பட்டி

சனாதனத்தை தேடி!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் சமூகம்
Story Image
“சனாதனம்ன்னா என்ன தாத்தா?”...

Share this story:

“சனாதனத்தை தேடி!

“சனாதனம்ன்னா என்ன தாத்தா?” என்று என்‌ பேரன்‌ கேட்டு நச்சரித்துக்‌ கொண்டே இருந்தான்‌. எண்பதை நெருங்கும்‌ என்‌ வயதில்‌ என்‌ சமயகோட்பாடு என்று சொல்லப்படும்‌ ‘சனாதனம்‌” என்பதற்கு இதுதான்‌ பொருள்‌ என்று கூறி அதைப்பற்றி உயர்த்தி பேச அறியாதவனாய்‌ வெட்கப்பட வேண்டியிருந்தது.

“ஓ அதுவா சனாதனம்னா நாம்‌ எல்லோரும்‌ வாழற வாழ்க்கைக்கு தேவையான அறநெறிகள்‌ னு சொல்லலாம்‌” என்றேன்‌ மழுப்பலாக.

“அப்படின்னா அதை ஏன்‌ எதிர்க்கறோம்‌ னு பிரச்னை பண்ணிட்டு இருக்காங்க?” என்று ரிஷி கேட்டதற்கு என்னிடம்‌ பதில்‌ இல்லை.

“ஏதோ அவங்க தவறுதலா புரிஞ்சிகிட்டதாலேயோ, வேறு ஏதாவது ஆதாயத்துக்கோ இப்படி பண்றாங்கன்னு தோணுது… உனக்கு ‘சனாதனம்‌’ பத்தி சில சுவாரஸ்யமான விஷயங்களை நம்ம

சொந்த ஊருக்கு போனா தெரியும்‌… சுவாமிநாதனை பாத்தா கொஞ்சம்‌ புரியும்‌” என்றேன்‌. “யார்‌ தாத்தா சுவாமிநாதன்‌ நம்ப ரிலேடிவ்வா?” என்று ரிஷி கேட்டான்‌.

“இல்லே என்னோட பால்ய நண்பன்‌. இப்போ அந்த ஊர்லேயே இருக்கான்‌.. நானும்‌ ஊருக்கு போய்‌ ரெண்டு நாள்‌ தங்கிட்டு வரணும்னு நினைச்சிட்டே இருக்கேன்‌.. ஒண்ணு செய்‌ இந்த வீக்‌ எண்ட்‌ நீ ஃப்ரீன்னா நானும்‌, பாட்டியும்‌, நீயும்‌ உங்க அப்பாவை கார்‌ அரெஞ்ச்‌ பண்ண சொல்லி போயிட்டு வரலாம்‌” என்றேன்‌.

அதன்படி வேதாரண்யம்‌ பக்கம்‌ எங்கள்‌ ஊர்‌ தேத்தாகுடிக்கு காரில்‌ பயணம்‌ செய்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. “சொல்லு தாத்தா சுவாமிநாதன்‌ னு சொன்னயே அவர்‌ ஊர்லே என்ன பண்றார்‌?”

“ஏற்கெனவே உன்கிட்டே சொல்லியிருக்கேன்‌… என்‌ தாத்தாவும்‌ அப்பாவும்‌ அந்த ஊர்லே ஒரு உயர்நிலை பள்ளியை நடத்திட்டு இருந்தாங்க நிலம்‌, புலம்‌ னு நிறைய சொத்தும்‌ கூடவே ஏழை ஜனங்களுக்கு படிப்பறிவை கொடுக்கணும்‌ னு நல்ல சிந்தனையும்‌ அவங்களுக்கு இருந்தது. என்‌ தாத்தா ஒரு தேச பக்தர்‌. காந்திஜி வேதாரண்யத்திலே உப்பு சத்யாக்கரஹம்‌ செஞ்சபோது அதிலே தீவிரமாக கலந்துட்டாரு… போலீஸ்‌ வீட்டுக்கு வந்து அவரை அழைச்சுட்டு போனதை என்‌ அஞ்சு வயசு நினைவா அப்படியே இருக்கு… இப்படி வேறு ஒரு சுதந்திர போராட்டத்துக்காக போனவர்‌ உயிரோடு திரும்பலே. குண்டடிபட்டு செத்தவராய்‌ வீட்டுக்கு கொண்டு வந்தாங்க.”

