பட்டி

உங்க உப்புலே டூத்பேஸ்ட் இருக்கா?

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் நகைச்சுவை
Story Image
உங்களிடம் முப்பத்திரண்டு பல்லும் கொட்டாமல் இருக்கிறதா உங்களுக்கு அதை தினமும் துலக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படி ஒரு பழக்கம் இருந்தால்...

Share this story:

உங்களிடம் முப்பத்திரண்டு பல்லும் கொட்டாமல் இருக்கிறதா உங்களுக்கு அதை தினமும் துலக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படி ஒரு பழக்கம் இருந்தால் அதெற்கென்று ஒரு டூத் பிரஷ்ஷும், டூத் பேஸ்ட்டும் வாங்கும் யோக்கிதை இருக்கிறதா? இவ்வளவு ‘இருக்கிறதா’வுக்கு உங்களிடம் ‘ஆமாங்க ஆமாம்’ என்ற பதில் இருந்தால் மட்டும் போதாது. அப்படிப்பட்ட உங்கள் மனம் கவர்ந்த, பல்லைக் கவர்ந்த டூத் பேஸ்ட்டில் என்னென்ன இருக்கின்றன என்பதையெல்லாம் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டபின்தான் அதை பிதுக்கி உங்கள் பிரஷ் மீது படர விட வேண்டும். இல்லையென்றால் நீங்கள் மீதமிருக்கும் உங்கள் பல்லை தேய்க்கும்போது தொபகடீரென்று வானத்திலிருந்தோ, மரத்தின் மேலிருந்தோ ஸ்பைடர் வுமன் (spider woman) கணக்காக ஒரு யுவதி படாலென்று இறங்கி வந்து “உங்க டூத் பேஸ்ட்லே காரம் இருக்கா, கசப்பு இருக்கா?” என்று உங்களை திடுக்கிடும்படி கேட்டு மிச்சமிருக்கும் பற்களையும் ஆமீதியில் ஆடச் செய்துவிடும் அபாயம் நேரலாம்.

உங்கள் டூத் பேஸ்ட்டில் இன்னின்ன மளிகை சாமான்கள் இருக்கவேண்டும் என்று போதனை செய்ய பேய் படங்களின் திடுக்கிட வைக்கும் யுக்தியை கையாள வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று அவர்களிடம் நம்மை கேட்க வைக்கிறது.

அந்த கால ஔவையார் மிகவும் அடக்க ஒடுக்கமாக ஒரே வரியில் ‘ஆலும் மேலும் பல்லுக்குறுதி’ என்று சொல்லிவிட்டு போனதை பரம்பரை பரம்பரையாக நம்முன்னோர்கள் பல் பராமரிப்புக்கு உகந்த போதனையாகக் கொண்டு முப்பத்திரண்டு பற்களையும் எண்பத்திரெண்டு வயதுக்கு மேலும் காப்பாற்றிக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.

அப்படியிருக்க ஔவை பாட்டியின் அதே அடக்கத்தோடு அட்வைஸ் பண்ணுவதைவிட்டுவிட்டு ஏதோ தமிழ்பட இன்கம்டாக்ஸ் அதிகாரிகளைப் போல் அதிரடியாக அதை விளம்பரப்படுத்துவதன் தாத்பர்யம் எனக்கு விளங்காதது ஒரு சோகம் என்றால், அடிக்கடி இவர்கள் புதிது புதிதாக டூத் பேஸ்ட்டில் அது இருக்கிறதா இது இருக்கிறதா என்று மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு மாதமும் மளிகை வாங்கப் போகும்போது தற்போதைய விளம்பர நிலவரப்படி எதுவோ அது இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் வெவ்வேறு டூத் பேஸ்ட் வெரைட்டிகளைத் தேடி அலையும் அவலத்தையும் அனுபவிக்க வேண்டியதாகியுள்ளது. விளம்பர ‘அப்டேட்’டின்படி பேரன், பேத்திகள் அடம்பிடிப்பதால் டூத் பேஸ்ட்டை மாற்ற வேண்டியிருக்கிறயன்றி, என் நினைவு தெரிந்து என் முதல் பல் சொத்தை ஆனதிலிருந்து நான் மீதமிருக்கும் பற்களை பராமரிக்க உபயோகிப்பது என் அப்பா கைப்பட தயாரிக்கும் அந்த ஆயுர்வேத பற்பொடியே!

