுக்க வேண்டுமென்று தீர்மானமாய் இருந்தாள், உமா மகேஸ்வரி.

“ரிசப்ஷனுக்கு போன் பண்ணி, கார்த்தாலே காபி எப்போ கிடைக்கும்ன்னு கேட்டு வைங்க. டிரைவர் தூங்கிட போறார். மொபைல்ல அலாரம் வைச்சுட்டு தூங்கச் சொல்லுங்கோ ‘அயர்ன் பாக்ஸ்’ எடுத்து வந்திருக்கேன். அந்த ‘பிக் ஷாப்பர்லே இருக்கு.

“கொஞ்சம் சிரமம் பார்க்காம, என் புடவையை எடுத்து, ‘அயர்ன்’ பண்ணிட்டு தூங்க போங்கோ… நீங்க முன்னாடி எழுந்தா, குளிச்சுட்டு, என்னை எழுப்புங்க.…‘டான்’னு கிளம்பியாகணும்” என கணவர் சிவசங்கரனையும் இயக்கிக் கொண்டிருந்தாள்.

ஆராதனைக்காகவே பிரத்யேகமாக இந்த ஆண்டு வாங்கிய செயின், நெக்லஸ்களை, சூட்கேஸ் அடியிலிருந்து மேலாக எடுத்து வைத்துக் கொண்டாள். மற்ற அலங்கார பொருட்கள் அடங்கிய பெட்டியை திறந்து, ‘யாட்லி லிப்ஸ்டிக், சென்ட்’ இத்யாதிகள் இருக்கிறதா என, பார்த்துக் கொண்டாள்.

ஒருவாறு திருப்தியடைந்தவளாய் ‘நைட்டி’க்குள் புகுந்து, முகநூலை நோண்டியபடியே கணவனுக்கு, ‘குட்பை’ சொன்னாள்.

சென்னையிலிருந்து வந்த களைப்பில் தஞ்சாவூர் ஸ்டார் ஓட்டலின் சொகுசு படுக்கை தாலாட்ட, சுகமாக உறங்கினாள். இப்படி ஒரு சொகுசான வாழ்க்கை தனக்கு அமைந்ததற்கான காரணம், தன் அபாரமான சங்கீத ஞானமும், நல்ல குரல் வளமுமே என்று, உமா மகேஸ்வரிக்கு ஒரு பக்கம் கர்வம் இருந்தது.

இருப்பினும், தன்னைப் போன்ற சங்கீதக்காரர்களின் வளமைக்கெல்லாம், அந்த மகான் தியாகராஜர் விட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கான சாகித்யங்களே என்று, மனதோரத்தில் லேசான நன்றி கசிவு இல்லாமலில்லை.

அப்படி ஒரு நன்றி கடனை காட்ட வேண்டுமென்ற ஆவலோடு, மகானின் சன்னிதியில், பஞ்சரத்ன கீர்த்தனையை, பிரதான வரிசையில், சர்வ அலங்காரத்துடன் பகட்டாக சிலர் உட்கார்ந்து பாடுவர். இவர்களின் தோற்றம், ‘டிவி’யில் பார்க்கும் தியாகராஜரின் பக்தர்களுக்கு, அதில் ஆத்மார்த்த பக்தி இருப்பதாக தோன்றுவதில்லை.

ஆனாலும், ஆண்டுக்கு ஆண்டு ஒரு சம்பிரதாயமாகவும், திருவிழாவில் கலந்து கொள்ளும் பரவசத்துடனும் அன்றொரு நாள் மட்டும் ஸ்ரீதியாகராஜ மகானை நினைத்துக் கொள்ளும் வாய்ப்பை, இந்த திருவையாறு ஆராதனை அளித்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மை.

இந்த ஆவல், திடீரென்று அதிகாலை வந்த தகவலால் தடைபடுமென்று, அவள் சிறிதும் நினைக்கவில்லை. சென்ற ஜுன் - ஜுலை மாதங்களிலேயே, கொடிய ‘கொரோனா’ நோயின் ஆதிக்கம் குறைந்து, படிப்படியாக சகஜ நிலை வந்துவிட்டது. இந்நிலையில், திடீரென்று இப்படி ஒரு ‘வாட்ஸ் அப்’ குறுஞ்செய்தி வந்திருப்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது, உமா மகேஸ்வரிக்கு.

திருவையாறு பகுதியில், சிலருக்கு ‘கொரோனா’ பாதிப்பு திடீரென்று ஏற்பட்டுள்ளதால், ஆராதனை விழாவிற்கு வருவதை தவிர்க்குமாறு, அதிகாலையில், ‘வாட்ஸ் அப்’ குழுவில் தகவல் தரப்பட்டிருந்தது. உடனே, இந்த குழுவின் சக சங்கீதக்காரர்களும், பரஸ்பரம் இந்த தகவல் மற்றும் தங்களின் ஏமாற்றம், வருத்தம் இத்யாதிகளை பரிமாறிக் கொண்டும் இருந்தனர்.