“என்‌ பாட்டி ஒரு திடமான மனுஷி. தாத்தா போனத்துக்கப்புறம்‌ “நானும்‌ சுதந்திர போராட்டத்திலே கலந்துக்க போறேன்‌ அதுதான்‌ அவரோட ஆத்மாவிற்கு சாந்தி தரும்‌… அதனாலே மொட்டை அடிச்சிட்டு வீட்டு மூலையிலே உட்காரமாட்டேன்‌ னு சொல்லிட்டாங்களாம்‌.

ஆனா பாட்டிக்கு ரொம்பவுமே இரக்க சுபாவம்‌… எல்லாருக்கும்‌ உதவணும்னு இருப்பாங்களாம்‌. அப்போ எங்க வீட்டிலே வேலை செய்யற ஆட்களோடு எங்க பள்ளிக்கூடத்திலே படிக்கிற வசதி இல்லாத குழந்தைகளுக்கும்‌ பக்கத்திலே ஒரு ஹால்‌ மாதிரி இடத்திலே தினமும்‌ சாப்பாடு போடுவாங்க. பணம்‌ இல்லேன்னு யார்‌ வந்தாலும்‌ இல்லேன்னு சொல்லாம கொடுத்துடுவாங்க. அதைவிட எல்லாரையும்‌ எந்த ஏற்ற தாழ்வையும்‌ பாக்காம ஒரே சரிசமமா பாவிச்சி நடத்துவாங்க. இத்தனை நல்ல குணாதிசயங்கள்‌ கொண்டிருந்த என்‌ பாட்டியோட பேரு தனலட்சுமி. தனம்பாட்டி, தனம்‌ அம்மாள்னுதான்‌ எல்லோரும்‌ கூப்பிடுவாங்க. அப்போ சுதந்தரத்துக்கு முன்னேயும்‌ இந்த “சனாதனம்‌” பத்தி சில பேர்‌ சர்ச்சை பண்ண ஆரம்பிச்சாங்களாம்‌. என்‌ தாத்தாகிட்டே யாரோ வந்து ‘சனாதனம்னா

என்னென்னு விதண்டாவாதம்‌ செஞ்சி வம்பு பண்ணினாங்களாம்‌.”

“அப்போ எங்க தாத்தா வேடிக்கையா இனிமே என்‌ சம்சாரத்தோட தனம்‌ கிற பேரை சனாதனம்‌ னு மாத்திடறேன்‌… இனிமே யாராவது சனாதனம்‌ ன்னா என்னன்னு கேட்டா இவளை காட்டபோறேன்‌’ ன்னு சொல்லி அப்படியே கூப்பிடவும்‌ ஆரம்பிச்சுட்டார்‌.

“பாட்டிகிட்டே நல்ல நல்ல குவாலிடி கொட்டி கிடந்ததாலே ஊர்லே எல்லாருமே ஆசையும்‌ அன்புமாய்‌ சனாதன பாட்டி, சனாதன அம்மா ன்னே கூப்பிட ஆரம்பிச்சட்டாங்களாம்‌.’

“எங்க வீட்டிலே மாரியம்மா ன்னு ஒரு அம்மா வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. தினமும்‌ புருஷன்‌ குடிச்சிட்டு அடிக்கிறதா பாட்டிகிட்டே சொல்லி அழுவாங்க. பாட்டியும்‌ எங்க அப்பாகிட்டே சொல்லி அவரை கண்டிக்க சொல்வாங்க. ஒரு நாள்‌ தலையிலே இரத்தம்‌ சொட்ட சொட்ட அந்த அம்மா தன்னோட சின்ன பையனை தூக்கிட்டு அலறிட்டு ஓடி வந்தாங்க… பாட்டி பயந்து போயிட்டாங்க. புருஷன்‌ குடிபோதையிலே விறகு கட்டை எடுத்து அடிச்சிருக்கானாம்‌. இனிமே அங்க போய்‌ வாழமாட்டேன்‌… நீங்கதான்‌ அம்மா என்னையும்‌ என்‌ பிள்ளையையும்‌ காப்பாத்தணும்‌ ன்னு பாட்டியோட கால்லே விழுந்துட்டாங்க.”

“உடனே பாட்டி நீ இனிமே எங்கேயும்‌ போகாதே உன்னையும்‌ உன்‌ புள்ளையையும்‌ நான்‌ காப்பாத்தறேன்‌… உன்‌ பையனை என்‌ பேரனோடு ஸ்கூல்லே சேர்க்க சொல்றேன்‌… கவலைப்படாதே ன்னு ஆறுதலும்‌ அடைக்கலமும்‌ கொடுத்தாங்க.”

