வீட்டுக்கு வீடு
“கமலம்… அம்பி வந்துட்டான் போல இருக்கு. கதவை தட்டற சப்தம் கேட்கறது” என்று தன் மருமகளை கிழவி அஞ்சனாஷி அம்மாள் எழுப்பப் பார்த்தாள். கமலம் எழுந்திருப்பதாக தெரியவில்லை. தானே அந்த இருட்டில் தட்டுதடுமாறி எழுந்து போய் சுட்சைப் போட்டாள். கமலம் விசுக்கென்று விழித்துக் கொண்டாள்.
“அப்படி என்ன அவசரம்… எழுப்பிவிட்டா நானே எழுந்துக்க போறேன்… இருட்டிலே எங்கேயாவது விழுந்து வச்சா யார் அவஸ்தைப் படறதாம்” கோபமும் எரிச்சலுமாக கமலம் எழுந்து சென்று கதவைத் திறந்தாள். கணவர் அம்பிதான் வந்திருந்தார்.
“யார் அம்பி தானே” உள்ளேயிருந்து கிழவி ஆவலாகக் கேட்டதற்கு கமலம் பதில் சொல்லவில்லை.
“ஆமாம்… நான்தாம்மா…” அம்பி வாஞ்சையோடு தன் தாயாருக்கு பதிலுரைத்தபடி உள்ளே வந்தார்.
“போன காரியம் என்ன ஆச்சு?” கிழவி தொடர்ந்தாள்.
“பார்த்து பேசிட்டு வந்திருக்கேன்… கொஞ்சங்கூட மசியமாட்டேங்கறான். ஒரு வாரத்திலே சொல்றேன்னு சொல்லியிருக்கான். பார்ப்போம் எல்லாம் ஆண்டவன் விட்ட வழி” சற்று அலுப்போடு அம்பி சொன்னதும் கமலம் குறுக்கிட்டாள்.
“அப்போ… போன காரியம் ஒண்ணும் ஆகலையாக்கும். அப்போ வியாழக்கிழமையே திரும்பிவர வேண்டியதுதானே. ரெண்டு மூணு நாளா எங்யேயெல்லாம் அலைஞ்சிட்டு வர்றீங்க?” கமலம் எதையோ குத்திக் காட்டுவது போல் கேட்டாள்.
“அதுக்குன்னு அத்தனை தூரம் போயிட்டு கூட பொறந்தவங்களை பார்க்காம வரமுடியுமா சொல்லு… சேலத்திலே ஒரு நாள், வேலூரிலே ஒரு நாள் தங்கினேன் வரவழியிலே காஞ்சிபுரத்திலே வெங்குட்டுவை எட்டிப் பார்த்துட்டு வந்தேன்” ஸ்கூல் வாத்யாரிடம் பையன் பதில் சொல்லுவது போல அம்பி தன் மனைவியிடம் சற்று பயந்தபடி சொல்லி கொண்டிருந்தார். ஆனால் கிழவிக்குத் தெரியும். தன் பிள்ளை கட்டாயம் எல்லோரையும் பார்த்து விட்டுதான் வருவானென்று. அதைப் பற்றி விசாரிக்கத்தான் ஆவலாக உட்கார்ந்திருந்தாள். ஆனால் எதையாவது கேட்டால் கமலத்திற்குக் கோபம் அதிகமாகுமே என்று பயந்து வாயைத் திறக்கவில்லை. அம்பிக்குத் தன் அம்மாவின் மனம் புரிந்திருந்தது.
“பாவம்… சாரதா, கல்யாணி, வெங்குட்டு எல்லோருக்கும் நான் போனதிலே ரொம்ப சந்தோஷம். சாரதா ஜவ்வரிசி வடாம் கொடுத்தனுப்பியிருக்கா உனக்குப் பிடிக்குமேன்னு. வேண்டாம்னா கேட்காம வெங்குட்டு உங்கிட்டே கொடுக்கச் சொல்லி நூறு ரூபா கொடுத்திருக்கான்” அம்மாவிடம் அம்பி சொல்லிக் கொண்டே இருக்க,
“சரி.. சரி… மணி பத்தரையாறது. சாப்பிட உட்கார்ந்தா நான் போட்டுட்டு படுத்துப்பேன்” என்று கமலம் அலுத்துக் கொண்டாள். ‘ணங்’கென்று சாப்பிடும் தட்டையும், டம்ளரையும் அவள் வைத்தபோது வெறுப்பு வெளியிட்டது. அம்பிக்குத் தன் மனைவியின் வெறுப்பிற்குக் காரணம் தெரியாமலில்லை. வாங்குகிற சம்பளம் வாய்க்கும் வயிறுக்குமாக பற்றாத நிலையில், அவசியமான காரியத்திற்குப் போனோமா வந்தோமா என்றில்லாமல் அக்கா, தங்கை, தம்பி என்று ஊரை எல்லாம் தான் சுற்றிக் கொண்டு வருவது அவளுக்கு ஆத்திரமாகத் தான் இருக்குமென்று அவர் உணர்ந்தேயிருந்தார். ஆனாலும் அவர் பாசம் விடுகிறதா… தட்டின் முன் உட்கார்ந்த அம்பி, அறையின் மூலையில் ஒடுங்கிப் படுத்திருந்த தாயாரை நோக்கினார். இன்னும் அவள் உறங்கவில்லை. கிழவி காதைத் தீட்டிக்கொண்டு, ஊர் சமாசாரங்களுக்குக் காத்திருப்பது புரிந்தது. தன் மனைவியிடம் பேசுவது போல், கிழவியின் காதில் விழசற்று உரக்கவே சொல்ல ஆரம்பித்தார் அம்பி.
