பட்டி

அரிப்பும் சிரிப்பும்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் நகைச்சுவை
Story Image
பாட்டன் முப்பாட்டன் என எங்கள் வம்சத்தில் யாரும் எந்த சொத்தையும் எழுதி வைக்காத நிலையில் எங்கள் அண்ணன் தம்பிக்குள் சொத்து...

Share this story:

பாட்டன் முப்பாட்டன் என எங்கள் வம்சத்தில் யாரும் எந்த சொத்தையும் எழுதி வைக்காத நிலையில் எங்கள் அண்ணன் தம்பிக்குள் சொத்து அபகரிப்பு என்ற வன்முறை தலைகாட்ட வழியில்லாமல் போனது. ஆனால் வழி வழியாக என் தாத்தா, அப்பா, என்று வம்சம்தோறும் தொடரும் சொத்தாக இந்த அபார அரிப்பு எல்லோருக்குமே சம அளவில் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கும் நேர்மையை பாராட்டியே தீர வேண்டும். வம்சத்தில் யாராவது அறுபதைத் தாண்டிவிட்டால் இந்த அரிப்புத் தேவதைக்குத் தாங்காது. அவர்களை ஆலிங்கனம் செய்து கொண்டு அறுபதாம் கல்யாணத்திற்கு இரண்டாவது சம்சாரமாக வந்து உட்கார்ந்து வலிய வாழ்க்கைப் பட்டுவிடும்.

”நோய் நொடி இல்லாம க்ஷேமமாய் இரு. ஆனா அரிப்பு இல்லாம இருக்கணும்னு மடடும் நான் ஆசிர்வாதம் பண்ணமாட்டேன். ஏன்னா பரம்பரை பரம்பரையா நம்ம வம்சத்திலே அறுபதுக்கு அப்புறம் எல்லோருமே அந்த அவஸ்தையை பட்டே ஆகணும்”னு என் மூத்த சகோதரர் விசிறிக் காம்பில் தன் முதுகைத் சொறிந்தபடி என் அறுபதாம கல்யாணத்தின் போது அட்சதை தூவினார்.

அவர் தூவிய அட்சதை என் முதுகு ரோமங்களுக்கு இடையே ஒட்டிக் கொண்டதில் ஏற்பட்ட உறுத்தலே பரம்பரை அரிப்புக்கு அடித்தளமாக அமைந்தது. சென்ற ஆறேழு வருடங்களாக என்னுடன் குடித்தனம் நடத்த ஒட்டிக் கொண்டதுபோல் இந்த அரிப்பு எனும் அரக்கி என் ஒரிஜினல் அரக்கியை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது எனலாம்.

இரண்டு வேளை சுத்தமான தண்ணீரில் குளிப்பது, கண்ட சோப்பைக் கைவிட்டு கடவைமாவைத் தேய்த்துக் கொளவது, வியர்வை பட்ட வேட்டி, பனியன், உள்ளாடைகளைத் தினம் இரண்டு முறை மாற்றிக் கொள்வது போன்ற எல்லாவித ஆரோக்ய அதிசுகாதாரங்களைக் கையாண்டும் என் கைத்தலம் பற்றிய அரிப்பாம்பிகையை கை கழுவிவிட முடியவில்லை.

ஆனால் இந்த அரிப்புக்கும் ஒரு சுயக்கட்டுப்பாடு உண்டு. தன் தர்மப்படி தான் செய்யும் உபத்திரவத்தை பகல் நேரத்தில் காட்டுவதேயில்லை.

அரிப்பில்லாமல் காப்பி குடித்து, அரிப்பில்லாமல் பேப்பர் மேய்ந்து, அரிப்பில்லாமல் டிபன், சாப்பாடு சாப்பிட்டு, அரிப்பில்லாமல் டி.வி.யில் ‘அரிப்பை தடுக்கும் ஆயுர்வேதம்’ பார்த்து, அரிப்பில்லாமல் வலம்புரி விநாயகர் கோயில் போய் வந்து, அரிப்பில்லாமல் பாயை விரித்துப் படுக்கும் வரை எங்கோ பதுங்கியிருக்கும் இந்த அரிப்பெனும் இம்சை நான் தூங்கப்போகும் சமயம் விழித்துக் கொண்டுவிடுகிறது.

