‘நா’ காக்க!!
“உங்க மனசை திடப்படுத்திக்கங்க” என்ற பீடிகையோடு டாக்டர் மாலதி அந்த அதிர்ச்சி செய்தியை நாவிற்கினியோனிடம் கூறினாள். “வெரி ஸாரி ஸார்! நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணிட்டோம்… உங்க பொண்ணோட பிரச்னை என்னன்னு கண்டுபிடிக்க முடியலே… இனிமே அவங்கள பேச வைக்க முடியாதுன்னு நினைக்கிறோம்… உங்க அரசியல் சப்போர்ட்டை வைச்சி எங்கேயாவது வெளிநாட்டுக்கு அழைச்சுட்டுப்போய் முயற்சி பண்ணுங்க… நாங்க டிஸ்சார்ஜ் பண்ணிடறோம்.” டாக்டர் மாலதி சொல்ல சொல்ல இடி இறங்கியதுபோல் நாவிற்கினியோன் ஸ்தம்பித்து உட்கார்ந்துவிட்டார்.
“ஐயோ! என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க… வேற ஒண்ணும் வழியே இல்லையா” என்று அவரது மனைவிதான் படபடத்தாள்.
“பெரிய ஸ்பெஷலிஸ்ட்டுகளை வைச்சும் பார்த்தாச்சுமா ஒண்ணும் பலனில்லே. எல்லாத்துக்கும் மேலே தெய்வம்னு ஒண்ணு இருக்கு… எனக்கு இதுக்கு மேலே எதுவும் சொல்ல தெரியலே” டாக்டரும் வருத்தத்துடன் கூறினாள்.
அந்த சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவர்களே கைவிரித்துவிட்ட நிலையில் பெண் செல்வியை டிஸ்சார்ஜ் செய்து கொண்டு காரில் வீட்டிற்கு அழைத்து வரும்போதும், பெண் வீட்டிற்குள் நுழைந்ததும் நாவில் பேச்சு எழாமல் எதையோ சொல்ல முயற்சி செய்து “ப்… ப்… பே” என்று கையில் சைகை காட்டி புரியவைக்க தவித்தபோதும் நாவிற்கினியோனின் அடக்கி வைத்த துக்கமெல்லாம் வெடித்து அழுகையாய் கொட்டியது.
“ஐயோ! குட்டி தேனாட்டம் பேசுவாளே… பாடினா கேட்டுகிட்டே இருக்கலாமே… இது என்ன கன்றாவி… எவனோ என் பொண்ணுக்கு இப்படி ஆவும்படி செஞ்சிருக்கான்… மவனே அவன்மட்டும் யார்னு தெரிஞ்சுது…” என்று சில அச்சு ஏற்ற முடியாத வார்த்தைகளை கொட்டி இந்த நிலைமையிலும் நாவிற்கினியோன் தன் அவலமான பேச்சை விடாதது அவர் மனைவிக்கு கோபத்தையும் வருத்தத்தையும் தந்தது.
“கொஞ்சம் நிறுத்தறீங்களா? இப்பவும் வாய்க்கு வந்தபடி இப்படி பேச ஆரம்பிச்சுட்டீங்களே இது நல்லாவா இருக்கும்… உன் பொண்ணுக்கு எவனும் எதுவும் பண்ணலே… உன் வாயாலே நீ எத்தினி பேரோட மனசை புண்படுத்தியிருப்பே… அந்த பாவமெல்லாம் சேர்ந்துதான் உன் பொண்ணு தலையிலே விடிஞ்சிருக்கு… இனிமேலும் திருந்தாமே இப்படியே பேசிட்டு திரியாதே” மனைவி தனலட்சுமி இதுவரை இல்லாத ஆவேசமாக பேசியதில் நாவிற்கினியோன் வாய் அடைத்து நின்றார். சட்ட படிப்பை முடித்துவிட்டு வெளிவந்த நாவிற்கினியோனை அரசியல் அவருடைய பேச்சு திறமைக்காக இழுத்துக் கொண்டது. உண்மைக்கு முற்றிலும் புறம்பாக இருந்தாலும் அதை
நியாயப்படுத்தி அநியாயமாக அடித்துப் பேசும் அவரது ஆற்றல் அரசியல் செய்வோருக்கு அவசியமாகியிருந்தது.
நாள்பட இவர் பேச்சில் அபாசம், அபத்தம், அநாகரீகம் என கலக்க தொடங்கியதில் எக்கச்சக்க கைத்தட்டலுடன் இவரது பேச்சு நாளிதழ், ஊடகங்களில் பேசு பொருளாகி அதே பாணியில் பேச இவருக்கு உற்சாக மூட்டிவிட்டது.
