ரசவாதம்
“பாலு கேட்காத விட்டுடப்போற… அப்புறம் துளுத்துப் போயிடும் அவளுக்கு. இதையெல்லாம் அப்பப்போ தட்டி வைக்கணும். அப்புறம் தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற கதையாயிடும்” அம்மா படபடவென்று பொரிந்தபடி தன் கோரிக்கையை லேசான கோபம், சோகம் ஆதங்கம் ஒருசேர வெளிப்படுத்தினாள்.
பாலுவிற்கு இது புது அனுபவமாக இருந்தது. ‘கல்யாணமாகி மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள் ஆரம்பமாகி விட்டதே’ என்று நினைத்துக் கொண்டான். இத்தனைக்கும் தன் புது பொண்டாட்டியிடம் படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறான் “பெரியவங்களை நாமதான் கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும். அம்மா படபடன்னு பேசுவா. மனசுலே ஒண்ணுமிருக்காது.…நீ சின்னதா சொன்னா கூட பெரிசா போயிடும்.” ஒன்றும் நடக்காதபோதே இப்படி முன் எச்சரிக்கையாக தன் கணவன் பேசுவது விமலிக்கு வேடிக்கையாயிருக்கும்.
“அடடா… போதும் உங்க அட்வைஸ்… ரொம்ப ‘போர்’ அடிக்காதீங்க. என்னமோ நானும் உங்க அம்மாவும் எப்படா கோதாவிலே இறங்கலாம்னு காத்துட்டு இருக்கா போலேன்னா பேசறீங்க…‘மாமியார் மருமகள் ‘மேட்ச் காண்டெஸ்ட்’ ஏதாவது வைச்சா கலந்துண்டு ஜெயிச்சு காட்றோம் போதுமா’ என்று அவளும் கிண்டலாக சொல்வாள்.
இத்தனை எச்சரிக்கையாயிருந்தும் இப்பொழுது ஆரம்பமாகி விட்டதே என்று பாலுவுக்கு வருத்தமாக இருந்தது. எப்படி, யார் தொடங்கியது என்று தெரியவில்லை. விவகாரம், சீர், செனத்தி விஷயமானது என்று புரிந்தது.
“ஏண்டா ஒரு பேச்சுக்குக் கூட கேட்கக் கூடாதா என்ன? ‘ஏம்மா விமலி ஆடி பண்டிகை வருதே… உங்க அப்பா, அம்மாகிட்டேயிருந்து லெட்டர் ஒண்ணையும் காணுமே’ன்னு யதார்த்தமா கேட்டேன். அதுக்கு எப்படி ஒரு பதில் வருதுங்கிறே! ‘அதுக்கென்ன ஆடி பண்டிகை, ஆவணி நோன்புன்னு வருஷம் பூரா அவங்ககிட்டே கறந்துண்டே இருக்குறதுக்கு. ஏதாவது ஒண்ணு பின்னாடி ஒண்ணா வந்துட்டேதானே இருக்கு… எப்படியும் கொட்டி அழப்போறாங்க.…அதுக்கு முன்கூட்டியே லெட்டர் வேற ஏன் போடணும்னு இருக்காங்களோ என்னவோ.…அதுதான் கல்யாணத்தின் போது எப்பெப்போ என்னது செய்யணும்னு ஏற்கனவே ‘லிสต์’ போட்டுக் கொடுத்திருக்கே.…பயப்படவே வேண்டாம். ஆடி சீர் ‘டாண்’ணு வந்து நிற்கும்’ன்னு அத்தனை நக்கலா பேசறான்னா பாத்துக்கயேன்.
‘என்னமோ நம்ம இவாகிட்டே கொள்ளை அடிக்கிற மாதிரின்னா அப்படி ஒரு பதில் வர்றது. ஆடி வருதே… வீட்டுக்கு மாப்பிள்ளை பொண்ணை கூப்பிடற வழக்கமாச்சேன்னு கேட்டா, என்னமோ நான் ஆடி சீருக்கு வீங்கி வெடிக்கறா மாதிரின்னா மூஞ்சிலே அடிச்சா மாதிரி குத்திக் காண்பிக்கறா. நீ இதைக் கேட்டேயாகணும். அப்படிக் கேட்காமவிட்டே அப்புறம் இந்த வீட்டிலே எனக்கும் மதிப்பு இருக்காது. உனக்கும் மரியாதை கெட்டுப் போயிடும் சொல்லிட்டேன் ஆமாம்.”
பாலு ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமாக அம்மா புகார் சொல்லியபடி காப்பியைக் கொண்டு வைத்தாள். விமலி வீட்டில் இல்லாதது புரிந்தது.
“நீ மனசைப் போட்டு அலட்டிக்காதே…நான் அவளைக் கேட்கறேன். ஆமாம் அவள் எங்கே” என்றான்.