முதலில் பாதம், கால்கள், தொடை, வயிறு, கைகள், தலை என்று பாதாதிகேசம் தன் ஆக்கிரமிப்பை அகலப்படுத்தும் இந்த இம்சை அகாலமான இரவு வரை என்னைத் துயில் கொள்ளவிடுவதிலை.

‘தோல் வியாதி’ என்ற கடுமையான தீவிரவாதியாக இந்த அரிப்பை வகை செய்ய முடியாதென்பதால் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் என்றெல்லாம போய் இதற்கு ஒரு தனி அந்தஸ்து கொடுக்க என் மனம் ஒப்பவில்லை. ஒரு ஆயுர்வேத எண்ணெயை வாங்கி பூசிக் கொண்டு குளித்ததில் அந்த எண்ணெயின் துர்நாற்றத்திற்குப் பயந்து அரிப்பு சற்றே குறைந்தாலும் அதை ஈடுகட்டும் விதமாக எண்ணெயின் சுகந்தம் என் சுகமான தூக்கத்தைக் கெடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்தது.

”ஏதாவது கவலைப்பட்டாலும் அரிக்கும் ஸார்” என்று என் நண்பர் சொன்னார். “என் கவலையே இந்த அரிப்புத்தானே” என்றேன்.

”சரி அரிக்காதுன்னு நினைச்சுக்கிட்டே படுங்க. அப்போ வருதா பாருங்க… இல்லே ஏதாவது டைவர்ட் பண்ணி ட்ரை பண்ணுங்க” என்று அவர் மேலும் உபதேசம் அருளினார்.

சரி என்று அந்த இரவு 11.30 மணிக்கு எழுந்து போய் டி.வி.யைப் போட்டேன். ஏதாவது மிட்நைட் படம் பார்த்தால் அரிப்பை மறக்கலாமென்ற நைப்பாசை.

ஒரு சானலில் எனக்குப் பிடித்த பழைய படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. சுவாரஸ்யமாக நான் பார்த்துக் கொண்டிருந்ததுபோல் என் அரிப்பும் என்னை இம்சை செய்வதை மறந்து பார்த்துக் கொண்டிருந்ததோ என்னவோ… என் கைகளுக்கு வேலையில்லாமல் நேரம் கடந்து கொண்டிருந்தது.

விளம்பர இடைவேளைக்குப்பின் ‘மீண்டும் கோகிலா’ தொடரும் என்று அந்த அர்த்த ராத்திரியிலும் விடாமல் வியாபார விளம்பரம் செய்தார்கள்!

படுபாவிகளுக்கு வேறு விளம்பரமா கிடைக்கவில்லை?

வேலைக்கு இன்டர்வியூ வரும் ஒரு வாலிபன் உள்ளே நுழையும் போதே நெளிகிறான். அரிப்பைக் கட்டுபடுத்தமுடியாமல், சொரியவும் முடியாமல் தவிக்கும் போது ‘யூ ஆர் நாட் செலக்டட்’ என்று சொல்லும் அதிகாரிக்கும் அரிப்பு வந்துவிட அவரும் நெளிகிறார். இன்டர்வியூ வந்த வாலிபன் ஒரு ஆயின்மெண்ட் எடுத்து அவரிடம் நீட்ட அவர் ‘ஹி ஹி யூ ஆர் செலக்டட்’ என்கிறார். அரிப்பை விரட்ட இட்ச்சு பேஸ்ட்’ தடவுங்கள் என்று விளம்பரம் முடிந்தது.

இட்ச்சு பேஸ்ட் விளம்பர உபயத்தில் அதுவரை என்னை மறந்து மீண்டும் கோகிலாவை பார்த்துக் கொண்டிருந்த அரிப்புக்கு மீண்டும் என் ஞாபகம் வந்ததில் அன்றைய அன்பை என்மேல் சொரியத் தொடங்கிவிட்டது.

கூடை

மொத்தம்

₹0