பட்டி

யாத்ரா தானம்

யாத்ரா தானம்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 6 நிமிடம் வாசிப்பு ஆன்மீகம்

“உங்க ஆத்துக்காரர் இருக்காரா மாலதி?” என்று கேட்டவாறு, பர்வதம் மாமி வீட்டிற்குள் நுழைந்தபோது, மாமி மேல் எரிச்சலும், கோபமுமாய் வந்தது.

“வெளியிலே போயிருக்கார். அதுதான் உங்க பணத்தை மொத்தமாக வாங்கிக் கொடுத்துட்டாரே. இன்னும் ஏன் அவரை தேடிட்டு வர்றீங்க?” என்று, என் வெறுப்பை தோய்த்து, மாமியிடம் கேட்டேன்.

“நீ, என் மேல கோபமாயிருக்கறது தெரியறது. இந்த யாத்ரை விஷயத்திலே வீணா உங்க ஆத்துக்காரருக்கு, தொல்லை கொடுத்துட்டேன். படிப்பறிவில்லாம, ஆதரவு எதுவுமில்லாம ஒண்டிக் கட்டையா என்னைப் போல இருக்கிறவாளுக்கு சுத்தியிருக்கிற உங்களைப்போல உள்ளவா ஒத்தாசை தேவையாதானே இருக்கு,” மாமி குற்ற உணர்ச்சியோடு பேசியதில், என் கோபம் கொஞ்சம் தணிந்தது.

“சரி, எதுக்கு எங்காத்துக்காரரை தேடிட்டு வந்தீங்கன்னு சொல்லிட்டுப் போங்க. அவர் வந்தவுடனே சொல்றேன்,” என்றேன் இதமாக.

‘உம்… ஒண்ணுமில்லே,’ என்று மாமி தயங்கி, பின், “ஒரு யாத்ரா தானம் செய்யணும்ன்னு இருக்கேன். அதை எப்படி செய்றதுன்னு, உங்க ஆத்துக்காரரை கேட்கணும். சரி, அவர் வந்தவுடன், நானே வந்து பாக்கறேன்,” என்று கூறிய பர்வதம் மாமி, விடுவிடுவென வெளியேறிச் சென்றாள். மாமி மேல் திரும்பவும் கோபம் மிகுந்தது. ‘ரொம்பவும் திமிரு தான் இந்த மாமிக்கு’ என்று, நினைத்துக் கொண்டேன். யாத்ரா தானம் என்பது, புனித யாத்திரையை மேற்கொள்ளுமுன் செய்யப்பட வேண்டிய ஒரு சடங்கு. யாத்திரை எவ்வித தடையுமில்லாமல், ஆபத்து, விபத்தென்று எதுவும் நேராமல், சுமூகமாக நடந்தேற, கடவுளை பிரார்த்தித்து, ஒரு எளியவருக்கு, தானம் செய்துவிட்டுச் செல்வதென்பது சம்பிரதாயம்.

‘இப்படி யாத்ரா தானம் செய்ய மாமி தயார் செய்கிறாளென்றால், ஏதாவது, சேஷத்ராடணம் செய்யப் போகிறாளென்றுதானே அர்த்தம். அப்படி என்றால், என் கணவரிடம், அத்தனை நச்சரித்து, தான் கட்டியிருந்த பணத்தை விடாப்பிடியாக ஏன் திரும்பப் பெற்றுக் கொண்டாளாம். எத்தனை சிரமப்பட்டு நேற்று என் கணவர், பணத்தை திரும்ப தந்திருக்கிறார். மாமி அதை வேறொரு யாத்ரா சர்வீசில் கட்டிவிட்டு, அந்த பணத்துக்காக யாத்ரா தானம் செய்ய, என் கணவரிடமே ஒத்தாசை கேட்டு வந்து நிற்கிறாளே… எத்தனை திமிர் இந்த மாமிக்கு’ என்று என் மனம் புழுங்கியது. பர்வதம் மாமி மேல், மேற்படி இந்த யாத்திரை சம்பந்தமாக தான், சினம் உண்டாகிறதேயன்றி, மற்றபடி, மாமி மேல் எனக்கோ, அக்கம் பக்கத்தாருக்கோ இதுவரை, கோபம் எழுந்ததில்லை.

