பட்டி

கள்ளம்!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் நாடகம்
Story Image
உள்ளங்கையில் கசங்கிக் கொண்டிருந்த அந்த நாலு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை காவேரியம்மா அவசர அவசரமாக தன் புடவையின்

Share this story:

உள்ளங்கையில் கசங்கிக் கொண்டிருந்த அந்த நாலு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை காவேரியம்மா அவசர அவசரமாக தன் புடவையின் தலைப்பைப் பிரித்து முடிந்து கொண்டாள். “டேய்! பாட்டியை கைபிடிச்சி கூட்டிட்டு வாடா நேரமாச்சி கிளம்பனும்” என்று தன் மகன் கேசவன் குரல் கொடுத்தது காதில் விழ, அந்த புடவை முடிச்சை யார் கண்ணிலும் படாதவாறு தன் இடுப்பில் பத்திரமாக சொறுகிக் கொண்டு பேரன் கையைப் பிடித்தபடி காரில் ஏறினாள். “பாட்டி மெதுவா ஏறு” என்று பாசத்துடன் பேரனும், பேத்தியும் சொல்ல “நல்லா சௌகர்யமா உட்கார்ந்துக்கோங்க அத்தை” என்று மருமகள் மரகதமும் உண்மையான பரிவை காவேரியம்மாவிடம் காட்டினாள்.

இப்படி பாசமும் நேசமுமான உறவுகளுக்கு பணதேவை ஏற்பட்ட சமயங்களிலெல்லாம் எடுத்து கொடுத்து உதவ முடியாத நிலையில் இரண்டு வருட காலமாக இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் காவேரி அம்மாளால் பதுக்கப்பட்டிருந்தன. இதை நினைத்து அந்த முதியவளின் மனம் கனத்தது.

“ஓ.டி.பி. சொல்லுங்க ஸார்” என்று கேசவனிடம் கேட்டுவிட்டு அந்த ஓலா டிரைவர் காரை மலையப்பசாமி கோயிலை நோக்கி செலுத்தினான். “அம்மா! இன்னும் ரெண்டு மணிநேரமாகும்.. தூக்கம் வந்தா மரகதத்தை தள்ளி உட்காரச் சொல்லிட்டு படுத்துக்கோ” முன் கேசவன் கூறியபோது காவேரியம்மா உஷாராக வேண்டியிருந்தது.

அப்படி தூக்கம் வந்து அந்த சமயம் புடவை தலைப்பு நழுவி முடித்து வைத்துள்ள நோட்டுகள் அவிழ்ந்து விழுந்து தொலைத்துவிடப் போகிறதே என்ற பயம் உண்டாக காவேரியம்மா தூங்காமல் பயணம் செய்ய மெனக்கெட வேண்டியதாயிருந்தது. இப்போது இந்த குட்டி தூக்கத்தை கெடுக்கும் ரூபாய் நோட்டுகள் எத்தனை நாள் தன் இரவு தூக்கத்தை கெடுத்திருக்கின்றன என்று அசை போட்டபடி காவேரியம்மா பழைய நினைவுகளுள் பயணித்தாள்.

சென்ற தேர்தலின் முதல் நாளில் நடந்ததை நினைத்துக் கொண்டாள். நேர்மையான அரசாங்க ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற கணவர் பரமசிவம் அன்று அத்தனை எச்சரித்தும் தன் புத்தி ஏன் அப்படி சென்றது என்று காவேரியம்மா நொந்துக் கொண்டாள்.

“கட்சிகாரன் எவனாவது வோட்டுக்கு பணம் கொடுக்க வருவான். அவங்களை நயமாக பேசி அனுப்பிவிடு” என்று, ஏதோ அவசர வேலையாய் வெளியே சென்றபோது மனைவி காவேரியம்மாவிடம் பரமசிவம் படித்து படித்து சொல்லிவிட்டுதான் போனார். மகனும், மருமகளும்கூட கடைவீதிக்கு சென்றிருந்தனர்.

