பட்டி

மூட்டுவலி முதியவர்கள்!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் நகைச்சுவை
Story Image
மூத்த குடிமகன்களில் இப்போதெல்லாம் மூட்டுவலி முதியவர்கள் என்று ஒரு சிறப்பு பிரிவு உருவாகியுள்ளது. அது மூட்டுவலியா...

Share this story:

மூத்த குடிமகன்களில் இப்போதெல்லாம் மூட்டுவலி முதியவர்கள் என்று ஒரு சிறப்பு பிரிவு உருவாகியுள்ளது. அது மூட்டுவலியா முட்டி வலியா என்பதை விவாத மேடையாக்கி தலைவலியை இழுத்துவிட்டுக் கொள்ள விரும்பவில்லை.

புராண காலங்களின் முதியவர்களுக்கு கூன் விழுந்துள்ளதை ராமாயண கூனி மூலம் அறிய முடிகின்றது. அவர்களுக்கு கூனோடு பல்லும் விழுந்திருக்கலாம். ஆனால் யாருக்கும் மூட்டுவலி வந்ததாக இதிகாசங்களில் சாட்சி இல்லை.

சரித்திர ராஜாக்கள் காலத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் முதுமையிலோ, அதற்கு முன்னேயோ கூன் மட்டும் அவர்களை படுத்தியுள்ளது. கூன் பாண்டியன், கரிகால சோழன் என்றெல்லாம் படித்துள்ளோமேயன்றி, மூன்றாம் மூட்டுவலி பல்லவன், மூட்டிவலி நாட்டரசன் என்றெல்லாம் படித்ததில்லை.

சங்க காலத்திலும் எந்த புலவரும் இந்த உடல் உபாதையை உதாரணம் காட்டி எந்த கவிதையிலும் பாடி வைக்கவில்லை. ஏன் ராஜாக்களை வைத்து எடுக்கப்பட்ட பழைய சினிமாக்களில்கூட வயதான ராஜா லொக்கு லொக்கு இருமலுடன் படுத்த படுக்கையாய் இருப்பாரேயன்றி ‘தனக்கு மூட்டுவலி இருப்பதால் போருக்கு வர இயலவில்லை’ என்று சொல்வதாக சித்தரிக்கப்பட்டதில்லை.

இப்படி கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றாத கால் உபாதையான மூட்டுவலி என்பது எப்போது ஒரு வியாதியாக அங்கீகாரம் பெற்று முதியவர்களை தாக்கத் தொடங்கியதென்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்து என் மூதாதையர் யாருக்கும் இப்படி ஒரு முட்டி உபத்திரவம் ஏற்பட்டதாக நினைவில்லை. கல்யாணம், காட்சி என்றால் எண்பது தொண்ணூறு வயது பாட்டிகளும் தாத்தாக்களும் சப்பளிக்க தரையில் போட்ட பந்தி இலையில் உட்கார்ந்து அவஸ்தைபடாமல் எழுந்து நடக்கும் முட்டி ஆரோக்யத்தோடு இருந்தார்கள்.

ஆனால் என் சம வயது (65) சீனியர் சிலருக்கு அப்படி சுலபமாக தரையில் உட்கார்ந்து எழ விடாமல் முட்டி முட்டுக்கட்டை போடுகிறது. இந்த தொல்லையின் காரணமாக எங்கு போனாலும் கட்டிலில்தான் படுப்பேன், வெஸ்ட்டிரன் கிளாஸெட்தான் சௌகரியம் என்றெல்லாம் கண்டிஷன் போட ஆரம்பித்துவிட்டார்கள். திருப்பதி, திருத்தணி தலைகளை படிப்படியாக ஏறிய காலங்கள் மலை ஏறிவிட்ட நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடுத்த மாடிக்கு படியில் ஏற இன்றைய முதியர்களின் முட்டி படிவதில்லை. இதனால் இப்போதைய இந்த உபாதை பெருக்கத்துக்கு லிஃப்ட் எனும் மின்தூக்கிதான் காரணமோ என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியா காலகட்டத்தில்தான் இந்த கால்முட்டி வியாதி சுதந்திரமாக நுழைந்துள்ளதை பார்க்கும்போது அதற்கான முழு பழியையும் லிஃப்ட்டின் மேல்தான் சுமத்த வேண்டியுள்ளது.

நாளடைவில் இந்த மூட்டுவலி பிரசித்தமடைந்ததில் இந்த உபாதையை போக்கும் சிகிச்சைகளும் பிரசித்தமாகியுள்ளன. எங்களிடம் வாங்க என்று மருத்துவமனைகள் விளம்பரப்படுத்த, ஓரிரு முதியவர்களை காட்டி அவர்கள் வாயால் குணமானதை சொல்லச் சொல்கிறார்கள். ‘எனக்கு முட்டிவலி இருந்தது. நான் இதை சாப்பிட்டபின் இருபதாம் அடுக்குமாடியின் படிகளில் ஏறி இறங்குகிறேன்’ என்ற வகையில் சில மூட்டிவலி முதியவர்களுக்கு டி.வி. சானல்களில் அடிக்கடி தோன்றும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. அதே ஆசையில், இதைப் பார்த்துவிட்டு என் மனைவி “எனக்கு மூட்டுவலி வந்தால் இந்த டாக்டர்கிட்டேதான் கூட்டிட்டு போனோம்” என்று கேட்கும் அவலமும் நேர்ந்துள்ளது.

எனக்கும் ஏன் முட்டிவலி வரவில்லை என்று தோன்றும்படி ஒரு சமீபகால பயண அனுபவம் ஏற்பட்டது. ‘கீழ் பர்த்’துக்காக என் ‘பர்த்டே’ காலகட்டத்திலேயே பதிவு செய்து உட்கார்ந்திருந்த என்னிடம் ஒரு சக சீனியர் சிடிசன் முதியோருக்குண்டான உடல் உபாதைகளைப் பற்றி விலாவாரியாக பேசிக் கொண்டிருந்தார். டாபிக் மூட்டுவலியைப் பற்றியும் சென்றதில் என் வாய்கொழுப்பால் இந்த வயதிலும் மூன்று மாடி படி ஏறிதான் இறங்குகிறேனாக்கும் என்று முட்டியை தட்டி பெருமைப்பட்டுக் கொண்டது பிசகாகிபோனது. எல்லோரும் படுக்கும் நேரம் வந்ததும் அந்த சக சீனியர் “இஃப் யு டோன்ட் மைன்ட்” என்ற பீடிகையோடு தனக்கு மூட்டு வலியாதலால் அப்பர் பர்த்துக்கு ஏறமுடியாதென்று புலம்பலோடு என் கீழ் பர்த்தை பிடுங்கிக் கொண்டார்.

இதனால் முதியோர் யாவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் ரயில் பயணங்களில் உங்களை மூட்டுவலி முதியவர்களாகவே முத்திரைக் குத்திக் கொள்வது சால சிறந்ததாகும்.

கூடை

மொத்தம்

₹0