ஒரு அதிரடி அட்டாக் !
ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி சாதுசங்கரனுக்கு இப்படி ஒரு உத்தரவு வந்து தொலைந்திருந்தது.
“ஓய் மிஸ்டர் சாதுசங்கரன். உங்கமேலே டிபார்ட்மெண்ட் வைச்சிருக்கிற நம்பிக்கையாலத்தான் இந்த “கேஸை’ உங்ககிட்டே ஒப்படைச்சிருக்காங்க. நீங்க ரொம்ப சாதுர்யமா அந்த ஆளை டீல்: பண்ணி எப்படியும் அந்த ஃபைலை கொண்டு வந்துடுவீங்கன்னு நானும் நம்பறேன். ஆனா அந்த ஆளு சாமான்யப்பட்டவரல்ல. இதுவரை விசாரணைக்கு போன எல்லா ஆபிஸர்களுக்கும் கடுக்காய் கொடுத்து அனுப்பியிருக்கார். அவர்கிட்டே “சக்ஸஸ்புல்*லாக அவங்க சாதிச்சிட்டு வராததாலே எல்லாருக்கும் டிபார்ட்மென்ட் பனிஷ்மென்ட் கிடைச்சிருக்கு… அதனால அவங்க பிரோமோஷன், இங்கிரிமெண்ட் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கு. இப்போ கூட நீங்க இந்த கேஸை கோட்டை விட்டுட்டு வந்தீங்கன்னா உங்க ரிடையர்மென்ட்டுக்கு பிரச்சனை ஆயிடும்… அதனாலே ரொம்பவும் கேர்ஃபுல்லா விசாரணை பண்ணி காரியத்தை சாதிச்சிட்டு வாங்க… அரட்டல் உருட்டல் னு பண்ணி அவரு போய் ஹாஸ்பிடல்லே அட்மிட் ஆயிட்டார்னா உங்க ரிடையர்மென்ட்டை அட்மிட் பண்ண மாட்டாங்க ஜாக்கிரதை.”
இப்படி எக்கச்சக்க எச்சரிக்கையுடன் மேலதிகாரி கொடுத்த அந்த உத்தரவு அடங்கிய உரையை வாங்கியபோது சாதுகங்கரனுக்கு தன் உதறலை அடக்க முடியவில்லை.
தொழலதிபர் பிச்சைபெரும்கீர்த்தி ஒரு பச்சை அடாவடி பேர்வழி என்பதை சாதுசங்கரன் நன்றாகவே அறிந்திருந்தார். சொத்து குவிப்பு, வரி ஏய்ப்பு, பண மோசடி செய்து தப்பிக்கும் வித்தையை பிச்சை பெரும்கீர்த்தி தெரிந்து வைத்திருந்தார். எத்தனை விசாரணை என்றாலும் அசராமல் எதிர்கொள்ளும் “அட்டாக்’ கால் பாதிக்காத “ஹார்ட்’ படைத்தவராக இருந்தார்.
மேலும் வரிஏய்ப்பு மற்றும் சொத்துகுவிப்போர் சங்கத்தின் தலைவராகவும் அமலாக்கத் துறையினரின் அத்துமீறல்களை கண்டித்து பல அறப்போராட்டங்களை நடத்தியவர். இதன் மூலம் அறிவிப்பின்றி திடுதெப்பென்று ரெய்டுக்கு வருவது, மூடியிருக்கும் “கேட்‘டை யாரையும் கேட்காமல் எகிறி குதிப்பது, முழுமூச்சாய் முக்கால்மணி நேரம் தொடர்ச்சியாய் விசாரணை செய்து மன உளைச்சலை ஏற்படுத்துவது போன்ற அட்௫ழியங்களிலிருந்து அங்கத்தினரை பாதுகாக்க பாடுபட்டுக் கொண்டிருப்பவர்.
தன் அனுபவங்கள் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ரெய்டினை எதிர்கொள்ள ரெண்டாயிரம் யுக்திகள்”, “அமலாக்க விசாரணைகளில் அசராமல் இருப்பது எப்படி?” போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
இப்பேர்பட்ட கில்லாடி பேர்வழியிடமிருந்து அந்த குறிப்பிட்ட கோப்பை கைப்பற்ற பல அதிகாரிகளை அனுப்பியும் பயனில்லாத நிலையில், நாற்பது வருட சர்வீஸில் நானூறுக்கும் மேலான மோசடி பேர்வழிகளை வெற்றிகரமாக விசாரணை செய்து மாட்ட வைத்திருக்கும் சாதுசங்கரனை பெரிதும் நம்பித்தான் இந்த கேஸை ஒப்படைத்திருந்தனர். கூடவே ரிடையர்மென்ட் பற்றி அச்சுறுத்தி அதன்மூலம் அவரை அதிக கவனமாக இயக்கவும் முயற்சித்துள்ளனர்.