பரமசிவம் சென்ற அரைமணிநேரத்தில் ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தது. “இந்த வீட்டிலே எத்தினி வோட்டு” என்று ஒருவன் கேட்க “நாலு” என்று வாக்காளர் லிÞட்டை பார்த்து அடுத்தவன் சொல்ல, “சரி நாலு நோட்டை எடுடா” என்று சரசரவென அந்த ரெண்டாயிரம் ரூபாய் கட்டிலிருந்து நாலு நோட்டுகளை எடுத்து திணிக்க வந்தபோது காவேரியம்மாவிற்கு படபடப்பில் உடம்பு நடுங்கியது. “ஏன் தாயி தயங்கறே… வூட்டுக்கு வூடு கொடுக்கறதுதான். வாங்கிக்கோ நான் உன் மகன் மாதிரி. என் சின்னத்திலேயே வோட்டு போடு.. வூட்ல மத்தவங்களையும் போடச் சொல்லு” என்று மலைத்து பேச நா கூட எழாத நிலையில் நின்ற காவேரியம்மாவிடம் அந்த நாலு புத்தம்புது இரண்டாயிரம் நோட்டுகளை அழுத்தி வைத்துவிட்டு அந்த கூட்டம் அகன்றது.

தன் நிலைக்கு திரும்பி வர காவேரியம்மாவிற்கு சில நிமிடங்களானது. தண்ணீரை எடுத்து ஒரு மடக்கு குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். கணவர் வந்து கேட்டால் என்ன செய்வது? வேண்டாமென்று சொல்ல சொல்ல கொடுத்துவிட்டு போய்விட்டார்களென சொல்லி அவர்களை அடையாளம் காட்டி திருப்பி கொடுத்துவிட செய்யலாமா? நாலு திட்டுதிட்டிவிட்டு கணவர் அதை செய்துவிடக் கூடும்தான்.

அதே சமயம் தான் முன் எப்போதுமே பார்த்திராத மிக பெரிய தொகையான எட்டாயிரத்தை இப்படி இழக்க வேண்டுமா என்றும் அவள் மனம் கள்ளத்தனத்திற்கு தாவியது. செலவிற்கு ஐந்து பத்து கேட்கும்போது கூட ஆயிரம் கேள்விகளை கேட்டுவிட்டுதான் தரும் பரமசிவத்திடம் இப்படி கேள்விமுறை இல்லாமல் யாரோ கொடுத்துவிட்டுபோன அத்தனை பெரிய தொகையை மறைத்து வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று முடிவே செய்துவிட்டாள். வீட்டிற்கு திரும்பிய கணவரிடமும், மகனிடமும் எதையும் சொல்லவில்லை. யாருக்கும் தெரியாமல் அந்த நோட்டுகளை எப்படி பதுக்குவது, பாதுகாப்பது என்ற கவலையுடன் குட்டி போட்ட பூனையாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

இதை கவனித்துவிட்ட பரமசிவம் “எதையோ யோசனை பண்ணிட்டு திரியறயே… மருமக எதையாவது சொன்னாளா?” கேட்டவுடன் “ஒண்ணுமில்லே லேசா தலைவலி” என்று சமாளித்துவிட்டாலும் அன்றையிலிருந்து அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பெரும் தலைவலியாகத்தான் ஆகிவிட்டிருந்தன.

காலண்டர் பேப்பரைக் கிழித்து அதில் இந்த நோட்டுகளை மடித்து சுருட்டினாள், அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புடவை அடுக்கின் அடியில் இருந்த ஒரு பழைய புடவையின் மடிப்பின் நடுவில் பத்திரமாக சொருகி வைத்தாள்.

