பட்டி

இது கார்த்திகேயன் காதல்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் நகைச்சுவை
Story Image
கத்தரிக்காய்க்கு காலும் கையும் முளைத்ததுபோல இருக்கும் மூன்று, நான்கு வயதுக்காரர்களே காதல் செய்யும் வசதி வாய்ப்புகள்...

Share this story:

கத்தரிக்காய்க்கு காலும் கையும் முளைத்ததுபோல இருக்கும் மூன்று, நான்கு வயதுக்காரர்களே காதல் செய்யும் வசதி வாய்ப்புகள் இப்போது பெருகியிருப்பது என் போன்ற பெரிசுகளை பெருமூச்சு விடச்செய்துள்ளது. அந்த காலங்களில் இப்படியெல்லாம் காதல் கடை சரக்காகி மலிந்திருக்கவில்லையே என்று ஒரு ஏக்கம் எழுகிறது.

காதலாவது, கத்தரிக்காயாவது என்று காதலை மிக துச்சமாக மதித்த காலக்கட்டங்களில் காதல் என்ற ஓர்இதழ் வந்து கொண்டிருந்தது. அந்த கால என் மடி ஆசார குடும்பத்தில் விசா வழங்கப்பட்ட கல்கி, ஆனந்த விகடன் வார இதழ்களை வாங்க பெட்டிக் கடைக்கு போகும்போது அந்த காதல் புத்தகமும் அங்கு தொங்கும். காதல் என்பது மிகவும் கெட்ட வார்த்தையாய் கருதப்பட்டு அப்படியே உபதேசிக்கப்பட்டு வந்த அந்தக் காலங்களில் அந்த சஞ்சிகையில் அப்படி என்னதான எழுதியிருப்பார்களென்று அறியும் ஆவல்கூட எனக்கு எழுந்ததில்லை.

ஆனால் மீசை அரும்பிய பருவத்தில் திரிந்த என் அண்ணன்களில் யாருக்கோ அந்த சஞ்சிகை மீதான சஞ்சலம் எழும்பியிருக்க, வீட்டுக்குள் காதல் நுழைந்து விகடன் கல்கி போன்ற சாத்வீக இதழ்களின் உள்ளே இதழோடு இதழாக இணைய ஆரம்பித்திருந்தது. என் அப்பா ஒரு துர்வாசர். அவருடைய கோபம் சமையல் சமாச்சாரங்களில் உப்பு, உரைப்பு குறைந்து துர்வாசம் வீசும் சமயங்களில் மட்டும் கொஞ்சம் அதிகமாக வீர்யம் பெற்று தாண்டவமாடும். எப்போதும் கைகளில் ஒரு புத்தகத்தைப் பிடித்தபடி மற்றொரு கையில் சமையலை ஒரு பிடி பிடிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு.

போஸ்ட் மாஸ்டராக உத்யோகம் பார்த்த அவர், அன்று உச்சி வெயிலில் பசியுடன் வர, அவர் கோபித்துக் கொள்ளக்கூடாதே என்று அம்மா பாஸ்ட்டாக நுனி இலை போட்டு தண்ணீர் இத்யாதிகளை தயாராக வைத்திருந்தாள். வந்த வேகத்தில் கை, காலை அலம்பிக்கொண்டு டேபிள் மேலேயிருந்த பத்திரிகையை எடுத்து வைத்துக்கொண்டு உட்கர்ந்துவிட்டார்.

பயந்தபடி அம்மா பரிமாற, அவர் ஒரு கண்ணில் புத்தகத்தையும், ஒரு வாயில் சாப்பாட்டையும் விழுங்க ஆரம்பித்தார்.

திடீரென்று, ”என்னடி இது எழவு?” என்று அப்பாவிடமிருந்து ஒரு கடுமையான கர்ஜனை முன்கோபத்திற்கு கட்டியம் கூறி எழுந்தது.

அம்மாவின் சப்தநாடியும் அடங்கி, கைகால்கள் உதறின. அன்றைய தினம் ஸ்கூலுக்கு போக டிமிக்கி கொடுத்துவிட்டு வீட்டில் இருந்த எனக்கும் கதி கலங்கியது.

