இம்சை வருங்கால் நகுக!
இது அக்மார்க் பக்திக் கட்டுரை! இதை உள்ளர்த்தம் வைத்து எழுதப்பட்ட நாத்திகக் கட்டுரை என்று யாரும் கணிப்பீடு செய்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எல்லாம் ஆண்டவன் செயல். இம்சை வருங்கால் நகுக!
---அகிலா காத்திகேயன்
’எத்தனை கோடி இம்சைகள் வைத்தாய் எங்கள் இறைவா’ என்று நமக்கெல்லாம் ஏற்படக்கூடிய வாய்ப்புடைய இம்சைகளைப் பட்டியலிட்டுப் பார்ப்போமேயானால், அப்படிப்பட்ட ஆயிரத்தெட்டு இம்சைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நாம் நன்றி தெரிவித்தே ஆக வேண்டும் என்று தோன்றும்.
அந்த வரிசையில் இம்சை நிவர்த்திக்காக ஒரு ஹலோ சொல்லிவிட்டு, வேண்டிக்கொண்டு வரலாம் என்று நாம் போகும் ஆலயங்களில் நமக்குமுன் காத்திருக்கும் சில இம்சைகளைப் பார்க்கலாம்.
ஆண்டவனைத் தரிசிக்க ‘அப்பாய்ன்ட்மென்ட்’ வாங்க வேண்டுமென்ற இம்சை இல்லாததை கோயில் உள்ளே நுழையும் பாதை நெடுக இருக்கும் அர்ச்சனைத் தட்டுக் கடை, பூமாலைக் கடை, அகல் விளக்குக் கடை என பல தடைகளைக் கடந்தாக வேண்டுமென்ற இம்சை ஈடு செய்துவிடும்.
‘இந்தக் கோயில்லே நாலு அர்ச்சனை பண்ணறதுதான் வழக்கம். பன்னிரெண்டு தீபம் ஏத்தணும். இல்லேன்னா புண்ணியமில்லே’, என்று நம் கையில் அர்ச்சனை, தீப தட்டுகளைக் கடைக்காரர்கள் அடுக்கி விடுவார்கள். போதாக்குறைக்கு ‘மாலை வாங்கினு போ’, ‘உப்பு, மிளகு வாங்கிப்போடு’, ‘கண், கை, காது வாங்கிட்டு போ’ என்று துரத்துபவர்களின் கண்ணில்படாமல், காதும், காதும் வைத்தாற்போல் கோவிலுக்குள் ஓடவேண்டிய நிர்ப்பந்தம் ஒரு இம்சை.
இதை எல்லாம் கடந்து நாம் நுழையும் நேரம் பார்த்துத்தான் கருவறையை மூடித் திரை போடுவார்கள். கொஞ்ச நஞ்சமுள்ள நம் பக்தி ‘மூடு’ பறந்துவிடும்.
சுவாமி சாவகாசமாக அபிஷேகக் குளியல் போடவோ அல்லது குளியலுக்குப்பின் மேக்கப் அலங்காரங்கள் செய்து கொள்ளவோதான் அந்தத் திரை போடப்பட்டிருக்கும். வழக்கமாக தினமும் நடக்கும் விவகாரமாகத்தான் அது இருக்கும்.
‘கோயிலுக்கு வாங்கன்னா முணகிக்கிட்டே வர்றீங்க. இப்பப் பாருங்க நாம வந்ததும் திரையைப் போட்டுட்டாங்க’ என்று அதையே நம் மீதான குற்றமாகச் சொல்லி கூடவரும் குடும்ப நபர் நம்மை சதாய்ப்பதும் இம்சை.
இந்தத் தவிப்பின் நடுவே அடிக்கடி திரையை விலக்கிவிட்டு, உள்ளேயும், வெளியேயுமாக அந்தக் கால சினிமாவின் பிரசவ காட்சி நர்ஸுகள் போல வந்துபோகும் குருக்கள்களின் முகபாவத்தை வைத்தோ, பாடி லேங்வேஜைப் படித்தோ திரை விலக தோராயமாக எத்தனை அவகாசம் என கணிக்க முடியாமல் தவிப்பதும் இம்சைதான்.
