பட்டி

கலிகால காது

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் நகைச்சுவை
Story Image
கிருத, த்ரேதா, த்வாபர யுகங்களில் இந்த காது எனும் செவி எந்த ரிஷியின் ரகசிய உபதேச மந்திரங்களை ஒட்டுகேட்டுத் தொலைத்து சாபம் வாங்கிக் கட்டிக் கொண்டதோ...

Share this story:

கிருத, த்ரேதா, த்வாபர யுகங்களில் இந்த காது எனும் செவி எந்த ரிஷியின் ரகசிய உபதேச மந்திரங்களை ஒட்டுகேட்டுத் தொலைத்து சாபம் வாங்கிக் கட்டிக் கொண்டதோ தெரியவில்லை. இந்த கலியுகத்தில் எல்லா யுவன் யுவதிகளாலும் அநேகமாக எல்லா நேரங்களிலும் அடைக்கப்பட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

செல்ஃபோன், ஸ்மார்ட் ஃபோன், டாப்லெட், லாப்டாப் என்று ஏதோ ஒரு உபகரணத்தினோடு இந்த காது தொடர்பு கொண்டிருப்பது தொடர்வதால் அந்தந்த உபகரணங்களின் காதடைப்பான்களோடு எல்லா காதுகளும் சதா சர்வகாலமும் காதல் செய்துக் கொண்டே இருக்க நேருகிறது.

கலிகால ஆரம்பகட்ட நாட்களில் வீட்டில் அம்மாவோ அப்பாவோ, பள்ளியில் வாத்தியாரோ கண்டிக்க முற்படும்போது ENT யில் இந்த இயர் ஆகப்பட்டதுதான் மாட்டிக் கொள்ளும்.

”இனிமே செய்வியா” என்றோ ”இனிமே சரியா வாய்ப்பாடு சொல்லிவியா” என்ற மிரட்டலின்போது வாயோ கண்ணோ மாட்டிக்கொள்ளாது அப்பாவி காதுதான் அவர்களின் கையில் மாட்டி திருகப்படும். படிபடியாக அப்படி காது திருகுதல், பிரம்பால் அடித்தல் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டதால் காது தப்பித்தது என்றில்லாமல் இப்படி அடைப்பட்டு சாகிறதே என்று வருத்தப்படாமலிருக்க முடியவில்லை.

தி.நகரில் பஸ் ஏறி உட்காரும்போது ஒரு இளைஞிகாதும் காதடைப்பானுமா எதிர்சீட்டில் உட்காருவதைப் பார்த்தேன். எப்போதும் போல் அரை மணியாக உட்கார்ந்திருக்கும் பஸ் கிளம்பாமல் இன்னொரு பஸ் முன்அறிவிப்பில்லாமல் கிளம்புவதைப் பார்த்து அதை எல்லோரும்போல் பிடிக்க இறங்கி ஓடினேன். அது ஓடியே போய்விட மகா அலுப்புடன் திரும்பவும் பழைய பஸ்ஸுக்கே வந்து உட்கார்ந்தபோதுதான் கவனித்தேன். அந்த ‘செவி’லி எந்த பாதிப்புமில்லாமல் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டு, கெக்கே புக்கே என்று இளித்துக் கொண்டு பழையபடியே உட்கார்ந்திருந்தாள்.

பஸ்ஸை எடுத்து நகர்த்தி அடுத்த ஸ்டேஜ்ஜிக்குமுன் நிறுத்தி எல்லோருக்கும் டிக்கட் கொடுத்து முடிக்க கண்டக்டர் நேரம் கடத்தியபோதும், எல்லா சிக்னலிலும் பஸ் மாட்டிக் கொண்டபோதும், வேகாத வெயிலில் கர்மமே கருத்தாக செக்கிங்குகள் ஏறி சதாய்ந்தபோதும் எனக்கும் மற்ற சில திறந்த காதுடன் பயணம் செய்தவர்களுக்கும் ஏற்பட்ட எரிச்சல், கோபம் இத்யாதிகள் காதை அடைத்துக் கொண்டிருந்த இதர யுவன், யுவதிகளுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. எதிரே ரம்பா மேனகா திலேத்தமைகளின் நடனம் நடந்தாலும் சலனம் ஏதுமின்றி தவம் செய்யும் முனிவர்கள் கணக்காய் சுற்றிலும் நடப்பவைகளைப்பற்றியெல்லாம் இந்த காது மூடிகளுக்கு கவலையிருப்பதில்லை.