“உமா, என்னடி இப்படி ஆயிடுத்து… இந்த பாழாப் போற, ‘கொரோனா’ இன்னிக்குன்னு பார்த்தா திருவையாறுக்கு வரணும்…

“மெனக்கெட்டு, பெங்களூரு, மெட்ராஸ்ன்னு எங்கெங்கிருந்தோ வந்து ஆராதனைல பாடலாம்ன்னு, ஆசையோட வந்ததெல்லாம் வீணாப் போச்சே…சரி, நீ என்ன பண்ணப் போறே… நான், இங்கேயே டிபன் சாப்பிட்டுட்டு கிளம்பிடப் போறேன்,” என்று, உமா மகேஸ்வரியிடம், தன் ஆதங்கத்தை மொபைல் போனில் கொட்டினாள், பெங்களூரு, சங்கீதா சம்பத்.

“அதையேன் கேட்கறே.…ராமர் கலர்ல பட்டு புடவையை, நல்லி கடையில இதுக்குன்னு, பார்த்து பார்த்து வாங்கினேன். உம் என்ன பண்றது… இந்து ஆண்டு நாம கொடுத்து வெச்சது அவ்வளவு தான்,” என்று தன் அலுப்பை வெளிப்படுத்தினாள், உமா.

‘விட்டா, ஒவ்வொருத்தியா பேசிண்டே இருப்பா’ என்று மொபைல் போனை, ஸ்விட்ச் ஆப் செய்தாள்.

“சரி, கிளம்புங்கோ. ஆளுக்கு ரெண்டு இட்லி, வடை மட்டும் அறைக்கு எடுத்து வந்து கொடுக்க சொல்லுங்கோ. வழியில கண்ட இடத்திலே சாப்பிட முடியாது. திரும்பவும், கொரோனாவாம். பயமா இருக்கு என்று தற்சமயம் தியாகராஜரை மறந்தவளாய், அங்கிருந்து கிளம்பும் பரபரப்பில் இயங்கினாள்.

டிபன், ‘ஆர்டர்’ செய்து காத்திருந்தனர்.

“செய்தியில் என்ன சொல்றான் பார்ப்போம்,” என ‘டிவி’யை ஆன் செய்தார், சிவசங்கரன். செய்தி சேனலை தேடிக்கொண்டிருக்க, ஒரு சேனலில் ஒளிபரப்பப்பட்ட காட்சி, பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் திடுக்கிட வைத்தது.

“சரியா பாருங்க…இது ‘லைவ்’ தானே? என்று, தன் சந்தேகத்தை கணவனிடம் கேட்டாள், உமா.

“அசல், ‘லைவ்’ தான். தியாகராஜ சன்னிதியிலே அபிஷேகம் ஆரம்பிச்சிருக்கு. அழுக்கு வேஷ்டியும், அங்கவஸ்திரமுமா வரிசையா பாகவதர் மாதிரி இருக்கிறவா பாடறா… எப்பவும் போலவே கூட்டமாவும் இருக்கு.

‘டிவி’யிலே ஒளிபரப்பு பண்றான்.

“என்ன இது, அக்கிரமமா இருக்கு. யாரோ தவறான குறுஞ்செய்தி அனுப்பி, ஏமாத்தியிருக்காங்க. இப்படி எல்லாரையும் முட்டாளாக்கி இருக்காங்களே.…ஏதோ சதி திட்டம் மாதிரின்னா தெரியறது. இப்படியா அநியாயம் பண்ணுவா,” என்று படபடப்போடு, ‘டிவி’ காட்சிகளை பார்த்து, கோபத்தால் கொதித்து அலறினார், சிவசங்கரன்.

உமா மகேஸ்வரிக்கு அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்திலிருந்து விடுபட, சில நொடிகளாயின. தனக்கு மட்டுமே இப்படி ஒரு சதியை செய்திருப்பாரோ என்று நினைத்தவளாய், ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்த மொபைல் போனை செயலாக்க, பட்டனை தட்டினாள்.

சக தோழியிடமிருந்து, ‘மிஸ்டு கால்’களாக நிறைந்திருந்தன. அதில், தன் நம்பிக்கைக்குரிய ரஞ்சனி ராமநாதனுக்கு போன் செய்தாள்.