எதிரணியிரை கேவலப்படுத்தி அவர்களது அந்தரங்களை பகிரங்கமாக விமர்சித்து நா கூசாமல் இவர் மேடையில் பேசுவது அப்போதைய அந்த பிரச்னையை எதிராளி எடுத்துக்கொண்டு விவகாரம் செய்யவிடாமல் திசை திருப்பிவிடும். அரசியலுக்கு மிகவும் அவசியமான இந்த திறமை இவரிடமிருந்ததால் இவருடைய இந்த அவலமான பாணி அனைத்து கட்சிகளுக்கும் அவ்வப்போது தேவையாயிருந்தது.
இதனால் இவர் இதுவரை தாவாத கட்சிகள் எதுவுமில்லை என்ற நிலையில் எல்லா அரசியல் புள்ளிகளுமே இவருடைய அவதூறான விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தனர். இவர்மீது அவதூறு வழக்கென தொடர்வது சாக்கடையில் கல் எறிவதென பயந்து எல்லோரும் ஒதுங்கியிருக்க அது ‘ஒத்தணும் என்கிட்டே வாலாட்ட முடியாது’ என்ற தெனாவட்டுடன் இவரை பேச விட்டிருந்தது. கெட்ட வார்த்தைகளும், ஆபாச ஏச்சுக்களுமான இவரது தரம்கெட்ட மேடை பேச்சுக்கு விசிலும் கைதட்டலுமாக ஒரு சாராரின் உற்சாக வரவேற்பு கிடைத்தாலும், ‘பாவி இப்படி பேசி எத்தனை பேரோட மனசை புண்ணாக்கறானோ’ என்று இந்த மேடை பேச்சுக்கள் யூட்யூப் இத்யாதிகளில் பரபரப்பூட்டிக் கொண்டிருப்பதை பார்க்கும் போதெல்லாம் இவரது தாயார் வேதனையுறுவாள். “வேண்டான்டா அவங்க சாபம் சும்மா விடாது” என்று தாயார் உபதேசிக்கும் போதெல்லாம் “ஏய் கிழவி சும்மா கிட… ஏன் நீயும்தான் சாபம் வுட்டு பாரேன் பலிக்குதான்னு” என்று தன் அன்னையிடமே தன் வன்மையான வார்த்தைகளால் சுடுவார்.
பொது இடங்களுக்கு தனியாக போகும் இவர் மனைவியின் காது படவே பலர் “நாவுக்கினியோன்னு ஒரு நாசமா போனவன் நம்ப தலைவரை கேவலமா பேசறாம்பாரு… அவனோட சம்சாரம் போவுது பாரு” என்பான் ஒருவன்.
“அப்போ இவளும் பெரிய பேஜாரியாதான் இருப்பா” என்று மற்றவன் சொல்வான். ஆனால் பாவம் தனலட்சுமியும் அவர் மகளும் வாய் திறந்து அதிர்ந்து பேச அறியாதவர்கள். நாவுக்கினியோனின் மகள் என்று தெரிந்தவுடன் “டீ செல்வியோட அப்பாவை நம்ப காலேஜ் கல்சுரலுக்கு கூப்பிட்டு பேசவிட்டா எப்படி இருக்கும்” என்பாள் ஒருத்தி சீண்டுவாள்.
“அப்புறம் கல்சுரல், ‘கலீஜ்‘சுரலாயிடுமே பரவாயில்லையா?” என்று கிண்டலடிப்பாள் இன்னொருத்தி. இப்படி வெளியில் படும் அவமானங்களை மனைவியும் பெண்ணும் எடுத்து சொல்லி இவரை திருத்த முயற்சித்ததுண்டு.
“அடி போங்கடி அப்படி பேசறவங்களை நாலு வார்த்தையிலே நாக்கு பிடுங்கறா மாதிரி கேட்டுட்டு வர துப்பில்லாம இப்படி வந்து புலம்பறீங்களே…” என்று அடக்கி விடுவார். பெண் செல்வி அப்பாவிற்கு தப்பி பிறந்தவள் போல் மிகவும் அடக்கமும், நற்பண்பு
களோடும் இருந்தாள். ஐ.டி.யில் லட்சங்களாக சம்பாதித்துக் கொண்டிருந்தவளை தயாளன் நேசித்தான். செல்வியின் குணநலன்களால் ஈர்க்கப்பட்டவனாய் தன் காதலை சொல்ல இவளும் இசைந்தாள்.
