பட்டி

ஒட்டி உறவாடும் சுவரொட்டிகள்

ஒட்டி உறவாடும் சுவரொட்டிகள்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 3 நிமிடம் வாசிப்பு சமூகம்

அகிலா கார்த்திகேயன்

உச்சிமீது வான் இழந்து வீழுகின்றபோதிலும் அதை வாட்ஸ் அப்பில் இரண்டொரு வார்த்தைகளுக்குள் மெஸெஜ் ஆக்கி உலகமெலாம் பரப்பிவிடும் வசதி வந்துவிட்ட பின்பும் நம் உள்ளூர்வாசிகளுக்கு எதையுமே பெரிசாக சுவற்றில் ஒட்டி படிக்கச் செய்தால்தான் திருப்தி ஏற்படுவதுபோல தெரிகிறது.

பிரபல கட்சி தலைவர்களின் படங்கள் முழுபக்கமாகவோ அரை பக்கமாகவோ, கால் பக்கமாகவோ அந்தந்த சமயங்களின் சூழ்நிலை சங்கதிகளுக்கு ஏற்ப போடப்படும்போது அதேபோல் தாங்களும் போட்டுக் கொள்ளும் காலம் வராதா என்ற ஏக்கம் எல்லா தொண்டர்களின் மனதிலும் துளிர்விட்டுவிடுகின்றன. அந்த தொண்டனை ஒரு வட்ட செயலாளராகவோ அரைவட்ட பொருளாளராகவோ தலைவர் அங்கீகாரம் செய்துவிட்டால் அவனது ஆதங்கம் பீறிட்டு சுவரொட்டியாக அந்த பேட்டை முழுவதும் அவன் போட்டோ ஒட்டப்பட்டு விடுகிறது.

”வட்டப் பதவியை ஈந்த

பட்டை தீட்டிய வைரமே”

என்று தன் தலைவரான பட்டை தீட்டிய வைரத்தின் படத்தை போஸ்டரில் பாதி சைஸில் போட்டுவிட்டு தனது கைகூப்பிய பனிவு முகத்தையும் போட்டுக் கொள்ளும் வாய்ப்பு முதன்முதலாக அவனுக்கு கிட்டிவிடுகின்றது.

”ஓகோ இப்படி ஒரு ஆள் நம் பேட்டையில் இருக்கிறாரா” என்று அந்த போஸ்டர் மூலம்தான் அத்தனை பேட்டை மக்களுக்கும் தெரிய வருகின்றது.

பின்பு படிப்படியாக அந்த பேட்டை தண்ணீர் பந்தல் திறப்பு, புதிய ஹோட்டல் திறப்பு, செல்போன் கடை திறப்பு இத்யாதிகளில் அந்த வட்டத் தலைவரின் முகம் சுவரொட்டிகளில் பல் இளித்தபடி காட்சிதர ஆரம்பிக்கிறது.

இப்படி நாளொரு போஸ்டரும், பொழுதுதொரு பிளக்ஸ் போர்டுமாக அவர் கீர்த்தி வளர்ந்து

”குப்புசாமி இல்ல திருமணத்திற்கு

வருகைதரும் வள்ளலே.”

என்று இந்த சாமானிய தொண்டனை ஒரு அமைச்சராகவே வரவேற்கும் உச்சநிலைக்கு இந்த வால்போஸ்டர் என்ற சாதனம் தொண்டு செய்துவிடுகின்றது.

ஆனால் அந்த சுவரொட்டி மோகம் மற்றவர்களையும் விட்டு வைக்கவில்லை. முன்பெல்லாம் வீட்டோடு செய்து வந்த விழாக்களுக்கெல்லாம் இப்போது வீதிவீதியாக எல்லார் வீட்டு சுவர்களிலும் பாழாக்க ஆரம்பித்துவிட்டனர்.

”ஒரு வயது காணும்

ஒப்பிலா மணியே”

என்று ஆயுட்ச ஹோமம் காணும் பாலகனின் படத்தோடு சுற்றிலும் அவனது பாட்டி, தாத்தா, அத்தை, மாமா என்ற அத்தனை உறவுகளையும் கையில் பூச்செண்டுடன் போட்டு விடுகிறார்கள். ஒருமுறை மேடவாக்கத்தில் ‘நீ பர்த்டேவுக்கு வரலேன்னா உன் பேச்சி கா” என்ற வாக்யத்தோடு ஒரு பாலகனை பெரிய சைஸில் போட்டு அவன் தன் நண்ப பாலகர்களை அன்புடன் அழைப்பதாக பெரிய பேனரையே வைத்திருப்பதை மெய்யாலுமே பார்த்தேன்.