“எங்க ஸ்கூல்ல என்னோட அப்பா தான்‌ ஹெட்மாஸ்டர்‌. ரெண்டுபேரையும்‌ சேர்த்தாரு. ஒண்ணா ஸ்கூல்‌ போவோம்‌ ஒண்ணா வந்து சாப்பிடுவோம்‌. இப்படியே எஸ்‌.எஸ்‌.எல்‌.சி வரை அந்த ஊர்லே படிச்சோம்‌. அப்புறம்‌ ரெண்டு பேரையும்‌ திருச்சியிலே அந்த காலத்து பி.யூ.சி. எங்க அப்பா சேர்த்துவிட்டாரு.’

“அதுக்கப்புறம்‌ ரெண்டு பேருக்கும்‌ லைஃப்‌ திசை மாறிபோச்சி. அப்போ இஞ்சினியரிங்‌ காலேஜ்‌ மொத்தமே ஆறோ ஏழோதான்‌ இருந்தது. அவனுக்கு ரிசர்வேஷன்‌ கோட்டாவிலே மதுரை காலேஜ்லே இடம்‌ கிடைச்சுது எனக்கு கிடைக்கலே… பி.காம்‌ படிச்சேன்‌.. அப்புறம்‌ மிலிடெரியிலே சேரணும்னு ஆசைப்பட்டு போய்‌ சேர்ந்தேன்‌. சர்வீஸுக்கு அப்புறம்‌ சின்ன சின்ன பிஸினஸ்‌ பண்ணி காலம்‌ தள்‌ ளினேன்‌.”

“ஊர்லே எங்க அப்பாவாலே ஸ்கூலை நடத்த முடியலே ரொம்பவும்‌ நெருக்கடியா போச்சு.. என்னை உதவ சொல்லி கேட்டார்‌. என்கிட்டே பணமுமில்லே பள்ளிக்கூடத்தை எடுத்து நடத்தணும்னு மனமுமில்லே.”

அப்போ ஒரு நல்ல பேரோடு இருந்த ஸ்கூலை வாங்க ஒரு அரசியல்‌ புள்ளி அப்பாவை நச்சரிக்க ஆரம்பிச்சார்‌. போயும்‌ போயும்‌ அந்த ஆசாமிகிட்டேயா கொடுக்கறதுன்ன அப்பா தவிச்சுட்டு இருந்தபோது சுவாமிநாதன்‌ தான்‌ கை கொடுத்தார்‌. நேர்மையான ஒரு மனுஷனுக்கு ஸ்கூலை கொடுத்ததுலே அப்பாவுக்கு ரொம்ப நிம்மதி. அவர்‌ கொடுத்த பணத்தோட என்கிட்டே வந்துட்டாரு… அந்த பணத்திலேதான்‌ உன்‌ அத்தையோட கல்யாணத்தை நான்‌ செய்ய முடிஞ்சுது… மீதி கதையை ஊர்லே வந்து தெரிஞ்சக்கோ.. எனக்கு தூக்கம்‌ வருது” என்று நான்‌ காரிலேயே சற்று கண்‌ அயர்ந்தேன்‌.

“தாத்தா ஊர்‌ வந்துடுச்சி” என்று ரிஷி எழுப்பிவிட்டான்‌. சொந்த ஊரின்‌ காற்று சுவாசிக்க இதமாக இருந்தது.

“நேரே போய்‌ ரைட்லே கட்‌ பண்ணு” என்று டிரைவரிடம்‌ சொன்னேன்‌. இந்த பங்களாதான்‌ என்று காட்டி நிறுத்தச்‌ சொன்னேன்‌. கேட்‌ திறந்திருந்தது.

சற்று தூரம்‌ கார்‌ சென்று பங்களாவின்‌ போர்டிகோவில்‌ நின்றது.

“வாடா மூர்த்தி, வாங்கம்மா… இவன்தான்‌ உன்‌ பேரனா வாப்பா” என்று முகம்‌ பூராவும்‌ மீசையும்‌, கட்டுமஸ்தான உடம்பும்‌ கருப்புநிறமுமாக ஒரு ஆசாமி எங்களை வரவேற்றதை ரிஷி எதிர்பார்க்கவில்லை என்று அவன்‌ முகம்‌ காட்டியது.

“ஏய்‌ நீலா மூர்த்தி ஐயரும்‌, சம்சாரமும்‌, பேரனும்‌ வந்துட்டாங்க டீ போட்டு கொண்டா” என்று மனமார்ந்த பாசத்தோடு உபசரித்து உட்கார சொல்ல நாங்கள்‌ இருவரும்‌ பரஸ்பரம்‌ நலம்‌ விசாரித்து பேசிக்‌ கொண்டிருந்தோம்‌.