காதல் கனிந்து கல்யாணமென்ற கட்டத்திற்கு வந்தபோதுதான் செல்வியின் குடும்பத்தைப் பற்றிய விபரங்களை தயாளன் கேட்டறிந்தான். நாவிற்கினியோனின் புதல்வி என்ற அறிந்தவுடன் அவன் தயங்கினான். மிகவும் தங்கமான குணங்களுடைய செல்வியை ஒதுக்க முடியாமலும் அதே சமயம் தன் பெற்றோர்களை இந்த விஷயத்தில் சம்மதிக்க வைக்க இயலாத நிலையிலும் தயாளன் தடுமாறினான்.
“டேய்! அந்த ஆளோட பெண்ணாடா வேண்டவே வேண்டாம்பா” என்று பெற்றோர்கள் உறுதியாக மறுப்பதை செல்வியிடம் கூறினான். இதனால் மனம் உடைந்தவளாய் செல்வி திடீரென்று நோய்வாய்ப் பட்டாள். நூறு டிகிரி எகிறிய ஜூரம் ஒரு வாரமாய் தணியாததால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று. அங்கும் இரண்டு நாட்களுக்கு பின் ஐ.சி.யூ. வில் சேர்க்கும் நிலையில் உடல்நிலை மோசமானது. பதினைந்து நாட்களுக்கு பின் பொது வார்ட்டுக்கு வந்தபோதுதான் செல்வி பேசுவதற்கு கஷ்டப்படுவதாக தோன்றியது. பதினைந்து நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சோர்வாய் இருக்கலாமென்று நினைத்தவர்களுக்கு செல்வி சைகை காட்டி பேச வரவில்லை என்று இவர்களிடம் உணர்த்தியபோது அதிர்ச்சியுற்றனர். டாக்டர் மாலதி அங்கேயே ஸ்பெஷலிஸ்ட்டுகளை வரவழைத்து பார்த்ததாகவும் பலனிக்கவில்லை என்றும் இப்போது கூறிவிட்டாள்.
“டேய்! பாவி நீ செஞ்ச பாவம் உன் பொண்ணுமேல விடிஞ்சிருக்கு பாருடா…!! என்று தாயார் குத்திக் காட்டினாள். நாவிற்கினியோன் செல்வி இப்படி ஊமையாய் அவஸ்தைபடுவதையும் தனக்கு இப்படி நேர்ந்துவிட்டதை நினைத்து அடிக்கடி கண்ணீர் விட்டபடி சோகமாக உட்கார்ந்திருப்பதையும் பார்க்க பார்க்க மனம் நொந்து போனார்.
இதற்கான மருத்துவ முயற்சிகளில் இறங்கியபோதுதான் பல நிதர்சனங்களை இவர் அறிய முடிந்தது! வெறும் வெட்டி மேடை பேச்சாளராக மட்டும்தான் இவரை மதித்தனர். அதுவும் அபாச, தரம் தாழ்ந்த பேச்சாளர் என்பதால் எல்லோரும் உதாசீனப்படுத்தினர். யாரும் இவரை கௌரவமாக பார்க்கவில்லை.
யாரும் உதவ முன்வராவிட்டாலும் “இவனுக்கு நல்ல வேணும்யா… கொஞ்ச நஞ்ச பேச்சா பேசி இருப்பான்… நல்ல கிடந்து தவிக்கட்டும்” என்ற ரீதியில் முதுகிற்கு பின்னால் பலர் பேசுவது தெரிந்தபோது நாவிற்கினியோன் மிகவும் மனம் உடைந்து போனார். தன் பேச்சுக்கு கைத்தட்டி உசுப்பேற்றிய கூட்டத்தின் தராதரம் இதுவென்று புரிந்தது. வெறும் விசில் சப்தத்துக்கும், உற்சாக கூச்சலுக்கும் எத்தனை பேரின் மனம் நோகும்படி பேசியிருப்போம்… உண்மைக்கு புறம்பானவைகளை மனசாட்சிக்கு விரோதமாக பேசி எத்தனை பேரை பாதித்திருப்போம் என்று அவர் மனது மெல்ல மெல்ல உறுத்த தொடங்கிவிட்டது.
செல்வியின் நிலையை பார்க்க பார்க்க அவர் மனம் வருந்த செல்விக்கும் இவர் எப்போதும் சோகமான முகத்துடன் திரிவதை பார்க்க வேதனையாக இருந்தது.
விரக்தியின் விளிம்பில் மழிக்கப்படாத ஒருமாத தாடியும், மீசையுமாக சோபாவில் உட்கார்ந்திருந்தவரிடம் செல்வி எதையோ காட்ட வந்தாள்.