“கொடுமுடியிலே போன காரியம் தகையாதுன்னு தெரிஞ்சதும் நேரே சேலம் போனேன். சாரதா அக்காவை அடையாளமே தெரியலே… துரும்பா ஒடுங்கிப் போயிருக்கா. நாலு மாசமா நரம்புத் தளர்ச்சின்னு கையும் காலும் குடையுறதாம். உள்ளூர் டாக்டர் யார்கிட்டயோ உடம்பைக் காட்டி கெடுத்துண்டிருக்கா. நான் போகும் போது வீட்டில் யாருமில்லே… ரெண்டு பிள்ளை மாட்டுப் பொண்களும் வேலைக்குப் போயிருந்தா. அத்திம்பேருக்குக் கண் ஆபரேஷனாம்…ஈரோடிலே ராஜி வீட்டிலே இருக்காராம். ‘அம்பி நான் உன் கூடவே வந்துடறேன்டா. எனக்கு இங்கே சரிபடலே… மெட்ராஸிலே பெரிய டாக்டரா காட்டினா தேவலை’னு சாரதா அக்கா ஓபனாவே கேட்டுட்டா. பாவம் பிள்ளைகள் சரியா கவனிக்கிறதில்லையோன்னு தோண்றது…‘அக்கா நீ எப்படியும் கல்யாணத்துக்கு வருவேயில்லே… அப்போ அங்கேயே தங்கிடற மாதிரி வந்துடு’னு சொல்லிட்டு வந்திருக்கேன். இப்பவே அழைச்சிண்டு வரலாம்னு பார்த்தா பஸ்சார்ஜ் போறாது போல இருந்தது.” கேட்டுக் கொண்டிருந்த கிழவிக்கு தன் மூத்த பெண் நிலையைக் குறித்து கண்களில் ஈரம் கசிந்தது.
“ஆமாம்… இங்கே சொத்தும் சொகமும் தட்டுக் கெட்டு போறது.. அக்காவைக் கொண்டு வந்து வச்சுண்டு சீராடறதுதான் குறையறதாக்கும்” கமலம் முணுமுணுப்பது அம்பிக்குக் கேட்காமலில்லை. அதைப் பொருட் படுத்தாதது போல அம்பி தொடர்ந்தார்.
“சேலத்திலேர்ந்து கிளம்பி வேலூர் வந்தேன். அங்கே போனதும் கல்யாணி ‘வாங்கோ அண்ணா.. தெய்வமே அனுப்பி வச்சா மாதிரி வந்திருக்கீங்க.. இவரைப் பாருங்க ஒடிஞ்சி போய் உட்கார்ந்திருக்கார்”னு சொன்னா… மாப்பிள்ளையை பார்த்தா பகீர்னு இருந்தது… தாடியும் மீசையுமா எதையோ பறி கொடுத்தா மாதிரி இருக்கார். கம்பெனியிலே ஏதோ பிராப்ளமாம் சஸ்பெண்ட் பண்ணியிருக் காங்களாம். ‘ஏம்மா ஒரு மாசத்துக்கு மேலே ஆறதுன்னு சொல்றே… கூடப் பொறந்தவன் நான் இருக்கேன் ஒரு கடுதாசு போட்டா என்ன’னு கோவிச்சுண்டேன். ‘நீங்களே சிரமப் படறச்சே ஏன் சொல்லணும்னு விட்டுட்டேன்’னு சொன்னாள். ‘போடி பைத்தியக்காரி இந்த மாதிரி சமயத்திலே கூட ஒத்தாசை செய்யலேன்னா அண்ணன் தம்பின்னு எதுக்கு இருக்கோம். ஊருக்குப் போனதும் ஏதாவது பணம் ஏற்பாடு பண்ணி அனுப்புறேன்னு சொல்லிட்டு வந்தேன். பாவம் கல்யாணி கழுத்திலே, காதிலே ஒண்ணும் இல்லே. ஆபீஸ்லே விவகாரம் ஆயிடுத்துன்னு நகையெல்லாம் வைச்சி ஒப்பேத்தியிருக்கா. அஞ்சு பத்துன்னு கைமாத்து வாங்கி காலம் தள்றா… கண்றாவியாயிருக்கு…” அம்பிக்கு இதைச் சொல்லும்போது நெஞ்சை அடைத்தது. கிழவியும் தன் புடவையின் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சியது தெரிந்தது.