பின் தினம்தோறும் குளித்துவிட்டு வந்து புடவையை எடுக்கும் போதும், வேறு எதற்காவது அலமாரியை திறக்கும்போதும் அந்த பழைய புடவை மடிப்பில் கை வைத்து அது தட்டுபடுகிறதா என்று அடிக்கடி பார்ப்பதே காவேரியம்மாளுக்கு மனோ வியாதி போலாகி விட்டது. இப்படி பதுக்கி பாதுகாக்கப்பட்ட நோட்டுகள் எந்த ஆத்திர அவசரத்திற்கும் இக்கட்டான சந்தர்பத்திற்கும் எடுத்து கொடுத்து பயன்படுத்த முடியாத வெறும் தாள்களாகத்தான் முடங்கி கிடந்தன.

பரமசிவத்திற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டபோது அவசர தேவைக்கு கூட பணமில்லாமல் மகன் கேசவன் தவிப்பது காவேரி அம்மாளுக்கு தெரியாமலில்லை. உடனே அந்த நோட்டுகளை எடுத்து கொடுத்துவிட வேண்டும் என்று அவள் மனம் அடித்துக் கொண்டது.

ஆனாலும் பின்விளைவுகளை யோசித்தபோது காவேரி அம்மாள் தயங்க வேண்டியதானது ஆபத்து சமயத்தில் பணம் கிடைத்ததே என்று முதலில் நினைப்பவர்கள், அந்த பணம் எப்படி கிடைத்ததென்று கேட்காமல் விடப் போவதில்லை. அப்போது நடந்த அத்தனையையும் சொல்லியாக வேண்டும். குட்டு வெளிப்பட்டு வெட்கி தலைகுனிய நேரும். தன்மேல் இத்தனை நாள் அவர்கள் வைத்திருக்கும் நல்ல அபிப்ராயம் வீணாய் கெடும். இப்படி நினைத்து பயந்து குழம்பியவள் மனதை கல்லாக்கிக் கொண்டாள்.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரமசிவத்தின் உயிர்பிரிந்ததில் அவ்வளவாக பணம் தேவைப்படாமல் போனதால் சற்றே அவள் மனம் சமாதானமானது. பின் குடும்பத்தில் பணதட்டுப்பாடு ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களிலும் இதே நிலைதான். ஒருமுறை வாடகை பாக்கி என்று வீட்டுக்காரன் மருமகளிடம் வந்து தாறுமாறாக பேசிவிட்டு போனான். அந்த தொகை காவேரியம்மாளிடம் இருந்தும் அதை எடுத்து அவன் முகத்தில் அவளால் விட்டெறிய முடியவில்லை.

பள்ளி சுற்றுலா செல்ல பேத்தி பணம் கேட்க, கேசவனால் அதை புரட்டி கொடுக்க இயலவில்லை. “ஒழுங்காபடி… எக்Þகர்ஷன் அது இதுன்னு சுத்தறதுக்கெல்லாம் கடன் வாங்கி தரமுடியாது” என்று பெண்ணை பெரிதாக கடிந்து கொண்டுவிட்டான். பேத்தி அன்று முழுவதும் விசும்பி விசும்பி அழுதபோது காவேரியம்மாளும் பதுக்கியுள்ள பணத்தை எடுத்து கொடுக்க இயலாமைக்கு உள்ளுக்குள் அழுதாள்.

