பட்டி

கோவிந்தனும் கொரோனாவும்

கோவிந்தனும் கொரோனாவும்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 4 நிமிடம் வாசிப்பு நகைச்சுவை
  • (தினமலர் தீபாவளி மலர் 2020)

உலகையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும், கொரோனா வைரஸ், மேலோகத்திலும் தீபாவளி, ‘ரிலீசாக’ பரவப் போவதாக தகவல் வந்தது. ஸ்ரீமன் நாராயணனிடம் இதை முறையிட, பயந்தோடி வந்தார், நாரதர். வைகுண்ட வாசலில், கிருமிநாசினியால் கையை துடைத்துக் கொண்டவருக்கு, வாயிலும் அந்த நாசமாய் போன நாசினி, நர்த்தனமாடியது. எப்போதும், ‘நாராயண… நாராயண…’ என்று திருநாமம் கமழும் அவருடைய திருவாயில், ‘நாசினியாயண நாசினியாயண…’ என்று நாக்கு தடம்புரண்டது.

உயிர்க்கொல்லியாக இப்படி ஒரு வைரசை படைத்தது, படைக்கும் கடவுள் பிரம்மாவாக தான் இருக்குமென்ற எண்ணத்துடன், பிரம்மனை நாலு வார்த்தை கேட்டுவிட வேண்டுமென்று தான், பிரம்மலோகத்துக்கு சென்றார், நாரதர். நான்முக கவசத்துடன், நான்முகன் நாவசைக்க இயலாமல் வீற்றிருக்க, அன்னை கலைவாணி, தன், ‘மாஸ்க்’கால் வதனத்தில் இருந்த கலக்கத்தை மறைத்தவளாய், கவலையோடு நாரதரிடம் முறையிட்டாள். “அதை ஏன் கேட்குறீர் நாரதரே... இந்த கொடிய கிருமி எப்படி உற்பத்தியாச்சுன்னு இவருக்கே தெரியாம முழிச்சுட்டிருக்கார்.

“லோகத்துலே எல்லாரும் மூக்கு, வாய் தெரியாம ‘மாஸ்கை’ வைச்சி மூடிட்டு திரியறதாலே, அத்தனை கோடி கோடியா, வெவ்வேறான முகத்தோட படைச்சுட்டு வந்தவருக்கு, இப்போ புதுசா என்ன சாயல்லே முகத்தை படைக்கலாம்ன்னு அவங்க முகத்தை, ‘ரெஃபர்’ பண்ணி பார்க்க முடியாம சிக்கலாயிருக்கு.

“அதுகூட பரவாயில்லை, நேத்து புதுசா ஒரு சிசுவை படைக்கறவர், கீழே எல்லாரையும், ‘மாஸ்க்’கோட பார்த்து பழக்கப்பட்டதாலே, அந்த குழந்தையையும், ‘மாஸ்க்கோட படைக்க இருந்தார். நல்ல வேளை நான் பார்த்து, தடுத்து தொலைச்சுட்டேன். இல்லேன்னா, எல்லாரும் இவரோட நாலு தலையையும் உருட்டி இருப்பா” என்று வருந்தினாள், கலைவாணி.

பிரம்மாவிற்கு தெரியாத இந்த வைரஸ், யாரால் படைக்கப்பட்டு, இப்படி ஒரு அழிவை, உலகெங்கும் உண்டாக்கி கொண்டிருக்கிறதென்று, நாரதரும் நினைத்துக் கொண்டார்.

திரும்பவும் சரஸ்வதி மாதா அதற்கான பதிலை தருவது போல தொடர்ந்தாள்…

‘நாரதா… நீங்க வேணும்னா கைலாசத்துக்கு போய், விசாரித்து பாருங்கள். ஆக்கல், காத்தலுக்கு பிறகான துறை, அங்கே தான் செயல்படுகிறது. அந்த பரமேஸ்வரர் பரமதயாளர், எல்லாருக்கும் கேட்ட வரத்தை தாராளமா கொடுத்துட்டு, அப்புறமா முழிப்பார்…

முன்னாலே பகாசுரனுக்கு அப்படித்தான், யார் தலை மேலயாவது அவன் கை வைச்சா, அவங்க அழிஞ்சு போயிடுவாங்கன்னு ஒரு வரத்தை, ‘சாங்ஷன்’ பண்ணிட்டு, அவர் தலைக்கே ஆபத்தாகி தவிச்சார்.

‘ஒருவேளை, கொரோனாசுரன், ஈஸ்வரர்கிட்டே இப்படி ஒரு வரம் வாங்கிட்டு தான், இந்த ஆட்டம் போடுறானோ என்னவோ.…நீ போய், அவரோட சம்சாரம் பார்வதி தேவிகிட்டே விசாரி; எனக்கும் அந்த விஷயத்தை, ‘மெசேஜ் பண்ணு’ என்று விடை கொடுத்தாள், கலைவாணி.