அப்பாடா! திரை விலகியதே என்று நம் கண்ணுக்குப் பட்டவரை சாமியை லேசாகப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு கழன்றுவிடலாமென்றால் ஆண்டவன் நம்மை சிக்கென பிடித்துக்கொண்டு அப்போதுதான் அடம்பிடித்து ஆட்டம் காட்டுவார்.
அந்தத் தம்மாத்தூண்டு கருவறையில், நைவேத்தியத்தை மூடிக்கொண்டுவரும் குருக்கள்கள் நாலா பக்கமும் நந்தியாக சூழ்ந்து சுவாமியை நம் கண்ணில் காட்டாமல் நம்மை நந்தனாராக நொந்துபோக வைப்பதும் இம்சையே. அர்ச்சனைத் தட்டு வாங்க, கொடுக்க என்று குறுக்கும் நெடுக்குமாக அவர்கள் நடந்து ஒரு துளி தீபாராதனையையும் நம் கண்ணில் படாமல் செய்துவிடுவதை ரோதனை என்று நான் சொன்னால் தவறென்பீர்கள். இது போதாதென்று ஸ்பெஷல் தரிசனத்திற்காக வரும் பந்தா பக்தர்கள் தாங்கள் டிக்கெட்டுக்காக அல்பம் இருபது ரூபாய் கொடுத்த தெனாவட்டில் மூலவரை கட்டம் கட்டி குத்தகை எடுத்து நகராமல் இம்சிப்பார்கள். அவர்களையெல்லாம் ராஜ உபசாரம் செய்து அங்கிருந்து, நகரவிடாமல் ரட்சிக்கும் அர்ச்சகர் நம் முறை வரும்போது மட்டும் ‘சாமியப் பாத்தாச்சில்லே, நகருங்க. பின்னால எத்தனை பேர் பாருங்க’ என்று முறையில்லாமல் விரட்டுவதும் இம்சை.
சில நேரங்களில் அர்ச்சனைக்கான நட்சத்திரம், கோத்ரம் இத்யாதிகளை குருக்கள் கேட்கும்போது நம் நட்சத்திரத்தை ஞாபகமாக சொல்லிவிட்டு, பக்கத்திலேயே நிற்கும் மனைவியின் நட்சத்திரத்தை மறந்து தடுமாறித் தொலைப்பது (அவளுக்கும் ஞாபகம் இருக்காது) எதிர்பாராத இம்சை. அங்கேயே அவள் முகத்தில் அக்னி நட்சத்திரம் கொதிக்க, வீட்டில் நமக்கு நல்ல அர்ச்சனையை எதிர்பார்க்கலாம்.
ஆண்டவன் சன்னதியிலேயே இத்தனை இம்சைகள் நம்மை பயப் படுத்தும்போது கோயிலுக்கு வெளியே இசகுபிசகாக இம்சிப்பவை ஏராளம்.
தோஷ நிவர்த்தி, நேர்த்திக்கடன் என்று எதையாவது வீட்டுப் பெரியவர்கள் சொல்லித் தொலைத்து, அந்தக் கடனை ‘கடனே’ என்று முடிக்க நாம் முயற்சிப்பதும் இம்சையே!
மற்றபடி பொங்கல் வைத்தல், முடி இறக்குதல், காது குத்தல் போன்ற சாதா வகை நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதும் அத்தனை சுலபமல்ல.
வேண்டுதல்களை நிறைவேற்ற ஆபீஸில் லீவ் கிடைக்க வேண்டுமே என்று லீவ் கிடைத்தால் இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று எக்ஸ்ட்ராவாக ஆண்டவனுக்கு ஒரு ஆஃபர் கொடுக்க வேண்டிவரும்.
இந்த இம்சைகளெல்லாம் ஒருபுறம் இருக்க ‘சாமியை பார்க்கிறவரைக்கும் பச்சைத் தண்ணி பல்லுலே படக்கூடாது’ என்று கணவனோ மனைவியோ விரதம் எடுத்துக்கொண்டு தான் படும் பட்டினி தன் பார்ட்னரும் படட்டும் என்று படுத்துவதும் படா இம்சை!