சென்ற தீபாவளியின்போது எதிர்பார்த்த போனÞ வராததால் பேரன் பேத்திகளுக்கு புது துணி வாங்கவும், பட்டாசு, இனிப்பு என்ற செலவுகளுக்கும் கேசவன் மிகவும் சிரமப்பட்டான். அப்போதும்கூட காவேரி அம்மாளுக்கு அந்த நாலு நோட்டுகளை எடுத்துக் கொடுத்து உதவி விட்டு அதனால் ஏற்படப்போகும் எதிர்விளைவுகளை ஏற்கும் துணிவு ஏற்படவில்லை. தினமும் மாலை நேரங்களில் காலார நடந்துவர வெளியே செல்லும் போதுகூட அந்த ரூபாய் பொட்டலத்தை இடுப்பில் சொருகிக் கொண்டுதான் காவேரியம்மா போவது வழக்கம். அப்போதெல்லாம் போண்டா, பஜ்ஜி என்று எதையாவது வாங்கி சாப்பிட அவள் நாக்கு ஏங்கும். ஆனாலும் அந்த இரண்டாயிரத்தை கொடுத்தால் முதலில் சில்லறை தருவார்களா, அப்படியே தந்தாலும் அந்த ஐநூறு ரூபாய், நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகளாக தரப்படும் சில்லறை நோட்டுகளை பதுக்கிக் கொள்வது இன்னமும் சிரமங்களை கூட்டாதா என்றெல்லாம் எண்ணத் தொடங்குவாள். நப்பாசையையும் நாசமாய்போன நோட்டுகளையும் அடக்கிக் கொள்வாள். இப்படி காவேரியம்மாளிடம் முடங்கிக் கிடந்த இரண்டாயிரம் நோட்டுகள் அவளுக்கு பெரும் பாரமாகிவிட்ட நிலையில்தான், இந்த நோட்டுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் எல்லோரும் மாற்றிக் கொண்டாக வேண்டுமென்ற அறிவிப்பு வந்துவிட்டது.

டி.வி. திரையில் இது பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டதிலிருந்து காவேரியம்மாளின் கவலை இரட்டிப்பாகிவிட்டது. இதென்ன புது சங்கடமென்று மனதிற்குள் தவிப்பு மிகுந்தது. வங்கியில் மாற்றலாம் என்கிறார்கள். காவேரியம்மாள் முன்பின் வங்கி சென்று அறியாதவள்… யாரிடமாவது கொடுத்து மாற்றலாமென்றாலும் திரும்ப தன் இத்தனை நாளின் கள்ளமும் கபடமும் வெளிப்பட்டு அவமானமாகி விடுமே என்ற தயக்கத்துடனே அவள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள். நேர்மையான கணவரின் சொல்லை மீறி வாங்கிய பணத்தினால் எத்தனை மன உளைச்சல்கள்; நிம்மதியின்றி தூக்கத்தை இழந்து தவித்த நாட்கள் என்று நினைத்துக் கொண்டவளுக்கு அந்த நோட்டுகளை எப்படியாவது விட்டொழித்துவிட வேண்டுமென்று ஆகிவிட்டது.

அச்சமயத்தில்தான் கணவரின் முதல்வருட திவசம் முடிந்தவுடன் கேசவன் மலையப்பசாமி கோயிலுக்கு போகவிருக்கும் தகவலைச் சொன்னான். அப்பாடா, குலதெய்வமே வழிகாட்டி

விட்டதென காவேரியம்மா பெருமூச்சுவிட்டாள். உபயோகமற்று மனதை உறுத்திக் கொண்டிருக்கும் பணத்தைக் கொண்டுபோய் கோயில் உண்டியில் போட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்து கொண்டாள். காவேரியம்மாளின் மனஓட்டத்தில் கார் கோயிலை வந்தடைந்திருந்தது. ஜாக்கிரதையாக புடவையில் முடிந்திருந்ததை யாருக்கும் தெரியாமல் காப்பாற்றிக் கொண்டு கோயிலுள் நுழைந்த காவேரியம்மாவின் கண்கள் கோயிலின் உண்டியல் எங்கிருக்கிறதென்று தேடியது.

கோவிலின் கொடிமரம் பக்கத்திலேயே ஒரு ஆள் உயர உண்டியல் தென்பட்டது. சரி, இனி எப்படியாவது யாருக்கும் தெரியாமல் இந்த நோட்டுகளை உண்டியலில் போட்டுவிட வேண்டுமென்று காவேரியம்மாளுக்கு பரபரப்பு தொற்றிக் கொண்டாலும் அப்படி ஒரு சந்தர்பம் கிடைக்குமோ என்ற சந்தேகமாகத்தானிருந்தது.