ஏற்கனவே, ‘லாக் டவுன்’ அறிவிக்கப்பட்ட கைலாசம், சத்தம் ஏதுமின்றி அமைதியாக இருக்க, நாரதரை உள்ளே விடவே, கிங்கரர்கள் ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்து விட்டனர். ‘கோவிட் டெஸ்ட், க்வாரன்டைன் என, சகல கொரோனா தடுப்பு தடபுடல்களை, நாரதர் மேல்செலுத்தி, அவரையே, ‘சிவ… சிவா…’ என்று பெருமூச்சு விட வைத்துவிட்டனர்.

பனிமலையில் எப்போதும் பார்வதி சமேததராக இருக்கும் பரமேஸ்வரர், தனிமையில் தவயோக நிஷ்டையில் அமர்ந்திருந்தார். சற்று தள்ளி அமர்ந்திருந்த பார்வதி, நாரதரைப் பார்த்ததும், “நாரதரே… நீங்கள் என்ன கேட்க வந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. எல்லாருமே பரமேஸ்வரர் தான் கொரோனாவுக்கு காரணம் என்ற வதந்தியை பரப்பிக் கொண்டிருப்பது, என் காதிலும் விழாமலில்லை… இப்போவெல்லாம் என்னை, ‘கன்சல்ட்’ பண்ணாம, இவர் யாருக்கும் வரம் கொடுத்து மாட்டிக்கிறதில்லே.

‘அதனாலே, இவரை சந்தேகப்படாதே.…ஒருவேளை, இது அந்த மகாலட்சுமி வீட்டுக்காரரோட வேலையாய் இருக்கலாம்.

‘இ பாஸ்’ வாங்கிட்டு, வைகுண்டம் போய் விசாரிச்சு பாரு. அந்த நரகாசுரனை வதம் செஞ்சவர், இந்த கொரோனா சுரனையும் தீபாவளிக்கு முன்னாலே வதம் செஞ்சுட்டா, ஜனங்க எல்லாம் இரட்டை தீபாவளியா கொண்டாடுவாங்க” என்று உரைத்து, உத்தரவு நல்கினாள், உமாதேவி.

நாரதர் உடனே திருபாற்கடலில் ‘மாஸ்க்’கில்லாமல் படுத்துக் கொண்டிருந்து மாதவனிடம் போய் நிற்க, அவரோ நாரதர் எதுவும் கேட்க வாய் திறவாத போதே அதை அறிந்தவர் போல் பேசினார். “அதோ பார் நாரதா…கொரோனாசுரனே வந்துட்டிருக்கான்” என்று முற்றிலும் அறிந்த நாராயணன், சொன்ன நேரத்தில், “பிரபோ… நீங்க எந்த, ‘பர்பசு’க்காக என்னை அனுப்பினீங்களோ, அதை ‘அச்சீவ்’ பண்ண முடியலே… நான் தோத்து போயிட்டதா தோணுது; அதனாலே திரும்பிட்டேன். இனிமே, நீங்க என்ன உத்தரவு தந்தாலும் செய்யறேன்,” என்று கோவிந்தனிடம் கொரோனாசுரன் தலைதெறிக்க ஓடிவந்து நின்றான்.

இதைக்கேட்ட விஷ்ணுவின் வதனத்தில், ஒரு குறும்பு புன்னகை அரும்பியது. “கொரோனாசுரா… எல்லாமும் நான் அறிவேன்.…என்ன நடந்தது என்று நாரதரிடம் சொல்லு,” என்று ஒரு விஷம சிரிப்பை, மீண்டும் நாரதர் மேல் வீசினார், நாராயணன்.

கொரோனாசுரன் சொல்லத் துவங்கினான்.

“பிரபோ… உங்க திட்டப்படி பூலோகத்திலே முதல்ல, சீனாவிலே குதிச்சேன்; அவன் தான், ரொம்பவும் மண்ணாசை பிடிச்சவனா இருக்கிறதாலே, அவனை திருத்தணும்ன்னு அங்கே ஆரம்பிச்சேன்.…ரொம்பவும் வீரியமா என்னை படைச்சதாலே, உலகம் பூரா பரவினேன்; பலரோட உயிரையும் குடிச்சேன்.

“அவன் நாட்டிலிருந்து, உலகம் பூரா பரவியிருக்கேன்னு, கொஞ்சம் கூட சீனாக்காரன், ‘கில்ட்டி’யா ‘பீல்’ பண்ணலே.