மாமிக்கு குழந்தை குட்டி ஏதுமில்லை. கணவர் சுந்தரம் ஐயர், சமையல் வேலைகளுக்கு எடுபிடியாக சென்று கொண்டிருந்தார். ஒருமுறை சமையல் வேலையில், பெரிய அண்டாவை இறக்கும்போது, அது தவறி காலில் விழ, பெரிய எலும்பு முறிவுடனும், கொதிக்கும் நீர் கொட்டியதால் ஏற்பட்ட கொப்புளங் களுடனும், வீட்டிற்கு கொண்டு வந்து போட்டுவிட்டு போய் விட்டனர். அதன்பின், மாமிதான் வெளி வேலைகளுக்கு சென்று, ஜீவனம் நடத்த வேண்டிய நிலை. படுத்த படுக்கையாய் இருந்து, அவர் போய் சேர்ந்ததும், மாமி எங்கே தங்களுடன் ஒட்டிக்கொண்டு விடுவாளோ என்ற பயத்தோடு, உற்றார் உறவினர் என்று ஓரிருவர், மாமாவின் காரியங்களுக்கு மட்டும் தலைகாட்டி விட்டு, ஓடி விட்டனர்.

மாமி ஆதரவில்லாமல் நின்றபோது, அக்கம்பக்கத்துக்காரர்கள் தான் உதவியாய் இருந்தனர். தங்கள் வீடுகளின் விசேஷங்களுக்கு மாமியை கூப்பிடுவர். மாமி இவ்வளவு சம்பளம் என்று கேட்காமல், எல்லா வேலைகளையும் நேர்த்தியாக செய்துவிட்டு போவாள். மாமியின் கைமணம், சமையலுக்கு சுவை கூட்டும். அவரவர் தங்களின் மனம் விரும்பியதை மாமிக்கு கொடுத்து அனுப்புவர். சுந்தரம் ஐயர் வேலை செய்து கொண்டிருந்த சமையல் கான்ட்ராக்டரும், அடிக்கடி, மாமிக்கு வேலை கொடுத்ததில், மாமி காலம் தள்ள முடிந்தது.

ஆதரவில்லாத முதியோர்களுக்கான பென்ஷனை பெற்றுத் தர, அரசாங்கம் அளிக்கும் விலையில்லாத சாதனங்கள், அரிசி போன்றவைகளை வாங்கிக் கொடுக்க, மாமியின் சொற்ப வருமானத்தில் சேமிக்கும் பணத்தை பாங்கில் கட்ட என, அவ்வப்போது மாமி என் கணவரைத் தேடி உதவிக்கு வருவாள். ஒருமுறை, மாமியை, என் மாமனாரின் தெவசத்திற்கு, சமையலில் உதவி செய்ய கூப்பிட்டிருந்தேன். எல்லாம் முடிந்ததும், தெவச வீட்டில் மாமி சாப்பிட மாட்டாளென்று தெரிந்தும், ‘ஏதாவது எடுத்துட்டு போறீங்களா மாமி.…நாலு அதிரசம் தரட்டுமா?’ என்றேன்.

‘ஊஹும் வேண்டாம்…’ என்ற போது, மாமி கண்கள் கலங்கியிருப்பது தெரிந்தது.

‘என்ன மாமி. ஏதாவது தப்பா கேட்டுட்டேனா…’ என்றேன்.

‘நீ ஒண்ணும் தப்பா கேட்கலே. நீ அதிரசம் வேணுமான்னு கேட்டதும், அவர் ஞாபகம் வந்துடுத்து. அவருக்கு அதிரசம்னா உசுரு. எப்பயாவது பண்ணி வெச்சா நாலைஞ்சு தின்பார். அவர் போய் சேர்ந்து பத்து வருஷமாச்சு. இதுபோல திதி எல்லாம் செய்ய புள்ளக்குட்டின்னு கொடுத்து வைக்கலே. சில பேரை கேட்டதுக்கு, காசிக்கு பொய் செஞ்சா நல்லதுன்னு சொல்றா. போன ஜென்மத்திலே என்ன பாவம் பண்ணினேனோ இப்படி, ஒண்டி கட்டையா கிடந்து தவிக்கிறேன். இவருக்கு திதி கொடுத்து பரிகாரம் பண்ணாம, இந்த ஜென்மாவிலேயும் பாவத்தை சேர்க்கணுமான்னு தோன்றது. எனக்கு கிடைக்கிற வருமானத்திலே கொஞ்சம், கொஞ்சமா சேர்த்து வெச்சிருக்கேன். உங்க ஆத்துக்காரருக்கு தெரிஞ்ச, யாத்தரை கூட்டிட்டு போற வாளா இருந்தா விசாரிக்கச் சொல்லு’ என்றபடி, கண்ணை துடைத்துக் கொண்டே புறப்பட்டு விட்டாள்.