சாதுசங்கரனின் திறமையின் மீது பொறாமை கொண்ட சக அதிகாரிகள் “அவரோட கேஸையா கொடுத்திருக்காங்க… நாங்க எத்தனை பேர் முட்டி மோதியிருக்கோம்… போங்க… போய்பாருங்க… அந்த ஆளு எல்லாரையும் ஏமாத்தி ஏப்பம் வுடறவன்… உங்களுக்கு மட்டும் ஃபைலை தூக்கி தந்துடற போறானாக்கும்… நீங்க பென்ஷன் வாங்கறது சந்தேகம்தான்” என்ற ரீதியில் இவரை கதி கலக்கிக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக ஒரு நன்னாளில் தன் உதவியாளர்கள், போலீஸ் படைகளோடு சாதுசங்கரன் விசாரணைக்காக கிளம்பி, வழியில் தன் இஷ்ட தெய்வத்தின் கோயிலுக்கு சென்று தன் கஷ்டத்தை முறையிட்டு அர்ச்சனையையும் செய்துவிட்டு பிச்சை பெரும்கீர்த்தியின் பங்களாவை காரில் நெருங்கினார்.
அப்போது அந்த பங்களாவின் அருகில் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்தவருக்கு ‘இதென்னடா அமலாக்க விசாரணையில் அபசகுனமாக ஆம்புலன்ஸ் தென்படுகிறதே’ என்று ஒரு கிலி உண்டானது.
ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் படையுடன் பங்களாவிற்குள் நுழைந்தவரை பெரும்கீர்த்தி,
“ஐயா வாங்க… எல்லாரும் வாங்க… ஏழு மணிக்கு வர்றதா தகவல் கொடுத்திருந்தீங்க… ஒரு மணி நேரம் ‘லேட்’ டா வந்திருக்கீங்க… நீங்க வருவீங்கன்னு டிபன் கூட சாப்பிடாம காத்துகிட்டு இருக்கேன்.. வாங்க எல்லோரும் சூடா டிபன், காபி சாப்டுட்டு விசாரணையை ஆரம்பிக்கலாம்” என்று அலட்டிக் கொள்ளாமல் வரவேற்றார்.
“ஹி! ஹி! உங்களுக்கு இன்னிக்கு பர்த்டே ன்னு சொன்னாங்க… அதனாலே கோயிலுக்கு போய் உங்க பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு வந்தோம் அதான் லேட் ஆயிடுச்சி. இந்தாங்க கோயில் பிரசாதம். நாங்க எல்லோருமே கோயில்லே கொடுத்த பொங்கலை சாப்டுட்டோம். அதனாலே நீங்க மட்டும் போய் சாப்டுட்டு சீக்கிரம் வந்துட்டீங்கன்னா ராவு காலத்துக்கு முன்னால விசாரணையை தொடங்கிவிடலாம்” என்று சாதுசங்கரனும் சமாளித்தாலும் மனதுள் இந்த ஆளிடம் எப்படி விசாரணை செய்ய போகிறோம் என்று பக்பக் கென்று அடித்துக் கொண்டுதான் இருந்தது.
முதலில் தன் உதவியாளர்களை பங்களா முழுவதிலும் அந்த கோப்பை மூலைமுடுக்கு விடாமல் தேடச் சொல்லி அனுப்பிவிட்டு பெரும்கீர்த்தி சாப்பிட்டு வரும் வரை காத்திருந்தார்.
சற்று நேரத்தில் நிதானமாக ஏப்பம் விட்டபடி எதிரில் வந்து உட்கார்ந்தவரிடம் எப்படி விசாரணை தொடங்குவது என்று புரியாதவராய் சாதுசங்கரன் “உட்காருங்க ஸார்… உங்க ஹெல்த் எப்படி? இருக்கு உங்க பினாமிங்க எல்லாம் செளக்கியமா?” என்று நமுட்டு சிரிப்போடு கேட்டார்.