“மாறாக, நான் ஆட்டி வைச்ச போதே, அவனை ஆசை ஆட்டி வைச்சுது. மண் ஆசையாலே அக்கம், பக்கத்து தேசத்துக்குள்ளே ஊடுருவறான்.

“சரி, அவன் தான் அப்படின்னா, அரசியல்வாதிங்களோட அட்டகாசத்தையும் என்னால அடக்க முடியலே.. எம்.பி., எம்.எல்.ஏ., ன்னு லஞ்சம் வாங்கி, ஊரையே வளைச்சுப் போட்டவனுக்கும், ‘இப்படி சேர்த்து வைக்கிறோமே.…இந்த கொடிய வைரஸ் வந்துட்டா, நிமிஷத்திலே உயிர் போயிடுமே’ன்னு, பல பணக்காரங்க உயிரை, நான் குடிச்சு பாடம் சொன்ன போதும், பலனில்லை. இருக்குற வரைக்கும், கூடிய மட்டும் சேவை செய்யலாம்ன்னு தோணாம, பதவி ஆசையாலே, அவங்களுக்கு கொரோனா பயமுறுத்தலெல்லாம், ஜுஜுபியா போச்சு!

“நான் பரவின முதல் ரெண்டு மாசத்துலே, தனியா இருக்கிற வயசான அப்பா அம்மாக்களை விழுங்கினேன். ‘ஐயோ… சாகிற சமயத்திலே கூட அப்பா அம்மாவோட இருக்க முடியாம போச்சே.…அயல்நாட்டிலே டாலர் டாலரா சம்பாதிச்சு என்ன பிரயோசனம்ன்னு பசங்க மனசு உறுத்தும்படி, நான் பாடம் சொல்லிக் கொடுக்க முடியலே.

“மேலும், ‘இ பாஸ்’ இ மெயில் மாதிரி, ஈமக் கிரியைக்கும் ஒரு எலக்ட்ரானிக் அவலம் வந்துடும் போலிருக்கு! இதையெல்லாத்தையும் விட, என்னை வைச்சே பணம் பறிக்கவும் ஆரம்பிச்சதை தான், என்னால சகிக்க முடியலே.

“ஆரம்பத்திலே எல்லா மருத்துவர்களும், நர்சுகளும் ரொம்பவும் தியாக சிந்தனையோடு தான் சேவை செஞ்சாங்க. ஆனா, அவங்களை வைச்சு, வைத்தியம் செய்யறதா, ஒரு வியாபாரமே செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.…தொற்று இருக்கா, இல்லையான்னு சந்தேகப்பட்டு வந்த அப்பாவிகளை கூட விடாம, பாதிக்கப்பட்டவங்ககிட்டே இருந்து பணத்தை கறக்க ஆரம்பிச்சிட்டாங்க.

“இன்னிக்கு இருக்குற உயிர் நாளைக்கு இல்லே... இந்த வாழ்க்கை நிரந்தரமில்லைன்னு, இந்த தத்துவத்தை பாடமாக சொல்ல தான், ஒரு அதிர்ச்சி வைத்தியமாக, நீங்க என்னை பூலோகத்துக்கு அனுப்பினீங்க.

“ஆனா, என்னை கொரோனாசுரனா நினைச்சு பயந்த ஜனங்களை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, நயவஞ்சகம், பொறாமை, பொய், திருட்டுன்னு, எத்தனையோ அரக்கர்கள் ஆட்டிவைக்கிறாங்க.…ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிச்சுட்டா, என்மேலே இருக்குற பயம் போயிடும். ஆனா, அவங்க ஒவ்வொருத்தருக்குள்ளேயும் இருக்குற அரக்கர்களை அழிக்க, நீங்க தான் பிரபோ அவதாரம் எடுக்கணும்!

“நரகாசுரனை அழிச்ச போது, அவன் கேட்ட வரத்தை கொடுத்து, ஒரு தீபாவளி வந்தது, ஆனா, இப்போ ஜனங்களை ஆட்டி வைக்கிற அசுரர்களை அழிக்கிறபோது, அதே மாதிரி அவங்க வரம் கேட்டா, வருஷத்திலே அத்தனை நாளும் தீபாவளியா கொண்டாடினாலும் பத்தாது.…அத்தனை அசுரத்தனங்கள் பிரபோ,” என்று புலம்பியபடியே, கொடிய வைரஸான கொரோனா, புஸ்வானமாகி போனது.

“புரிந்ததா” என்று புன்சிரிப்பால் கேட்ட புருஷோத்தமன், நின்று கொல்லும் தெய்வமாக, இன்னும் கலிமுற்றட்டும் என்பது போல் காத்திருப்பதை, நாரதருக்கு உணர்த்தினர்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

தொடர்புடைய கதைகள்

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0