“ஹலோ உமா… போனை, ‘ஸ்விட்ச் ஆப்’ பண்ணி வெச்சிருந்தியா.… யாரோ விஷமத்தனமா காரியம் செஞ்சு, நம்பளையெல்லாம் ஏமாத்தி இருக்கான். எல்லாருமே, இதுக்கு ஒரு வழி செய்யணும். நீ எங்கே இருக்கே… உடனே கிளம்பி திருவையாறு வா.

“நான் அங்கே தான் போயிண்டிருக்கேன். எல்லாரும் கூடி, இப்படி அக்கிரமம் செஞ்சவாளை கண்டுபிடிச்சு உண்டு, இல்லைன்னு செய்யணும்,” என்று படபடத்தாள் ரஞ்சனி ராமநாதன்.

சினம் கொண்ட பாடகியரின் படை, திருவையாறை நோக்கி பறந்தன. இதில் ஆண் சங்கீத வித்வான்களும் அடக்கம். மகான் தியாகராஜரின் சன்னிதியில் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. விசாலமான பந்தலில் பக்தர்கள் கூட்டம் பரவலாக உட்கார்ந்திருக்க, முன் வரிசையில் மிக எளிமையான பாகவதர்கள், “எந்தரோ மகானுபாவ…’ பாடிக் கொண்டிருந்தனர்.

பந்தலுக்கு வெளியே படையெடுத்து வந்த பகட்டான பாடகியர், உள்ளே நெருங்க வழியில்லாமலும், ஆராதனை நடக்கும்போது குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்ய இயலாமலும், நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவர்கள் பக்கம், கேமராக்கள் திரும்பும்போதெல்லாம், இரு கைகளை இப்படியும் அப்படியும் ஆட்டி, தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிவிக்க, பாடகியர் முயன்று கொண்டிருப்பது, ‘டிவி’ பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்தது.

உள்ளே ஆரவாரமில்லாமல், ஸ்ரீதியாகராஜ ஆராதனை, ஆரத்தியாவும் பாகவதர்களின் பக்தி சங்கீதத்தோடு நிறைவுற்றது. ஆனால், ‘டிவி’காரர்களுக்கு நிகழ்ச்சி இன்னும் நிறைவடையாமல், மேலும் பரபரப்பான தீனி போடுவதாய் தொடர்ந்தது. அனைத்து, ‘டிவி’ சேனல்காரர்களும் தங்கள் பக்கம் திரும்பி நிற்க, கோபமும், வருத்தமுமாக கூடியிருந்த பாடகியர், ஆளாளுக்கு, ‘மைக்’கை பிடுங்கி, தங்கள் ஆதங்கத்தை கொட்டத் துடித்தனர்.

கூச்சல், குழப்பம் கொஞ்சம் அடங்கியது.

“எல்லாரும் என்னை மன்னிக்கணும். இப்படி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி, உங்களையெல்லாம் கலவரப்படுத்தியது நான் தான்…” என்று ‘மைக்’கை, தன் பக்கம் திருப்பி, பேச ஆரம்பித்தார், விழாவின் அமைப்பாளரும், செகரட்டரியுமான, பத்ரி நாராயணன்.

“பிரபல பாடகியர்களும், சங்கீத வித்வான்களும், ஆண்டுதோறும் இந்த ஆராதனையில் கலந்துண்டு, தியாகராஜருக்கு தங்களோட நன்றியை தெரிவிச்சுட்டு இருக்கீங்க.…அத்தனை கீர்த்தனைகளை நமக்கெல்லாம் விட்டுட்டு போன மகான், நம்மையெல்லாம் ரொம்ப வசதியா வாழ வெச்சுண்டு தான் இருக்கார்.

“ஆனா, அவரோட உன்னதம் அது மட்டுமில்லே. எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காம, பூர்ண பக்தியை மட்டுமே ஆதாரமா வெச்சு, அத்தனை சாகித்யத்தையும் இறை அருளாய் அருவியாக பொழிஞ்சவருக்கு, ஸ்ரீராம நாமம் மட்டும் தான் உயிராய் இருந்திருக்கு.

“சங்கீதத்தை வியாபாரம் செய்ய நினைச்சிருந்தா, அப்போதைய ராஜாங்கத்திலே அவர் சவுக்கியமா, பெரிய பதவியோட வாழ்ந்திருக்கலாம். அப்படியெல்லாம் அந்த மகான் மனசிலே, எண்ணமே இல்லை. தான் அனுபவிக்கிற ஸ்ரீராம ஜபத்தோட மகிமையை பரப்பிண்டே, தெருவிலே அவர் பாட்டுக்கு ஒரு செம்போட போவார்.

“அந்த திவ்ய நாமங்களை பக்தியோடு கேட்டு அனுபவிச்சவா, ஓடோடி வந்து, பிடி அரிசியை ஈஸ்வர அர்ப்பணமாக சொம்பிலே போட்டு நமஸ்கரித்து போவாளாம்.