“சரி மூர்த்தி வீட்டை உன்‌ பேரனுக்கு சுத்திக்காட்டு” என்றதும்‌ ரிஷியை அழைத்துக்‌ கொண்டுபோய்‌ கூடம்‌, தாழ்வாரம்‌ என்று அந்த பழையகால வீட்டின்‌ அமைப்புகளை காட்டிக்‌ கொண்டு வந்தேன்‌.

பூஜை அறை பக்கம்‌ வந்ததும்‌ நீலாம்மா ஓடிவந்து “உள்ளே போய்‌ பாரு தம்பி” ஏதோ குறிப்பிடும்படி அந்த அறையில்‌ இருப்பதை சுட்டி காட்டுவதுபோல்‌ கூறினாள்‌.

அந்த பெரிய பூஜை அறையின்‌ சுவரில்‌ நடுநாயகமாக அந்த பெரிய போட்டோ மாட்டப்பட்டிருந்தது. மற்ற கடவுளர்களின்‌ படத்தைவிட மிக பெரிதான அதில்‌ என்‌ பாட்டி சிரித்துக்‌ கொண்டிருந்தாள்‌. நல்ல வாசனையுடன்‌ ரோஜா மாலையும்‌ ஊதுவத்தியுமாக பாட்டியின்‌ படம்‌ தெய்வீகமாக தோன்றியது.

“தாத்தா இது யாரோட போட்டோ?” என்று கேட்டான்‌. உடனே அருகில்‌ நின்ற நீலாம்மா “இதுதான்‌ தம்பி எங்க வீட்டுக்காரரை வாழ வைச்ச தெய்வம்‌. சனாதன அம்மான்னு தினம்‌ கும்பிடுவாரு. உன்னோட எள்ளு பாட்டி உங்க வீட்டிலே இவங்க போட்டோ இல்லையா?” என்றும்‌ கேட்டு என்னை தர்மசங்கடத்தில்‌ நிறுத்தினாள்‌.

“சரி நான்‌ டிபனுக்கு ஏற்பாடு பண்ணனும்‌. நீங்க நிதானமா வாங்க” என்று நீலா அகன்றதும்‌, அந்த பெரிய அறையில்‌ ரிஷியை உட்கார சொல்லி நானும்‌ உட்கார்ந்தேன்‌. அந்த சூழலே மனதுக்கு இதமாக இருந்தது.

“ரிஷி என்ன யோசனை பண்றே சுவாமிநாதனை பார்க்கணும்னு கூட்டிட்டு வந்து வேற ஒரு ஆசாமியோட வீட்டுக்கு வந்திருக்கோமேன்னு நினைக்கிறே இல்லே. சுவாமிநாதன்‌ ங்கறது வேறு யாருமில்லே இந்த மீசை வைச்ச ஆசாமிதான்‌.. நான்‌ சொன்னேனே மாரியம்மாவோட பையன்‌ அது இவன்தான்‌. எங்க அப்பா இவனை ஸ்கூல்ல சேர்த்தபோது பெயரில்‌ கூட எங்க ரெண்டு பேருக்கும்‌ பேதம்‌ இருக்கக்கூடாதுன்னு அவனோட பேரை சாமிநாதன்‌ னு பதிவு செஞ்சுட்டாரு இவன்தான்‌ பி.இ. முச்சிட்டு அந்த காலத்திலே எல்லோருமே போன துபாய்க்கு போய்‌ வேலை செஞ்சி கொள்ளையா சம்பாதிச்சான்‌. அப்பா ஸ்கூலை நடத்த முடியாம கஷ்டப்பட்டது தெரிஞ்சதும்‌ உடனே ஆசை ஆசையாய்‌ ஊருக்கு வந்து நல்ல விலை கொடுத்து ஸ்கூலையும்‌ எங்க வீட்டையும்‌ வாங்கிட்டாரு. இதிலே இவரோட பையனுக்கு உடன்பாடில்லே.. இருந்தாலும்‌ இந்த எண்பதை நெருங்கும்‌ வயசுலேயும்‌ ஸ்கூலை கஷ்டப்பட்டு நடத்துக்கிட்டிருக்கான்‌.” “உண்மையிலேயே சனாதனத்தை கொண்டாடறவங்களோ, எதிர்க்கிறவங்களோ சனாதனம்‌ ன்னா என்னன்னுதான்‌ தேடிட்டு இருக்காங்க. இதுதான்‌ சனாதனம்‌ ன்னு வரையறுத்து சொல்ற மாதிரி ஒரு நூலும்‌ இல்லே. ஆனா ராமாயணம்‌, மகாபாரதம்னு சனாதன தர்மங்களை போதிக்கும்‌ இதிகாசங்கள்‌ இருக்கு.