அடுத்து மிகவும் அடுக்காத போஸ்டர்களாக கருதப்படுபவை பூப்பெய்தும் மகளீருக்கு மட்டுமேயான சமாசாரத்திற்கு ஒட்டப்படுபவைகளாகும். அந்த வெட்கப்படும் பெண்ணை சர்வ அலங்காரத்துடன் போட்டு நாலைந்து நடுவயது மகளீரும் கழுத்திலும் காதிலும் நகைகளாக தொங்க அப்பெண்ணிற்கு ஆரத்தி எடுப்பதுபோல வீதி எங்கும் பேனரும் போஸ்டருமாக பரப்பி அப்பெண் நந்நீராடுவதை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.

இப்போதெல்லாம் மணமக்களை வாழ்த்த தாதுண்டு வாழ்த்துமடடெல்லாம் வாசிப்பதில்லை. மாலையும் கழுத்துமாக மணமக்களை நிற்க வைத்து ‘இல்லற படகில் இரண்டு மனங்களும் இணைய வாழ்த்தும்’ என்று போட்டுவிட்டு அந்த படகில் பொக்கேயை நீட்டிக்கொண்டு ஒரு நண்பர்களின் பட்டாளமே ஒரு குரூப் போட்டோவாக இணைந்துவிடுகிறார்கள். அந்த மணமகன் யாரோ ஒரு நடிகரின் ரசிகனாக இருந்து தொலைந்துவிட்டால், ஏதோ அவன் கல்யாணத்திற்கு தன் கால்ஷீட்டையெல்லாம் ஒதுக்கிவிட்டு அந்த நடிகரே வரப்போகிறாரோ என்று எல்லோரும் எதிர்பார்க்கும வகையில் அந்த நடிகர் பெரிய பெரிய பேனர்களில் கல்யாணகோல ரசிகரை வாழ்த்திக் கொண்டிருப்பார்.

‘எங்கள் கல்லூரியின் முதல் மார்க் மாணவர்கள்’ என்று சாதனையாளர்களின் போட்டோக்களை போஸ்டராக ஒட்டுவதில் தப்பேயில்லை. ஆனால் அப்படிப்பட்ட சாதனை ஏதும் செய்ய முடியாமல் போன மாணவன் ஒருவனுக்கு தனியார் இன்ஜினீரியங் காலேஜில் இடம் கிடைத்துவிட்டதற்கு,

‘பொறியில் கல்லூரியில்

காலடி பதித்து சாதனை படைக்கும்

பொன்னுரங்கம் அவர்களின்

தங்க மகனே’

என்றெல்லாம் அந்த மக்கு மாணவனுக்கும் சுவரொட்டி அந்தஸ்து கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படி வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் எல்லோருக்கும் சுவரொட்டி பிராப்தம் கிடைக்கும் வாய்பிருந்தும் அது நிறைவேறாத பட்சத்தில் அவனுக்கு அவனது ஆத்மா சாந்தியடையும் வகையில் ‘இறைவனடி சேர்ந்தார்’ ‘கண்ணீர் அஞ்சலி’ என்றெல்லாம் போட்டு வேறு யாருக்கும் பங்கு கொடுக்காமல் அவருடைய படத்தை மட்டுமே போட்டு சுவரொட்டியை சமர்ப்பித்து வருகிறார்கள்.

அப்போதும் அந்த ஆத்மா சாந்தியடையாவிட்டால் முதலாண்டு நினைவு நாள் முப்பதாண்டு நினைவு நாள் என்று அந்த ஆசாமியை வருடா வருடம் சுவரொட்டியாக்கி அதற்கான முயற்சிகளை தொடர்கிறார்கள்.

ஆக நம் வாழ்க்கை பயணம் முழுவதும் ஒட்டி உறவாடும் ஒரே உறவு சுவரொட்டி என்றாகிவிட்டிதென்பது உண்மையே!

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

தொடர்புடைய கதைகள்

பலே தீபாவளி
சமூகம் கதை

பலே தீபாவளி

சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை..

5 நிமிடம்
ஈ‘ஷி’யா போட்ட வடாம்!
சமூகம் கதை

ஈ‘ஷி’யா போட்ட வடாம்!

தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகளோடு கூட்டணிக்காக ஈஷிக்கொள்வதுபோல வனஜா மாமி கிளறி இறக்கியிருந்த வடாம் மாவு, பாத்திரத்தையும் கரண்டியையும் பற்றிக்கொண்டு விடுவேனா ...

4 நிமிடம்
வாங்க மாமா!வாங்காம வாங்க மாமா!
சமூகம் கதை

வாங்க மாமா!வாங்காம வாங்க மாமா!

அது என்னவோ தெரியவில்லை இப்போதெல்லாம் ஒருவர் வீட்டிற்கு மெனக்கெட்டு யாரும் போவதே அரிதாகிவிட்டது. அப்படியே போனாலும் அந்த வீட்டிற்கு என்ன வாங்கிப் போவது என்பத...

2 நிமிடம்

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0