சில கோயில்களில் ஆடி மாதப் பொங்கல் வைக்கப்போகும் நங்கையர்களுக்கு அங்கு பொங்கல் வைக்க பொங்கி வழியும் பக்தைகளின் கூட்டத்தால், தை பொங்கல்வரை காத்திருக்க நேருவதும் இம்சையே. முடி இறக்க வலுக்கட்டாயமாக தூக்கி வரப்படும் பேரனோ, பேத்தியோ கத்தியைக் கண்டதும் தன் கதறலை ஆரம்பிக்க, கையில் செல்போனை கொடுத்தும் மசியாமல் மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என நாலைந்து பேர் அமுக்கிப் பிடித்து முடி இறக்கலை முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சி ஒருவகை இம்சைதான். குரூப் அர்ச்சனையின்போது குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு நாம் சென்றுவிடவேண்டும். இதில் நாம் போகும் நேரம் தாமதமாகிவிட்டால் நம்மைப் போன்ற ‘லேட் கம்மர்’களையும் விட்டுவிட மனமில்லாமல் பாதியில் சேர்த்துவிட்டு கால் பரிகாரமாகவோ, அரை பரிகாரமாகவோ நிவர்த்தி செய்து மீதி கொஞ்ச தோஷத்தை நம்முடனேயே அனுப்பிவிடுவது நிச்சயமாக இம்சையே.
இப்போதெல்லாம் வீட்டில் அடுப்பை ஏற்றுகிறார்களோ இல்லையோ, கோயிலில் நுழையும் அத்தனை பெண்மணிகளும் ஆறு, பதினெட்டு என அகல் விளக்கை ஏற்ற ஆரம்பித்துவிட்டார்கள். ‘சாமிக்குப் பக்கத்தில் விளக்கை ஏற்ற வேண்டாம்’ என்று எழுதி வைத்திருப்பதையும் பொருட்படுத்துவதில்லை.
அதற்காக தனியாக வைக்கப்பட்ட அகல, நீள அலுமினிய ட்ரேக்கள் வைக்கப்பட்டிருந்தாலும், அவைகள் ஏற்கனவே ஆக்குபை ஆகியிருக்கும் நிலையில், ‘இந்தாங்க கையிலே வைச்சுட்டு இங்கேயே அணையற மட்டும் நில்லுங்க. நான் மூணு சுத்து சுத்திட்டு வந்துடறேன்’ என்று பத்தினிகள் தமது கணவன்மார்களை பாவை விளக்காக நிற்கவைத்துப் போவதும் இம்சையே.
கொண்டு செல்லும் தீபங்களை அந்தந்த கடவுளிடம் வைக்கும்வரை காற்று வந்து அணைத்துவிடாமல் காபந்து பண்ணுவதும் கணவனுக்கு இம்சைதான்.
க்யூவில் உட்கார்ந்திருக்கும் இருபது, முப்பது பிச்சைக்காரர்களுக்கும் தனித்தனியாகப் போடச் சில்லறை இல்லாமல் ஒரு பத்து ரூபாய் நோட்டைத் தந்துவிட்டு, ‘எல்லோரும் எடுத்துக்கங்க’ என்று தப்பிக்க நினைப்போம்.
ஆனால் நம் பின்னாலேயே அந்த குரூப்பில் சேர்த்துக் கொள்ளப்படாத நாலைந்து கிழப் பிச்சைக்காரர்கள் ஓடிவருவார்கள்.
உரிமையோடு நம்மைத் தட்டி, உரசி விடாமல் துரத்துவார்கள். அந்தச் சமயம் பார்த்து சில்லறையாக ஒரு ரூபாய்கூட நம்மிடம் இருக்காது. பையையும், பர்ஸையும் தடவிப் பார்த்து, தர்மசங்கடமாகி, அந்த முதிய பிச்சைக்காரரிடம் சாபம் வாங்காமல் காப்பாற்றுவாயாக என்று அந்தக் கோயில் கடவுளிடம் மறுபடியும் வரம் கேட்கும் நிலையும் இம்சைதான்.
இறைவழிபாட்டிலேயே இத்தனை இம்சைகளா என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை. இறைவனை அனைவரும் ஒழுங்காகத் தரிசிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே இந்தக் கட்டுரை ஆண்டவனிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு எழுதப்பட்டது.