“என்னம்மா சொல்லு” என்று ஒரு சன்னமான குரலில் கேட்க, செல்வி தன் செல்போனில் சிநேகிதி அனுப்பியிருந்த ஒரு வாட்ஸ்ஆப் தகவலை காட்டினாள். அதில் குமரகுருபர சுவாமிகள் பற்றிய ஒரு வீடியோ லிங்க் இணைக்கப்பட்டிருந்தது.
குமரகுருபரர் ஐந்து வயது வரை வாய்பேசா ஊமையாக இருக்க பெற்றோர்கள் தாங்க முடியாத வேதனையோடு தவித்தனர் என்றும் பின் கடும் விரதமிருந்து திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிக்கொள்ள குழந்தைக்கு பேச்சு வந்ததென்றும் அதன்பின் அக்குழந்தை கந்தனையும் கடவுளையுமே பாடி உலகோருக்கு தன் நாவால் பயனளித்தார் என்றும் உபன்யாசர் ஒருவர் கூறுவதை அந்த வீடியோ காட்டியது.
அதைப் பார்த்ததும் நாவிற்கினியோனுக்கு மனம் உறுத்த துக்கம் நெஞ்சம் அடைத்தது. ஆசாமிகளோடு எல்லா சாமிகளையுமல்லவா வாய்கொழுப்போடு விமர்ச்சித்துள்ளோம்! எத்தனை பக்தர்களின் நம்பிக்கையை கேலியும் கிண்டலும் செய்து அவர்களின் மனதை புண்படுத்தியுள்ளோம் என்றெல்லாம் அவர் மனம் வருந்தியது.
“ஏம்மா திருச்செந்தூருக்கு போகலாம்னு சொல்ல வர்றியா?” என்று நாவுக்கினியோன் செல்வியை கேட்க, இதையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவருடைய தாயார், “டேய் எதுக்குடா அத்தனை தூரம் போவணும்? நம்ம குலதெய்வம் கந்தமலைசாமி இருக்குடா… உங்க அப்பனும் நீயும் நாத்திகம் பேசியே குலதெய்வத்தை பல வருஷமா மறந்து தொலைச்சுட்டீங்க… நீ நம்ப கந்தமலையான்கிட்டே என் பேத்தியை கூட்டிட்டு போ… எல்லாம் சரியாயிடும்” என்று உணர்ச்சி வசப்பட்டவளாய் புலம்பினாள்.
உடனே அதற்கான ஏற்பாடுகளில் நாவுக்கினியோன் இறங்கினார். அவருடைய பூர்விக கிராமத்து பக்கத்தில் இருந்த கோயில் பூசாரியின் செல் நம்பரை செல்வி தேடித் தந்தாள். பூசாரி இவரிடம் விரதம் இருப்பது எப்படி என்ற விபரத்தை கூறி அபிஷேக ஆராதனைக்கு ஏற்பாடு செய்து விடுவதாகவும் ஒரு குறிப்பிட்ட நாளில் வருமாறும் கூறினார்.
தைப்பூச திருநாளில் அந்த முருகன் சன்னதியில் நாவுக்கினியோனின் குடும்பம் உட்கார்ந்திருக்க அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வெறும் கல்லு, அதுக்கு பாலா என்று விதண்டாவாதம் செய்துக் கொண்டிருந்தவருக்கு அந்த தெய்வீக மணம் கமழும் சூழல் இனம் புரியாத மனமாற்றத்தை தந்ததுபோல் இதமாக இருந்தது.
தன் மகளுக்காக, எதிரே காண்பது கல் அல்ல கண் கண்ட தெய்வம் என்ற உணர்வோடு வேண்டிக் கொள்ளும் நிலைக்கு ஆட்பட்டுவிட்டார்.
அபிஷேகம் முடிந்து திரையிடப்பட்டு, பின் அலங்காரத்துடன் சன்னதி திறந்து தீபாராதனை காட்டினபோது முழங்கிய அந்த மின்சார மணி, மேள சப்தமும் அரோகரா அரோகரா என்று பக்தர்களின் கோஷமும் எல்லோரையும் சிலிர்பூட்டியது.
தீபாராதனை தட்டுடன் அவரை நெருங்கிய பூசாரி இப்படியும் அப்படியும் ஆட ஆரம்பிக்க பூசாரியின் உதவியாளர் அவரிடமிருந்து தீபாராதனை தட்டை விழாமல் வாங்கிக் கொண்டார். “நான்தாண்டா உன் குலதெய்வம் கந்தசாமி வந்திருக்கேன்” என்று பூசாரி இவரைப் பார்த்து ஆடியபடியே ஆவேசமாக கூற நாவுக்கினியோன் பயபக்தியோடு நின்றார்.