உடனே, என் கணவரிடம் விஷயத்தை சொன்னேன். அவரும் குமரகுரு யாத்ரா சர்வீசில், முன்பு என் மாமனாரையும், மாமியாரையும் வடக்கே யாத்திரைக்கு அனுப்பியிருந்ததால், அவர்களிடம் விசாரித்து, மாமியிடம் சொன்னார்.

“எனக்கு ரொம்ப தெரிஞ்சவா மாமி. உங்களை பத்திரமா அழைச்சுண்டு போயிட்டு வருவா. காசி போயிட்டு, மாமாவுக்கு செய்ய வேண்டியதுக்கல்லாம், அவாளே ஏற்பாடு செய்வா. அதுக்கப்புறம் டில்லி போய் ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத் எல்லாம் ஜாக்கிரதையா கூட்டிண்டு போவா. உங்களுக்காக, ‘கன்செஷன்’ வாங்கியிருக்கேன். 20 ஆயிரம் கட்டினா போதும்.’

“உங்களுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன் மாமா” என்று, பர்வதம் மாமி நெகிழ்ந்து பேசினாள். தான் சேமித்து வைத்திருந்த பணத்தை, என் கணவரிடம் கொடுத்து, அவர் மூலமாகவே கட்டினாள். அடிக்கடி யாத்திரை சம்பந்தமாக சந்தேகங்களை கேட்க, மாமி வரும்போதெல்லாம், இதை ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக, இவரிடம் உண்மையான நன்றியுடன்தான் மாமி பேசிக் கொண்டிருந்தாள். அக்டோபர் மாதத்தில் உத்தேசித்திருந்த யாத்திரைக்கு செல்ல, மாமி மகிழ்ச்சியோடு காத்திருந்தபோதுதான், உத்ரகாண்டில் இயற்கை கோர தாண்டவமாடிய சம்பவம் நிகழ்ந்திருந்தது.

அந்த பெரும், சீற்றத்தின் விளைவுகளை, ‘டிவி’யில் பார்த்து, நாளிதழ்களில் கேட்ட மாமி, முற்றிலும் பயந்தவளாய், மனம் மாறி போய்விட்டாள். அந்த செய்தி, மெல்ல பரவிய ஓரிரண்டு நாளில், மாமி தயங்கியபடி, என் கணவரிடம் வந்து, ‘நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க மாமா. நான் யாத்திரை போறதா இல்லை…’ என்றாள்.

“ஏன் மாமி, பயந்துட்டீங்களா?’ என்று, என் கணவர் கேட்டாலும், அவரே, இனி, மாமி யாத்திரை போவது நல்லதல்ல என்ற எண்ணத்தில் தான் இருந்தார்.

“எனக்கு அவாகிட்டேயிருந்து எப்படியாவது கட்டின பணத்தை திருப்பி வாங்கிக் கொடுத்துருங்கோ” என்று, படபடத்தாள் மாமி. மாமி கேட்டுக் கொண்டிபடி, யாத்திரா சர்வீஸ்காரர்களிடம் இவர் போய் கேட்டார்.

“எல்லாரும் ரொம்பவும்தான் பயந்துட்டீங்க. அதுக்குன்னு இனிமே அங்கெல்லாம், யாத்திரை போகாமலா ஜனங்க இருந்துடப் போறாங்க. இந்த மாசமில்லேன்னா, இன்னும் மூன்று மாசத்திலே சரி பண்ணிடப் போறாங்க. பத்ரிநாத், கேதார்நாத்னு, ‘ரிஸ்க்’ எடுத்துட்டு போகாம, ரிஷிகேஷ் வரைக்கும் போய் திரும்பிடப் போறோம். மாமியை பயப்படாம இருக்கச் சொல்லுங்க. எல்லாம் சரியானவுடன் நாங்களே கொஞ்ச நாள் கழிச்சு அழைச்சுட்டு போறோ’ என்று யாத்திரைக்காரர்கள் சொன்ன சமாதானத்தை, என் கணவர், மாமியிடம் சொன்னபோது தான், மாமிக்கும் அத்தனை கோபம் வரும் என்று தெரிந்தது.