“இங்கே என்ன வாழறதாம்… நகையும் நட்டுமா நான் மினுக்கிண்டா நிக்கறேன். இருந்த ஒரே ஒரு ரெட்டை வடமும் பேங்கிலே தூங்கறது” கமலம் புலம்புவது லேசாகக் கேட்டது. வெந்நீராக ஒரு ரசத்தை தட்டில் ஊற்றிவிட்டு எரிச்சல் பார்வை பார்த்தாள்.
“வெங்குட்டு வீட்லே ரொம்ப நாழியில்லே… ஒரு மணி நேரம்தான் இருந்தேன். ‘அம்மாவுக்குப் பணமே அனுப்ப முடியலேன்’னு வருத்தப்பட்டான். “நீ என்னடா பண்ணுவே.. வீட்டு லோன் மூவாயிரம் பிடிச்சுக்கறா சிரமம் தான்’னு சொன்னேன். மகாதேவனுக்கு பேமெண்ட் சீட் கிடைக்கும் போல இருக்காம். மெட்ராஸ் காலேஜாம். ‘ஹாஸ்டல் அது இதுன்னு செலவு பண்ணாதே இங்கேயே இருந்து படிக்கட்டும்’னு சொல்லிட்டு வந்தேன்” என்று தன் சுற்றுப் பயணத்தின் விபரங்களை முடித்தவுடன் தான் அம்பிக்கு சாப்பாட்டின் மேல் கவனம் திரும்பியது.
“கமலம் தொட்டுக்க ஒண்ணும் இல்லையா.. ஒரு அப்பளாமாவது பொறிச்சுப் போடேன்” என்றார்.
“ரா வேளையிலே இல்லாததையெல்லாம் கேட்டா எப்படி” என்று அடக்கினாள் கமலம்.
“அப்பளாமில்லேன்னா என்ன… சாரதா கொடுத்திருக்காளாமே ஜவ்வரிசி வடாம் அதை பொறியேன்… பாவம் தொட்டுக்க ஒண்ணுமில்லாம எப்படி சாப்பிடுவான்” என்று கிழவி தன்னையும் மீறி குறுக்கிட்டு விட்டாள். கமலம் ஆங்காரமாக ஆரம்பித்தாள்.
“எல்லாத்தையும் புட்டு புட்டு சொல்லணுமாக்கும். வீட்டிலே ஒரு ஸ்பூன் எண்ணெய் இல்லே. மளிகைக்காரன் பாக்கியை அடைச்சாதான் எதையும் தருவேன்னு சொல்லிட்டான். வீட்டிலே சல்லிக்காசு இல்லே… இருக்கிற கடனை எல்லாம் தீக்கலாமேன்னு கிராமத்திலே இருக்கிற நெலத்தை பைசல் பண்ணிட்டு வாங்கன்னு அனுப்பினா, போன காரியத்தை ஜெயிச்சுண்டு வராமே ஊரை எல்லாம் சுத்திண்டு செலவு பண்ணின்டு வர்றீங்க. இங்கேயே தரித்திரம் தாண்டவமாடறது. இதிலே அவ கஷ்டப்படறா. இவ கஷ்டப்படறாங்கன்னு ஊர்லே இருக்கிறவங்க பத்தியெல்லாம் கவலை… எல்லாரையும் ‘இங்கே வா’ சீராடறேன்னு சொல்லிட்டு வந்துட்டா ஆச்சா…அப்படி எல்லாரையும் வைச்சுண்டு கொண்டாடற மாதிரி உங்க அப்பா என்ன சொத்தையும், பத்தையுமா எழுதி வைச்சுட்டுப் போயிருக்கார்? கமலம் தன் ஆத்தரத்தை எல்லாம் கொட்டி படபடவென பொரிந்து தள்ளினாள். அம்பிக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் கிழவி எதையோ எண்ணி சிரித்துக் கொண்டாள்.
‘அடி பைத்தியக்கார மாட்டுப் பெண்ணே… என் புருஷன் அப்படி என்ன சொத்தை விட்டுட்டு போனார்னு கேட்கறயே… தன்னோட கஷ்ட ஜீவனத்திலும் பிறத்தியாரோட கவலையை தம்மேலே போட்டுண்டு அவங்களுக்கு ஒத்தாசை பண்ணனும்னு ஒரு மனோபாவம் உன் புருஷன் கிட்டே இருக்கே.. அதை விடவா பெரிய சொத்து இருக்க முடியும்’ என்று நினைத்தபடி தன் இடுங்கிய கண்களால் சுவற்றில் மாட்டியிருந்த தன் கணவரின் போட்டோவை பார்த்தாள் கிழவி.
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...