அப்படி அந்த புராணங்கள்‌ போதிக்கும்‌ அஹிம்சை, வாய்மை, புலனடக்கம்‌, தேவைக்கு அதிகமாக தனக்கென சேர்த்துக்‌ கொள்ளாத மனப்பாண்மை, தெய்வ பக்தி, எல்லா ஜீவராசிகளிடம்‌ சமமான அன்பு, பாவம்‌, புண்ணியம்‌ போன்ற வாழ்வு நெறிகளோடு வாழறவங்களைத்தான்‌ சனாதனி ன்னு சொல்றோம்‌.

காந்தி மகான்‌ இந்த நெறிகளோடு வாழ்ந்ததனால தன்னை சனாதனின்னு சொல்லிக்கிட்டார்‌. என்‌ பாட்டியும்‌ இப்படி ஒரு சனாதனியாக வாழ்ந்ததாலேதான்‌ சாமிநாதன்‌ அவங்களை பூஜை அறையிலே வைச்சி வணங்கிட்டு இருக்கான்‌.

சனாதனம்‌ ங்கறது இதுதான்‌ புரிஞ்சிக்காமத்தான்‌ அதை எதிர்த்து பேசறவங்களுக்கு இந்த நல்ல நெறிகளை எதிர்க்கிறோம்னு தெரியறதில்லே. அதனாலேதான்‌ சனாதனத்திலே கூறப்படறதா சொல்ற வர்ணாஸ்ரமத்தை பெரும்‌ குறையா சொல்றாங்க.

அப்படி அவங்க குறையா சொல்ற வர்ணாஸ்ரமம்‌ என்பதை இப்போ யாரும்‌ அனுசரித்து அதனாலே யாருக்கும்‌ பாதிப்பு ஏற்பட்டதா தெரியலே. என்னையோ, சாமிநாதனையோ இந்த வர்ணாஸ்ரமம்‌ பாதிக்கலே. நான்‌ மிலிடெரியிலே சேர்ந்து தேச சேவை செஞ்சேன்‌. சாமிநாதனின்‌ பாரம்பரியம்‌ எதுன்னு தெரியலே. அவன்‌ இப்போ இந்த எழுத்தறிவித்தல்‌ என்கிற தொழிலை செய்றான்‌. இப்படி பிறவியிலேயே வெவ்வேறு சுபாவங்கள்‌, மனப்பாண்மை கொண்டவர்களாக பிறப்பது இயற்கையான ஒன்று.

உலகம்‌ இயங்க இப்படி நாலு வகை மனப்பாண்மையோடு இருக்கறவங்க தேவைங்கிறதைத்தான்‌ வர்ணாஸ்ரமம்‌’ என்கிற கோட்பாடா சொல்லியிருக்காங்க.

இதை தன்னோட பிரித்தானும்‌ சூழ்ச்சியாக விஷமமாக திரிச்சி பிரச்சாரம்‌ செஞ்சுட்டு போயிருக்காங்க. அது இன்னும்‌ தொடர்ந்துகிட்டே இருக்கு” என்று ரிஷிக்கு நான்‌ ஒரு நீண்ட விளக்கம்‌ கொடுத்துக்‌ கொண்டிருந்தபோது சுவாமிநாதன்‌ வந்தான்‌.

“மூர்த்தி பேரன்கிட்டே என்ன ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கே? நேரமாகுது சாப்பிடலாம்‌ வாங்க. நீங்க வருவீங்கன்னு பர்வதம்‌ மாமிகிட்டே சொல்லி அரிசி உப்புமாவும்‌, கத்திரிக்கா கொச்சுவும்‌ பண்ணி எடுத்துட்டு வர சொல்லியிருக்கேன்‌ வாங்க சாப்பிடலாம்‌” என்று அன்பாக கூப்பிட்டான்‌.

வர்ணாஸ்ரமம்‌ என்பதன்‌ காலம்‌ எப்போதோ மலை ஏறி போய்விட்டதுபோல எங்கள்‌ டேஸ்ட்டும்‌ அரிசி உப்புமாவிலிருந்து பல மாற்றங்களடைந்து பீட்ஸா, பர்கர்‌ என்று மாறிவிட்டதை கபடமில்லாத சாமிநாதன்‌ அறியவில்லை.

கூடை

மொத்தம்

₹0