“இதோ பாருங்க. அவா தன் தொழில் பாதிக்கிறதுன்னு, இப்படி, சமாதானமெல்லாம் சொல்லுவா. பணம் கட்டினது நான். எனக்கு விருப்பமில்லேன்னா, பணத்தை திருப்பி கொடுக்க வேண்டியது தானே. பணம் எனக்கு இந்த வாரத்துக்குள்ளே கிடைச்சாகணும்” என்று மாமி தடாலடியாக பேசியது, என் கணவருக்கே, ஒரு மாதிரியாகி விட்டது. திரும்பவும் யாத்ரா சர்வீஸ்காரர்களிடம் சென்று இவர் முறையிட, அவர்களுக்கு பணத்தை கட்டியவர்களெல்லாம், பணத்தை திருப்பி கேட்டதில், ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்க, இரண்டு வாரத்தில் திருப்பி தருவதாய் கூறி அனுப்பினர்.

இதை மாமியிடம் சொன்ன போது, மறுபடியும், மாமி பிடிவாதமாக, பணத்தை அப்போதே, வாங்க வேண்டுமென்றும், அந்த டிராவல்ஸ்காரர்களிடம் தன்னை அழைத்துச் சென்றாக வேண்டுமென்றும், ஒரே அடமாக ஒற்றைக்காலில் நின்றாள். “பணம் கிடைக்கலேன்னா, என் பிராணனை விட்டுடுவேன்” என்று, அழாத குறையாக குமுறினாள். என் கணவர் மிகவும் தர்மசங்கடப்பட்டு, மாமியிடம் அடுத்த நாளே பணத்தை வாங்கித் தருவதாக சமாதானம் கூறி அனுப்பினார்.

“ஏதோ உபகாரம்ன்னு நீங்க செய்யப் போய், எத்தனை உபத்திரவம் பாருங்க. இனிமே, இந்த மாமி விஷயத்திலே ஜாக்கிரதையா இருங்க” என்று, நான் என் கணவரை எச்சரித்தேன்.

“அடிப்போடி, பாவம் ஏழை கிழவி, தன் பணம் போயிடுமோன்னு பயப்படறா. அதுலே ஒண்ணும் தப்பில்லையே” என்று, என் கணவர், மாமிக்கு பரிந்து பேசியதுடன், ‘குமரகுரு ஓனர் ஏமாத்த மாட்டார். நாம பணத்தை அப்புறம் வாங்கிக்கலாம்…’ என்று, எங்கள் சேமிப்பிலிருந்து 20 ஆயிரம் ரூபாயை எடுத்து, அடுத்த நாளே மாமியிடம் கொடுத்து விட்டார். என் கணவரை இத்தனை பாடுபடுத்திவிட்டு, மாமி இப்போது வேறொரு டிராவல்ஸ் மூலம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து விட்டதோடல்லாமல், இவரிடமே தன், ‘யாத்ரா தானம்’ என்ற, சடங்கிற்கு உதவி கேட்டு வந்திருப்பதை, பொறுத்துக் கொள்ள இயலவில்லை! வெளியிலிருந்து கணவர் வந்ததும், படபடவென மாமி வந்து போன விஷயங்களை சொன்னேன்.

“எப்படியாவது போயிட்டு போறா போ. மாமி வந்து கேட்டா, எனக்கு யாத்ரா தானம் பத்தியெல்லாம், ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிடறேன்” என்று, என் கணவரும் விட்டேத்தியாக பேசியது, எனக்கு ஆறுதலாக இருந்தது. அதற்குள், காக்கைக்கு மூக்கில் வியர்த்தது போல், மாமி திரும்பவும் வந்து நின்றாள்.

