பட்டி

ஒரு ஸ்வீட் வியாதி படும் இளக்காரம்!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் நகைச்சுவை
Story Image
ஷுகர் பேஷன்ட் என்று சொல்லிக்கொள்வது இப்போதெல்லாம் ஒரு கெளரவ அந்தஸ்தாக கருதப்படுகிறது...

Share this story:

’ஷுகர் பேஷன்ட்’ என்று சொல்லிக்கொள்வது இப்போதெல்லாம் ஒரு கெளரவ அந்தஸ்தாக கருதப்படுகிறது.

”விஜி… ரொம்ப பலஹினமா இருக்குன்னு டாக்டர்கிட்டே போனேன். ஷுகர் இருக்கான்னு டெஸ்ட் பண்ண எழுதி கொடுத்தார். டெஸ்ட் ரிஸல்ட் என்னவாயிருக்குமோன்னு பயந்தேன்… நல்ல வேளையா லிமிட்டுக்கு மேலேயே ஷுகர் இருக்குன்னு தெரிஞ்சது… 160 தும் 280 தும் இருக்கு… உனக்கு எத்தனையிருக்குன்னு சொன்னே… ஓகோ 140, 200 றா? என்னைவிட ரொம்ப குறைச்சல்தான்… நான் கொஞ்சம் பெட்டர் பொஸிஷன்லே இருக்கேன் போலிருக்கு” என் மனைவி அகிலா தன் கன்னி ரத்த சர்க்கரை பரிசோதனையில் தான் பெற்ற வெற்றியைப்போல் தன் தங்கையிடம் இப்படி தன் பிளட்ஷுகர் வீர்யத்தை ​ஸெல்லில் பெருமையாக பேசிக் கொண்டிருந்தாள்.

”அப்புறமென்ன உன்னை மாதிரி நானும் காலங்கார்த்தாலே வாக்கிங் போகணுமாம்… காபிலே துளி சர்க்கரைக்கூட போட்டுக்கக் கூடாதாம்… ஒவ்வொருத்தர் வீட்டுக்கு நாம’கெஸ்ட்’டா போறப்ப அவங்க காபி கலந்துட்டு சர்க்கரை போடலாமான்னு கேட்கறப்ப போடலாம்னு சொல்லிக்கிறதுக்கு ஒரே வெட்கமா இருக்கும். ‘இனிமே எங்க வீட்டுகாரருக்கு மட்டும் போடுங்க எனக்கு வேண்டாம்’னு சொல்லிக்கலாம் பாரு.”

இப்படி பெருமைபடத்தக்க பேஷன்ட்டுக்களாய் சர்க்கரை வியாதிகாரர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். துன்பம் வரும் நேரங்களில் சிரிங்க என்பதுபோல் சர்க்கரை வரும் நேரங்களில் இவர்களுக்கு சங்கடம் நேருவதில்லை. சர்க்கரை கசப்பதில்லை. மெய்யாலுமே அவர்களுக்கு ஷுகரும், ஷுகர் வியாதியும் தித்திக்க ஆரம்பித்துவிட்டன.

”எங்க தாத்தா சர்க்கரை வியாதி வந்து ரொம்ப அவஸ்தைப் படுவார்… காலிலே ஒரு காயம்பட்டா ஆறாம ரொம்ப நாளா படுத்தும். இப்போ பரம்பரையாக வந்த வியாதியா எனக்கும்தான் வந்திருக்கு. பசிக்கறப்ப மொத்தமா சாப்பிடாமே அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா சாப்டுட்டு நடுவிலே மாத்திரையையும் விழுங்கிட்டு வந்தா கட்டுப்பாட்டிலே இருக்கப் போறது” என்று சிலபேர் தாங்கள் அவ்வியாதியை எதிர்கொள்ளும் பராக்கிரமத்தை பறைசாற்றிக் கொண்டும் திரிய ஆரம்பித்துவிட்டனர்.

”நான் ஷுகர் பேஷன்ட்! பசி தாங்காது கார்த்தாலே காபி குடிச்சுட்டு மட்டா நாலு இட்லியை எட்டு மணிக்கு சாப்பிட்டதுதான். பத்து மணி வரைக்கும் வயத்திலே எதையும் போட்டுக்கலே… ஷுகர் மாத்திரையை வேற சாப்பிட்டாகணும்… வோட்ஸ் கஞ்சியோ பூஸ்ட்டோ ரெண்டு டம்ளர் கலந்து கொடேன்… குடிச்சிட்டு மாத்திரை சாப்பிடறேன்” என்று தனக்கு வந்திருக்கும் நீரிழிவு நோயை மிக சாதகமாக சாப்பாட்டு விஷயங்களில் சாதித்துக்கொள்ள சாமர்த்தியமாக பிரயோகப்படுத்திக் கொள்பவர்களும் உண்டு. யார் வீட்டு கல்யாணங்களுக்கோ விசேஷங்களுக்கோ இவர்கள் போகும்போது மாத்திரை போட்டுக் கொள்வதை அறிவித்து பிரத்யேகமாக இவர்களுக்கென காலை டிபன் செய்தாக வேண்டிய நிர்பந்தம் சாப்பிட்டவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ”ஒரேயடியாக சாப்பிடாம பிரேக் பண்ணி சாப்பிடணும்” என்று டாக்டர் என் மனைவிக்கு அட்வைஸ் செய்தார். வெளியே வந்ததும் என் மனைவி டாக்டரை நொந்துக் கொண்டாள்.