“இப்படி எளிமையாகவும், தன்னை மிக மிக தாழ்மையாகவும் பாவித்த மனநிலையோடு, அந்த சொம்பில் அன்றைய தினத்துக்கும், தன் ஒரு வேளைக்கான அல்ப உணவிற்கும் போதுமான அரிசி கிடைத்ததும், உஞ்சவிர்த்தி எனும் அந்த உன்னதத்தை அத்தோடு முடிச்சுண்டு, வீடு திரும்புவாராம்.

“தான் நினைச்சு பாடின உடனேயே தங்க மழையா பொழிய வெச்ச ஆதிசங்கரர் காலத்திலிருந்தே, இந்த உஞ்சவிர்த்தி என்ற உயர்வான சம்பிரதாயம் இருந்திருக்கு.

“ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்ன்னு, இன்னும் பல உத்தமர்கள் இப்படித்தான், தன் ஜீவனுக்கு உண்டான எளிய உணவை, ‘பிட்ஷை’ன்னு சொல்ற தாழ்மையோடு உஞ்சவிர்த்தி செஞ்சுதான் ஏற்றியிருக்கின்றனர்.

“நடமாடும் தெய்வமா நம்மோட இருந்த ஸ்ரீமஹா பெரியவாளும், இந்த உஞ்சவிர்த்தி மேன்மையை அருள்வாக்காய் சொல்லிட்டு போயிருக்கார்.

“இப்படிப்பட்ட மகிமையோடு கூடிய உன்னதத்தை பற்றி அறியாம யாரோ பேசினதாலே, என் மனம் வேதனைப்பட்டது. பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, அறிக்கை விட்டாங்க.

“அப்போ, என் மனசுல ஒரு யோசனை எழுந்தது. இந்த ஆண்டு தியாகராஜ ஆராதனையில, இந்த உஞ்சவிர்த்திக்கு ஏற்றம் தர மாதிரி, எதையாவது ஏன் நாம் பண்ணக் கூடாதுன்னு நினைச்சேன்.

“இப்பவும் இங்கே பல பாகவத சிரோன்மணிகள், பக்திப்பூர்வமா நாம சங்கீர்த்தனம் பண்ணி, உஞ்சவிர்த்தி செஞ்சு, ஸ்ரீசங்கர ஜெயந்தி, ஸ்ரீராம நவமி, போதேந்திராள் ஆராதனை, ராதா கல்யாணம்ன்னு, இன்னும் சில வைபவங்களுக்கு திரவியம் சேர்க்கிறதை பார்த்திருக்கிறேன்.

“அப்படிப்பட்ட உலகோரின் வெளிச்சத்துக்கு வராத ஏழ்மையான, எளிமையான பாகவதர்களை தேடி கண்டுபிடிச்சேன்.

“இந்த ஆண்டு தியாகராஜ ஆராதனையின் போது, இப்படிப்பட்ட உஞ்சவிர்த்தி உத்தமர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முன் வரிசையில் உட்கார வைத்து பாடச்சொல்வது தான் அந்த மகானுக்கும், உஞ்சவிர்த்தி எனும் தெய்வீகத்துக்கும், நாம் செய்யிற உண்மையான அஞ்சலியாக இருக்கும்ன்னு, மனதிலே தீர்மானம் செஞ்சேன்.

“இதை முன்கூட்டியே சொல்லியிருந்தா, உங்களில் பல பேர் ஒப்புக் கொண்டிருந்தாலும், சில ஆட்சேபனையும் எழுந்திருக்கலாம். அதனால, இந்த திட்டம் செயல்படாம போயிடுமோன்னு பயந்தேன்.

“உங்களை போன்ற பிரபலங்கள் முன்கூட்டியே வந்து விடாமல் தவிர்க்கவே, இப்படி ஒரு குறுஞ்செய்தியை நள்ளிரவில், ‘வாட்ஸ் ஆப்’ குழுவில் பதிவு செஞ்சேன். நான் செஞ்சது தப்புன்னு நினைச்சா, எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.

“இப்பவும் குறைஞ்சு போயிடலே, நீங்க எல்லாரும் சந்தடியே இல்லாம, அமைதியா, சுவாமிகள் சன்னிதியிலே பாடிட்டு போகலாம்,” என்று பேசி முடித்தார். பத்ரி நாராயணனின் நீண்ட விளக்கம், அங்கு கூடியிருந்த சங்கீத பிரபலங்களுக்கும், உலகெங்கும் இந்த ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும், உஞ்சவிர்த்தி எனும் உன்னதத்தை உணர்த்தி, தியாகராஜ சுவாமிகளுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலி செலுத்திய திருப்தியை அளித்தது.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0