“மாமா வந்துட்டீங்களா? உங்களைத்தான் மறுபடியும் தொல்லை பண்ண வேண்டியதாயிருக்கு. நாளைக்கு ஏகாதசி திதி. எங்க ஆத்துக்காரரோட தெவச நாள். நாளைக்கே உங்க தயவால ஒரு காரியம் ஆகணும்,” என்று ஆரம்பித்தாள் மாமி.

“அதுகிடக்கட்டும் மாமி, ஏதோ யாத்ரா தானம் செய்யணும்ன்னு இவகிட்டே சொன்னேளாமே. எந்த டிராவல்ஸ்ல பணம் கட்டியிருக்கீங்க. இப்போ மட்டும் பயமெல்லாம் உங்களுக்கு போயிடுச்சா. அவா பந்தோபஸ்தா கூட்டிண்டு போய் கொண்டு விடுவாளான்னு விசாரிச்சிங்களா?” என்று, எரிச்சலுடன் கேட்டார் என் கணவர். மாமி லேசான வேதனையோடு, ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு பேசலானாள்.

“மாலதி நான் சொன்னதை தப்பா புரிஞ்சுண்டிருக்கா போலிருக்கு. காசி, ரிஷிகேஷ்னு போனா தான் புண்ணியம்ன்னு, நான் நினைச்சுண்டிருந்தது உண்மைதான். ஆனா, நான் நினைக்கிறது பிசகுன்னு எடுத்துக் காட்டறதுக் காகவே, அங்கே, இப்பேர்பட்ட கோரம் தலைவிரிக்க ஆடியிருக்குன்னு, மனசுக்கு பட்டது. எத்தனை பேர் செத்திருக்கா. எத்தனை பேரை மிலிட்டரிக்காரா தன் உசுரையும் பணயம் வெச்சு காப்பாத்தியிருக்கா… எத்தனை சேதம்.. அத்தனையும், ‘டிவி’யிலே பார்த்தபோது, நல்ல வேளை நாம போகும் போது, இப்படி ஆகி இருந்தா என்னவாயிருக்கும்ன்னு, என் மனசுலே ஒரு பக்கம் பயம் பிடிச்சு ஆட்டினாலும், இத்தனை பாதிப்பையும் மறுபடியும் அந்த அரசாங்கம் சீர் செய்ய, எத்தனை செலவாகுமோன்னும் கவலையாய் இருந்தது.

“அப்படி எல்லா நிவாரணத்தையும், கோடி கோடியா கொட்டி, பல வருஷங்களா செஞ்சு, எல்லாம் சரியானவுடன், நாம புண்ணியம் தேடறோம்ன்னு போயிட்டு வர்றதுலே, பலன் இருக்குமான்னு யோசிச்சேன். இந்த நிவாரண நிதிக்கு, இந்த யாத்திரைக்காக, நான் சேர்த்த பணத்தை, தானமாக கொடுக்கறதுதான், எங்க ஆத்துக்காரர் ஆத்மாவுக்கு, நான் செய்யும் பரிகாரமா இருக்கும்ன்னு, என் மனசாட்சி சொன்னது. அவரோட தெவச திதியும், இப்பவே அமைஞ்சு வர்றதாலே. அந்த தர்மத்தை, அதே நாள்ல செஞ்சாகணும்ன்னு, உறுதியா இருந்தேன். தர்மம் செய்யணும்ன்னு தோணின உடனே செய்திடணும். இல்லன்னா மனசு மாறிடும். அதனாலதான், உங்களை தொந்தரவு செய்து, பணத்தை திரும்ப வாங்கினேன். யாத்திரைக்கு கட்டிய பணம் யாத்ரா சம்பந்தமான அரசாங்க சேவைக்காக, தானமாய் சேரட்டும்.

“இதோ நீங்க தந்த 20 ஆயிரம் ரூபாய், நிவாரண நிதியிலே எப்படி கட்டறதுன்னு எனக்கு தெரியலே. டிராப்ட், செக் எடுத்து, எனக்கு அனுப்ப தெரியாது. நீங்களே நாளைக்கு தயவுசெய்து, இதை அனுப்ப ஒத்தாசை பண்ணணும்.” மாமி தீர்க்கமான முடிவுடன், பணத்தை நீட்டிய போது, அதை வாங்கிய என் கணவரின் கண்களில், நீர் நிறைந்திருந்தது. என் மனதிலும், மாமி ஒரு புனிதவதியாய் மாறியிருந்தாள்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0