அப்பாவுக்கு அன்றைய அம்மாவின் கத்தரிக்காய் வதக்கல்தான் வருத்தத்துடன் கோபத்தை கிளப்பியுள்ளது என்று தெளிவாக தெரியும். ”ஏன் உங்களுக்கு பிடிச்சா மாதிரிதானே கத்தரிக்காய் வதக்கல் பண்ணியிருக்கேன்” என்று அம்மா அவருடைய கோபம் சமையலின் தரத்தின் அடிப்படையில்தான் எழும் என்ற தன் அடுப்படி அறிவோடு தயங்கிக் கேட்டு நின்றாள். அந்த சமாதானம் அவர் கோபத்தை இரட்டிப்பாக்கியது.

‘நீயும், உன் கத்தரிக்காயும்’ என்று அம்மாவை நோக்கி, தன் கையில் அள்ளிய கத்தரிக்காய் வதக்கலையும், எப்போதும் இதுபோன்ற சமயங்களில் பிரயோகிக்கும் வசவுகளையும் சேர்த்து வீசினார். கூடவே இலவச இணைப்பாக தன் மற்றொரு கையில் வைத்து படித்துக் கொண்டிருந்த பத்திரிகையும் என் அம்மாவின் திசை நோக்கி எறிந்தார்.

அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

வீசப்பட்ட பத்திரிகையிலிருந்து அதற்குள் கட்டுண்டிருந்த காதலும் சமயம் தெரியாமல் கழன்றுக்கொண்டு இலவச இணைப்பாக அம்மாவை தாக்கியது.

அம்மாவிற்கு எச்சில் கத்திரிக்காய் கறி தன்மேல் விழுந்ததைவிட காதல் விழுந்தது மகா தோஷமாக பட்டிருக்க வேண்டும்.

”இது என்ன அண்ணா? புஸ்தகத்தையெல்லாம் என்மேலே எறியறீங்க?” என்று அம்மா பதறியபோதுதான் அப்பாவிற்கு இந்த காதல் விவகாரம் புரிய ஆரம்பித்தது. கத்தரிக்காயின் மேலிருந்த கோபம் காதல் மேல் திசைமாறி அது மேலும் வலுவடைந்து என்மேல் பாயும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

எந்தவித முன்னறிவிப்போ, வழக்கு விசாரணையோ செய்யாமல் ”கழுதே! ஸ்கூல் போகாம பத்திரிகையெல்லாம் படிக்கறயா?” என்று அதே கத்தரி எச்சலுடனும், ஏகப்பட்ட எரிச்சலுடனும் என் முதுகில் அப்பாவின் கைகள் விளையாடின.

”கழுதைக்கு பட்டினி போடு. புத்தி வரும்” என்று மேலும் கைகளை உதறிவிட்டு அப்பா கிளம்பிவிட்டார்.

திடீர் தாக்குதலில் நான் திக்குமுக்காடிப் போயிருந்தேன்.

”ஏண்டா, நீ படிக்கற லட்சணமா இது?” என்று அம்மா அப்பாவின் உத்தரவை சிரமேற்கொண்டு என்னை மெய்யாலுமே அன்று பட்டினி போட்டுவிட்டாள்.

காதலின் பொருட்டு செய்யாத தவறுக்கு நான் அன்றைய தினம் எனக்குப் பிடித்த கத்தரிக்காய் கறியை இழக்க நேர்ந்தது.

சாயங்காலம் வீடு திரும்பிய எல்லா அண்ணன்களும் ”ஏண்டா உனக்கு இப்படி ஒரு புத்தி போறது?” என்று தம்பியுடையான் அடிக்கு அஞ்சான் என்ற வகையில் தப்பித்துக் கொண்டதுதான் பெரிய சோகம்.

காதலும் கத்தரிக்காயும் தந்த இந்த சோகத்தால்தானோ என்னவோ என் அறுபத்து ஆறு வயதுவரை எந்த காதலும் என்னுள் துளிர்விடாமல், அதனால் காதல் தோல்வி என்றெல்லாம் சோகப்படாமல் நான் தப்பித்துக் கொண்டு வந்துள்ளேன்.

கூடை

மொத்தம்

₹0