அம்மாவிற்கு அந்த பதில் சற்று ஆறுதலாயிருந்தது போலும். கொஞ்சம் சமாதானமாகியிருந்தது பாலுவுக்குத் தெரிந்தது.
“என்னமோ புது டிபனாம். பண்ணி வைச்சுட்டு காய்கறி வாங்க கடைக்குப் போயிருக்கா. அப்படி என்னவாய்னு கேட்கறேன்? பூனை மாதிரி இருக்காளேன்னு பார்த்தா எப்படி எடுத்தெறிஞ்சு பேசினா தெரியுமா.…நல்லா வொட்ட நறுக்கி வை. இல்லேன்னா அவஸ்தைப்படுவே” அம்மா பாலுவிற்கு திரும்பவும் நினைவுபடுத்தி எச்சரித்தாள்.
பாலு யோசித்தான். விமலிக்கு எப்பொழுதும் கிண்டலும் குத்தலுமாக பேசும் வழக்கம் உண்டு என்று அவனுக்குத் தெரியும். அதையே தன் அம்மாவிடம் பேசும் போதும் செய்திருக்க வேண்டுமா என்று நினைத்தான். விமலி பேசியதாக அம்மா சொன்ன அத்தனையையும் அப்படியே உண்மை என்று ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவனுக்கே விமலி மீது கோபமாக வந்தது. அப்படியா பேசுவாள்? இனி ஆடி என்று மாமனார் கூப்பிட்டாலும் அங்கு போவதும், அவர்களிடம் சீர் பெறுவதும் மிகவும் சங்கடமாகத்தான் அமையும். ‘ஏன் அப்படிப் பேசினே’ என்று விமலியை கேட்டு விடலாம்தான். ‘உங்க அம்மா என்ன சொன்னாங்கன்னு தெரியுமா… நான் எதுக்கு அப்படி பேசினேன்னு தெரியுமா’ என்று விமலியும் தன் தரப்பு வாதத்தை சொல்வாள். மேலும் ‘வந்ததும் வராததுமா உங்ககிட்டே வத்தி வைச்சுட்டா போலிருக்கு’ என்று மாமியார் மேல் வெறுப்பு சுவர் எழ அஸ்திவாரம் போட்டது போலாகும். அப்புறம் ஒருவர் மாற்றி ஒருவர் நாளொரு புகாரும் பொழுதொரு சண்டையுமாக வளரும்… பிறகு மாமியார் மருமகளிடையே நிரந்தரமான விரிசல்!
பலவாறு எண்ணிக் கொண்டே பாலு விமலி வருகைக்கு காத்திருந்தான். எப்படிக் கேட்பது… எப்போது கேட்கலாம் கேட்காமலேயே விட்டு விடலாமா…பாலு யோசித்தான்.
விமலி கடைத் தெருவிலிருந்து திரும்பினாள். “டிபன் சாப்பிட்டீங்களா?” என்றாள். “ஆபீஸிலே என்ன விசேஷம்” என்று விசாரித்தாள். “ராத்திரிக்கு உங்களுக்கும் அம்மாவுக்கும் என்ன பண்ணட்டும்” என்று இயல்பாகக் கேட்டாள். அம்மா சொன்னது போல் எந்த சம்பவமும் நிகழதாதது போல அவள் நடந்து கொண்டாள். பாலுவும் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. டீ.வி. சீரியலைப் பார்ததபடி அவளிடம் விமர்சித்தான். “ரசம் ஜோராயிருக்கு… அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்… இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு அம்மாவுக்கு ரசம் ஊத்து” என்று அம்மாவுடன் சாப்பிடும்போது சகஜமாகச் சொன்னான். ஆனால் அம்மா மறந்துவிட்டதாக தெரியவில்லை. விமலி சமையலறைக்குள் இருந்தபோது ‘அவளைக் கேட்டாயா’ என்பது போல் ஜாடை காட்டினாள். ‘பயப்படாதே கேட்கறேன்’ என்பது போல் கண்ணை மூடி தலையை ஆட்டி வைத்தான்.
படுக்கையறை தனிமையில்தான் விமலியிடமிருந்து அது வெளிப்பட்டது. ஒரு வார இதழை விரித்தபடி யோசனையிலிருந்த பாலுவிடம் விமலியே முதலில் ஆரம்பித்தாள். “ஆமாம். உங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா?” என்றாள்.
பாலு அவள் முகத்தைப் பார்த்தான். உறுத்தும் மனத்தின் பிரதிபலிப்பு அந்த முகத்தில் தெரிந்தது. ‘கேட்டு விடலாமா? தணலை ஊதி, விசிறி தீயை பரவச் செய்து விட்டால்… மனதில் அலசியபடி பாலு, “உம்” என்றான்.