இதுவரை வந்த எந்த அதிகாரியும் இப்படி கிண்டலாக பேசி அறியாதவராய் பெரும்கீர்த்தி அதே நக்கலுடன் “அவங்களுக்கென்ன நல்லா சுகமாகத்தான் இருக்கானுங்க… அத்தனை பேரையும் வைச்சி மேய்க்கறது பேஜாரா இருக்கு! பினாமிங்களை மெய்ன்டெய்ன் பண்ண நிறைய செலவாகுது… இதுக்கு உங்க ஐ.டி. காரங்க வரிவிலக்கு கொடுத்தா புண்ணியமா இருக்கும்” என்று கலாய்த்தார்.
“நீங்க ஒண்ணு இனிமே யாரும் ஐநூறுக்கு மேலே பினாமிங்களை வைச்சுக்கக் கூடாதுன்னு அதுக்கு ஒரு உச்சவரம்பு சட்டம் னு கொண்டு வரணும்னு யோசனை பண்ணிட்டிருக்கோம். கூடவே ரொம்பவும் குக்கிராமங்களுக்கு போய் பினாமிகளை விசாரணை செய்றவங்களுக்கு அங்கே சாப்பிட ஹோட்டல் வசதி எதுவும் இல்லாததாலே ஒரு ‘குக்’ கையும் சமைச்சுபோட அனுப்பணும்னு கேட்டிருக்கோம்” என்று சாதுசங்கரனும் சகட்டுமேனிக்கு அளந்துவிட்டார்.
இப்படி கிண்டலும் கேலியுமாக ஆரம்பித்த விசாரணையை துளிகூட கெடுபிடி செய்யாமல் சாதுசங்கரன் நடத்திக் கொண்டிருக்க, பெரும்கீர்த்தியும் இடை இடையே எல்லோரையும் மிக்சர், டீ, காபி என்று உபசரித்தபடி கொஞ்சமும் பிடி கொடுக்காமல் ஈடு கொடுக்க, இந்த அமலாக்க விசாரணை, அவல் உப்புமா ஆக்குவது எப்படி என்று இரு அம்மணிகள் பேசி, டி.வி. சமையல் நிகழ்ச்சி நடத்துவது போன்ற ரீதியில் சென்றுக் கொண்டிருந்தது.
சந்தடிசாக்கில் சாதுகங்கரன் &ஃபைலைப் பற்றி கேட்காமலில்லை. அதற்கு “எனக்கு பைல்ஸ் கம்ப்ளெய்ண்ட் எதுவுமில்லே. இப்போ உங்ககூட இத்தனை நேரமா ஒரே இடத்திலே உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கிறதாலே இனிமே வருமோ என்னமோ” என்று பெரும்கீர்த்தி நக்கலடித்தார்.
“ஸார்! நான் கோப்பு பத்தி கேக்கறேன்” என்று இவர் விடாமல் கேட்க,
“அட அந்த அயோக்கிய பய கோபுவைப்பத்தி கேட்கறீங்களா?… என்னோட ஒண்ணுவிட்ட அத்தையோட பேரன்கூட சிநேகிதன்னு என்னோட பினாமியா செலக்ட் பண்ணினேன். அந்த பேமானி அந்த சொத்தை அவன் பேர்லேயே ரிஜிஸ்டர் பண்ணிட்டு என்னை ஏமாத்திட்டான். இப்போ அவன் தனியாவே சொத்துகுவிக்க ஆரம்பிச்சுட்டுதா சொல்றாங்க… உங்க டிபார்ட்மெண்ட் விசாரணை லிஸ்ட்டிலே இருக்கானா என்ன?” இப்படி படு கூலாக பதிலளித்து வெறுப்பேற்றினார்.
தன் முயற்சியில் தளராமல் சாதுசங்கரன் “பென்டிரைவ் ஏதாவது வைச்சிருந்தா காட்றீங்களா?” என்றார்.