இவள் பரபரப்பிற்கு ஒத்தாசையாக அமைவதுபோல் பூஜை சாமானுடன் தரிசன சீட்டு வாங்கி வந்த கேசவன் “அம்மா இன்னிக்கு என்ன விசேஷம்னு தெரியலே… கோயில்லே ஒரே கூட்டம்… Þபெஷல் டிக்கெட் தான் வாங்கினேன்… அந்த க்யூவிலேயே சாமியை பார்க்க ஒரு மணிநேரமாகுமாம். உன்னாலே அத்தனை நேரம் நிக்க முடியாது. இங்கேயே உட்கார்ந்திரு சாமி கிட்டே போகும்போது உன் பேரனை அனுப்பறேன், அழைச்சுகிட்டு வருவான்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தில் உட்காரவைத்துவிட்டு மற்றவர்களுடன் உள்ளே சென்றான். எப்போதுடா சமயம் வரும் என்று காத்திருந்தவளாய் அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் அவசர அவசரமாக அந்த உண்டியலை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள். அந்த ஆளுயர உண்டியலின் அருகே ஆறடி நீளத்தில் எல்லோரும் தீபம் ஏற்றும் மேடையிருந்தது. அதில் பக்தர்கள் ஏற்றி வைத்த அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. தீபம் ஏற்றுவோர் கொண்டுவரும் எண்ணெய் சிந்தி தரையெங்கும் பிசுபிசுப்பாக இருந்தது. பரபரப்புடன் சென்ற காவேரியம்மா அதன்மேல் கால் வைத்ததும் வழுக்கியது. நிலை தடுமாறி விழ இருந்தவள் நல்ல வேளையாக மேடையின் சுவரை பிடித்துக் கொண்டு சமாளித்து எழ முயற்சி செய்தாள்.

அப்போது புடவையின் தலைப்பு நழுவி விரிந்து அந்த தீப மேடையின்மேல் படர்ந்தது. ஏதோ பின்னால் சூடு பரவுவதுபோல் காவேரி அம்மாள் உணர, அருகே ஓடி வந்த ஒரு பெண்மணி “ஐயையோ… புடவையிலே நெருப்பு பத்திகிட்டிருக்கு” என்று பதறியபடி புடவை தலைப்பில் பிடித்திருந்த தீயை கைகளால் கசக்கி அணைத்தாள்.

“நல்லவேளை நான் பாத்தேன். இல்லேன்னா விபரீதமாயிருக்கும் தனியாவா வந்தீங்க?” என்று விசாரித்தபடி காவேரியம்மாவை கைதாங்கலாக பிடித்து உட்கார வைத்து தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள். பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர தாமதமானது.

பின் உதவிய பெண்மணியிடம் “ரொம்ப நன்றி தாயி” என்று காவேரியம்மா கூறியபடி பொசுங்கிய புடவை தலைப்பை பார்த்தாள். கருகிப் போயிருந்த அந்த புடவையில் நுனியையும் முடிச்சையும் காணவில்லை. முடிச்சையும், நாலு நோட்டுகளையும் எரிந்துக் கொண்டிருந்த அகல் தீபங்கள் பொசுக்கி விட்டிருப்பது தெரிந்தது. கள்ளத்தை கடவுள் ஏற்க மறுப்பதுபோல் உணர்ந்தாள்.

ஒரு பெரும் நிம்மதியோடு கருகிய புடவையை பார்த்துக் கொண்டிருந்த காவேரி அம்மாளிடம் “பெரியம்மா… கோயில்ல புடவை தீப்பிடிச்சி பொசுங்கிடுச்சேன்னு வருத்தப்படாதே… இதுவரையிலும் உன்னை பிடிச்சிருந்த ஏதோ ஒரு பீடை ஒழிஞ்சிடுச்சின்னு எடுத்துட்டு போ” என்று ஆறுதலாக சொல்லிவிட்டு அந்த பெண்மணி அகன்றாள்.

கூடை

மொத்தம்

₹0