மௌனமாக இருந்தாள். தலை குனிந்திருக்க எச்சில் விழுங்குவது தொண்டையில் ஏற்ற இறக்கத்தில் வெளிப்பட்டது. குற்றம் புரிந்தவளாய் அவள் சங்கடமாய் நெளிவது புரிந்தது. “பாவம்டா விமலி… வீட்டிலே கொட்டு கொட்டுன்னு உட்கார்ந்துண்டிருக்கா. நீ பாட்டுக்கு தினமும் லேட்டா வர்றே சிறுசுதானே சினிமா, பீச்சுன்னு போகணும்னு ஆசையா இருக்காதா.…கம்ப்யூட்டர் அது இதுன்னு படிச்சிருக்கா. ஒரு வேலையாவது பார்த்துக்குடேன். போயிட்டு வரட்டும். கட்டு பட்டியா வீட்டுக்குள்ளேயே உக்காத்தி வைக்கணுமா’ன்னு அம்மா சொன்னா. ‘என்ன பண்றதுமா என் உத்யோகம் அப்படி சீக்கிரம் வர முடியறதில்லே. எனக்குத் தெரிஞ்ச கம்பெனிக்கெல்லாம் சொல்லியிருக்கேன். அத்தனை சீக்கிரம் வேலை கிடைக்கறதா’ன்னு அம்மாகிட்டே நான் சொன்னேன்” என்றான் பாலு.
விமலி இப்பொழுது நிமிர்ந்து பார்த்தாள். முகத்தில் பயமும், குற்ற உணர்வும் விலகி சற்று பிரகாசமாக ஆரம்பித்திருந்தது. “வேற ஒண்ணும் அவங்க சொல்லலையா?” சந்தேகமும் ஆவலுமாகக் கேட்டாள்.
“புதுசா டிபன் பண்ணித் தந்தாயாமே…‘வாய்க்கு ருசியா வகை வகையா நல்லா சமைக்கறாடா.…கை மணம் உங்க பாட்டி மாதிரி ஜோரா இருக்கு’ன்னு சொன்னா. நிஜமாவே நீ இன்னிக்கு பண்ணின டிபன் பிரமாதம்தான் என்றான். விமலியின் கண்கள் பனித்திருந்தன. அதற்குப் பிறகு அங்கு பேச்சில்லை.
அடுத்தநாள், பாலு சாயங்காலம் ஆபீஸிலிருந்து திரும்பிய போது அம்மா மட்டுமே வீட்டில் இருந்தாள். மனநிறைவோடு உற்சாகமாகக் காணப்பட்டாள். காப்பி கலந்து வந்தபடி பேசினாள். “பாவம். ரேஷனுக்கு தானே போறேன்னு போயிருக்கா. ‘வழக்கமா நான் தானே போறது. உனக்குக் க்யூவிலே நிக்க முடியாதும்மா’ன்னு சொல்லிப் பார்த்தேன். கேக்கலே. ‘வயசான நீங்க சிரமப்படுவானேன்’னு சொல்லிட்டுப் போயிருக்கா. நான் ஒரு பைத்தியக்காரி. இன்னிக்கு இருந்தா நம்ம பவானி வயசுதானே இருக்கும் இவளுக்கும். ஏதோ படபடன்னு பேசிட்டாள்னு அதைப் போய் உங்கிட்டே சொல்லித் தொலைச்சேன். கண்டிச்சி வைன்னு வேற சொன்னேன். நீ ராத்திரி கோவிச்சுண்டிருப்பியோ என்னவோ! பாவம், இன்னிக்குப் பூரா அம்மா, அம்மான்னு குழந்தையாட்டமா குழைஞ்சு குழைஞ்சு வர்றா. எனக்கே அவசரப்பட்டு உங்கிட்டே கொட்டிட்டோமேன்னு ஆய்போச்சு. ‘லொட லொடன்னு வாய் பேசினாலும் மனசுலே ஒண்ணுமில்லே ரொம்ப வெகுளி… சித்த ஆபீஸ் விட்டு கொஞ்சம் முன்னாடி வந்து சினிமா கோயில்னு நீ அழைச்சிண்டு போயேன். சின்னஞ் சிறிசுதானே நாலு சுவத்துக்குள்ளே அடைஞ்சுண்டே இருந்தா போர் அடிக்காதா” அம்மாவின் கரிசனமான வார்த்தைகளால் பாலுவிற்கு ஆச்சர்யம் ஏற்படவில்லை. நேற்றைய விவகாரத்திற்கு தான் கையாண்ட அணுகுமுறை இப்படி ஒரு ரசவாதம் செய்யும் என்று அவன் எதிர்பார்த்த ஒன்றுதானே!
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...