உப்பு, புளி, காரம் என்று தற்போதைய விளம்பரங்களில் கேட்கப்படும் மளிகை சாமான்கள் போலன்றி படிகாரம், கிராம்பு போன்ற மூலிகை சாமான்களைக் கொண்டு அப்பா அதை தயாரிப்பார். சுக்கு இத்தனை ‘பலம்’, இந்துப்பு இத்தனை ‘பலம்’ என்று அந்த கால வீசை, பலம் எடை கணக்கில் லிஸ்ட் போட்டு மாதா மாதம் அவரே போய் நாட்டு மருந்து கடையில் வாங்கியதை தன் மாட்டுப் பெண்களிடம் கொடுத்து இடத்துத் தரச் சொல்வார். இதற்கு மாமனாரை கடிந்து கொள்ளும் மனோபாவம் கொண்டிராத என் மன்னிகள் மணிகணக்காக அதை இடித்து, சலித்து ‘அப்பா பல்பொடி’யை தயாரிப்பார்கள். அஷ்ட சூரணம் போல் மருந்து வாடை வீசும் அந்த பொடியை வீட்டில் நான் மட்டும் இஷ்டப்பட்டு தேய்த்ததில்லை. டூத் பேஸ்ட்தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிக் கொள்வேன். இப்படியொரு எதிர்மறையின் விளைவாக எனக்கு ஈறு கெட்டு பற்களும் ஆட்டம் கண்டுவிட்டபின்தான் அப்பா பல்பொடிக்கு மாறவேண்டியதாயிற்று. ஆனால் அதன் ஃபார்முலாவை அப்பா எழுதி வைக்காமல் பரலோகம் அடைந்து விட்ட நிலையில், அதே ஆயுர்வேத டேஸ்ட்டோடு கூடிய டூத் பேஸ்ட்டையும் டூத் பவுடரையும் கண்டுபிடித்து கடந்த பல வருடங்களாக பல் பாதுகாப்பு செய்துக் கொண்டிருக்கிறேன்.

பற்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது என்பது என் கவனத்தில் இருந்ததில்லை. அந்த காலத்தில் எங்காவது வெளியூருக்கு கல்யாணம் இத்யாதி விசேஷங்களுக்கு தனியாக போவதென்றால், எடுத்துபோகும் சாமான்களில் மிக கவனமாக மறந்து விடுபடும் பண்டம் இந்த டூர் பேஸ்ட், அல்லது டூத் பவுடராகத்தான் இருக்கும்.

விசேஷங்களுக்கு வந்திருக்கும் சொந்தபந்தங்களிடம் அர்த்த ராத்திரி வரை அரட்டை அடித்துவிட்டு தூங்கும் வரை இந்த பல் துலக்கும் வஸ்துவைப் பற்றி நினைவு வராது. விடியற்காலையில் எல்லோருக்கும் முன் காப்பிக்காக எழுந்து பல் தேய்க்கலாமென்று பையை திறக்கும்போதுதான் டூத் சமாச்சாரம் மறந்து போனது நினைவிற்கு வரும்.

அப்போது என்னுடன் தூங்கி எழுந்த ஆசாமி யாராவது பல் துலக்க தங்கள் பேஸ்ட்டை பிதுக்கும் தருணத்தில் என் ஒரு விரலையும் நீட்டி யாசகம் பெற என் பல்லைக் காட்டிய பழக்கம் எனக்குண்டு. அப்படியும் கல்யாண சத்திரத்தில் யாரும் எழுந்து தொலைக்காமல் போகும் சமயங்களில் கல்யாண மண்டப உக்ராண அறைக்கு சென்று (சமையலறை) அங்கிருந்து காபிப் பொடியையோ, உப்புப் பொடியையோ வாங்கி பற்களுக்கு துவர்ப்பு உரைப்பாக உபசாரம் செய்து பேருக்கு பல் துலக்கும் படலத்தை முடித்துக் கொள்வதுண்டு.

இத்தனை அனுபவமும் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பாடத்தைக் கற்று தந்திருந்தது. அது கற்றுத் தந்திருந்த பாடம் எப்போது எங்கு போவதென்றாலும் தந்த பேஸ்ட்டை கவனமாக கொண்டு போக வேண்டும் என்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால் அது பிசுகு.

அது என்ன என்பதை கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன் சமீப சமயத்தில் ஒரு கல்யாணத்திற்காக அதிகாலையிலேயே கிளம்பி கோவை ரயிலில் ஓட்டமும் நடையுமாக ஏறி உட்கார்ந்தாயிற்று. காப்பி தாகம் எடுக்கவே பல் துலக்கலாமென்று வாஷ் பேஷினுக்கு போனேன்.

திடுதெப்பென்று பின்னாலிருந்து “உங்க டூத் பேஸ்ட்லே உப்பு இருக்கா” என்று ஒரு குரல் கேட்டதில் திடுக்கட்டு திரும்பினேன்.

அட! என் பால்ய நண்பன் பலராமன் நின்றுக்கொண்டிருந்தான். என்னிடமே டூத் பேஸ்டை யாசகம் கேட்கும் ஆசாமி உண்டு என்பது தெரிந்தது.

”என் டூத் பேஸ்ட்டே உப்புதாம்பா” என்று நான் தேய்த்துக் கொண்டிருந்த உப்பை நீட்டினேன். இதுதான் நான் டூத் பேஸ்ட்டை மறந்துவிட்டு போன அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

இப்போது சொல்லுங்கள் “உங்க உப்பிலே டூத்பேஸ்ட் இருக்கா?”

கூடை

மொத்தம்

₹0