“உன் பொண்ணை பேச வைக்க வந்திருக்கேன்டா… நான்தான்டா அந்த குமரகுருபரனுக்கு பேசும் வரம் கொடுத்தவன்… பேச்சுன்றது ஒரு வரம்டா… நா வினிக்க பேசணும், நா காத்து பேசணும்” என்று சப்தமிட்டவர் தீபாராதனை தட்டிலிருந்து விபூதியை எடுத்து செல்வியிடம் “வாயை திற” என்று அதட்டி நாக்கில் போட்டார்.
செல்வி உடனே மயக்கமுற்றாள். பூசாரியும் சகஜ நிலைக்கு வந்தவராய் “பயப்படாதீங்க! முருகன் காப்பாத்துவார்” என்று திகைத்து நின்ற நாவுக்கினியோனிடம் ஆறுதலாக கூறினார். அப்போது “அப்பா” என்ற குரல் அவர் காதில் தேனாய் வந்து பாய்ந்தது. “அப்பா முருகன் என்னை பேச வைச்சிட்டாருப்பா” என்று மயக்கம் தெளிந்து எழுந்த செல்வி அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினாள்.
நாவுக்கினியோனும் மெய்மறந்தவராய் “முருகா! முருகா!” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டதை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.
இந்த அதிசய சம்பவம், நாவுக்கினியோனை ஒரு ஆன்மிகவாதியாக்கியதோடு ஒரு சிறந்த சமய சொற்பொழிவாளராகவும் ஆக்கிவிட்டிருந்தது. இனி அவருடைய ‘நா’ நல்லதையே பேசி, செல்வியின் வாழ்க்கைக்கும் நல்லதே செய்யுமல்லவா!
(பின் குறிப்பு:- உறுதியான தெய்வ நம்பிக்கையோடு படிப்பவர்க்கெல்லாம் இதோடு இந்த கதை முடிந்துவிட்டது. ‘இப்படியெல்லாம் நடக்குமா’ என்ற அரைகுறை நம்பிக்கையோடு படித்தவர்களுக்கு கதை தொடர்கிறது).
இப்படியொரு நாவிற்கினியோனின் சமய சொற்பொழிவினை கேட்டுவிட்டு டாக்டர் மாலதி தன் அம்மாவுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். “ரொம்ப நல்லா சொல்றாரு இல்லே” என்றாள் டாக்டரின் அம்மா. “நானும் இத்தனை ஜோரா பேசுவார்னு எதிர்பார்க்கலே… அம்மா இவர் முன்னாலே எப்படியிருந்தார்ன்னு உனக்கு தெரியாது… அரசியல்ல ரொம்ப கீழ்தரமான ஒரு பேச்சாளராக இருந்த இவரா இப்படி மாறியிருக்கார்னு தோணுது. இவரை இப்படி மாத்த இவர் பொண்ணு ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கா… என்கிட்டே பத்து நாள் ட்ரீட்மெண்ட்டுக்கு வந்தபோது இவளோட லவ்வர் தயாளன்னு பேரு ரெண்டு பேரும் என்கிட்டே ஒரு ரிக்வெஸ்ட் பண்ணினாங்க… ஒரு நல்ல காரியத்துக்காக அப்படி ஒரு பொய் சொன்னேன்… செல்விக்கு பேச்சு வராது, ஸ்பெஷலிஸ்ட்டெல்லாம் பார்த்து கைவிரிச்சுட்டாங்கன்னு ஒரு பொய் ரிப்போர்ட்டும் கொடுத்து டிஸ்சார்ஜ் செஞ்சேன்.
அதுக்கப்புறம் அந்த பொண்ணு ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒரு மாசத்துக்கு மேலே ஊமையா நடிச்சி, வாட்ஸ்ஆப் தகவல், பூசாரியின் சாமி ஆட்டம்னு ஒரு பெரிய நாடகத்தை லவ்வரோட உதவியோட நடத்தியிருக்கா… கல்யாண பத்திரிகையை கொடுக்க வந்த அந்த ஜோடி இதை விபரமா சொன்னபோது ஆச்சர்யமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது… இத்தனை சிறப்பாக பேசற ஒருத்தரை நல்ல வழியிலே திருப்ப நானும் உதவியிருக்கேன்று நினைச்சா பெருமையா இருக்கு” என்று மாலதி மனநிறைவோடு கூறியபடி காரை ஓட்டினாள்.