“டேய் அந்த அமுதாவை வரச் சொல்றா” என்று தன் வாட்ச்மேனிடம் குரல் கொடுக்க சற்று நேரத்தில் ஒரு பெண்மணி வந்து நின்று இவருக்கு வணக்கம் சொன்னாள். பெரும்கீர்த்தியின் இவள் ஆபிஸ் அஸிஸ்டன்ட் போலிருக்கிறது. இவளிடம் பென்ட்ரைவ்களை ஒப்படைத்திருப்பாரோ என்னவோ என்று சாதுசங்கரன் அந்த பெண்ணிடம் கேட்க தொடங்குவதற்குமுன் பெரும்கீர்த்தி,
“இந்த பொண்ணுதான் ஸார்… என்னோட ஆம்புலன்ஸ் டிரைவரா இருக்கு. என் காருங்க எல்லாத்துக்கும் ஆம்பள டிரைவர்தான். ஆனா ஆம்புலன்ஸ்சுக்கு மட்டும் பொறுப்பா இருக்கணும்னு பெண் டிரைவரை டோட்டிருக்கேன்… இதுமாதிரி விசாரணைக்கு நீங்க வரும்போது நேரம் காலம் போறது தெரியாம இருக்கிறதாலே எப்பவும் ஆம்புலன்ஸ்ஸை ரெடியா வைச்சிருப்பேன். அதுக்கு பொம்பளை டிரைவரா இருந்தாதானே நல்லது பொறுமையாவும் இருப்பாங்க” என்று பொறுமையை சோதித்தார்.
இப்படி சாமர்த்தியமாக பெரும்கீர்த்தி சதாய்த்துக் கொண்டிருக்க, சாதுசங்கரன் நம்பிக்கையை இழந்தார். இனிமேலும் இப்படி விசாரணையை தொடராமல் கொஞ்சம் கடுமையாக முயற்சித்தால் என்ன என்றும் எண்ணினார். ஆனால் மற்றவர்கள் போலல்லாமல் இவர் ஆம்புலன்ஸ் ஒன்றையே தயாராக வைத்துள்ளதால், சற்றே அதட்டி உருட்டலாக விசாரணை மாறினாலும், இவர் மார்பை பிடித்துக் கொண்டு ஆம்புலன்ஸில் பறந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுவிடும்… அதன் பின் விளைவாக ஒழுங்காக ரிடையர்மென்ட் பெற முடியாமல் தனக்கும் “ஹார்ட் அட்டாக்: வந்தாலும் வரக்கூடும்… இப்படி எண்ணி குழப்பிக் கொண்டிருந்தவருக்கு சட்டென ஒரு ஐடியா தோன்றியது.
அதன்படி, ஒருவேளை பெரும்கீர்த்தி முந்திக் கொள்வதற்குள் தனக்கே ‘அட்டாக்’ வந்து விட்டதுபோல் நடித்தால் என்ன என்று நினைத்தார். அது நல்ல யோசனையாகவே இவருக்கு தோன்றியது. விசாரணையின்டோது விசாரிக்கும் அதிகாரிக்கும் மனஉளைச்சல் ஏற்படலாமல்லவா… அப்படி நடித்தால் தயாராக காத்திருக்கும் ஆம்புலன்ஸில் ஏதாவதொரு ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். சோதனை செய்யும் டாக்டர்களும் அறுபது வயதை நெருங்கும் தன் ஹார்ட்டில் ஏதாவது ஓட்டை, உடைசலை கண்டுபிடிக்காமல் விடமாட்டார்கள். இப்படி மருத்துவ பரிசோதனை, கண்காணிப்பு என்று எப்படியும் இரண்டு வாரங்களை தன் ரிடையர்மெண்ட் நாள்வரை மருத்துவ விடுப்பாக ஓட்டிவிடலாம். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒழுங்காக பணி ஓய்வு தந்தாக வேண்டும்.
இப்படி மனதுள் யோசித்துக் கொண்டிருந்தவர் உடனே கொஞ்ச நேரத்தையும் வீணாக்காமல் நெஞ்சை பிடித்துக் கொண்டு “அம்மா அப்பா ஐயோ” என்று சோபாவில் விழுந்து துடிப்பது போல் நடிக்க தொடங்கிவிட்டார்.
----------------முடிவு 1--------------------
இதை சற்றும் எதிர்பார்க்காத இப்படி ஒரு அதிரடி “அட்டாக்‘கால் கலவரமடைந்து அவரைக் காப்பாற்ற முற்பட்டனர்.