அப்படி யாருடன் பேசுவார்களோ, எந்த பாட்டை கேட்பார்களோ தெரியவில்லை. அவர்கள் பாட்டுக்கு சுற்றுமுற்றும் நடப்பவைகளால் பாதிப்படாதவர்களாய் எப்போதும் எதையோ காதில் பாய்ச்சிக் கொண்டே திரிகிறார்கள். சதா சர்வகாலமும் அவர்களின் செவிக்கு மட்டும் உணவு கிடைத்தபடி காதை அடைத்தபடியே இருக்கிறது.

கர்ணன் கவச குண்டலங்களோடு பிறந்தான் என்கிறார்கள். அவன் அப்படி பிறந்ததை நம்பவும், குளிக்கும்போது, படுக்கும்போதுகூட அவைகளை உறுத்தமாலிருக்க கழற்றி வைத்திருக்கவே மாட்டான் என்பதை நம்பவும் இப்போது எப்போதும் காதும் அடைப்பானுமாகவே இருக்கும் இவர்கள் உதாரண புருஷ, புருஷிகள் ஒத்தாசை செய்கிறார்கள் எனலாம். ஆனால் இந்திரன் வந்து யாசித்தபோது தயங்காமல் கர்ணன் அந்த ஒட்டி பிறந்தவைகளை வெட்டி தாரைவார்த்து கொடுத்தது போல் எந்த இந்திரன் வந்து கேட்டாலும் அதெல்லாம் அவர்கள் காதில் விழப்போவதில்லை என்பது ஒருபக்கமிருந்தாலும், அப்படியே விழுந்தாலும் அதை கேட்கும் இந்திரனுக்கு வேறொரு புதிய இயந்திரத்தை வாங்கிக் கொடுத்து அவனையும் காதடைத்து அனுப்புவார்களேயன்றி தங்கள் காதிலிருந்து கழற்றிவிடவே மாட்டார்கள்.

”எதைச் சொன்னாலும் காதிலே போட்டுக்கமாட்டேங்கறார்” என்று நம் மூதாதைய மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களை குற்றம் சொல்லிக்கொண்டே இருந்ததன் பலனாக அவர்களின் வம்சாவளிகள் எப்போதும் காதில் போட்டுக் கொள்ளும் வரமாக இப்படி கிட்டியுள்ளதெனவும் சமாதானம் செய்துக் கொள்ளலாம்.

தேர்தல் காலகட்டஙக்ளில் அந்தந்த கட்சிகளின சின்னங்களை மூடி மறைக்க தேர்தல் கமிஷனர் படாதபாடுபட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறேம். புத்தீசல் கணக்காக கட்சிகள் பெருகிவரும் பிற்காலங்களில் தேர்தல் சின்னங்களின் ஸ்டாக் குறைந்து கொண்டே வரும்போது, சில கட்சிகள் வாய், மூக்கு, கண் என்று உடல் உருப்புளை கேட்டு வாங்க முற்படலாம். அப்படி வாய், மூக்கு, கண் என்று ஸாங்ஷன் செய்துவிட்டு கண்ணையெல்லாம் மூட வேண்டும், மூக்கையெல்லாம் மூட வேண்டுமென்றால் வாயை மூடு என்று விடுவார்கள்.

அப்படி எந்த தொந்திரவும் ஏற்பட காது விஷயத்தில் சாத்யமில்லை. காதை மூடு என்று பிரத்யேகமாக சொல்லவே வேண்டாம். எல்லோருமே எப்போதுமே காதை மூடிக்கொண்டேயிருனப்பதால் காது சின்னம் சால சிறந்ததென தேர்வு செய்யலாம்!

கூடை

மொத்தம்

₹0