”என்ன இந்த டாக்டர் பிரேக் பண்ணி சாப்பிடணும்னு அட்வைஸ் பண்றார்… நாம அப்படியேவா முழுசா முழுங்குவோம்? எல்லாத்தையும் பிரேக் பண்ணிதானே சாப்பிடுவோம்… சீடைன்னா முழுசா வாயிலே போட்டுக்கலாம். லட்டோ, ஜாங்கியோ பிரேக் பண்ணாம சாப்பிட முடியுமா என்ன… இதைப்போய் பெரிசா சொல்லி அனுப்பறாரே” என்று கேட்டு என்னை நோகடித்தாள்.

இதுபோன்று நகைப்புக்கும் இந்த நோய் இடமாகி போயிருக்க பல நோயாளிகள் புதிதாக உருவாகும் ஷுகர் நோயாளிகளுக்கு தாங்களே இலவச பிரிஸ்கிரிப்ஷன் சொல்லும் அளவிற்கு இந்த வியாதி மிகவும் கேவலமாகியும் போய்விட்டது.

”இங்கிலீஷ் டாக்டர் ரொம்பவும் பயமுறுத்தினார். எங்க வீட்டு பக்கத்திலே ஒரு சித்த வைத்தியர் ஒரு கஷாயம் கொடுத்தார். ராத்திரி நல்லா கொதிக்க வைச்சுட்டு காலங்கார்த்தாலே அரை டம்ளர் குடிச்சுட்டா போதும் அப்புறம் எத்தனை கிலோ சக்கரையையும் சாப்பிட்டாலும் ஒண்ணுமே பண்றதில்லே… உன்னை அவர்கிட்டே அழைச்சுண்டு போலாம்னு பார்த்தா அந்த சித்த வைத்தியர் போன மாசம்தான் சித்தியாயிட்டாராம்…” என்பார்கள் சிலபேர்.

இன்னும் சிலரோ இந்த வியாதி தனக்கும் வரவில்லையே என்று ஏங்கும் வகையில் ”பத்மா பூசணிக்காய் கணக்கா பொதுபொதுன்னு இருந்தவ இப்போ உடம்பு சப்புனு இளைச்சி ரொம்ப சிலிம்மாயிட்டா. எப்படின்னு கேட்டா ஷுகர் வந்ததுலே உடம்பு எளைச்சு போச்சுங்கறா… எனக்கு ரத்தத்திலே சர்க்கரை கலக்காதான்னு ஏக்கமா இருக்கு… அவளைப்போல உடம்பு சிலிம்மாகனுமேன்னு கவலையா இருக்கு” என்று மனமார இந்த நோயை வரவேற்கும் அவலமும் நேர்ந்துவிட்டது.

”முன்னாடியெல்லாம் கிருத்திகை, ஏகாதசின்னு ஏகப்பட்ட விரதங்கள் இருந்தாச்சு. இந்த ஷுகர் வந்ததும் வேளாவேளைக்கு ஏதாவது சாப்பிடனும்கிறதாலே எல்லா விரதத்தையும் விட்டாச்சு” என்று டபாய்த்து தப்பித்துக் கொள்ளவும் இந்த டயபடீஸ் ஒத்தாசை செய்கிறது.

”என் மாமியார் அல்வா, அதிசரம்னு விழுங்கிண்டிருப்பா. சர்க்கரை வியாதீன்னதும் அத்தனையும் ‘கட்’. காப்பிக்குகூட துளி சக்கரை போடாம கொடுக்கறேன்… நல்லா தவிக்கிறா போயேன்” பாதிக்கப்பட்டவர்களை பழிவாங்கவும் இழிவு படுத்தவும் நீரிழிவு நோய் கையாளப்படுகிறது.

ஆக மொத்தம் முன்பெல்லாம் எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டிருந்த இந்த ஸ்வீட் சமாசார வியாதி இப்போதெல்லாம் இளக்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கூடை

மொத்தம்

₹0