“அடடா! நல்லாதானே பேசிகிட்டு இருந்தாரு… திடீர்னு இப்படி ஆய்போச்சே” என்று பெரும்கீர்த்தியும் பரிதாபப்பட்டு, விசாரணைக்கு வந்த அதிகாரிக்கு ஏதாவது ஒன்றென்றால் அது தன்னையும் பாதிக்கும் என்ற பயத்தில் கவலையும் அக்கறையுமாக அவரை ஆம்புலன்ஸில் தன் பினாமி மருத்துவமனைக்கு அனுப்பி கவனமாக சிகிச்சை அளிக்கச் சொன்னார்.
அதன்படி தன் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த சாதுசங்கரனை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார் நமக்கே தெரியாமல் ஏதாவது எங்கேயாவது அடைப்பு இருக்குமோ என்ற தேடி கண்டுபிடிக்கவே சில நாட்கள் ஆகிவிட்டன.
அதற்குள் ரிடையர்மெண்ட் நாளும் நெருங்கிவிட, ஒழுங்காக அவருக்கு பணிஓய்வு உத்தரவை மருத்துவமனைக்கே வந்து தந்ததுடன் அங்கேயே அவரது பிரிவு உபசார விழாவையும் செய்யும் நிர்பந்தத்துக்கு அவரது துறையினர் தள்ளப்பட்டுவிட்டனர்.
எது எப்படியோ, இப்டோதெல்லாம் பிச்சை பெரும்கீர்த்தி “பாத்தீங்களா என்னை விசாரிக்க வந்த அதிகாரிக்கே அட்டாக் வர மாதிரி பண்ணிட்டேன்” என்று தன் சகாக்களிடம் பெருமை பீற்றிக் கொள்ளும் அவலநிலை உண்டாகிவிட்டது.
--------------------முடிவு 2--------------------
வலியால் துடிப்பதுபோல் நடித்துக் கொண்டிருந்த சாதுசங்கரனை அவரது உதவியாளர்களும் போலிசுமாக சேர்ந்து பரபரப்புடன் தூக்கிக் கொண்டுபோய் தயாராய் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி அதிலிருந்த படுக்கையில் கிடத்தினர்.
அவர்களைவிட மிக பதற்றத்துடன் பெரும்கீர்த்தியும் பின்தொடர்ந்து ஆம்புலன்ஸில் ஏறி சாதுசங்கரனின் படுக்கையை நெருங்கி “பாவம் மயக்கமா இருக்காரு… இந்த மாதிரி நேரங்களிலே மூளைக்கு நல்லா ரத்தம் பாயணும்… அதனாலே தலையணை வேண்டாம் எடுத்துடலாம்” என்று மிகவும் கரிசனபடுபவர்போல் காட்டிக்கொண்டு சாதுசங்கரனின் தலையைத் தூக்கி அந்த தலையணையை உதுவிட அவசரப்பட்டார்.
மயக்கமாக நடித்துக் கொண்டிருந்த சாதுசங்கரனின் அமலாக்க மூளையில் அப்போது உடனே ஒரு சந்தேகம் எழ உஷாரானவராய் உருவவிருந்த தலையணையை கெட்டியாக பிடித்தபடி தடாலென எழுந்து உட்கார்ந்து அனைவரையும் திடுக்கிட வைத்தார்.
மலைத்து நின்ற உதவியாளர் ஒருவரிடம் அந்த தலையணையை தந்து அதை கிழித்து பிரித்து மேய உத்தரவிட, அப்போது அதில் அடைத்திருந்த பஞ்சுகளுக்கு இடையே பதுக்கப்பட்டிருந்த அந்த பைல் தொபகடீர் என்று விழுந்தது.
இதைப் பார்த்த அதிர்ச்சியில் மெய்யாலுமே மயக்கம் வந்துவிட்டதில் பிச்சை பெரும்கீர்த்தியும் தொபகடீர் என்று அந்த ஆம்புலன்ஸ் படுக்கையில் விழுந்தார். அவரை அவசரமாக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
அதே சமயம் வேறு எதற்கோ பொய்யாக நடித்த சாதுசங்கரனுக்கு அவரே எதிர்பாராத விதமாக அந்த கோப்பு கிடைத்ததை “ஆம்புலன்ஸிலே அந்த ஃபைல் இருக்கலாம்னு சந்தேகப்பட்டு சாமர்த்தியமாக நடிச்சி கண்டுபிடிச்சுட்டாருய்யா” என்ற ஓசி பாராட்டுடன் ஒழுங்கான பணி ஓய்வும் கிடைத்துவிட்டது.