பட்டி

கார்த்தியும் மூர்த்தியும் ஒண்ணா படிச்சவங்க!

கார்த்தியும் மூர்த்தியும் ஒண்ணா படிச்சவங்க!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 3 நிமிடம் வாசிப்பு சமூகம்

அகிலா கார்த்திகேயன்

’ஒண்ணா படிச்சவங்க’ என்ற தலைப்பில் ஒரு சினிமா படம் வந்துள்ளது. இந்த ஒண்ணா படிச்சவங்க லிஸ்ட்டில் நாம் ஒண்ணாவது முதல் ஐந்தாவது வரை படிக்கும் ஆரம்பப் பள்ளி நண்பர்கள் ஞாபகத்திற்கு வர வாய்ப்பில்லை ‘ஸ்கூலுக்கு போகமாட்டேன்’ என்று அடம்பிடித்து அழுது அடிவாங்கிக் கொண்டு போகும் பருவம் அது. மேலும் ‘2ம் பேச்சி க்கா’ என்று பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பாலக மாணவனை பல்பம் கொடுக்காதினாலோ அவன் வீட்டிலிருந்து கொண்டு வந்த தீனியையோ, கமர்கட்டையோ தான் மட்டும் ஒளித்து வைத்துக் கொண்டு கொடுக்காத காரணத்தினாலோ விரோதியாக்கிக் கொள்ளும் சாத்யகூறுகள்தான் அதிகமிருக்கும். மேலும் சாயங்காலம் விளையாடும் போதும் ‘போடா ஆழுகுனி ஆட்டம் ஆடறே’ என்று ஒதுக்கப்படும் பாலக பருவமென்பதால் ஒண்ணா படிச்சவங்க என்ற இந்த லிஸ்ட்டில் அடிப்பட்டு போய்விடுகிறார்கள்.

ஆனால் உயர்நிலைப் பள்ளியில் ஓரளவு இந்த குழந்தை குணாதிசயங்களை கடந்து ஒரு பக்குவம் மிகுந்திருக்கும். கிளாஸில் படிக்கும் நாற்பது மாணவர்களின் மனப்பக்குவங்களும் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களுள் நமக்கேத்த நண்பனை தேடும் அறிவு ஓரளவு பெற்றிருப்போம்.

”டீச்சர் சொல்றதை கவனமாக கேட்டுண்டு வா” என்ற பெற்றோர்களின் அறிவுரையை சிரமேற்கொண்டு படிப்பே கதி என்று சில ‘பழங்கள்’ சிரத்தையாக படிக்கும்.

கடைசி பெஞ்ச்சில் உட்கார்ந்துகொண்டு வேடி டீச்சர் மேல் காகித ராக்கெட் விட்டுக்கொண்டு, கிண்டலு கேலியுமாக பொழுதைப் போக்கும் ஒரு கூட்டம் இருக்கும்.

இந்த இரண்டிற்கும் நடுவே அதிகம் பழக்காமலும் அதிகம் ஆர்ப்பாட்டம் செய்யாமலும் ஸ்போர்ட்ஸ், என்.ஸி.ஸி, ஏ.ஸி.ஸி. என்ற எக்ஸ்டிரா கரிகுலர்களில் நாட்டம் மிகு கும்பலும் வேறுபடும்.

இப்படி பலவேறுபட்ட குணாதிசயங்களில் நம் டேஸ்ட்டுக்கு ஒத்துபோகிறவனை நம் சாமார்த்தியம் தேடி கண்டுபிடித்துவிடும். அந்தந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கணக்கில் நல்ல மார்க் எடுப்பதிலோ, இந்தி வாத்யார் பற்றி சுவற்றில் தாறுமாறாக கிறுக்கி வைப்பதிலோ, இண்டர் ஸ்கூல் கேரம்போர்ட் காம்படிஷனில் கலந்துகொள்வதிலோ அந்தந்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் உடன்படிக்கை செய்து கொண்டு உருப்படுவார்கள். எதுவானாலும் அது படிப்பு சம்பந்தமாக இல்லாமல் போனாலும் ‘ஒண்ணா படிச்சவங்க’ என்ற பிற்கால அடையாளத்திற்கு அது எந்த குந்தகமும் விளைவிக்காது.

மேலும் எல்லோர் வீட்டு பெற்றோர்களும் ”டேய் குப்புசாமியோட சேராதே கெட்டு குட்டிச்சுவராயிடுவே” என்று ஒரு குறிப்பிட்ட மாணவனை குறைகூறி தன் மகனை எச்சரிப்பதுண்டு. ஆனால் அதைவிட மோசமாக அவர்கள் மகனையே, அந்த குப்புசாமியின் பெற்றோர்களும் ”டேய்! ராமசாமி பொல்லாவதன்… வேறு நல்ல பசங்களே உனக்கு கிடைக்கலையா” என்று பரஸ்பர எச்சரிப்போடு ஏசுவது இவர்களுக்கு தெரியாது. இருந்தாலும் ‘குப்புசாமியும் ராமசாமியும் இணைபிரியாத ஒண்ணா எல்லா கெட்டவழக்கங்களையும் பிடிச்சவங்களாக நிகழ்ந்ததுதான் தலைவிதி!

இப்படி எனக்கும் ஆறாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி. வரை ஒண்ணா படிச்ச, ஒண்ணா பிடிச்ச ஒரு நண்பன் இருந்தான். அவன் இப்போது அவராகிவிட்டதால் அவர் பெயர் கே.என். கிருஷ்ணமூர்த்தி. என் பெயர் கார்த்திகேயன் என்பதால் இதை இரண்டையும் இணைக்கும்போது கார்த்திகேயன் கிருஷ்ணமூர்த்தி என்றாகி அவனுடைய இனிஷியலான கே.என். என்பது என் பெயரின் முடிவாக அமைந்த ஒற்றுமையும் இருந்தது. சக மாணவர்களும் கார்த்தி K.N. கிருஷ்ணமூர்த்தி என்றே எங்களிருவரையும் ஒட்டுமொத்தமாக அழைத்து பிணைத்திருந்தார்கள். ஒரே மாதிரி படிப்போம். எஸ்.எஸ்.எல்சி.யில் எங்கள் இருவரின் மொத்த மதிப்பெண்ணும் 368 ஆகவே அமைந்தது.

ஐம்பது வருடத்திற்கு பின் பள்ளி நாட்களில் தடாலடி செய்து கொண்டிருந்த மாணவர் ஒருவர் போலீஸ் ஆபீஸராக உத்யோகம் செய்து எங்கள் எல்லோர் விசாசத்தையும் கண்டுபிடித்து போன வருடம் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார். அறுபது எழுபது பால்ய நாண்பர்களும், நண்பிகளும் வரவழிந்திருந்த சாதனையோடு அந்த கால வயதான வாத்யார்களையும் கண்டுபிடித்து கூட்டிவந்திருந்தார்கள்.

எனக்கென்னவோ கிருஷ்ணமூர்த்தி வருவானோ என்ற ஏக்கம்தான் இருந்தது. விழாவிற்குள் நுழையும்போதே ‘கிருஷ்ணமூர்த்தி உங்களைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்’ என்று யாரோ சொன்னார்கள்.

ஐம்பது வருடத்திற்கு பின் அத்தனை வருட வாழ்க்கை சம்பவங்களை சுருக்கி இருவரும் பேசிக்கொண்டோம். எங்கள் இருவருக்கும் பிடித்த கணக்கு வாத்யார், இருவருக்கும் பிடித்த ஆலந்தூர் மணீஸ் கேப் மைசூர் பாகு, இருவருக்கும் பிடித்த ஜெயந்தி தியேட்டர் சிவாஜி படங்கள், இருவருக்கும் பிடித்த குமுதம் கதைகள், இருவருக்கும் பிடித்த பெருமாள்கோயில் பொங்கல் என்று பேசிக்கொண்டே இருந்தோம். பிறகு விழாவில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தனர்.

சாப்பிடும்போது முதலில் இலையில் போட்ட ‘மைசூர்பா’வை எடுத்து ‘உனக்கு பிடிக்குமே சாப்பிடு’ என்று என் இலையில் வைத்தான். நானும் என் இலையில் வைக்கப்பட்ட ‘மைசூர்பா’வை ‘உனக்கும்தான் பிடிக்கும்’ என்று சொல்லி அவன் இலையில் போட்டேன்.

சங்கதி என்னவென்றால், இருவருக்குமே அந்த காலத்தில் மைசூர் பாகு என்றால் உயிர். ‘மணீஸ் கபே’யில் சாயங்காலம் போடும் சூடான மைசூர் பாகுவிற்காக இருவரும் முறை வைத்து வீட்டில் பணத்தை சுட்டுக் கொண்டு வந்து வாங்கி சாப்பிடுவோம்.

ஆனால் இப்போது இருவரும் பரஸ்பரம இந்த இனிப்பை பரிமாறி கொண்டதன் காரணம் இருவருக்கும் ஷுகர் வியாதி பிடித்திருந்தது. அந்த ரகசியத்தையும் ஒண்ணா பகிர்ந்து கொண்டோம்.

ஆக நண்பர்களாக இருப்பதற்கு ஒண்ணா படிக்க வேண்டும் என்பதையும் மீறி எல்லாமுமே இருவருக்கும் ஒண்ணா பிடிக்க வேண்டுமென்ற தத்துவம் புரிந்தது.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

தொடர்புடைய கதைகள்

நானும் நகை அணியமாட்டேன்!
சமூகம் கதை

நானும் நகை அணியமாட்டேன்!

"நானும் இனிமேல் அணியவே மாட்டேன்" என்று என் மனைவி சொன்னாள். அவளைப் பார்த்தேன். காது, மூக்கு, கழுத்து எல்லாம். முளியாக இருந்தன. அத்தனை நகைகளும் மேஜையின் மேல் குவி...

2 நிமிடம்
பட்டாசாய் வெடித்த பருப்பு!
சமூகம் கதை

பட்டாசாய் வெடித்த பருப்பு!

இத்தனை பருப்பு மூட்டைகளை பதுக்கி வைத்திருக்கிறோமே யாராவது அரசு அதிகாரி ரெய்ட் வந்தால் அவர்களிடம் தன் பருப்பு வேகாதே என்ற கவலையோடு தணிகாசலம் ஜலத்தில் விழுந்த த...

3 நிமிடம்
பெருமைமிகு பெருசுங்க!’
சமூகம் கதை

பெருமைமிகு பெருசுங்க!’

இது ஒரு ‘சிரி’ கட்டுரை மட்டுமே\! சீரியஸா எடுத்துக்காம சும்மா சிரிச்சுட்டுப் போலாமே... ப்ளீஸ்\!...

4 நிமிடம்

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0